Friday 31 August 2018

புனித ரேமண்ட் தன்

 

    இயேசுவின் மீது அன்பும், பக்தியும் நேர்மையையும், தூய்மையும் கொண்டு வாழ்ந்தவர். அமைதியான வழிகளில் பயணம் செய்து அமைதிக்காக உழைத்தவர். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டியவர். கிறிஸ்தவ மக்களுக்கு உதவி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தவரே  புனித ரேமண்ட் தன்.   இயேசுவின் மீது அன்பும், பக்தியும் கொண்டு வளர்க்கப்பட்டார். அயலாரிடம் அன்பு காட்டுவதிலும் சிறந்தவராய் திகழ்ந்தார். குருவாக 1222 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின் வாலென்சியா என்ற நாட்டிற்கு மறைபரப்பு பணி செய்தார்.  ஏறக்குறைய 140 கிறிஸ்துவர்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். ரேமண்ட்தான் அம்மக்களை அடிமைத்தனத்தினின்று மீட்டார். அதன்பிறகு அவர் வட ஆப்ரிக்காவில் மறைப்பணியை செய்ய அனுப்பப்பட்டார். அங்கும் 250 பேர் அடிமைகளாக இருந்தவர்களை மீட்டார். மிகச் சிறந்த முறையில் மறைபரப்புப் பணியற்றிய இவரை, அந்நாட்டு மக்களால் சிறைபிடித்து வைக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டார். சிறையில் இருக்கும்போது அவரின் உதடுகள் இரண்டையும் இழுத்து பிடித்து, உதடுகளின் நடுவே, துளைப்போட்டு, இரும்பு பூட்டைக்கொண்டு, இவரின் வாயை பூட்டினர். அவர் பல துன்பங்களை அனுபவித்து இறந்தார். 

Wednesday 29 August 2018

புனித திருமுழுக்கு யோவான்


   நேர்மையையும், தூய்மையும் கொண்டு வாழ்ந்தவர். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழி மரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தவர். இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான், "மனமாறி திருமுழுக்கு பெறுங்கள்" என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி மறைசாட்சியாக இறந்தவர புனித திருமுழுக்கு யோவான். திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்" என்று இறைவாக்கு உரைத்தார்.

      இயேசுவின் தாய் மரியாவும், யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள்ளன என்று குறிப்பிடுவதால், இயேசுவும் யோவானும் சிறுவயதில் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல கிறிஸ்தவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் இயேசு சாதாரண உடையுடனும், யோவான் ஒட்டக முடியாலான ஆடையுடனும் காணப்படுகின்றனர். யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார். திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தவர்களின் நெறிகேடானச் செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார். அவ்வாறே, குறுநில அரசன் ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்ததையும் யோவான் கண்டித்து வந்தார். ஏரோது, ஏரோதியாவின் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதனால் ஏரோதியா யோவான் கொலை செய்ய விரும்பினாள்.

      ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று தன்தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தனர்

Tuesday 28 August 2018

கன்னி மரியா, புனித அகுஸ்தினார்

   அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர். அகுஸ்தினார், “ஒரு மனிதரின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்று கூறினார். இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியினால் மரியாவின் கன்னித்தன்மை ஒருபோதும் குறைந்துவிடவில்லை.  புனித அகுஸ்தினார், “மரியா இயேசுவை ஈன்றெடுப்பதற்கு முன்னும்; ஈன்றெடுத்தப் போதும்; ஈன்றெடுத்தப் பின்னும் கன்னியாவே இருந்தார்”என்று கூறினார். மரியா என்றும் கன்னி என்பது நமது கத்தோலிக்க விசுவாசமாகும். மரியா கன்னிமையில் மரியா, இயேசுவை ஈன்றெடுத்ததைப் பற்றி புனித அகுஸ்தினார் “வியப்படையுங்கள்; ஏனெனில் ஒரு கன்னி கருவுற்றிருக்கிறார். மேலும் வியப்படையுங்கள். ஏனெனில் கன்னி ஒரு குழந்தையை ஈன்றுள்ளார். குழந்தை ஈன்ற பின்னும் கன்னியாகவே இருக்கின்றார். என்னே வியப்பு! என்னே புதுமை! புதுமையிலும் புதுமை”என்று கூறினார். 

புனிதஅகுஸ்தினார்

     “நீங்கள் இறைவனை உணமையாகவே அன்புசெய்தால் அவ்வாறே அனைத்து ஆன்மாக்களையும் இறைவனையும் அன்பு செய்ய இயலும். அதற்காக உங்களால் முடிந்த அனைத்து நற்செயல்களையும் செய்வீர்கள்” என்று கூறியவர். “ஆண்டவரே எனக்கு கற்பு என்னும் புண்ணியத்தை தாரும்; ஆனால் சிறிது காலம் தாழ்த்தித் தாரும்” என்று செபித்தவர். இறைவனின் அன்பும், அருளும் பெற்று ஆன்மாக்களின் மீட்புக்காக இறயாட்சி பணி செய்தவரே புனிதஅகுஸ்தினார். இவர் 354ஆம் ஆண்டு வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள காஸ்தே என்னும் இடத்தில் பிறந்தார்.  தனது இளமைப் பருவத்தை தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றி வாழ்ந்தார். தன் தாய் மோனிக்காவின் இறைவேண்டலினால் மனந்திரும்பினார். பின்னர் இறைநூலைப் படித்தும், தன் தாயின் விருப்பப்படியும் இறைவழியில் சென்றார். தாயின் இறைவேண்டுதலால் மனமாற்றம் அடைந்தவர்.


   மிலானில் மனந்திரும்பிய இவர், 387 ஆம் ஆண்டில், மிலான் ஆயர் அம்புரோசியாரிடம் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் தம் சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து கடுந்தவ வாழ்வை மேற்கொண்டார். தனது 42 ஆம் வயதில் ஹிப்போ என்றழைக்கப்படும் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 34 ஆண்டுகள்  எடுத்துக்காட்டான வாழ்வை வழங்கினார். ஏராளமான மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களை பயிற்றுவித்தார். ஏறக்குறைய 100 நூல்களுக்கும் மேல் எழுதினார். அவற்றைக் கொண்டு தம் காலத்தில் நிலவிய தவறான கருத்துக்களுக்கு எதிராக இடையறாது போராடினார். திறம்பட திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார்.  அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவர். அகுஸ்தினார், “ஒரு மனிதரின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்று கூறினார். இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியினால் மரியாவின் கன்னித்தன்மை ஒருபோதும் குறைந்துவிடவில்லை. அகுஸ்தினார், “மரியா இயேசுவை ஈன்றெடுப்பதற்கு முன்னும்; ஈன்றெடுத்தப் போதும்; ஈன்றெடுத்தப் பின்னும் கன்னியாவே இருந்தார்” என்று கூறினார். 340ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 28ஆம் நாள் இறந்தார்.

Monday 27 August 2018

புனித மோனிக்கா

    புனித மோனிக்கா தன் கணவரையும், தன் மாமியார், மகன் அனைவரையும், தன் இடைவிடா செபத்தினாலேயே, மனமாற்றி, திருமுழுக்கு பெறவைத்து, கிறிஸ்துவர்களாக மாற்றினார். இறுதிமூச்சுவரை திருச்சபையின் மக்களாக வாழ வேண்டுமென்று தன் மகன்களுக்கு அறிவுறுத்தினார். சிறு வயதிலேயே பத்திரிசியுஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் பல குழந்தைகளுக்கு தாயானார். அவர்களில் ஒருவர்தான் புனித அகுஸ்தீன். தன் மகன் மனம் போன போக்கில் வாழ்ந்ததால், அவரை மனந்திருப்ப, எப்போதும் கண்ணீருடன் இறைவேண்டல் செய்தார். தன் கணவரின் இறப்பிற்கு பின் தன் குழந்தைகளுக்காகவும், பல வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார். அகுஸ்தீனின் நல்வாழ்விற்காக ஆயர்களை சந்தித்து, தன் மகனுக்கு, ஆன்மீக காரியங்களில் வளர்ந்து, நல்ல கிறிஸ்துவனாக வாழ உதவும்படி மன்றாடினார். 

       கிறிஸ்தவ அன்னையருக்கும், குடும்பத்தலைவிகளுக்கும், விதவைகளுக்கும் இவர் ஒளி விளக்கு. தாம் சாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் தம் மகன் அகுஸ்தீனிடம் கூறியது: 'மகனே இவ்வுலகில் எனக்கு இப்போது வேறு எதுவும் மகிழ்ச்சி தரமுடியாது. நான் இனிமேலும் ஏன் இவ்வுலகில் உயிருடன் இருக்க வேண்டுமென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச காலம் நான் வாழ விரும்பியது ஒரேயொரு வரத்திற்காகத் தான். நான் இறக்குமுன் உன்னைக் கத்தோலிக்க கிறிஸ்தவனாகப் பார்க்க விரும்பினேன். எனக்கு ஆண்டவர் இவ்வரத்தை அளவுக்கு அதிகமாகய்ப் பொழிந்துவிட்டார். இப்போது நீ அவருக்கே முழுவதும் சொந்தம் என்பதை உணருகிறேன். இவ்வுலக இன்பங்களை நீ விட்டொழித்ததையும் காண்கிறேன்." இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் இவரின் கணவர் பத்ரிசியுசும், தம் இறப்பிற்கு முன் திருச்சபையின் மகனாக வந்து சேர்ந்தார். 

      வழிதவறிச் சென்ற தம் மகனை எவ்வழியில் மனந்திரும்புவது என்று அறியாது அடிக்கடி இவர் கலங்கினார். அகுஸ்தீனை மணந்துகொள்ளச் சொன்னதால் அவரும் அப்படியே ஒரு பெண்ணை மணமுடித்தார். ஒரு முறை மோனிக்கா ஓர் ஆயரை அணுகி தம் மகனுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று கேட்டார். அகுஸ்தீனுக்கு மனந்திரும்பும் பக்குவம் இன்னும் கிடைக்கவில்லை என்பதை ஆயர் உணர்ந்தார். மீண்டும் மீண்டும் மோனிக்கா ஆயரைக் கண்ணீருடன் அணுகினார். ஆயர் பொறுமை இழந்தவர் போல் காணப்பட்டாலும் இறைவாக்கு உரைப்பது போல் 'இவ்வளவு கண்ணீர் சிந்தும் தாயின் மகன் அழிவுறவே முடியாது" என்று கூறினார். இதைக் கேட்டு இன்னும் மிகுதியாக மோனிக்கா இறைவனை மன்றாடினார்.


Saturday 25 August 2018

புனித ஒன்பதாம் லூயிஸ்


       அன்பு, தாழ்ச்சி, பரிவு, இரக்கம் கொண்டு வாழ்ந்தவர். அமைதியான வழிகளில் பயணம் செய்து அமைதிக்காக உழைத்தவர். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டியவர். கிறிஸ்தவ மக்களுக்கு உதவி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தவரே புனித ஒன்பதாம் லூயி. இவர் பிரான்ஸ் நாட்டில் 1214ஆம் ஆண்டு ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப்பருவத்தில் தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பு பெற்று கிறிஸ்துவின் விழுமியங்களில் வளர்ந்து வந்தார். அன்னை மரியாவின் அரவணைப்பில் வாழ்ந்தார். பாவம் செய்யாமல் தூயவராக வாழ கவனம் செலுத்தினார்.

     லூயிஸ் 9 வயதாக இருக்கும்போதே, இவரின் தாத்தா இறந்துவிட்டார். இதனால் இவரின் தந்தை 8 ஆம் லூயிஸ் அரச பதவியேற்றார். 8 ஆம் லூயிசை பதவியேற்ற 3 ஆண்டுகளில் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால் லூயிஸ் தனது 12 வயதிலேயே நாட்டின் அரசராக பதவியேற்றார். ஒன்பதாம் லூயிஸ் என்று பெயர் பெற்றார். லூயிஸ் புகழ் பெற்ற போர்வீரர். இவர் தனது 19ஆம் வயதில் மார்க்கிரேட் எனற பெண்ணை திருமணம் செய்தார். 5மகன்களும், 6மகள்களுக்கும் தந்தையானார். தவப் பற்றிலும், செப ஆர்வத்திலும், ஏழை எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். தன் நாட்டு மக்களின் ஆன்மீக நலத்திலும் அவர்களிடையே அமைதியை உருவாக்குவதிலும் அக்கறைகொண்டு, ஆட்சி செய்தார். 1248ஆம் ஆண்டு நடந்த சிலுவைப் போரில் பங்கேற்றார். கிறிஸ்தவ மக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார். கிறிஸ்துவின் விழுமியங்ளில் வாழ்ந்த லூயிஸ் மன்சோரா  சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இறைவேண்டுதல் செய்து இறைவல்லமை பெற்று விடுதலையானார். அமைதிக்காக உழைத்த லூயிஸ் தனது இரக்கம், அன்பு, தாழ்ச்சி, ஏழைகள் மீது பற்றுகொண்டு வாழ்ந்தார். நோயாளிகளுக்கு மருத்துவ மனைகள் கட்டிக்கொடுத்தார். நீதியின் வழியில் பயணம் செய்த லூயிஸ் 1270ஆம் ஆண்டு இறந்தார்.

Friday 24 August 2018

புனித பார்த்தலமேயு

     இயேசுவின் சீடர்களில் ஒருவர்.கிறிஸ்து அனுபவம் பெற்றவர். உண்மையான இஸ்ரயேலர் என்று இயேசுவிடமிருந்து சான்று பெற்றவர். ஏழ்மையை விரும்பி  ஏழையாக வாழ்ந்தவர். இயேசு இறைமகன் என்று நம்பிக்கை அறிக்கையிட்டவரே புனித பார்த்தலமேயு. இவர் ஆண்டவரால் அழைக்கப்பட்டவர். இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் பெற்றபின் இந்தியாவிற்கு சென்று மறைப்பணி செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. இவர் பிலிப்பு என்ற சீடரின் நண்பர்.  ஆர்மேனிய நாட்டிற்கு சென்று, அங்கு விசுவாசத்தை பரப்பினார் என்றும், அதன்பிறகுதான் தலைவெட்டப்பட்டு இறந்தார் என்றும் கூறப்படுகின்றது. 

 "பிலிப்பு நத்தனியேலை போய்ப்பார்த்து, இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தை சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவின் அவர்" என்றார். அதற்கு நத்தனியேல், நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார். இயேசு, "பிலிப்பு உம்மை கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிட பெரியவற்றை காண்பீர்" என்றார். யோவான் நற்செய்தி 1:45-50 -ல்  இறைவாக்குகள் இவரை பற்றி கூறுகிறது.

ஆகஸ்ட் 23 புனித லீமாரோஸ்

 
     துன்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. சிலுவை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு இல்லை என்று உணர்ந்து கொண்டு, “ஆண்டவரே எனது துன்பத்தை அதிகமாக்கும். எனது இதயத்தில் உம்மீதுள்ள அன்பைப் பெருகச் செய்யும்” என்று கூறி வாழ்நாள் முழுவதும் தனது துன்பத்தின் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தியவரே புனித லீமாரோஸ். இவர் தென் அமெரிக்காவில் லீமா என்னும் ஊரில் 1586ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் பிறந்தார். குழந்தை இயேசுவின் மீதும், அன்னை மரியாவின் மீதும் மிகுந்த பக்தி கொண்டு இவர்களின் பீடங்களை அழகிய மலர்களால் அலங்கரித்து நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுதல் செய்தார். துறவு மேற்கொண்டு இறைவனை அன்பு செய்ய தீர்மானித்தார். கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். தமது 20ஆம் வயதில் புனித சாமிநாதரின் மூன்றாம் சபையில் சேர்ந்தார். 

     ஒருநாள் கொள்ளையர்கள் திவ்விய நற்கருணை வைக்கப்பட்டிருந்த ஆலயத்தை இடிக்க வந்தார்கள். ரோஸ், “என்னைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுங்கள். என்னை கொலை செய்ய எவ்வளவு நேரம் எடுக்குமோ அவ்வளவு நேரமாவது திவ்விய நற்கருணை பாதுகாக்கப்படட்டும்” என்று கூறினார். இதற்கு காரணம் திவ்விய நற்கருணையின் மீது அவர் கொண்டிருந்த பக்தியே. ஒருமுறை குழந்தை இயேசுவிடம் செபித்தார். குழந்தையேசு, “எனது இதயத்தின் ரோஸ், எனது மணமகளாக இரு” என்று கூறினார். “இயேசுவே, நான் உமது வேலையாள் ஆண்டவரே, நான் உமது அடிமை. நான் உம்முடையவள் உமக்கு என்றும் உண்மையாக இருப்பேன்”என்றார். 

   ரோஸ் வாழ்நாள் முழுவதும் இறைவனை தூய இதயத்துடன் அன்பு செய்தவர்; அதிகாலையில் எழுந்து அவரது திருமுகத்தை வாஞ்சையோடு தேடியவர்; இறையாட்சியின் பாதையில் பாதங்கள் பதராமல் கிறிஸ்துவோடு நடந்தவர்; அவருக்காக வேதனைகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டவர்; தினந்தினம் கிறிஸ்துவின் நெஞ்சிலே சாய்ந்து செபித்தவர்; அவரோடு நெருக்கமாக உரையாடியவர்; அவரது விருப்பம் நிறைவேற்றியவர்; அவரது இறைவார்த்தைக்கு தன் வாழ்வை கையளித்தவர் 1617ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள், தனது 31ஆம் வயதில் இயற்கை எய்தினார். 

Friday 17 August 2018

புனித ஹயசின்த்


  இறைபக்தியில் வளர்ந்து நற்செய்தியை வாழ்வாக்கி வாழ்ந்தவர். இறையன்பிற்கு தன்னை பலியாக அர்ப்பணம் செய்தவர். துறவு வாழ்வை தேர்ந்தெடுத்து தவமுயற்சிகள் செய்து தூயவராக வாழ்ந்தவரே புனித ஹயசின்த் என்பவர். இவர் போலந்து நாட்டில் சிலேசியா என்னும் இடத்தில் 1185ஆம் ஆண்டு பிறந்தார். கல்வி கற்று இறைஞானத்தில் வளர்ந்து வந்தார். சட்டம் பயின்று முனைவர் பட்டம் பெற்றார். புனித தோமினிக் துறவு இல்லத்தில் சேர்ந்நு துறவு வாழ்வை தொடங்கினார். நற்செய்தியை போதிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தினார். இறைவார்த்தையை போதிப்பவராக இல்லாமல் வாழ்ந்து காட்டினார். ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தார். புதுமை செய்யும் வரம் பெற்றிருந்த ஹயசின்த் இறைமக்களின் தேவைகளை நிறைவேற்றி மக்களுள் ஒருவராக வாழ்ந்த ஹயசின்த் 1257ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் நாள் இறந்தார்.

Thursday 16 August 2018

புனித ஹங்கேரி ஸ்டீபன்

     கிறிஸ்துவின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தவர். இறைமக்கள் இறைபக்தியில் வளர்ந்திட அயராது உழைத்தவரே புனித ஹங்கேரி ஸ்டீபன். இவர் 975ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டில் க்ரான் என்னும் இடத்தில் பிற்ந்தார். இவரது தந்தை மேயராக பணி செய்தவர். கிறிஸ்துவின்மீது பக்தி கொண்டு தனது பிள்ளைகளை கிறிஸ்த நெறிகளின்படி வழிநடத்தினார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து வந்தார். ஸ்டீபன் தனது 10ஆம் வயதில் தந்தையுடன் இணைந்து திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கின் போது தனது பெயரை ஸ்டீபன் என்று மாற்றினார். 20ஆம் வயதில் ஜிசேலா என்ற பெண்ணை திருமணம் செய்தார். தந்தை இறந்த பின் மேயராக பணியாற்றினார். தனது ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் கிஸ்துரை மீட்பராக ஏற்றுக்கொள்ள அயராது உழைத்தார். நாடு முழுவதும் கிறிஸ்து மயமாக்கிட உழைத்தார். திருதந்தையின் அனுமதி பெற்று புதிய ஆலயங்கள் எழுப்பினார். எருசலேமில் துறவு இல்லம் கட்டினார். திருச்சபைக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆலயம் இறைவன் தங்கும் இடம் எனவே அவற்றை பாதுகாத்து வந்தார். ஏழை மக்களுக்கு உதவினார். நற்கருணை மீதும், அன்னை மரியாவின் மீதும் பக்தி கொண்டு வாழ்ந்த ஹங்கேரி ஸ்டீபன் இறந்தார்.

ஆகஸ்ட் 15 . புனித தார்சிசியுஸ்

   கிறிஸ்துவின் நற்செய்தியை மையப்படுத்தி புனிதமான வாழ்க்கை வாழ்ந்தவர். ஓய்வு நேரங்களில் கிறிஸ்தவ முதியோர்களிடம் சென்று மறைசாட்சிகளை கேட்டு தெரிந்துக்கொண்டவர். நற்கருணையின் மீது அளவு கடந்து அன்பும் பக்தியும் கொண்டிருந்தவரே புனித தார்ச்சியுஸ். இவர் உரோமையில் மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தவர். இவரது காலத்தில் உரோமை பேரரசர் டயோக்ளியஸின் கிறிஸ்தவ மக்களை மிகக்கொடூரமான முறையில் துன்புறுத்தினார். டயோக்ளியாசுக்கு அஞ்சி குகைகளிலும், சுரங்கங்களிலும் ஒளிவீசும் தீபங்களாக வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு தார்சிசியுஸ் நற்கருணை கொண்டு கொடுப்பது வழக்கம். 

      கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. பெரும் சூறாவளி போன்று உரோமைப் பேரரசு முழுவதும் கலகம் ஏற்பட்டது. எண்ணமற்ற மக்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தார்சிசியுஸ் மறைமுகமாக நடைப்பெற்ற நற்கருணை வழிபாட்டில் கலந்துக்கொண்டார். வழிபாடு முடிந்ததும், “சிறையில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அதன்படி காவலர்களின் கண்களில் பட்டுவிடாமல் நற்கருணையைக் கொண்டு செல்ல இன்று யார் தயாராக இருக்கிறீர்கள்?” என்று குருவானவர் கேட்டார். உடனே 12வயது நிரம்பிய தார்சிசியுஸ் கரம் உயர்த்தினார். குருவானவர் ஆச்சர்யமும் ஆனந்தமும் அடைந்தார். தார்சிசியுசிடம் “உன்னால் முடியுமா?” என்று கேட்டார். தார்சிசியுஸ் உறுதியுடன் பதில் அளித்ததால் அவரிடம் நற்கருணை கொடுத்துவிட்டார். இவர் நடந்து சென்றபோது, எதிரிகளின் கையில் சிக்கினார். “என்ன மறைத்துக் கொண்டு வருகிறாய்?” என்று அவர்கள் கேட்டார்கள். முதலில் மறுத்த தார்சிசியுஸ் பிறகு தான் நற்கருணை கொண்டு வருவதாகக் கூறினார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேதவிரோதிகள் “அந்த அப்பத்தை எங்களுக்கு தா” என்று கோபத்துடன் கேட்டார்கள். தார்சிசியுஸ் அவர்களிடம் கொடுக்க மறுத்துபோது அவரை தடியால் அடித்தனர். தலையில் ஏற்பட்ட காயத்தால் சுயநினைவு இழந்து கீழே விழுந்தார். அவ்வழியாக கிறிஸ்தவ படைவீரர் ஒருவர் அங்கு வந்தார். கீழே மயங்கி கிடந்த தார்சிசியுவை தூக்கினார். அப்போது அவரிடம் நற்கருணை ஒரு சிமிழில் முத்திரை வைக்கப்பட்ட நற்கருணை. ஆண்டவரின் திருவுடலை சுமந்து சென்ற தார்சிசியுஸ் ஆண்டவரின் உடலை காக்க ஆகஸ்ட் 15ஆம் நாள் இறந்தார். 

கன்னி மரியாவின் விண்ணேற்பு

என்றும் தூய கன்னி அன்னை மரியா உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரென எமக்குப் படிப்பிக்கின்ற கத்தோலிக்கத் திருச்சபையின் உண்மையை பெருவிழாவாக நாம் மகிழ்ந்து கொண்டாடி தூய கன்னி அன்னை மரியாவின் மண்ணக வாழ்வின் இறுதியில் கடவுள் அவரை மகிமைப்படுத்தினாரென விசுவசிக்கின்றோம். அன்னை மரியா நம் அனைவருக்கும் விண்ணகத்தின் முன்சுவையைத் தருகின்றவராக இருக்கின்றார். “அமல உற்பவியும், கடவுளின் தாயும், என்றும் கன்னியுமான மரியாள், இவ்வுலக வாழ்க்கைப் பயணத்தை முடித்துவிட்டு, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்”. இதைத் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் 1950இல் விசுவாசப் பிரகடனம் செய்தார். மரியாவின் விண்ணேற்றத்தின் போது, மரியாவின் பெயரை வானதூதர்கள் மும்முறை “பாலை நிலத்திலிருந்து புகைத்தூண்போல் எழுந்து நறுமணம் கமழ வருவது யாரோ?. மீண்டும் விடிவேளை வானம்போல் எட்டிப்பார்க்கும் அவள் யாரோ?”என்று வியந்து போற்றினர்.(காண்.இபா3:6). இனிமை மிகுபாடலில் காணப்படும் நாயகி, தம் திருமகனுடன் வெற்றி வாகைசூடி, விண்ணக மணவாட்டியாய், உயர்த்தப்பட்ட மரியாளின் உருவகமாகக் காணப்படுகிறார்.


  அன்னை மரியா இன்றும் அருள்வரங்களையும், அருளையும் இயேசுவிடமிருந்து நமக்குப் பெற்றுத் தருகிறார். இனிமையான மரியின் நாமத்தை உச்சரிப்போம். காரணம் “மாமரியினுடைய பெயர் கடவுளின் தெய்வீகக் கருவூலத்திலிருந்து வந்தது” என்று புனித பீட்டர் டேமியன் கூறுகிறார். மாமரியின் நாமம் சகல இனிமையும், தெய்வீக நறுமணமும் நிறைந்துள்ளது. இதைப்பற்றி பிராங்கோன் என்ற மடாதிபதி “இறைமகன் இயேசுவின் நாமத்திற்கு அடுத்தாக, விண்ணிலோ, மண்ணிலோ, மாமரியின் நாமத்தைப் போல் வேறெந்த நாமமும் கிடையாது. அந்நாமத்திலிருந்து பக்தியுள்ள நெஞ்சங்கள் எவ்வளவோ அருட்கொடைகளையும், நம்பிக்கையையும், இனிமையையும், புனிதத்தையும் நிறைவாகப் பெறுகின்றன” என்கிறார். 

Tuesday 14 August 2018

அன்னை மரியா, மாக்சிமிலியன் கோல்பே

    அன்னை மரியாளிடம் மிகுந்த பக்தியும், பற்றும் கொண்டவர். பிள்ளைக்குரிய அன்பும் உரிமையும் காட்டினார். ஒரு குழந்தை காலையில் எழுந்தவுடன் தாயின் முகத்தைத் தேடுவது போல் அன்றாடம் அன்னை மரியாவின் அருளையும் அரவணைப்பையும் ஆதரவையும் நாடினார். அன்னை மரியா அவருக்கு தோன்றி தனது கரங்களில் இரண்டு கிரீடங்கள் வைத்திருந்தார். ஒன்று வெள்ளை நிறம். மற்றொன்று சிவப்பு நிறமுடையது. அன்னை மரியாள் அவரை அன்புடன் உற்றுப் பார்த்து,“மகனே! இவ்விரண்டு கிரீடங்களில் உமக்கு எது வேண்டும்? வெள்ளை கிரீடத்தின் பொருள், நீ உன் வாழ்நாள் முழுவதும் தூய்மையில் நிலைத்திருப்பாய் என்பதைக் குறிக்கிறது. சிவப்பு கிரீடத்தின் பொருள், நீ ஒரு மறைசாட்சியாகக் கிறிஸ்துவுக்காக இறப்பாய் என்பதைக் குறிக்கிறது” என்றார். இதைக் கேட்ட கோல்பே, “அம்மா, எனக்கு இரண்டு கிரீடமும் தாருங்கள்” என்று கூறினார். இதைக் கேட்ட அன்னை மரியா அவரை தம் நெஞ்சோடு அரவணைத்து திடன் அளித்து தேற்றினார். 

புனித மாக்சிமியான் கோல்பே


      கிறிஸ்துவின் பாதத் தடங்களில் தன் பாதங்களைப் பதித்து, ஆதாயம் எதிர்பாராமல் அயலானை அன்பு செய்து, நிறைவாழ்வைத் தருகின்ற இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு எல்லா இல்லங்களிலும், உள்ளங்களிலும் இறையரசைக் கட்டியெழுப்பிட, தனது சீரியச் சிந்தனை, கடின உடலுழைப்பு, தியாக வாழ்வுவை அர்ப்பணித்து பிறரன்பின் இரத்த சாட்சியாக மாறியவரே புனித மாக்சிமியான் கோல்பே. இவர் போலந்து நாட்டில் 1894ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். இவரது குடும்பத்தில் இறைபக்தி, அன்பு, பாசம் மிகுந்து காணப்பட்டது. இறைவன் கொடையாகத் தந்த குழந்தைகளை இறைபக்தியிலும், கடுமையாக உழைக்கவும், நன்மைகள் பல செய்திடவும் கற்றுக்கொடுத்தனர். தனது வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்து மறைசாட்சியாக மாறிட வாஞ்சை கொண்டார். அதன் பின்னர் கீழ்ப்படிதலுடனும், தாழ்ச்சியுடனும் வாழ்ந்து, இறையன்பையும், நீதியையும், நேர்மையையும் துணிவுடன் பறைசாற்றினார்.


   மாக்ஸ்மில்யன் கோல்பே, தனது 16ஆம் வயதில் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற துறவற வார்த்தைப்பாடுகளின் வழியாக இறைவனுக்குத் தன்னையே கையளித்து குருவாக அருள்பொழிவு பெற்றார். அன்னை மரியாவின்மீது கொண்ட பாசத்தால் ‘அமல அன்னையின் சேனை’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஜப்பான் நாட்டில் நாகசாகி என்ற நகரில், மலையடிவாரப் பகுதியில் அச்சகம் தொடங்கினார். தனது சீரிய சிந்தனையாலும், உடல் உழைப்பாலும் நற்செய்தியை அறிவித்தார். ஹிட்லரின் கொடூரச் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தபோது கைது செய்து சிறையில் அடைத்து தன்புறுத்தினர். தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்று மொழிந்த இயேசுநாதரின் வார்த்தையை வாழ்வாக்கிய மாக்ஸ்மில்யன் கோல்பே 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14 ஆம் நாள் இயற்கை எய்தினார். 

Sunday 12 August 2018

புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால்

       விசுவாசமும், நம்பிக்கையும் கொண்டு, இடைவிடாமல் இறைபணி ஆற்றியவர். தமக்கிருந்த எல்லாவற்றையுமே இறைவனின் மகிமைக்காக இழந்தவர். சிறுவயதிலேயே தன் தாயை இழந்தபோது இறைவனையே தாயாகக் கொண்டு வாழ்ந்தவர். புனித ஜேன் பிரான்சிஸ் தே ஷாந்தால் அரண்மனையில் வாழ்ந்தபோதும் கூட ஆன்மீகக் காரியங்களில் அக்கறைக்காட்டி வந்தார். தே ஷாந்தால் என்ற அரசரை திருமணம் செய்துகொண்டார். 6 பிள்ளைகளைப் பெற்றபின் திருமணமான ஏழு ஆண்டுகள் கழித்து தன் கணவரை இழந்தார். பின் தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார். தான் ஓர் துறவற சபையை தொடங்க விரும்பினார். இதனால் புனித பிரான்சிஸ் சலேசியாரை சந்தித்து, தன் விருப்பத்தை தெரிவித்தார். பிரான்சிஸ் சலேசியாரை தன் ஆன்மீக குருவாக தேர்ந்தெடுத்து, அவர் காட்டிய வழியில் பின்தொடர்ந்தார். அரண்மனையில் வாழ்ந்ததால் முழுமையாக ஆன்மீக காரியங்களில் ஈடுபட முடியவில்லை என்பதை உணர்ந்து, அரண்மனையைவிட்டு வெளியேறினார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். அச்சமயத்தில் பிளேக் நோய் பிரான்ஸ் நாட்டில் பரவியது. ஏராளமான மக்கள் அந்நோயால் இறந்தனர். ஜேன் பிரான்சிஸ், பிளேக் நோயால் தாக்கப்பட்ட மக்களிடையே பணிபுரிந்தார். தன் அரண்மனை சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்காக செலவு செய்தார். அப்போதுதான் பிளேக் நோயால் பாதித்தவர்களுக்கு பணிபுரிவதற்கென்றே ஓர் துறவற சபையை நிறுவினார். தன் பிள்ளைகளையும், உற்றார், உறவினர் அனைவரையும் துறந்து இறைப்பணி செய்து  இறந்தார். 

Saturday 11 August 2018

புனித கிளாரா



       கிறிஸ்துவுடன் இணைந்து தூயவராக வாழ்ந்தவர். ஏழ்மை, கீழ்ப்படிதல், ஒறுத்தல், தாழ்ச்சி போன்றவற்றை வாழ்வின் அடித்தளமாக கொண்டவர். துறவு வாழ்க்கை வழியாக இறையாட்சி பணி செய்தவர். இறைபக்தியில் சிறந்து விளங்கிய கிளாரா இத்தாலி நாட்டில் அசிசிச நகரில் 1194ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 16ஆம் நாள் பிறந்தார். இறைவன்மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டு வாழ்ந்தார். குடும்பச் செபங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். இவரது பெற்றோர் இளமைப்பருவத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். இத்தருணத்தில் அசிசி நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆலயத்தில் புனித அசிசியார் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி மறையுரை நிகழ்த்தினார். அவரது மறையுரையால் ஈர்க்கப்பட்டு இறைவனுக்கு தனது கன்னிமை அர்ப்பணம்  செய்தார். 
இறைவன்மீது தாகம் கொண்ட கிளாரா துறவு வாழ்க்கை வாழ இரவில் யாருக்கும் தெரியாமல் புனித அசிசியார் துறவு இல்லத்திற்கு சென்றார். அசிசியார், “நீர் கடவுள் தேர்ந்தெடுத்துள்ள ஆன்மா” என்றுகூறி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். கிளாரா உலக இன்பங்களை துறப்பதன் அடையாளமாக அவரது முடி வெட்டப்பட்டது. துறவிக்கான ஆடைப்பெற்றுக்கொண்டார். அவரது தந்தை தேடி வந்து வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்தினார். தான் துறவு வாழ்க்கை  வாழ விரும்புவதாகவும், அதன் அடையாளமாக முடி வெட்டப்பட்டதையும் காட்டினார். இதைப் பார்த்தவுடன் தந்தை வீட்டிற்கு சென்றார். கிளாரா அருகில் இருந்த புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்க்கப்பட்டார்.
ஏழ்மை வழியாக கிறிஸ்துவின் வாழ்வை பிரதிபலித்தார். ஒறுத்தல்கள் வழியாக பாவங்களுக்கு பரிகாரம் செய்தார். இறைவார்த்தை கடைப்படித்து வாழ்வதில் கவனம் செலுத்தினார். அசிசியார் எழுதிய இயேசுவின் சிலுவைத் துன்பம் பற்றிய செபம் வழியாக இயேசுவின் துன்பப்பாடுகளில் பங்குகொண்டார். நற்கருணை ஆண்டவர்மீது பக்தியும் பற்றும் கொண்டார். இரவு நேரங்களில் நற்கருணை ஆராதிப்பில் அளவில்லா ஆனந்தம் அடைந்தார். கிளாரா 28ஆண்டுள் நோயுற்ற நிலையில் வாழ்ந்தார். நோய்யுற்ற நாட்களில் நற்கருணை அவரது உணவாக மாறியது. தனது இன்பத் துன்பங்களை  நற்கருணை ஆண்டவரிடம் அர்ப்பணம் செய்தார். தனக்கென்று வாழாமல் பிறர்கென்று வாழ்ந்து நற்பண்புகளின் மணிமகுடமாக மாறினார். இறைவனின் வாழ்வுதருகின்ற வார்த்தையை வாழ்வாக்கி நற்சான்று பகர்ந்த கிளாரா 1253ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 11ஆம் நாள் இறந்தார்.  

Friday 10 August 2018

புனித லாரன்ஸ்

   இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர். திருச்சபையின் சொத்துக்களை பராமரித்தவர். கிறிஸ்துவுக்காகப் பணிசெய்து மறைசாட்சியாக மாறிட ஆவல் கொண்டவர். இறைவார்த்தையை வாழ்வாக்கி பறைசாற்றியவர். கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக மாறியவரே புனித லாரன்ஸ். இவர் உரோமைத் திருத்தொண்டர்களுள் ஒருவராக பணியாற்றியவர். இரண்டாம் திருத்தந்தை சிக்ஸ்துஸ் இவரது நண்பர். இவரது மறையுரையால் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். இரண்டாம் திருத்தந்தை சிக்ஸ்துஸ் கொலைக் களத்திற்கு இழுத்துச் செல்லப் படடபோது, “தூய குருவே உமது திருத்தொண்டர் இல்லாது நீர் மட்டும் செல்வதேன்” என்று லாரன்ஸ் கேட்டார். அதற்கு, “நீர் மூன்று நாட்களில் என்னை பின்செல்வாய்”  என்று திருத்தந்தை பதில் கூறினார்.  


  லாரன்ஸ் கிறிஸ்து அறிவித்தக் காரணத்தால் மக்ரியன் அரசன் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். திருச்சபையின் சொத்துக்களைத் தன்னிடம் ஒப்படைக்கக் கட்டளையிட்டான். லாரன்ஸ் மறுநாள் காலையில் நடக்க இயலாதவர், பார்வையற்றவர், முதியோர், ஆதரவற்றோர் போன்ற ஏழை எளிய மக்களை அரசன் முன்பாக நிறுத்தி, “இவர்களே திருச்சபையின் சொத்து” என்றார். இதைக்கேட்ட அரசன் கோபங்கொண்டு அவரை இரும்புக் கட்டில் படுக்கவைத்து அடியில் தீ மூட்ட கட்டளையிட்டான். நெருப்பின் தணல் வெந்து வேதனையால் துடித்தார். லாரன்ஸ் அரசனைப் பார்த்து “கொடுங்கோலா! என் உடன் இந்தப்பாகம் நன்றாக வெந்துவிட்டது. திருப்பிப்போடு, நன்றாக வெந்ததும் எடுத்து சாப்பிடு” என்றார். அவரது முகம் விண்ணக ஒளியால் சுடர்விட்டது. பார்த்தவர்கள் பரவசமடைந்து கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டார்கள். லாரன்ஸ் ஆகஸ்ட் 10ஆம் நாள் மறைசாட்சியாக இறந்தார்.

Thursday 9 August 2018

புனித தெரசா பெனடிக்டா

   அமைதி வேண்டலில் தனி ஆர்வம் காட்டிவர்.  நற்பண்பில் வளர்ந்து அனைவரின் நன்மதிப்பை பெற்றவர். இறைபக்தியில் சிறந்து விளங்கியவர். உண்மைக்காக வாழ்ந்து நீதியை நிலைநாட்டியவரே புனித தெரசா பெனடிக்டா. இவர் ஜெர்மனியில் ப்ரஸ்லோ என்னும் இடத்தில் 1891ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12ஆம் நாள் பிறந்தார். குழந்தைப்பருவத்தில் தந்தையை இழந்தார்.  சிறுவயதிலிருந்தே ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட்டார். பல புனிதர்களின் வரலாற்றை ஆர்வமுடன் வாசித்து, அவர்களைப்போல வாழவேண்டுமென்று விரும்பினார். சிறந்த அறிவாளியாகவும் காணப்பட்டார். இவர் எட்மண்ட் ஹஸ்ரல் என்பவரின் தத்துவ நுண்ணறிவால் ஈர்க்கப்பட்டிருந்த வேளையில் ஒரு கத்தோலிக்கப் பேராசிரியரின் துணைவியாருக்குச் சில உதவிகள் புரிந்துவந்தார். தன் கணவரை நினைத்து, திருச்சிலுவையை நோக்கி கண்ணீர்விட்டு மன்றாடி செபித்தார். தொடர்ந்து செபித்த அப்பெண்ணினால் கிறிஸ்துவ மதத்திற்கு தானும் மாற வேண்டுமென்று தூண்டப்பட்டார். அப்பொழுது, கத்தோலிக்க விசுவாசத்தின் மீது ஈர்ப்பு ஏற்படத் தொடங்கியது.


   தாயின் வழிகாட்டுதலால் நற்பண்பில் வாளர்ந்தார். உண்மைக்காக வாழ்ந்து இறைவனை மாட்சிப்படுத்த விரும்பினார். இறைவன் தனது வாழ்வின் மையமாக மாறிட ஆவல் கொண்டார். கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார். சிலுவையில் அறையுண்ட இயேசுவையே தியானித்து சகித்து வாழ்ந்தார். புனித அவிலா தெரசா அவரின் சுயசரிதை ஆர்வமுடன் படித்தார்.  கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் வார்த்தைகளை தனதாக்கிட விழைந்தார். தியான வாழ்க்கையை விரும்பினார்.  “அளவற்ற அமைதியில் நான் கடவுளின் இல்லத்து நுழைவாயிலைக் கடக்கிறேன்” என்றுகூறி கார்மெல் துறவு மடத்தில் சேர்ந்தார். கார்மெல் சபை கன்னியர் அடை அணிந்து சிலுவையின் தெரசா பெனடிக்டா என்று பெயர் பெற்று பலமுறை ஹிட்லரால் துன்புறுத்தப்பட்டபோதும், தான் " ஓர் கிறித்தவள்" என்றே கூறினார். இதனால் ஹிட்லர் யூத குலத்திற்கு, மேலும் பல துன்பங்களைக் கொடுத்தான். அப்படி இருந்தபோதும் கூட இறைவனை இறுகப்பற்றிக்கொண்டு தொடர்ந்து செபித்தார். ஹிட்லரின் பிடியிலிருந்தபோதும்கூட உடனிருந்த மக்களிடையே போதித்தார். இதனால் ஹிட்லரால் பலமுறை கொடுமைப்படுத்தப்பட்டு உயிர் துறந்தார்.

Wednesday 8 August 2018

புனித தோமினிக்

     கடவுளின் திருமுன்னால் தூய்மையாக வாழ வேண்டும். கிறிஸ்துவின் இறையாட்சி பணி மற்றும் ஒழுக்கம் ஆகியவை இரு கண்களாகப் போற்றப்பட வேண்டும். சொந்தமாக செல்வம் சேர்த்து வைத்திருக்கக் கூடாது. கூடிய மட்டும் பிச்சை எடுத்தே உண்ணவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவரே புனித தோமினிக். இவர் ஸ்பெயின் நாட்டில் 1170ஆம் ஆண்டு பிறந்தார். தோமினிக் என்றால், ‘நான் கடவுளுக்குச் சொந்தமானவன்’ என்பது பொருள். தனது 16ஆம் வயதில் புனித அகஸ்டின் துறவற சபையில் சேர்ந்தார். இறையியல் பட்டம் பெற்று இறையாட்சி பணியை ஆரம்பிதத்தார். ஊர் ஊராக சென்று இறையாட்சி அறிவித்தார். இறைமக்கள் இறைவனோடு இணைந்து வாழ செப வாழ்வை அமுதாய் ஊட்டினார். இறைவார்த்தைக்கேற்ப வாழ்ந்து, கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் பிரதிபலிக்க இரவும் பகலும் அயராது உழைத்தார்.


     1204ஆம் ஆண்டு டென்மார்க் அரசியைக் காப்பாற்ற அரசர் எட்டாம் அல்ஃபோன்சோ என்பவர் ஓஸ்மா மறைமாவட்ட ஆயர் தியாகோ மற்றும் தோமினிக் இருவரையும் டென்மார்க்கிற்கு அனுப்பினார். அவர்கள் தென் பிரான்ஸ் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஆல்பிஜென்சிய தப்பறையைப் பின்பற்றிய மக்களைச் சந்தித்தார்.  தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுக்க திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட், தோமினிக்கை நியமித்தார். தோமினிக், அன்னை மரியாவிடம் பக்தி கொண்டிருந்தார். அன்னையின் துணையால் ஆல்பிஜென்சிய தப்பறையின் மீது வெற்றி பெறமுடியும் என்று நம்பினார். தோமினிக் தூலூஸ் நகருக்கு அருகிலுள்ள காட்டிற்கு சென்று அன்னையின் உதவிக்காகவும், இறைவன் மக்களின் பாவங்களை மன்னிக்கவும் மன்றாடினார்.  மக்களைப் புனிதப்படுத்தத் தன்னைப் புனிதப்படுத்தினார். அன்னை மரியா மூன்று வானதூதருடன் தோன்றி, “நீர் போதனை செய்யும் போது, மக்கள் செபமாலை செபிக்கச் சொல்லும். அதன் வழியாக உம் வார்த்தைகள் ஆன்மாக்களில் விழுந்து மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்றார். செபமாலையின் வழியாக ஆல்பிஜென்சிய தப்பறையும் முறியடிக்கப்பட்டது. செபமாலை என்பது ‘ஏழைகளின் திருப்பாடல்’ மற்றும் ‘நற்செய்தியின் சுருக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.  அன்னை மரியாவின் துணையோடு இறையாட்சி பணி செய்த தோமினிக் 1221ஆம் ஆண்டு இறந்தார். 

Tuesday 7 August 2018

புனித கயத்தான்

     அன்னை மரியாவின் அருள்பெற்று கீழ்ப்படிதல் வழியாக இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்தவர்.  இறைவேண்டலிலும் பிறருக்கு அன்புப்பணி ஆற்றுவதிலும் சிறந்தவர்.  இறக்கும்வரை இயேசுவுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தர்.  அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராக மாறியவரே புனித கயத்தான். இவர் 1480ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்தார். இவரது பெற்றோர் இவரை அன்னை மரியாவிடம் அர்ப்பணம் செய்தார்கள். அன்னையின் அருள்பெற்ற கயத்தான் நாளும் நற்பண்பில் சிறந்து விளங்கினார். தான் ஓர் அரச குடும்பத்தில் பிறந்ததால், தன் பெற்றோரின் சொத்திலிருந்து பெற்ற பணத்தைக்கொண்டு, தான் பிறந்த ஊரான விச்சென்சாவில் ஒரு மருத்துவமனையை கட்டினார். தான் வாழ்வு முழுவதையுமே நோயாளிகளுக்காக அர்ப்பணித்தார்.



   தனது 24ஆம் வயதில் உள்நாட்டு மற்றும் திருச்சபை சார்ந்த சட்ட நூலை கற்றுக்கொண்டார். அறிவின், இறைஞானத்தில் வளர்ச்சி அடைந்த கயத்தான் திருதந்தை இரண்டாம் ஜøலியஸ் என்பவரின் ஆட்சிக்கு உதவி செய்தார். இறைபக்தியில் வளர்ந்த கயத்தான் குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை திறம்பட செய்தார். இறைமக்களுக்கு அன்பையும், அறிவையும், பாசத்தையும், இறையாசிரையும் பகிர்ந்தளித்தார். பிள்ளைகளாலும், உறவினர்களாலும், கைவிடப்பட்ட நோயாளிகளை, இறுதிமூச்சுவரை பராமரிக்க 1524ஆம் ஆண்டு புதிய துறவற சபையை தொடங்கினார். வெனிஸ் நகரிலும், நேப்பிள்ஸ் நகரிலும் இச்சபையை பரவ செய்தார். இத்துறவற சபையினர் பிறருக்கு பணிசெய்வதின் வழியாக, இயேசுவை மக்களுக்கு அறிவித்து, அவரின் சாட்சிகளாயினர்தூய வாழ்க்கை வாழ்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்பட்டார். தனது கடமைகளை சரிவரச் செய்தார். ஒழுக்கநெறியில் சிறந்து தியாக வாழ்க்கை வாழ்ந்த கயத்தான் 1547ஆம் ஆண்டு  இறந்தார்.

Sunday 5 August 2018

புனித மரிய மக்கில்லப்

   ஏழைகளின் நலனுக்காக வாழ்ந்தவர். தன்னலம் இன்றி பெய்வருத்தம் பாராமல் இறையாட்சி பணி செய்தவர். இறைவனுக்காக ஆர்வமுடன் நற்செயல்கள் செய்தவரே புனித மரிய மக்கில்லப். இவர் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் 1842ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 15ஆம் நாள் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து இறையாட்சி பணி செய்தார். ஏழைகளின் நல்வாழ்வுக்காகவும், குழந்தைகளின் கல்வி வளர்ச்சிகாகவும் உழைத்தார். ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கல்வி பணி செய்தார். திருச்சபையை அன்பு செய்தார். தூய வளனாரின் திரு இதய சபையின் முதல் உறுப்பினர். அன்னை மரியாவை அன்பு செய்தார். அன்னையின் அருள் பெற்று தூயவராக வாழ்ந்த 1901ஆம் ஆண்டு இறந்தார்.

புனித ஜாண் மரிய வியான்னி

    நற்கருணையின் முன்னால் செலவிடும் நேரத்தைப் பொன்னான நேரமாகக் கருதவேண்டும் என்றுகூறி அவ்வாறே வாழ்ந்தவர். இறைமக்களுக்கு விண்ணகம் செல்ல பாதை காட்டியவர்.  நான் குருவானால் கடவுளுக்காக ஏராளமான ஆன்மாக்களை வென்றெடுப்பேன் என்ற கூறியவர். பங்கு குருக்களின் முன்மாதிரியாக வாழ்ந்தவரே புனித ஜாண் மரிய வியான்னி. இவர் பிரான்ஸ் நாட்டில் இலயன்ஸ் நகரில் டார்டிலி என்ற கிராமத்தில் 1786ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தமது 13ஆம் வயதில் நற்கருணை பெற்றுக்கொண்டார். குருவாகப் பணிசெய்ய விரும்பினார். இறையியல் படிப்பையும் இலயன்ஸ் நகரில் முடித்தார். 1815ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் ஜாண் மரிய வியான்னி குருவாக அருள்பொழிவு பெற்றார். 
    ஜாண் மரிய வியான்னி ஆர்ஸ் என்ற சிற்றூரின் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆர்ஸ் கிராமம் செல்ல வழி தெரியாமல் திகைத்தபோது ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வழிகாட்டினான். தனக்கு வழிகாட்டிய சிறுவனிடம், ஜாண் மரிய வியான்னி, “நீ எனக்கு ஆர்சுக்கு வழிகாட்டினாய். நான் உனக்கு விண்ணகத்திற்கு வழிகாட்டுவேன்” என்றார். வீடு வீடாய் சென்று மக்களைச் சந்தித்தார். காலையில் முதல் மாலைவரை ஆலயத்தில் செபித்தார். நோயாளிகளையும் அவர்களது இல்லங்களையும் தவறாமல் சந்தித்தனார். பங்கின் பாதுகாவலர் விழாவைச் சிறப்பாக கொண்டாடினார். ஆதரவற்றோரைப் பராமரிக்க இறைபராமரிப்பு இல்லம் தொடங்கி கவனித்தார். குழந்தைகளுக்கு கல்வி புகட்டினார். தனது மறையுரையில் ‘விண்ணகம்’ என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தினார். 

  பிறரைப் புனிதப்படுத்த தன்னை புனிதப்படுத்தினார். மரிய வியான்னியின் செப, தவ முயற்சியின் பலனாக ஆர்ஸ் சிற்றூர் மறைமாவட்டத்திலேயே ஒரு முன்மாதிரியான பங்குதளமாக 1835இல் அறிவிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கினார். கரடு முரடான படுக்கையில் படுத்து உறங்கினார். உணவிற்காக ஒரு சில வேகவைத்த உருளைக் கிழங்குகளை உண்டார். அலகையின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். 1859, ஜøலை 29ஆம் நாள் தனது அன்றாட அலுவலான போதிக்கும் பணி மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் பணியை முடித்து படுக்கைக்கு திரும்பினார். இறையன்பராக, ஏழ்மையின் இலக்கணமாக வாழ்ந்த ஜாண் மரிய வியான்னி 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் நாள் இயற்கை எய்தினார். 

Friday 3 August 2018

புனித வால்தியோஃப்

   இறைமக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக ஆர்வமுடன் உழைத்தவர். இறைவனின் அன்பையும், கனிவையும், மன்னிப்பையும் தனதாக்கி நாளும் பகர்ந்தளித்தவரே புனித வால்தியோஃப். இவர் 1095ஆம் வண்டு பிறந்தவர். இவர் குழந்தை பருவம் முதல் இறையன்பில் வளர்ந்து வந்தார். இறைவனின் பாதம் அமர்ந்து செபிப்பதில் ஆர்வம் செலுத்தினார். தன்னால் இயன்ற உதவிகளை செய்தவதில் கருத்தாய் செயல்பட்டார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்து இறைபக்தியில் வளர கவனம் செலுத்தினார். 1130ஆம் ஆண்டு அகுஸ்தினார் மடத்தில் சேர்ந்தார். செபம், தவம் செய்தார். பலருடைய ஆன்ம ஈடேற்றத்திற்காக தன்னை கையளித்து 1160ஆம் ஆண்டு இறந்தார்.

ஆகஸ்ட் 2. புனித பேதுரு ஜøலியன் ஐமார்ட்

    நற்கருணை ஆண்டவர்மீது பற்றும் பக்தியும் கொண்டு வாழ்ந்தவர். நற்கருணையின் திருத்தூதர் என்று அழைக்கப்படுபவர். ஏழை குடும்பத்தில் பிறந்து இறையன்பின் செல்வந்தராக வாழ்ந்தவர். இறைவார்த்தையை வாழ்வாக்கி புனித பாதையில் பயணம் செய்தவரே புனித பேதுரு ஜøலியன் ஐமார்ட். இவர் 1811ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் லா மூர் என்னும் இடத்தில் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து வந்த பேதுரு ஜøலியன் இறைவனின் அழைப்புக்கு குரல் கொடுத்து குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். 1834ஆம் ஆண்டு க்ரேநோபில் மறைமாவட்டத்திற்கு குருவாக அருள்பொழிவு பெற்றார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் கொண்டு அன்னையின் அரவணைப்பும் அன்பும் பெற்று இறையாட்சி பணியை சிறப்பாக செய்தார். நற்கருணை முன்பாக தனது நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைந்தார். நற்கருணை ஆராதனை நடத்தி இறைமக்களுக்கு இறையசீர் பெற்றுக்கொடுத்தார். கத்தோலிக்க நம்பிக்கை கைவிட்டு வாழ்ந்த மக்களை மனம் மாற்றினார். தனது பங்கு மக்களிடம், “தினமும் திருப்பலி காணுங்கள். நாள் முழுவதும் அது உங்களுக்கு வெற்றியைப் கொடுக்கும். அதன் பயனாக உங்கள் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய இயலும்” என்றுகூறி நற்கருணை ஆண்டவரை அன்பு செய்த பேதுரு ஜøலியன் ஐமார்ட் 1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் நாள் இறந்தார்.

Wednesday 1 August 2018

புனித அல்போன்ஸ் லிகோரி அன்னை மரியா


  
  புனித அல்போன்ஸ் லிகோரி அன்னை மரியாவின் கரங்கள் வழியல்லாமல் நாம் ஒன்றையும் பெற முடியாது என்பதை உணர்ந்தார். தனது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் அன்னையின் வழியாக இறையருளை பெற்றார். தனது வாழ்வில் சந்தித்தத் தடைகளை செபமாலை வழியாக வெற்றியின் படிக்கற்களாக மாற்றினார். ஆன்மீக வாழ்வில் இறையன்பின் உச்ச நிலைக்கு அடைந்தது செபமாலை வழியாகவே என்று கூறினார். வயதான நிலையில் ஒருமுறை சக்கர வண்டியில் வைத்து அவரை ஒரு சகோதரர் மடத்துக்கு வெளியே காற்றோட்டமான இடத்திற்கு தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது லிகோரி அந்த சகோதரனைப் பார்த்து, ‘இன்று நீ செபமாலை செபித்தாயா?’ என்று கேட்டார். அந்த சகோதரன், ‘எனக்கு ஞாபகமில்லை’ என்று கூறினார். உடனே அல்போன்ஸ் கோரி, ‘அப்படியென்றால் நாம் இப்பொழுது செபமாலை செபிப்போம்’ என்றார். அச்சகோதரன், ‘நீங்கள் களைப்பாகத்தானே இருக்கிறீர்கள், ஒருநாள் செபமாலை செபிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடப்போகிறது?’ என்று பதில் கூறினார். அதற்கு லிகோரி, “ஒருநாள் செபமாலை செபிக்காவிட்டால் நான் என் முடிவில்லா மீட்பைப்பெ றத் தவறிவிடுவேனோ? என்று அஞ்சுகிறேன்” என்றார்.


   எல்லா சனிக்கிழமைகளிலும் அன்னை மரியாவை நினைவு கூரவும், தினமும் செபமாலை செய்ய குருக்களுக்கும், இறைமக்களுக்கும் அழைப்பு விடுத்தார். “நமது வாழ்வில் துன்பங்கள், சோதனைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், கவலைகள் பெருகும் போது அன்னை மரியாவின் உதவியை நாடவேண்டும். அன்னையின் நாமம் நமது உதடுகளைவிட்டு நீங்காதிருக்கட்டும். அன்னை மரியாவை பின்பற்றினால் மீட்பின் பாதையில் எளிதாக நடக்க இயலும். நம்பிக்கை இழக்கமாட்டோம்; சோர்வடைய மாட்டோம்; தீமைக்குப் பயப்பட வேண்டாம்; விண்ணக வாழ்வை பெற்றுக் கொள்வோம்” என்றார்.   “செபமாலை சொல்லும் ஒரு படையை எனக்கு கொடுங்கள்; நான் இவ்வுலகையே வென்றுக்  காட்டுகிறேன்” என்பதற்கேற்ப செபமாலையை கரங்களில் ஏந்தி தினமும் செபம் செய்தார். செபமாலையின் சக்தியால் தப்பறைகளை தோற்கடித்தார். 

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி

   
     இறையன்பால் ஈர்க்கப்பட்டு புகழ்மிக்க வழக்குரைஞர் பணியைத் துறந்து, தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து, ஆன்மீ வாழ்க்கையால் தப்பறைகளைத் தகர்த்து, ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும் அறநெறியாளர்களின் பாதுகாவலராக மாறியவரே புனித அல்போன்ஸ் மரிய லிகோரி. இவர் இத்தாலி நாட்டில் நேப்பிள்ஸ் அருகிலுள்ள மரியநெஸ்லா என்னுமிடத்தில் 1696ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27ஆம் நாள் பிறந்தார்.  இறைபக்தியில் வளர்ந்து, இறை நம்பிக்கையில் உறுதியாக இருந்து இறைபக்தி, எளிமை, இரக்கம், தியாகம் போன்ற பண்புகளில் சிறந்து விளங்கினர். தினமும் திருப்பலியில் பங்கேற்பதில் கவனம் செலுத்தினார். தனது 16ஆம் வயதில் சட்டம் படித்துப் புகழ்பெற்ற வழக்குரைஞராக மாறினார். 


       லிகோரி தனது வழக்குரைஞர் பணியைத் திறமையாகச் செய்தார். நடத்திய வழக்குகள் எல்லாமே வெற்றியடைந்தன. லிகோரி தமது 27ஆம் வயதில் புகழ்ச்சியின் உச்சியில் நின்ற தருணத்தில் வழக்கில் முதல் முறையாக தோல்வியுற்றார். இத்தோல்வி அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்ப்படுத்தியது. இதுவே சரியான நேரம் என்று உணர்ந்து “உலகமே உன்னைத் தெரிந்து கொண்டேன், நீ இனிமேல் என்னைப் பார்க்கமாட்டாய்” என்று கூறினார். கிறிஸ்துவுக்காகப் பணிசெய்ய மாண்புமிக்க, மேன்மையான குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். அன்னை மரியாவிடம் அன்பு செலுத்தினார். பல தடைகளை படிக்கற்களாக மாற்றி 1726, டிசம்பர் 21ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

      லிகோரி இறைவார்த்தையை அறிவிப்பவர் அல்ல, வாழ்ந்து காட்டியவர். நேப்பிள்ஸில் உள்ள கல்லூரியில் 1729ஆம் ஆண்டு பணியாற்றினார். இவருடைய மறையுரையால் ஏராளமான மக்கள் மனமாற்றம் அடைந்தனர். 1732ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பது அன்று ‘இரட்சகர் சபையை’  நிறுவி நகரத்திலும், குப்பங்களிலும், குடிசைகளிலும், சாக்கடை ஓரங்களிலும் அல்லலுறும் மக்களுக்கு பணியாற்றினார். 1762ஆம் ஆண்டு புனித ஆகத்தா தெய்கோத்தி மறைமாவட்டத்தின் ஆயராக அருட்பொழிவு பெற்றார். நற்கருணை மீதும், அன்னை மரியாவின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அன்னை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டார். தமது 83வது வயதில் 1787ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் இயற்கை எயóதினார்.