Wednesday 30 June 2021

புனித பேதுரு மற்றும் புனித பவுல்

     

         திருச்சபையின் இரண்டு தூண்கள் புனித பேதுரு மற்றும் புனித பவுல். இயேசு கிறிஸ்துவினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். பேதுரு பெத்சாய்தா நகரில் பிறந்து கப்பர்நகூமில் குடியேறிய யோனாவின் மகன். பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியை பெற்று போதித்த முதல் போதனையில் 3000 பேர் திருமுழுக்குப் பெற்றனர். பாலஸ்தீனாவில் பணியாற்றினார். முடவனுக்கு இயேசுவின் பெயரால் குணம் கொடுத்தார். 67இல் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.     

      புனித பவுல் தர்சு நகரில் பிறந்தார். யூத ரபி கமாலியேல் என்பவரிடத்தில் திருச்சட்டத்தில் பயிற்சி பெற்றார். கிறிஸ்தவர்களை துன்புறுத்தினார். இறைவனின் அழைப்பு பெற்று சவுல்þபவுலாக மாறி நற்செய்தி பணிக்காக தன்னை அர்ப்பணித்தார். கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்படாத இடங்களில் நற்செய்தி  அறிவித்தார். தன் சொல்லாலும், செயலாலும் கிறிஸ்துவின் உண்மையான ஊழியனாக வாழ்ந்த பவுல் 67ஆம் ஆண்டு நீரோ மன்னனின் காலத்தில் தலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

உரோமைத் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள்

           

       உரோமைத் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள். கத்தோலிக்கத் திருச்சபை மறைசாட்சிகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது. கி.பி முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு தொடக்கம் வரை இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களை சிலுவையில் அறைதல், தலைவெட்டுதல், நெருப்பில் எரித்தல், குளிர்ந்த நீரில் உரையவைத்தல், விலங்குகளுக்கு இரையாக்குதல், உயிரோடு தோல் உறித்தல் போன்ற பல்வேறு முறையில் கிறிஸ்தவர்கள் மறைசாட்சியாக இறந்தனர்.

         64ஆம் ஆண்டு பேரரசர் நீரோ தனது அரண்மனையை விரிவுப்படுத்த உரோமையில் தீ வைத்தார். மக்கள் கோபம் கொண்டு கொதித்தனர். மக்கள் தனக்கு எதிராக பிரச்சனை எழுப்புவதை அறிந்த பேரரசன்  கிறிஸ்தவர்கள் தான் உரோமை நகருக்கு தீ வைத்தார்கள் என்றுகூறி மக்களை நம்பவைத்தார். மக்களின் கோபம் முழுவதும் கிறிஸ்தவர்கள்மீது திரும்பியது. குற்றமற்ற கிறிஸ்தவர்கள் விலங்குகளுக்கும், தீக்கும் இரையானார்கள்.                    

Monday 28 June 2021

புனித ஐரனியஸ்

 

      புனித ஐரனியஸ் இரண்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிறந்தார். கத்தோலிக்க இறையியலார்களின் தந்தை என்றழைக்கப்படுகிறார். உரோமைப் பேரரசரான மால்குஸ் அவுரேலியுஸ் கிறிஸ்தவர்களை கொலை செய்த காலத்தில் லுக்குனம் பகுதியில் குருவாக பணி செய்தார். மறைக்கலகத்தின் போது கிறிஸ்தவ நம்பிக்கையை புறக்கணிக்காத அருள்பணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்ட குருக்களின் நிலையை உரோமை சென்று திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார்.  

     ஐரனியஸ்  லுக்குனம் பகுதிக்கு திரும்பியதும் ஆயரானார். 24 ஆண்டுகள் அமைதியுடன் ஆயராக இறைபணி செய்தார். சிந்தனைத்துவக் கருத்துக்கள், தப்பறைகள் ஆகியவற்றிற்கு எதிராக நூல்கள் எழுதினார். புதிய ஏற்பாட்டின் அதிகாரப்பூர்வ பதிப்புகள் உருவாக வழி செய்த ஐரனியஸ் மறைசாட்சியாக இறந்தார்.        

Sunday 27 June 2021

அலெக்ஸாந்திரியா நகர் புனித சிரில்


        அலெக்ஸாந்திரியா நகர் புனித சிரில் 376ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து இறைஞானம் மிகுந்தவரானார். இறையியல் கற்று குருவாக அருள்பொழிவு பெற்றார். இறைவனோடு இணைந்து திருச்சபையை அன்பு செய்தார். தியோஃபிலஸ் 412இல் இறந்தபோது சிரில் மறைத்தந்தையானார். நெஸ்தோரியனிசம் தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். 


   கிறிஸ்தவர்களை துன்பங்களிலிருந்து விடுவித்தார். தன்மீது குற்றம் சுமத்தியவர்களை மன்னித்து அன்பு செய்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பக்தியும் பற்றும் கொண்டார். “வெவ்வேறான மெழுகுத் துண்டுகள் இரண்டை எடுத்து ஒட்ட வைக்கும்போது ஒன்றாகி விடுகிறதன்றோ? அவ்வாறே நற்கருணை விருந்தில் பங்கேற்கும் ஒருவர் கிறிஸ்துவுடன் ஒன்றாகிறார். கிறிஸ்து அவருடனும், அவர் கிறிஸ்துவடனும் இணைந்து விடுகின்றார்” என்றுகூறிய சிரில் 444, ஜூன் 27ஆம் நாள் இறந்தார்.


Saturday 26 June 2021

புனித ஜோஸ் மரியா எஸ்க்ரிவா தே பாலக்கர்

 

   

    புனித ஜோஸ் மரியா எஸ்க்ரிவா தே பாலக்கர் ஸ்பெயினில் 1902இல் ஜனவரி 9ஆம் நாள் பிறந்தார். கத்தோலிக்கப் பள்ளியில் பயின்று பக்தியில் வளர்ந்தார். சட்டம் பயின்று 1925ஆம் ஆண்டு குருவானார். மேய்ப்புப் பணியில் அதிதீவிரம் காட்டினார். ஏழைகள், குழந்தைகள், நோயாளிகளுக்கு உதவினார். உழைப்பின் மேன்மையை உணர்ந்து கடினமாக உழைத்தார். இறைவார்த்தையை தியானித்து இறையன்பை சுவைத்தார். 
   
 சமூகத்திற்கும் திருச்சபைக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். இறைமக்கள் தூய்மையை பின்பற்ற வழிகாட்டினார். இறைப்பணி என்ற அமைப்பை உருவாக்கி இறையன்பு, சகோதர அன்பை எடுத்துரைத்தார். எதிர்ப்புகளை சந்தித்தபோது இறைவனின் துணைநாடி முன்னேறினார். தொழிற் பள்ளிகள், விவசாய பயிற்சிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றைத் தொடங்கி கிறிஸ்தவ விழுமியங்களுக்கு சான்றாக பணி செய்த மரியா 1975, ஜøன் 26ஆம் நாள் இறந்தார். 

Friday 25 June 2021

புனித வில்லியம்

 
    மோன்ட்ரே விர்ஜினே நகர் புனித வில்லியம் இத்தாலியில் 1085ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்தார். தனது 15ஆம் வயதில் உலக இன்பங்களை துறந்து ஒறுத்தல்கள் செய்தார். கால்நடையாக புனித யாக்கோபின் திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டார். இறை தூண்டுதலால் இத்தாலியில் இறைபணி செய்ய இறைவல்லமையால் உந்துதல் பெற்றார். 
         

      விர்ஜினே பகுதியில் குடிசை அமைத்து தனிமையில் தன் ஆன்மீக வாழ்வை ஆரம்பித்தார். இறையனுபவம் மிகுந்த வில்லியம் அவர்களை மக்கள் சந்தித்து இறையன்பு,இறையாசீர், இறையமைதியை பெற்றனர். ஏழைகளின் நலன் கருதி நன்மைகள், புதுமைகள் செய்தார். பலரை தன்னுடன் இணைத்து துறவு மேற்கொண்டார். கடினமான தவ ஒறுத்தல்கள், இறைவேண்டல் வழியாக ஆன்மாக்கள் மீட்பு பெற அயராது உழைத்தார். சிசிலியில் முதலாம் ரோஜரின் உதவியுடன் ஆண்கள், பெண்கள் என்று துறவு இல்லங்கள் நிறுவினார். 1142இல் ஜூன் 25ஆம் நாள் இறந்தார். 

Thursday 24 June 2021

புனித திருமுழுக்கு யோவான்

 

    புனித திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா. தாய் எலிசபெத் முதிர்ந்த வயதில் யோவானை பெற்றெடுத்தார். யோவான் இறைவனின் கைவன்மையைப் பெற்று தனது வாழ்க்கைமுறை, பேச்சு ஆகியவற்றில் தனித்தும் பெற்றிருந்தார். பாலைவனத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்தார். 

            யோர்தான் ஆற்றில் இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்தார். உடல், உணவு ஆகியவற்றில் எலியாவை பின்பற்றி காட்டுத்தேன் உணவாகவும், ஒட்டகத்தோல் ஆடையாகவும் பயன்படுத்தினார். இஸ்ரயேல் அனைவரும் மீட்பு பெறவேண்டும் என்ற செய்தியை எடுத்துரைத்தார். படைவீரர்களிடம் நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க்குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் என்றார். தன் மனைவியை விலக்கிவிட்டு ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவி ஏரோதியாவை மணந்த ஏரோதைக் கண்டித்தபோது ஏரோது யோவானை கொலை செய்தார்.

Wednesday 23 June 2021

புனித ஜோசப் கஃபாசோ

    

    புனித ஜோசப் கஃபாசோ இத்தாலியில் 1811ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் பிறந்தார். பிறவிலேயே முதுகுத்தண்டு பிரச்சனையோடு பிறந்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். ஒறுத்தல் முயற்சிகள் வழியாக இறையாசீர் பெற்றார். தவறாமல் திருப்பலியில் பங்கேற்று பலிபீடத்தில் உதவினார். ஏழை குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார். ஒழுக்கமுள்ளவராகவும் தூயவராகவும் வாழ்ந்த ஜோசப் 22ஆம் வயதில் குருவானார். 

    தூரின் நகரில் குருமடத்தில் அறநெறி ஆசிரியராகவும் அதிபராகவும் பணி செய்தார். நற்கருணை பக்திக்கு முதலிடம் கொடுத்தார். ஒப்புரவு அருட்சாதனம் வழி இறை மன்னிப்பை மக்களுக்கு அனுபவமாக்கினார். ஆன்ம ஆலோசகராகவும் சமூக நலனில் அக்கறை உள்ளவராகவும் இருந்தார். ஏழைகள் ஆதரவற்றோருக்கு ஆதரவு அளித்தார். தானம், தவம், ஒறுத்தல் வழி இறைவனை மாட்சிப்படுத்திய ஜோசப் 1860ஆம் ஆண்டு ஜøன் 23ஆம் நாள் இறந்தார்.  

Saturday 19 June 2021

புனித ரோமுவால்ட்

         


         புனித ரோமுவால்ட் இத்தாலி நாட்டில் 950ஆம் ஆண்டு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து ஆடம்பரமாக வாழ்ந்தார். தனது தந்தையின் தவறுகளுக்கு பரிகாரம் செய்தார். புனித ஆசிர்வாதப்பர் துறவு இல்லத்தில் சேர்ந்தார். கடுமையான விதிமுறைகள் பின்பற்றி தன்னை நெறிப்படுத்தினார். கடுந்தவத்துடன் கூடிய செப வாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்தார். தவமேற்கொண்ட ரோமுவால்ட், மரினுஸ் இருவரும் இணைந்து புதிய துறவு இல்லம் நிறுவினர். 

           இத்தாலி முழுவதும் சுற்றித் திரிந்து நற்செய்தி போதித்து பல்வேறு துறவு இல்லங்கள் நிறுவினார். சென்ற இடமெல்லாம் துறவு இல்லம் நிறுவினார். இறைவார்த்தை வாழ்வாக்கி ஆன்மாவின் உணவாகவும், வாழ்வின் சட்டமாக கொண்டு பயணித்தார். இறைவேண்டலில் நிலைத்திருந்து இடைவிடாமல் இறைவனுக்கு நன்றிகூறி இறையாட்சி பணி செய்த ரோமுவால்ட் 1072ஆம் ஆண்டு ஜøன் 19ஆம் நாள் இறந்தார்.

புனித மாற்கு மற்றும் மார்செலியன்

   

    புனித மாற்கு மற்றும் மார்செலியன் உரோமையில் பிறந்தார்கள். கிறிஸ்தவர்கள் என்ற காரணத்தால் 10வது மறைகலத்தின் போது டயோக்ளிசின் அரசர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். இவருடைய பெற்றோர்,  “கிறிஸ்துவை மறுதலித்து உரோமை தெய்வங்களை வணங்கி தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு” கூறியபோது இருவரும் மறுத்தனர். 

    மாற்கு, மார்செலியன் இருவரும் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டனர். உரோமை தெய்வத்திற்கு வணக்கம் செலுத்துமாறு நீதிபதி கட்டளையிட்டார். உரோமை தெய்வத்தை வணங்காமல் கிறிஸ்துவை அரசராக அறிக்கையிட்டபோது மரண தண்டனை விதித்து 286ஆம் ஆண்டு ஜøன் 18ஆம் நாள் கொலை செய்தனர்.

Thursday 17 June 2021

புனித கிரகோரி பார்பரீகோ

  

    புனித கிரகோரி பார்பரீகோ இத்தாலியில் 1625ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் பிறந்தார். திருச்சபை சட்டம், உள்நாட்டு சட்டம் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றார். 1655ஆம் ஆண்டு குருவானார். இரக்கச் செயல்கள் வழி இறையன்பை வெளிப்படுத்தினார். 1656ஆம் ஆண்டு உரோமையில் பிளேக் நோய் பாதித்த நோயாளின் ஆன்மீகம், பொருளாதார தேவைகளை நிறைவேற்றினார். 

    1657 இல் ஜூலை 9 ஆம் நாள் பெர்காமோ மறைமாவட்டவத்தின் ஆயரானார். 1660ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் கர்தினாலானார். நூலகங்கள் நிறுவி கல்வி பணிக்கு முன்னுரிமை கொடுத்தார். திருதெந்து பொதுச்சங்கத்தின் முடிவுகளை நிறைவேற்றினார். கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மேய்ப்புப்பணி சந்திப்பு மையங்கள் தொடங்கினார். இறைபணிகளை ஆர்வமுடன் செய்த கிரகோரி 1697ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் நாள் இறந்தார்.

Wednesday 16 June 2021

புனித யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ்

  


    புனித யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் பிரான்ஸில் 1597 இல் ஜனவரி 31ஆம் நாள் பிறந்தார். 1616ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். திருச்சபையின் நம்பிக்கையின் போதனைகளை கற்பிக்கவும், ஆன்மாக்களை மீட்கவும் அயராது உழைத்தார். 1630ஆம் ஆண்டு குருவாகி இறையாட்சி பணியை ஆரம்பித்தார். தூலூஸ் நகரம் பிளேக் நோய் பரவியபோது மக்களை காப்பாற்ற உழைத்தார். 

 மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து ஆறுதல்கூறி செபித்தார். இரக்கச் செயல்கள் வழி மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். வசதியானவர்களிடம் உதவி பெற்று ஏழைகளின் துயர் போக்கினார். பாலியல் தொழில் வழி நிம்மதியை இழந்தவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்தார். 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நற்செய்தி அறிவித்து பலரை மனம்மாறினர். பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் நற்செய்தி அறிவித்த யோவான் 1640ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் இறந்தார்.

Tuesday 15 June 2021

புனித ஜெர்மேன் குசேன் பிப்ராக்

 


புனித ஜெர்மேன் பிரான்ஸில் 1579ஆம் ஆண்டு பிறந்தார். கழுத்து, தாடை காசநோய்க் கட்டியால் துன்புற்றார். தாயை இழந்தபோது தந்தை மறுமணம் செய்தார். சிற்றன்னை,  ஜெர்மேனின் நோய் தன்னை பாதிக்கும் என்று பயந்து வீட்டிலிருந்து வெளியேற்றினார். ஜெர்மேன் மாட்டுத்தொழுவத்தில் இலை சருகுகளை மெத்தையாக்கி உறங்கினார். காய்ந்த ரொட்டித் துண்டுகள் உண்டு அமைதியாக வாழ்ந்தார்.

     திருப்பலியில் தவறாமல் பங்கேற்றார். மறைக்கல்வி, கத்தோலிக்க விசுவாசம் பயின்றார். ஆடுகள் மேய்கும்போது செபமாலை செபித்தார். உடல்நோய், ஆதரவற்ற நிலையை தன்னொடுக்க தவமுயற்சி வழி ஆசீர்வாதமாக மாற்றினார். நற்கருணைமீதும் அன்னை  மரியாவின்மீதும் ஈடு இணையற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். எளிமையிலும், இகழ்ச்சியிலும், வறுமையிலும் இறைகரம் பற்றி வாழ்ந்த ஜொóமேன் 1061ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.

Monday 14 June 2021

புனித மெத்தோடியஸ்

    


       புனித மெத்தோடியஸ் 788இல் சிசிலியில் பிறந்தார். கல்வி அறிவில் வளர்ந்தபோது வேலை வாய்ப்புகள் தேடிவந்தன. ஆடம்பர வாழ்வை துறந்து பித்தினியாவில் துறவு மடத்தில் சேர்ந்தார். இறையனுபவம் பெற்று இறைதிட்டம் நிறைவேற்றினார். அர்மீனியனான 5ஆம் லியோ அரசன் சுரூப வழிபாட்டில் ஈடுபடும் கிறிஸ்தவர்களை கென்றான்.

     மெத்தோடியஸ் திருத்தந்தை முதலாம் பாஸ்காவை சந்தித்து இந்நிலையை எடுத்துரைத்து தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார். மிக்கேல் அரசர் ஆட்சி செய்த சிலநாட்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டார். மெத்தோடியûஸ கைது செய்து அக்ரிதா தீவில் சிறையில் வைத்தான். 3ஆம் மிக்கேலின் தாயின் ஆட்சியில் மெத்தோடியஸ் விடுதலையானார். 842 இல் மெத்தோடியஸ் தலைமையில் ஆயர் மன்றம்கூடி சுரூப வழிபாட்டை அங்கீகத்தது. மெத்தோடியஸ் 847, ஜூன் 14ஆம் நாள் இறந்தார்.  

Sunday 13 June 2021

புனித பதுவை அந்தோணியார்

    

    நற்செய்தியின் இறைமனிதர்; உலகின் மாபெரும் புனிதர்; திருச்சபையின் மறைவல்லுநர்; காலத்தின் அறிகுறிகளைத் தெரிந்து திருமறையைப் பாதுகாத்த இறைவாக்கினர். நற்செய்தியைச் சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்த இறைதூதர். ஏராளமான அற்புதங்கள் செய்தவர். திருச்சபையின் மாணிக்கமாய்த் திகழ்ந்தவரே புனித அந்தோணியார். போர்ச்சுக்கலில் 1195இல் ஆகஸ்டு 15ஆம் நாள் பிறந்தார். லிஸ்பன் மறைமாவட்ட பாடசாலையில் கல்வி கற்று படிப்பிலும், ஒழுக்கத்திலும், நுண்ணறிவிலும் இறைபற்றிலும், ஞானத்திலும் வளர்ந்தார். திருப்பலியில் பங்கேற்று இறைவனைப் போற்றுவதிலும், திருப்பாடல்கள் பாடுவதிலும், செபிப்பதிலும் ஆர்வம் செலுத்தினாந்தார். பெரும்மகிழ்வுடன் பீடசிறுவனாக பணிபுரிந்தார். 

  ஒருமுறை நற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பாக  அலகை தோன்றி அவரைச் சோதிக்க முயன்றது. கலக்கம் ஏற்பட்டாலும் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக் கல்லில் பக்தியுடன் சிலுவை அடையாளம் வரைந்தார். அந்தச் சிலுவை அடையாளம் சலவைக் கல்லில் அப்படியே பதிந்துவிட்டது. இதைப் பார்த்ததும் அலகை அலறி அடித்துக்கொண்டு ஓடியது. அந்த சலவைக் கல் சிலுவை அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது. இவ்வாறு சிலுவையின் மகத்துவத்தைத் தமது  பன்னிரெண்டாம் வயதில் உணர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி வழியாகக் குருவானவராகப் பணியாற்ற விரும்பினார்.

       தூய அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்து 1219ஆம் ஆண்டு குருவானார். 1220ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்தார். அசிசியாரின் தாழ்ச்சி, ஏழ்மை, ஆன்மதாகம், கீழ்ப்படிதலைப் பின்பற்றினார். இதயத்தில் தாழ்ச்சிக்கு இடமளித்து இறையருள் பெற்று இறைமக்களின் நலன் முன்னிட்டு புதுமைகள் செய்தார். திருச்சபையின் மறைவல்லுநர்; திருமறையைப் பாதுகாத்து நற்செய்தியை சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்து 1231ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் இறந்தார்.

Saturday 12 June 2021

ஸகாகுன்நகர் புனித யோவான்


     ஸகாகுன் நகர் புனித யோவான் ஸ்பெயினில் 1419ஆம் ஆண்டு பிறந்தார். புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் தொடக்கக்கல்வி கற்று இறையன்பில் வளர்ந்தார். பர்கோஸ் நகர் ஆயரின் கண்காணிப்பில் உயர்கல்வி கற்று இறையாட்சி பணியில் ஆர்வம் கொண்டார். சலமான்கா பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் இறையியல் பயின்றார். உலக இன்பங்களை துறந்து 1445 இல் குருவானார். 

கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து ஆன்மாக்களை மீட்டார். ஒறுத்தல், தன்னொடுக்கம், ஏழ்மையை கடைப்பிடித்து ஏழைகளுக்கு பணி செய்தார். நோயாளிகளை சந்தித்து ஆறுதல்கூறி நலமாக்கினார். 1464இல் புனித அகுஸ்தினாரின் துறவு மடத்தில் துறவியாக வாழ்ந்தார். அயலானின் உள்ளுணர்வுகளை அறிந்த நற்செய்தி வழி பாவிகளை மனந்திரும்பினார். சமூகத்தில் மக்களை துன்புறுத்தியவர்களை கண்டித்தபோது பொறாமை கொண்ட சமூக விரோதிகள் உணவில் விஷம் கலந்து கொடுத்தபோது 1479ஆம் ஆண்டு இறந்தார்.

Friday 11 June 2021

புனித பர்னபா

 

    புனித பர்னபா இளமையில் கிறிஸ்துவரானார். தனது நிலத்தை ஏழைகளுக்கு பகர்ந்தளித்தார். தூய ஆவியால் நிறைந்து நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சி அடைந்தார். பவுல் மனம் மாறியவுடன் பர்னபாதான் அவரை எருசலேமில் இருந்த திருத்தூதர்களிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்தார். அந்தியோக் நகரில் திருத்தூது பணியால் மனம்மாறி கிறிஸ்தவர்களை நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்க உறுதிப்படுத்தினார். 

    லிஸ்திராவில் ஊனமுள்ள ஒருவரை நடக்க செய்தார். நற்செய்தியாளர் மாற்கு, பவுல், பர்னபா மூவரும் இணைந்து சைப்பிரஸில் போதித்தனர். எருசலேமில் நடந்த முதல் பொதுச்சங்கத்தில் பங்கேற்றார். பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக இல்லாதபோதும் பவுலைப் போலவே பர்னபாவும் திருத்தூதர் என்றே அறியப்படுகிறார். சைப்பிரஸில் நற்செய்தி அறிவித்தபோது கல்லால் எறியப்பட்டு 64ஆம் ஆண்டு இறந்தார்

Thursday 10 June 2021

புனித கெட்டூலியஸ்

    


    புனித கெட்டூலியஸ் இத்தாலியில் பிறந்தார். டிராஜன் பேரரசன் ஆட்சியில் கெட்டூலியஸ் அதிகாரியாக பணி செய்தார். கிறிஸ்துவை அரசராகவும் அன்பராகவும் நண்பராகவும் ஏற்று திருமுழுக்குப் பெற்றார். தனது அதிகாரப் பெறுப்பை துறந்து இல்லம் சென்றார். இதையறிந்த டிராஜன் கெட்டூலியûஸ கைது செய்ய வீரர்களை அனுப்பினான். 

    தன்னை கைது செய்ய வந்த வீரர்களிடம் கிறிஸ்துவின் அன்பு, நம்மை மீட்க அவர் ஏற்ற துன்பங்களை எடுத்துரைத்தபோது வீரரர்கள் மனம்மாறி திருமுழுக்கு பெற்றனர். பேரரசன் கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொண்ட வீரர்களை கிறிஸ்துவை மறுதலிக்க கூறினான். இதைமறுத்த கெட்டூலியஸ் மற்றும் வீரர்களை 27 நாட்கள் சிறைவைத்து துன்புறுத்தி நெருப்பில் தூக்கிப்பேட்டபோது தீ அவர்களை ஒன்றும் செய்யவில்லை. 120இல் கெட்டூலியஸ் சிம்ஃபோரோசா தம்பதியரின் 7 மகன்களும் வீரர்களின் தலையையும் துண்டித்தான்.

 

Wednesday 9 June 2021

புனித எஃப்ரேம்

        


புனித எஃப்ரேம் சிரியா நிசிபிஸ் நகரில் 306ஆம் ஆண்டு பிறந்தார். நிசிபிஸ் நகர ஆயரிடம் கல்வி கற்று நற்பண்பில் வளர்ந்தார். இளம்பருவத்தில் திருமுழுக்குப் பெற்று திருத்தொண்டரானார். கிறிஸ்தவர்களுக்கு ஆதராவு அளித்த உரோமை பேரரசர் முதலாம் கான்ஸ்டன் மறைவுக்குப் பின் பெர்சிய அரசன் இரண்டாம் ஷாபர் நிசிபிஸ் நகரை முற்றுகையிட்டபோது எஃப்ரேம் இறைவேண்டல் வழி ஆயரை காப்பாற்றினார். 

      எஃப்ரேம் இறைவன் செய்த புதுமைகளுக்கு பாடல்கள் மூலம் நன்றி கூறினார். 364இல் நாட்டை விட்டு வெறியேறி 364இல் எதேசா மலைக்கு சென்றார். 372 எதேசாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது பசியால் வாடியவர்களுக்கு பிச்சை எடுத்து அவர்களின் பசி போக்கினார். தப்பரைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். மரியாவின் அன்பு மகனாக வாழ்ந்தார். புகழ்மிக்க ஆசிரியர், கவிஞர், மறையுரையாளர், நம்பிக்கையின் காவலர், தூய ஆவியின் புல்லாங்குழல் என்று அழைக்கப்பட்ட எஃப்ரேம் 373, ஜூன் 9ஆம் நாள் இறந்தார்.

                                                 🌷🌷🌷🌷🌷🌷🌷

Monday 7 June 2021

புனித மரியம் தெரசியா


  புனித மரியம் தெரசியா கேரளாவில் 1876, ஏப்ரல் 26ஆம் நாள் பிறந்தார். கிறிஸ்துவுக்கு தனது கற்பை அர்ப்பணித்தார். தாயன்பை அன்னை மரியாவிடம் பெற்றார். ஏழ்மையில் இறைவனின் கரம்பற்றி நடந்தார். கடவுளின் இரக்கத்தையும் அன்பையையும் தமது நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ள தனது வாழ்வை அர்ப்பணித்தார். நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடினார். சமூகத்தில் நன்மைகள் வழி ஏழைகளுக்கு உதவினார். தன்னுடன் 3 பெண்களை சேர்த்து அன்பு பணிகள் மூலம் நற்செய்தி அறிவித்தார். 

      இறைபணி செய்ய பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஒறுத்தல்கள் வழி இறைவனுக்கு உகந்தவாறு வாழ்ந்தார். கிறிஸ்துவின் 5 காயங்கள் தனது உடலில் ஏற்று கிறிஸ்துவின் துன்பத்தில் பங்கு சேர்ந்தார். இறைகாட்சிகள் காணும்வரம் பெற்றார். பாவிகள் மனந்திரும்ப நோன்பிருந்து ஒறுத்தல் செய்தார். குணமாக்கும் வரம் பெற்றபோது நோயாளிகளை குணமாக்கினார். நற்கருணை முன் கண்விழித்து செபித்தார். 

    கிறிஸ்துவின் அன்பை பெற்றுக்கொள்ள நற்கருணை முன் செபித்தார். துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். பேராயர் மார் யோவான் மெனாகரி இவரின் அனுமதியும் ஆசீரும் பெற்று 1903ஆம் ஆண்டு தன்னுடன் மூன்று சகோதரிகளை இணைத்து பிரான்சிஸ்கன் சபைப் பிரிவில் சேர்ந்து துறவற இல்லம் ஆரம்பித்தார். 1914, மே 14ஆம் நாள் திருக்குடும்ப துறவு சபை தொடங்கிய தெரசியா 1926, ஜூன் 8ஆம் நாள் இறந்தார்.

🌷புனித தாமஸ் ஏ கெம்பிஸ்🌷

         புனித தாமஸ் ஏ கெம்பிஸ் ஜெர்மனியில் 1379ஆம் ஆண்டு பிறந்தார். 13ஆம் வயதில் பொதுவாழ்வு சகேதரர்களின் அமைப்பில் சேர்ந்து அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்தார். 19ஆம் வயதில் புனித அகுஸ்தினார் துறவு மடத்தில் சேர்ந்து 1413இல் குருவானார். 

     சில ஆண்டுகளில் மடத்தின் துணைத்தலைவரானார். பதவிகள் தன்னை தேடி வந்தபோது பணிவுடன் மறுத்தார். துறவு இல்லத்திலிருந்து வெளியேறாமல் 70 ஆண்டுகள் இறைவனோடு ஒன்றிணைந்து இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். எழுத்துப்பணிகள் வழியாக இறைமாண்பை எடுத்துதுரைத்தார். 

    தனது இறையனுபவங்களை, இறைவனின் கருணையை நூல்கள் வழியாக வெளிப்படுத்தினார். இறையியல் நிறைந்த போதனைகள், கட்டுரைகள், காலத்திற்கும் அழியாத புகழ் பெற்ற கிறிஸ்து நாதர் அனுசாரம் என்ற நூல் எழுதினார். துறவிகளிடத்தில் அன்பு கொண்டு வாழ்ந்த தாமஸ்1471ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் இறந்தார்.

                                                                    🌷🌷🌷🌷🌷🌷🌷

Sunday 6 June 2021

புனித நார்பர்ட்


    புனித நார்பர்ட் 1080ஆம் ஆண்டு அரச குடும்பத்தில் பிறந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்தார். துணை திருத்தொண்டராக ஸான்டனில் பணி செய்தார். ஃபிரடரிக் அரண்மனையில் எளிமையாக வாழ்ந்தார். ஒருமுறை குதிரையில் பயணம் செய்தார். தீடீரென இடி, மின்னல் ஏற்பட்டது. குதிரை நார்பர்டை கீழே தள்ளிவிட்டு ஓடியது. அயலானின் உதவியுடம் எழுந்து இறைவேண்டல் செய்து இறைவனின் திருவுளம் அறிந்தார். அரசவை வாழ்வை துறந்து ஒறுத்தல் செய்ய சீர்பெர்க் துறவுமட தலைவருடன் சேர்ந்தார். 35ஆம் வயதில் குருவானார். 

       கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைபற்றுடன் வாழ தனது உடமைகளை ஏழைகளுக்கு கொடுத்தார். வெறுங்காலுடன் நடந்தார். பிச்சை எடுத்து உண்டார். லானில் வனப்பகுதியில் துறவு இல்லம் அமைத்து தவம் செய்தார். மக்கள் ஆன்மீக வாழ்வில் வளர அயராது உழைத்தார். தனது பணிகளை திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் அவர்களிடம் எடுத்துரைத்து இறையாசி பெற்றார். லான் வனப்பகுதயில் துறவு இல்லம் அமைத்து ஒறுத்தல் செய்து இறைவனை மாட்சிப்படுத்தினார். 

        பண ஆசையும், தன்னலமும் துறந்து தூய உள்ளத்துடன் அன்பின் வழியில் கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு சான்று பகர்ந்தார். உரோமை சென்று வரும் வழியில் பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை அளித்தார். இறைவனின் திருவுளம் நிறைவேற்றிய நார்பட் ஆயரானார். திருச்சபை சொத்துக்களை அபகரித்தவர்களிடம் சொத்துக்களை திரும்ப கொடுக்க கூறினார். இறைவனோடு இணைந்து இறைமாட்சிக்காக பணி செய்த நார்பர்ட் 1134ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் இறந்தார்.

🌷🌷🌷🌷🌷

Saturday 5 June 2021

புனித போனிஃபஸ்

 

       புனித போனிஃபஸ் கிரெட்டன் நகரில் சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அறிவிலும் ஞானத்திலும் நல்லொழுக்கத்திலும் வளர்ந்தார். வசதியாக வாழ்ந்தபோது நிலையான இறைவனை தனதாக்க துறவு மேற்கொள்ள விரும்பினார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தந்தையின் அனுமதி பெற்று ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்து 30ஆம் வயதில் குருவானார். 

    திருத்தந்தையின் அழைப்பு பெற்று துரிங்கியர் மத்தியில் பணியாற்றினார். பின் பிரிசியரில் வில்லி பிரார்ட்டுடன் இணைந்து எண்ணற்றோரை திருமறையில் சேர்த்தார். போனிஃபஸின் கடின உழைப்பும், அதன் பயனையும் அறிந்த திருத்தந்தை உரோமைக்கு அழைத்து 722ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் ஆயராக அருள்பொழிவு செய்து ஜெர்மனியில் மறைபணி செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார். 

    737இல் ஆஸ்திரேலிய நாட்டு பிரதிநிதியானார். இறைவார்த்தையை வாழ்வாக்கி ஏழைகளின் உரிமைக்கு குரல் கொடுத்தார். 753ஆம் ஆண்டு யூடிரெச்ட் பகுதியில் ஏராளமானோருக்கு திருமுழுக்கு கொடுத்தார். இதனால் உள்ளூர் மதவாதிகள் தங்கள் மதம் அழிந்துவிடுமோ என்று அஞ்சி, தூயவரும் அன்பருமான போனிஃபஸ் மற்றும் அவருடன் 52 பேரையும் தலையை வெட்டி கொலை செய்தனர்.

Friday 4 June 2021

புனித பிரான்சிஸ் கராச்சியோலா


       புனித பிரான்சிஸ் கராச்சியோலா இத்தாலி நாட்டில் 1563ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாள் பிறந்தார். அன்பும் நேர்மையும் ஒழுக்கமும் மிகுந்தவராக வளர்ந்தார். 22ஆம் வயதில் தொழுநோய் பாதித்தபோது இறைவேண்டல் வழியாக நலமடைந்தார். தனது சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். 1587ஆம் ஆண்டு குருவானார். 

 தண்டனை கைதிகள் மத்தியில் நற்செய்தி அறிவித்தார். கைதிகள் மனந்திரும்பி கிறிஸ்துவை அரசராகவும் மீட்பராகவும் ஏற்றனர். ஏழைகளையும் ஆதரவற்றோரையும் அதிகம் அன்பு செய்தார். புதிய சபையை உருவாக்கினார். பதவிகளை விரும்பாமல் பணிவுடன் தன்னொடுக்க முயற்சிகள் மேற்கொண்டார். 24 மணிநேர நற்கருணை ஆராதனையில் மக்களை பங்கேற்க செய்தார். 
    
    ஆயர் பதவியும், சபையின் தலைமை பொறுப்பும் தன்னிடம் வந்தபோது தாழ்ச்சியுடன் துறந்தார். காட்சி தியானம் வழியாக இறையனுபவம் பெற்று சபை  உறுப்பினர்களை இறைவழி நடத்தினார். எல்லா பிரச்சனைகளையும்  நற்கருணை ஆண்டவரிடம் அர்ப்பணித்து இறையருள் பெற்று முன்னேறினார். அன்னை மரியாவின் அன்பும் அருளும் அரவணைப்பும் செபமாலை வழியாக பெற்றுக்கொண்ட பிரான்சிஸ் 1608ஆம் ஆண்டு இறந்தார்.  

Thursday 3 June 2021

உகாண்டா மறைசாட்சிகள்


 


உகாண்டாவில் கிறிஸ்துவின் அரசாட்சி நிலவிட ஏராளம் மறைபணியாளர்கள் தங்களை அர்ப்பணித்தனர். 1884, முத்தேசா என்பவர் ஆட்சி செய்தார். தனது நாட்டில் வசித்த அராபியர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்கள் அனைவருடனும் அரசன் நல்லுறவு கொண்டிருந்தார். முத்தேசா  இறந்தப்பின் இளவரசர் வாங்கா அரசரானார். தனது ஆட்சி பகுதியிலுள்ள மறைபணியாளர்களை வதைத்தார். ஒராண்டுக்குள் ஜோசப் ருகாராமா, மார்க் ககும்பா மற்றும் நோவா சர்வாங்கா ஆகிய 3 கிறிஸ்தவ பணியாளர்கள் மறைசாட்சிகளாக இறந்தனர். ஆங்கிலிகன் ஆயர் ஜேம்ஸ் ஹன்னிங்டன் என்பவரையும் கொலை செய்தனர். கிறிஸ்துவின் பொருட்டு எண்ணற்ற பணியாளர்கள் கொலையுண்டனர். 1886, ஜøன் 3ஆம் நாள் 26 பேர் மறைசாட்சியாக இறந்தனர். 45 பேருக்கு மேல் கிறிஸ்துவை அரசராக ஏற்றதால் இரத்தம் சிந்தி இறந்தனர்.