Friday 5 January 2018

புனித சைமன் ஸ்டைலைட்

     எல்லா மக்களின் ஆன்மாவும் மீட்பு  பெற தொடர்ந்து செபியுங்கள் என்று கூறியவர். கிறிஸ்துவின் வல்லமையால் புதுமைகள் செய்தவர். மறையுரை வழியாக கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைத்தவர். பாலைவனத்திற்கு சென்று தன்னொடுக்க முயற்சிகள் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தினார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு இறைவனுக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்து வாழ்ந்தவரே புனித சைமன் ஸ்டைலைட்.
        சைமன் ஸ்டைலைட் சிரியா நாட்டில் சிசன் என்ற இடத்தில் 388ஆம் ஆண்டு பிறந்தார். கிறிஸ்துவின் விழுமியங்களை தனதாக்கி இறைபக்தியில் சிறந்து விளங்கினார். ஆடுமேய்கும் தருணத்தில் யாரோ ஒருவர் இயேசுவின் மலைப்பொழிவை வாசித்துக் கொண்டிருந்தார். இயேசுவின் மலைப்பொழிவை கேட்ட சைமன் துறவு வாழ்க்கை வாழ வாஞ்சைக் கொண்டார்.

         சைமன் உலக இன்பங்களைத் துறந்து துறவு இல்லத்தில் சேர்ந்தார். தன்னொடுக்க முயற்சிகளால் வழியாக இறைவனை சொந்தமாக்கினார். நாளும் இறையனுபவத்தில் வளர்ந்து வந்தார். சகதுறவிகள் சைமன் துறவு வாழ்வுக்கு தகுதியற்றவர் என்று கூறினர். துறவு இல்லத்திலிருந்து வெளியேறி பாலைவனத்திற்கு சென்று குடில் அமைத்து தியான வாழ்வை தொடங்கினார்.

     இறைவனை முகமுகமாய் தர்சித்தார். சைமனை தேடி மக்கள் பாலைவனத்திற்கு சென்றனர். தன்னை நாடி வந்த மக்களின் குறைகளைப் போக்கினார். நோயுற்றோரை நலமாக்கினார். துன்பத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். நாளுக்கு நாள் மக்களின் வருகை அதிகரித்ததால் தியான வாழ்விற்கு தடைகள் ஏற்பட்டன. மக்களைச் சந்திக்காமல் இருக்க 9 அடி தூண் அமைத்து அதன்மேல் அமர்ந்து தியானம் செய்தார். எல்லாரின் ஆன்மாவும் மீட்கப்பட தொடர்ந்து செபியுங்கள் என்றுகூறி 459ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment