Wednesday 3 January 2018

புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா


 
       இந்த உலகத்தில் மிகப்பெரிய சொத்து அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும். இவை ஏழை எளிய மக்களிடம் நிறைவாகக் காணப்படுகிறது. நாம் ஏழை எளிய மக்களுக்குச் செய்யும் உதவி இறைவனுக்குச் செய்வதாகும் என்றுகூறி, தனது வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்து, ஆன்மாக்களின் மீட்புக்காக, தியாகங்கள் பல காணிக்கை செய்து, மகிழ்ச்சியுடன் அயராது இறைபணி செய்தவரே புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா. இவர் இந்தியத் திருநாட்டில் இறைப்பிரசன்னம் நிறைந்த கேரளா மாநிலத்தில் கைனகரியில் 1805ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 10ஆம் நாள் பிறந்தார். இவரது தாய் தாய்ப்பாலுடன் இறைவனின் அன்பையும், ஞானத்தையும் அமுதாய் ஊட்டி வளர்த்தார். இவர் முதல் முறையாக கற்றுக்கொண்ட வார்த்தைகள் இயேசு, மரியா, சூசை என்பதாகும். நற்கருணைமீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து திருப்பலிக்கு செல்வார்.

  ஆன்மீக வாழ்வில் அதிகம் ஆர்வம் காட்டினார். உயிருள்ள இறைவனின் வார்த்தையை வாசித்து, தியானித்தபோது உலகமும் அதன் இன்பங்களும் வீண் என்று உணர்ந்து புனிதமான குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். ஆன்மாக்களின் மீட்புக்கான தாகம் அதிகரித்தது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட மக்கள்  பாவம் செய்யாமல் இறையன்பைச் சுவைக்கவும், இறை இரக்கம் பெற்றுக்கொள்ளவும் வழிகாட்டினார். “நற்கருணைக்கு முன்பாக அமர்ந்து, நம்பிக்கையோடு கேட்கப்படும் தேவைகள் எதுவாக இருந்தாலும் நாம் பெற்றுக்கொள்வோம். நற்கருணைக்கு முன்பாகச் செபிப்பது இறைவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றுகூறி அவ்வறே வாழ்ந்தார்.

  மறையுரையாற்றும் பணி முதன்மையானப் பணியாக கருதினார். ஒவ்வொரு மறையுரையும் விவிலியத்தை மையப்படுத்தியே அமைந்தது. கேட்போரின் உள்ளத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1832ஆம் ஆண்டு மான்னானம் என்ற இடத்தில் குருமடத்தை நிறுவினார். கிறிஸ்தவ வாழ்வின் மையமான நற்கருணை கொண்டாட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தினார். திருப்பலியில் வார்த்தை வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பஞ்சாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தார். குருமாணவர்களுக்கு வழிபாட்டு முறைகளைச் சிறப்பாகக் கற்றுக்கொடுத்தார்.  

   துறவற சபை 1855ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் ஆண்களுக்கான, ‘அமல மரியின் கார்மல் சபையைத்’ தொடங்கினார். சபையின் தலைவராக சாவரா குரியாக்கோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபைக்கு சட்ட ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி, திருத்தந்தையின் அனுமதி பெற்றார். 1866ஆம் ஆண்டு பெண்களுக்காக, ‘கார்மேல் நிஷ்பாதுக துறவற சபையைத்’ தொடங்கினார். “அம்மா மாமரியே! உம்மில் சரணடைகின்றேன். உமது நினைவுகள் இதயத்திற்கு இன்பம் தருகின்றன. உமது திருமுன்னில் அடியேன் என்னை அர்ப்பணிக்கின்றேன். உமது நினைவுகள் என் நெஞ்சில் நீங்காதிருக்க வரம்தாரும்” என்று நாளும் செபித்து வந்தார்.

   இரவு நேரத்தில் கண் விழித்து மனித மக்கள் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ செபித்தார். கிறிஸ்துவின் துன்பப் பாடுகளில் பங்கு சேர்ந்தார். இறையன்பை நினைத்து நன்றி நிறைந்த இதயத்தோடு திருப்பலி நிறைவேற்றினார். இறையாட்சியை எங்கும் அறிவித்தார். ஏழ்மையில் எளியவராக வாழ்ந்து முழுமனதுடன் இறைவனை அன்பு செய்தார். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மகிமைப்படுத்தினார். ஆதரவற்ற முதியோர்களுக்குப் பாதுகாப்பு இல்லம் அமைத்தார். நோயாளிகள் நலம்பெற மருத்துவ உதவிகள் செய்தார். மண்ணக வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்து, அயராது இறைபணி வழியாக ஆன்மாக்களின் மீட்புக்காக உழைத்த எலியாஸ் சாவரா 1871ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் விண்ணகம் சேர்ந்தார். திருத்தந்தை பிரான்ஸிஸ் அவர்கள் 2014ஆம் நவம்பர் திங்கள் 23ஆம் நாள் அவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

No comments:

Post a Comment