Friday 24 August 2018

ஆகஸ்ட் 23 புனித லீமாரோஸ்

 
     துன்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. சிலுவை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு இல்லை என்று உணர்ந்து கொண்டு, “ஆண்டவரே எனது துன்பத்தை அதிகமாக்கும். எனது இதயத்தில் உம்மீதுள்ள அன்பைப் பெருகச் செய்யும்” என்று கூறி வாழ்நாள் முழுவதும் தனது துன்பத்தின் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தியவரே புனித லீமாரோஸ். இவர் தென் அமெரிக்காவில் லீமா என்னும் ஊரில் 1586ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் பிறந்தார். குழந்தை இயேசுவின் மீதும், அன்னை மரியாவின் மீதும் மிகுந்த பக்தி கொண்டு இவர்களின் பீடங்களை அழகிய மலர்களால் அலங்கரித்து நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுதல் செய்தார். துறவு மேற்கொண்டு இறைவனை அன்பு செய்ய தீர்மானித்தார். கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். தமது 20ஆம் வயதில் புனித சாமிநாதரின் மூன்றாம் சபையில் சேர்ந்தார். 

     ஒருநாள் கொள்ளையர்கள் திவ்விய நற்கருணை வைக்கப்பட்டிருந்த ஆலயத்தை இடிக்க வந்தார்கள். ரோஸ், “என்னைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுங்கள். என்னை கொலை செய்ய எவ்வளவு நேரம் எடுக்குமோ அவ்வளவு நேரமாவது திவ்விய நற்கருணை பாதுகாக்கப்படட்டும்” என்று கூறினார். இதற்கு காரணம் திவ்விய நற்கருணையின் மீது அவர் கொண்டிருந்த பக்தியே. ஒருமுறை குழந்தை இயேசுவிடம் செபித்தார். குழந்தையேசு, “எனது இதயத்தின் ரோஸ், எனது மணமகளாக இரு” என்று கூறினார். “இயேசுவே, நான் உமது வேலையாள் ஆண்டவரே, நான் உமது அடிமை. நான் உம்முடையவள் உமக்கு என்றும் உண்மையாக இருப்பேன்”என்றார். 

   ரோஸ் வாழ்நாள் முழுவதும் இறைவனை தூய இதயத்துடன் அன்பு செய்தவர்; அதிகாலையில் எழுந்து அவரது திருமுகத்தை வாஞ்சையோடு தேடியவர்; இறையாட்சியின் பாதையில் பாதங்கள் பதராமல் கிறிஸ்துவோடு நடந்தவர்; அவருக்காக வேதனைகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டவர்; தினந்தினம் கிறிஸ்துவின் நெஞ்சிலே சாய்ந்து செபித்தவர்; அவரோடு நெருக்கமாக உரையாடியவர்; அவரது விருப்பம் நிறைவேற்றியவர்; அவரது இறைவார்த்தைக்கு தன் வாழ்வை கையளித்தவர் 1617ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள், தனது 31ஆம் வயதில் இயற்கை எய்தினார். 

No comments:

Post a Comment