Wednesday 31 January 2018

புனித தொன் போஸ்கோ


        சிறார்களுக்கும், இளைஞர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற வாஞ்சையோடு அனைவரையும் தனது அன்பினாலும், சேவையினாலும் காந்தம்போல் கவர்ந்திழுக்கும் ஆற்றலும், வல்லமையும் நிறைந்தவர். யாரையும் தண்டிக்காமல் அனைவரிடமும் அன்பும் கனிவும், கரிசனையும் காட்டியவர். அசைக்க முடியாத இறைநம்பிக்கையால் தனது குருத்துவ வாழ்வைக் கட்டியெழுப்பியவர். வாழ்நாள் முழுவதும் தான் சந்தித்த மக்களுக்கு இறையன்பை ஊட்டி வளர்த்தவர்தான் புனித தொன் போஸ்கோ. இவர் வட இத்தாயில் பெச்சி என்ற இடத்தில் 1815, ஆகஸ்ட் 16ஆம் நாள் பிறந்தார்.

     

        குழந்தைப்பருவத்தில் தாயின் வழிகாட்டுதலால் ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும், இறைநம்பிக்கையிலும் வளர்ந்து புனிதத்தில் சிறந்து விளங்கினார். கயிற்றில் மிக எளிதாக நடந்தார். சகமாணவர்களின் மத்தியில் நகைச்சுவை நாயகனாகவே வலம் வந்தார். ஏழைகளிடம் அன்பு கொண்டு, அவர்களுக்கு உதவி செய்தார். தூய்மையான வாழ்க்கையால் இறைவனை மாட்சிமைப்படுத்தினார். தொன்போஸ்கோ தூய ஆவியின் தூண்டுதலால் குருவானவராகப் பணியாற்றினார். தினந்தோறும் சிறைச்சாலைகளைச் சந்தித்தார். பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறார்களையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி பராமரித்து வந்தார். 
         

          திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவரிடம் இளைஞர்களுக்காக ஒரு துறவற சபையை ஆரம்பிக்கக் கூறினார். புனித பிரான்சிஸ் சலேசியாரின் ஆன்மீகம் மற்றும் கொள்கைகளைத் தனதாக்கினார். தாம் முன்னெடுத்தப் பணிகளைத் தொடர்ந்து கொண்டு செல்ல ஆண்களுக்கான சலேசிய சபையையும், புனித மரிய மசரெல்லோடு இணைந்து பெண்களுக்கென கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர் என்னும் துறவற சபையையும் தொடங்கினார். 1876இல் பொது நிலையினருக்காக சலேசிய உடன் உழைப்பாளர்கள் என்னும் சபையினைத் துவங்கினார். இந்த மூன்று சபைகளுக்கு ஒழுங்கு முறைகள் எழுதினார். “நற்கருணைமீதும், அன்னை மரியாள்மீதும் பக்தி வைத்திருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை” என்றுகூறி 1888ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 31ஆம் நாள் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment