Friday 30 November 2018

புனித அந்திரேயா

இயேசுவின் அப்பேஸ்தலர்களில் ஒருவர். சீமோன் பேதுருவின் சகோதரர். கலிலேயக் கடலில் பிடித்து வாழ்ந்தவர். சமுகத்தில் திறமைசாலியாக நற்சான்றுடன் வாழ்ந்தவர். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். மீட்பராகி இயேசு கிறிஸ்துவின் போதனையால் அப்போஸ்தலராக மாறியவரே புனித அந்திரேயா. இவர் கலிலேயாவில் பெத்சாய்தவில் பிறந்தவர். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்தவர். இயேசு திருமுழுக்குப் பெற்ற தருணத்தில் திருமுழுக்கு யோவான் தம்முடன் இருந்த சீடர்களிடம், இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்று கூறினார். இதைக்கேட்ட அந்திரேயா இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசு தங்கியிருக்கும் இடம் கேட்டு அவருடன் சென்று தங்கி இயேசுவின் அப்போஸ்தளராக மாறினார்.

         அந்திரேயா இயேசுவின் நெருக்கமான சீடர்களில் ஒருவராக மாறினார். இயேசு அப்பங்களை பலுகச் செய்த தருணத்தில் ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பங்கள் இருப்பதை கூறினார். கிரோக்கர்களுக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்தார்.  இயேசு இறந்து உயிர்த்த பிறகு, யார் யார் எந்தெந்த நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கப்போவது என்று சீட்டுப்போட்டத் தருணத்தில் சித்தியா நாடு அந்திரேயாவுக்கு கிடைத்தது. தூய ஆவியைப் பெற்ற பின் கப்பதோசியா, கலாசியா, பிதீனியா, திராஸ், அக்காயா,  பிளாக் கடல் மற்றும் கிரீஸ், துருக்கி ஆகிய இடங்களில் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவித்தார்.

          அந்திரேயா நோயுற்றோரை நலமாக்கினார். பார்வையற்றவருக்கு பார்வை அளித்தார். போய்களை ஒட்டினார். பத்தாரஸ் பட்டணத்தில் நற்செய்தி அறிவித்தபோது ஆளுநன் ஏஜெடிஸ் மனைவி மாக்ஸிமில்லாவை இறப்பின் பிடியலிலிருந்து காப்பாற்றினார். மாக்ஸிமில்லா கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். ஆத்திரம் அடைந்த ஏஜெடிஸ் அந்திரேயாவை கைது செய்து சிறையில் அடைத்தான். கிறஸ்துவை மறுதலிக்க பலவாறு துன்புறுத்óதினான், ஏழு கசையடிகள் கொடுத்தான். அந்திரேயா கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.

       ஆளுநன் ஏஜெடிஸ், அந்திரேயாவை சிலுவையில் அறைய தீர்மானித்தான். அந்திரேயா சிலுவை கண்டதும், “ஒ விலையேறப் பெற்ற சிலுவையே வாழ்க! என் ஆண்டவரது உறுப்புகள் உன்னை ஆபரணங்கள்போல் அலங்கரித்தன. மகிழ்ச்சியுடன் நான் உன்னிடம் வருகிறேன். உன்னை நான் உருக்கமாக அன்பு செய்கிறேன். வாஞ்சையுடன் உன்னை தேடினேன். என்னை உனது கரங்களில் ஏற்றுக்கொள். மனிதரிடையிலிருந்து என்னை எடுத்து என் தலைவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைப்பாயாக. உன்னில் தொங்கி என்னை மீட்டவர் உன் வழியாய் என்னை ஏற்றுக்கொள்வாராக” என்று கூறினார். இதைக்கேட்ட ஆளுநன் கோழபம் கொண்டு எக்ஸ் வடிவில் சிலுவையில் அறைந்து கொன்றான். 70, நவம்பர் 30 அன்று இறந்தார்.

Friday 23 November 2018

புனித கொலும்பானுஸ்


 
இறைஞானத்தின் மனிதராக, இரவும் பகலும் இடைவிடாமல் இறைவனை போற்றிப் புகழ்ந்தவர். மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அரண்மணையில் வாழ வாய்ப்பு கிடைத்தபோது ஏழ்மையை விரும்பி குடிசையில் வாந்தவரே புனித கொலம்பானுஸ். இவர் அயர்லாந்தில் நோபர் என்னும் இடத்தில் 540ஆம் ஆண்டு பிறந்தார்.  கொலம்பானுஸ் என்றால். “வெள்ளைப் புறா என்பது பொருள்”. 


  பெற்றோரின் வழி காட்டுதலால் நாளும் நற்பண்புகளில் சிறந்து விளங்கினார். ஏழையாகப் பிறந்த கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தார். தனக்கென்று திட்டம் வகுக்காமல் இறைவிருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். குலுவானிஸ் துறவு மடத்தின் தலைவர் சிநெல் என்பவரின் வழிகாட்டுதலில் துறவு வாழ்வை மேற்கொண்டார். எளிய வாழ்க்கை வழியாக இறைவனோடு இணைந்து இறையனுபவத்தில் ஆனந்தம் அடைந்தார். இறைவனுக்காக இவ்வுலக வாழ்வை கையளிப்பதில் பேரானந்தம் அடைந்தார். இறைவனின் தூண்டுதலால் திருப்பாடல் நூலிற்கு விளக்கம் எழுதினார். பல இடங்களில் துறவு இல்லங்களை நிறுவினார். மக்களுக்கு இடைவிடாமல் ஒப்புரவு வழங்கினார். சக துறவிகளுக்கு தவ முயற்சிகள் செய்யவும், துறவு இல்லத்தின் ஒழுங்குமுறைகளை கடைப்படிக்கவும் முன்மாதிரியாக வாழ்ந்து வழி காட்டினார்.


    எண்ணற்ற மக்கள் இறையமைதி பெற்றுக்கொள்ள வழிகாட்டினார். பாவத்திற்கு பரிகாரம் செய்ய மக்களைத் தூண்டினார். பாவத்தின்மீது வெறுப்பு ஏற்படும் அளவுக்கு தவமுயற்சிகளை மேற்கொண்டார். இறுதியாக நியூஸ்திரியா பகுதியில் நற்செய்தி பணியாற்றினார். புதுமைகள் பல செய்தார். நோயுற்றோரை நலமாக்கினார். சமூகத்தில் நிலவி தவறுகளை கண்டித்தார். இறுதிவரை இறைவழியில் நடந்த கொலம்பானுஸ் 615ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்.

      

Thursday 22 November 2018

புனித செசிலியா

       
கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு உரிய செயல்களை விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்து கொள்ளுங்கள் என்று வீரமுழக்கம் செய்து இறுதிவரை இறைவனுக்காக வாழ்ந்தவரே 
புனித செசிலியா. இவர் உரோமை நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் 2ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். சிறுவயது முதல் இறையன்பில் தன்னைக் கரைத்துக்கொண்டார். நாளும் செபம் செய்வதில் ஆனந்தம் அடைந்தார். வாழ்நாள் முழுவதும் இறைவனின் திருவுளப்படி வாழ இறைவனுக்குத் தன்னை அர்ப்பணம் செய்தார்.


          செசிலியா நற்பண்பிலும், தூய்மையிலும் சிறந்து விளங்கினார். இறைவனை மாட்சிமைப் படுத்துவதை இலட்சியமாகக் கொண்டார். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இசைக்கருவிகளை ஆர்வத்தோடு இசைத்தார். இசைகளின் வாயிலாக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார். வாழ்வு தருகின்ற,  நலமளிக்கின்ற, ஞானத்தைத் தரக்கூடிய விவிலியத்தை எங்கு சென்றாலும் தம் கரங்களில் ஏந்திச் சென்றார். 

           தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்த செசிலியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர், இயேசு கிறிஸ்துவைத் அறியாத வலேரியன் என்பவரைத் தேர்ந்தெடுத்து இறையன்பு, அறிவு, அழகு, தூய்மை நிறைந்த செசிலியாவை வலேரியன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.திருமண விழாவில் இசைக்கருவிகள் இசைத்து தனது பாடல் வழியாக தனது கன்னிமை இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்று பாடினார். வலேரியன் திருமுழுக்கு பெற்றுக்கொள்ள விரும்பினார். பின் அர்பன் என்னும் திருத்தந்தையிடம் சென்று திருமுழுக்கு பெற்றுகொண்டார்.
          

        வேத விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. செசிலியாவைக் கைது செய்து தெர்த்துல்லியனிடம் ஒப்படைத்தார். செசிலியாவிடம் இயேசுவின் பெயரை அறிக்கையிடக்கூடாது; கிறிஸ்து இயேசுவை மறுதலிக்க வேண்டும்; உரோமை கடவுளுக்கு பலிசெலுத்தவும் உத்தரவிட்டான். செசிலியா, “நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி” என்பதை நீ தெரிந்துகொள் என்று துணிவுடன் கூறினார். இதைக்கேட்ட தெர்த்துல்லியன் கோபங்கொண்டு செசிலியாவின் தலையை வெட்டிக் கொலை செய்தான்.

Friday 16 November 2018

அன்னை மரியா துயர் துடைப்பவர்


தெரசா சிறுவயதில் அனைவரையும்  அளவில்லாமல் அன்பு செய்தார். படிக்கட்டுகளில் இறங்கும் போதும் ஒவ்வொரு படியிலும் நின்று கொண்டு, அம்மா என்று அழைப்பார்.  தாயோ, என் அன்பு குட்டி மகளே என்று பதில் கொடுக்காவிட்டால் அடுத்தப் படியில் இறங்கமாட்டார். ஒரு முறை குழந்தை தெரசா தன் அம்மாவை நோக்கி “அம்மா நான் விண்ணகம் செல்வேனா?” என்று கேட்டார். அதற்கு அவரது தாய் “நீ கீழ்ப்படிதலுள்ள நல்ல பிள்ளையாக இருந்தால் விண்ணகத்திற்குப் போவாய்” என்றார். அதற்கு தெரசா அப்படியானால் “அம்மா நான் நல்ல பிள்ளையில்லையானால் நரகத்திற்கு தான் போவேனா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். மோட்சத்திற்கு உங்களை நோக்கிபறந்து வருவேன். நீங்களும் என்னை இறுகக்கட்டியணைத்துக் கொள்வீர்கள்”என்றார். 

        குழந்தை தெரசா தன் தாயிடம் மிகுந்த அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். தெரசாவின் குழந்தைப்பருவத்தில் தாய் இறந்துவிட்டார். அதனால் தெரசா அதிக வருத்தம் அடைந்தார்.தெரசாவின் அன்னை இறந்த பின் அக்கா அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். தெரசா நோயுற்ற தருணத்தில் அம்மா! அம்மா! என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். தோட்டத்திலிருந்த மரியன்னையின் திருசொரூபத்தை நோக்கித் திரும்பினார். இவ்வுலகில் எந்த உதவியும் பெற இயலாத எளிய தெரசா, அன்னை மரியாவிடம் சரண் அடைந்தார். தன்மீது இரக்கம் காட்டும்படி முழுஇதயத்தோடு மன்றாடினார். உடனடியாக அருள் நிறைந்த அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அவரது அன்பையும், அருளையும் வெளிக் கொணர்ந்து புன்னகைத்தார். தெரசா அனுபவித்த வேதனைகள்அன்னையின் அருளால் மாறி எண்ணில்லா ஆனந்தம் அடைந்தார். அந்நேரம் முதல் இன்ப துன்பங்களில் அன்னை மரியின் அரவணைப்பை நாடினார். 1884ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் முதல் முறையாக நற்கருணை பெற்றார். அந்நாளை இயேசுவின் முதல் முத்தம் பெற்ற நாள் என்று கூறுகிறார். தொடர்ந்து இயேசுவின் முத்தம் பெற ஆசைப்பட்டு பெளலீன் அக்காவைப்போல கார்மெல் மடத்தில் சேர விழைந்தார்.

புனித அடிலெய்ட்

கிறிஸ்துவின் விழுமியங்களை தனதாக்கி, தன்னலம் மறந்து அயலானின் வளர்ச்சிக்காக உழைத்தவர். ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைந்து மற்றுள்ளவரையும் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அயைட வழிகாட்டிவர். கிறிஸ்துவின் விழுமியங்களை நற்செய்கள் வழியாக வெளிக்கொணர்ந்து வாழ்ந்தவரே புனித அடிலெய்ட். இவர் 931ஆம் ஆண்டு பார்கன்டி அரசர் இரண்டாம் ருடால்ஃபின் மகளாகப் பிறந்தவர்.

      தனது 16ஆம் வயதில் லொதேயர் என்பவரை திருமணம் செய்தார். ஒரு குழந்தைக்கு தாயான தருணத்தில் கணவனை இழந்தார். இறைவன்மீது நம்பிக்கை கொண்ட அடிலெய்ட் பெரென்கர் அரசரின் மகனை திருணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். திருமணம் செய்து கொள்ள மறுத்தார் அடிலெய்ட். இக்காரணத்தால் அவரை சிறையில் அடைத்து துன்புறுத்தினர். துன்பத்தின் மத்தியில் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

           நான்கு மாதங்கள் கடந்தவேவையில் 951ஆம் ஆண்டு, ஜெர்மன் பேரரசர் ஒட்டோ முற்றுகையிட்டு பெரென்கரை வீழ்த்தினார். பேரரசர் ஒட்டோ, அடிலெய்ட் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்தார். சில நாள்களில் ஒட்டோ இறந்தார். அடிலெய்ட் முழுப்பொறுப்பேற்று ஆட்சி செய்த தருணத்தில் தனது சொந்த மகனால் அரண்மனை வாழ்விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

     அரண்மணை வாழ்விலிருந்து வெளியேறிய அடிலெய்ட் மைன்ஸ் மறைமாவட்ட ஆயர் புனித வில்லிஜிஸ் என்பவரின் வழிகாட்டுதலால் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைந்தார். கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். அயலானின் வளர்ச்சிக்காக ஆர்வமுடன் உழைத்தார். அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்புற்ற மக்களுக்கு உதவினார். ஆலயங்கள் மற்றும் துறவு இல்லங்கள் கட்டினார். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்த அடிலெய்ட் 999ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் இறந்தார்.

Thursday 15 November 2018

புனித பெரிய ஆல்பர்ட்

நீதியும் அன்புமே நிரந்தர அமைதிக்கு அடிப்படை; இந்த இரண்டுமின்றி நீடிக்கும் அமைதி ஒருபோதும் நீடிக்காது. உலக அமைதிக்காக அன்னை மரியா காட்டும் வழிகளை நாம் கையாளவேண்டும் என்று கூறியவர்.  இறைஞானத்துடன் செயல்பட்டவர். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர். ஆன்மிக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றடுத்தியவர். இவர் பாவாரியாவில் சுவாபியா போல்ஸ்தாத் பிரபுக்கள் பாரம்பரியத்தில் ஏறக்குறைய 1200ஆம் ஆண்டு பிறந்தார்.


              ஆல்பர்ட் சிறுவயது முதல் இறைபக்தியல் சிறந்து விளங்கினார். அனனை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு அன்பிலும் நீதியிலும் ஒழுக்கத்திலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அன்னை மரியா காட்சி தந்து சாமிநாதர் சபை துறவியாகும்படி கேட்டுக்கொண்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ஆல்பர்ட் தனது பெற்றோரிடம் துறவற வாழ்வை மேற்கொள்ள அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. பல எதிர்ப்புகளைத் தாண்டி 1223ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் சேர்ந்தார்.


           ஆல்பர்ட் இறையியலில் முனைவர் பட்டம் பெற்று விரிவுரையாளராக கல்லூரியில் பணியாற்றினார். 1254ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் 1254ஆம் ஆண்டு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மிகுந்த இறைஞானத்துடன் செயல்பட்டார். துறவிகளின் ஆன்ம நலனுக்காக கருத்துடன் செயல்பட்டார். ஆன்மீக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றடுத்தினார். இறைவார்த்தையின் அடிப்படையில் வாழ்வை கட்டியெழுப்பு வழிகாட்டினார்.

           1260ஆம் ஆண்டு ரீகன்ஸ்பர்க் மறைமாவட்டத்தின் ஆயராக பதவி ஏற்றார். இறைமக்களின் நலனுக்காக அரும்படுப்பட்டார். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தார். அனைத்து மக்களும் இறையன்பிலும் சகோதர அன்பிலும் வளர்ந்திட வழிகாட்டினார். அன்னை மரியாவிடம் தனது மறைமாவட்ட மக்களை அர்ப்பணம் செய்தார். பகைமை உள்ள இடத்தில் அமைதியை ஏற்படுத்தினார்.இறைமக்களின் நலனுக்காக  உழைத்த ஆல்பர்ட் 1280ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.

Wednesday 14 November 2018

புனித லீமாரோஸ்

துன்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. சிலுவை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு இல்லை  என்று உணர்ந்து கொண்டு, “ஆண்டவரே எனது துன்பத்தை அதிகமாக்கும். எனது இதயத்தில் உம்மீதுள்ள அன்பைப் பெருகச் செய்யும்” என்றுகூறி வாழ்நாள் முழுவதும் தனது துன்பத்தின் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தியவரே புனித லீமாரோஸ். இவர் தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் உள்ள லீமா என்னும் ஊரில் 1586ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் பிறந்தார்.           
                   

             குழந்தைப்பருவம் முதல் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராக வாழ்ந்து வந்தார்.. இவருக்கு  திருமுழுக்கின் போது இட்ட பெயர் இசபெல். குழந்தையாக இருந்தபோது ஒருமுறை இவரது முகம், ரோஜா மலர் போல் ஒளி வீசுவதை வீட்டில் உள்ளவர்கள் பார்க்க நேர்ந்தது. மேலும் குழந்தையாகத் தொட்டில் கிடந்த தருணம் ஓர் அழகிய ரோஜா மலர் தொட்டில் விழுவதை அவரது தாய் கண்டார். அன்று முதல் ரோஸ் என்று அழைக்கப்பட்டார். ரோஸ் துறவு மேற்கொண்டு இறைவனை அன்பு செய்யத் தீர்மானித்தார்.
                

         தனது 20ஆம் வயதில் புனித சாமிநாதரின் மூன்றாம் சபையில் சேர்ந்தார். ரோஸ் நோன்பு இருந்து தியாகச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தி தூயவராக வாழ்ந்து வந்தார். ஏழைகளிடம் மிகுந்த அன்பும், கரிசனையும், இரக்கமும் காட்டினார். ஏழைகளுக்கும், நோளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உதவினார். “நமது ஆன்மாவை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும் சாலை தான் சிலுவை. சிலுவையைத் தவிர விண்ணகத்திற்கு ஏறிச் செல்ல வேறு எந்த ஏணியும் இல்லை” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

             

            னது தியாக வாழ்வால் இறைவனை மாட்சிமைப்படுத்திய ரோஸ், கூர்மையான ஆணிகளால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை கிரீடமாகச் செய்து தலையில் அணிந்துகொண்டார். கூர்மையான ஆணிகள் குத்தி இரத்தம் வெளிவந்தது. இதையாரும் பார்க்காமல் மறைத்துக் கொள்வார். பக்கவாதத்தால் கடுமையாகத் தாக்குண்டார். 1617ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள் இயற்கை எய்தினார். திருத்தந்தை 10ஆம் கிளமண்ட் 1671ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் தோட்டபணியாளர், மலர் விற்பனையாளர், தையல்காரர், இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்க பழங்குடியினர் ஆகியோரின் பாதுகாவலர்.  

அன்னை மரியா இஞ்ஞாசியார்.

இலயோலா மாளிகையில் இஞ்ஞாசியார் மருத்துவ சிகிட்சைப் பெற்று ஓய்வு எடுத்தார். இரவு முழுவதும் கண்விழித்து தியாகத்துடன் செபித்தார். அப்பொழுது, குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்திய வண்ணமாக அன்னை மரியா இஞ்ஞாசியாருக்கு காட்சி கொடுத்தார். அத்தருணத்தில் அவரது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. தனது கடந்த கால வாழ்வில் தூய்மைக்கு எதிராகச் செய்த பாவங்கள்மீது அளவு கடந்த வெறுப்பு ஏற்பட்டது. தூய்மைக்கு எதிரான பாவச்சோதனைகளை விட்டுவிடத் துணிவும் பெற்றார். 1522ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ஆம் நாள் இலயோலா மாளிகையை விட்டு சுமார் 600கி.மீ கால் நடையாகவே நடந்து மொன்செராத்னில் உள்ள அன்னை மரியாவின் ஆலயத்திற்குச் சென்றார். 

         அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தினார். பின் மூன்று நாள் அங்கேயே தங்கினார். கடந்த கால வாழ்வில் தான் செய்த பாவங்களை ஆராய்ந்து ஒப்புரவு செய்தார். “இறைவனுக்கும் திருச்சபைக்கும் நம்பிக்கையின் வீரனாக வாழ்வேன்” என்று உறுதிகொண்டார். அதன் வெளி அடையாளமாக படை வீரருக்குரிய ஆயுதங்களை அன்னை மரியாவின் பாதத்தில் அர்ப்பணித்து இரவு முழுவதும் செபித்தார். தன்னை யாரும் அறியாவண்ணம் தனது ஆடைகளைக் களைந்து ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு, ஏழ்மையின் ஆடையை அணிந்து பயணம் தொடர்ந்தார். பார்ஸிலோனா செல்லும் வழியில் மன்ரேசாக் குகையில் தங்கி தியானம் செய்தார். 

Tuesday 13 November 2018

மரியாவின் நாமம் மீட்பின் தைலம்

 
   புனித பொனவெந்தூர்
 நமது நம்பிக்கையை கூர்மைப்படுத்தும் வகையில் இவ்வாறு கூறுகிறார். “மீட்பர் இயேசு கிறிஸ்து எனது அக்கிரமங்களினிமித்தம் என்னைப் புறக்கணித்துவிட்டால், நான் இரக்கம் மிகுந்த மரியாவின் பாதங்களில் சரணடைந்துவிடுவேன். எனக்கு இறைமன்னிப்பை மரியா பெற்றுத் தரும்வரை அதே நிலையில் வீழ்ந்துகிடப்பேன்”  என்கிறார். பெரிய பெரிய புனிதர்கள் உருவாக்கும் பணி உலகின் இறுதிவரை மரியன்னைக்கு முற்றிலும் உரித்தானது. ஒவ்வொரு புனிதர்களும் அன்னை துணையோடு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து புனிதர்களாக மாறினார்கள். செபமாலை செபிக்கின்றவர்களிடம் அலகை நெருங்காது. புனித ஜான்போஸ்கோ, “நான் மரியாவைப் பார்க்காமல்கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன்”  என்று கூறியுள்ளார். புனித அம்புரோஸ், “மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும்”  என்று செபித்தார்.

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா

         இயேசுவை சொந்தமாக்க விழைவோர் அன்னை மரியாவிடம் செல்ல வேண்டும் என்று கூறியவர். அன்னை மரியாவின் துணையால், நாளும் இறையன்பின் இனிமையைச் சுவைத்து; இறைவனுக்குத் தன் வாழ்வை அர்ப்பணமாக்கியவரே புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா. இவர் போலந்து நாட்டில் தாட்ஸ்கோ நகரில் 1550ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 28ஆம் நாள் பிறந்தார். தீமையை வெறுத்து நன்மை செய்வதிலும், பகர்ந்து வாழ்வதிலும், செபிப்பதிலும் அனைவருக்கும் முன்மாதிரியானார். 
     
            அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும், அன்பும் செலுத்தினார். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா 1564ஆம் ஆண்டு கல்வி கற்க, வியன்னாவிலுள்ள இயேசு சபை கல்லூரியில் சேர்ந்து திருமறையை ஆர்வமுடன் படித்தார். திருச்சபையின் எதிரிகளை அழிப்பதற்காகத் தன்னைத்தயார் செய்தார். கல்லூரியில் குருவானவர்களின் அன்பும், இரக்கமும், பகரும் மனநிலையும், தூய்மையான வாழ்வும் அவரைக் கவர்ந்தன. ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா கடின உழைப்பு, செப வாழ்வு, நற்செய்தியின் மதிப்பீடுகளான அன்பு, நீதி, இரக்கம் இவற்றிற்கேற்ப தன் வாழ்வை மாற்றியமைத்தார். 

            ஸ்தனிஸ்லாஸ் பல துன்பங்களுக்கும், ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் உட்பட்டபோது உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ அவற்றையே தேர்ந்தெடுத்து, தூயவராக வாழ்ந்தார். இளமைப்பருவம் முதல் புனிதமான செயல்களை மட்டுமே செய்தார். அவரது சிந்தனை, சொல், செயல்களில் கிறிஸ்துவின் அன்பும், அமைதியும், இரக்கமும், பொறுமையும், மன்னிப்பும், இறைமாட்சியும் வெளிப்பட்டது.

           இயேசு சபையில் துறவியாக பயிற்சி பெற்று கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் போன்ற துறவற வார்த்தைப்பாட்டின் வழியாக இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தார். தூய்மையான வாழ்க்கை, சகோதர அன்பு, இறைஞானம்  கலந்த பேச்சு மற்றும் அன்போடும், பொறுமையோடும், பாசத்தோடும், கனிவோடும் இறையாட்சி  பணிசெய்தார். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா நோயுற்றார். அவரின் முகம் இறைபிரசன்னத்தால் ஒளிர்ந்தது. “அன்னையே இதோ! நான் வருகின்றேன். என்னை ஏற்றுக்கொள்ளும். உம் திருமகனிடம் என்னை ஒப்படைத்தருளும்” என்று செபமாலையை கரங்களில் பிடித்தவாறேகூறி 1568ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் உயிர் துறந்தார். திருத்தந்தை பதின்மூன்றாம் ஆசீர்வாதப்பர் 1726ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Monday 12 November 2018

அன்னை மரியாவின் அருட்கரம்

   
  தந்தை பியோ அன்னை மரியாவின்மீது மிகுந்த அன்பு கொண்டு, அதிக நேரம் அன்னை மரியாளைப் புகழ்ந்து போற்றினார். ஒருமுறை ஒரு எழுத்தாளர் அவரிடம், “உங்கள் வாழ்வில் அன்னை மரியின் பங்கு என்ன?” என்று கேட்டார். அதற்குத் தந்தை பியோ,“என்னில் செயலாற்றும் அதிசய ஆற்றலுக்கும், அருட்கொடைகளுக்கும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் அற்புத ஆற்றலுக்கும், வானதூதர்களோடு நட்புடன் உரையாடுவதற்கும் காரணம், அன்னை மரியாவின் அருட்கரம் என்மீது செயலாற்றுவதே” என்று பதிலளித்தார்.

     1959ஆம் ஆண்டு பாத்திமா அன்னையின் சொரூபம் ரெட்டோன்போ ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பியோ, அன்னைக்கு தங்கச் செபமாலை ஒன்றை அணிவித்தபோது, நோயின் காரணமாக சோர்ந்து கீழே விழுந்தார். ரொட்டோன்டோ ஆசிரமத்திலிருந்த அன்னையின் திருசொரூபம் ஹெகாப்டர் மூலமாக எடுத்துச் சென்றனர். அப்போது தந்தை பியோ, என் அன்பு அன்னையே நீ இத்தாலிக்கு வரும்போது உம் மகனாகிய நான் நோயுடன் துடிப்பதை நீ அறிவாய். இப்போதும் நான் துன்பப்படுவதை நீ காண்கிறாய். அம்மா! நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் இந்த தருணத்திலாவது உன் மகனை கடைக்கண்நோக்கி பார்க்கமாட்டாயா என்று வேதனையோடு கதறி அழுதார்.  அப்போது அன்னையின் சொரூபத்தோடு ஆசிரமத்திற்கு மேல் பறந்து சென்ற விமானம் மூன்று முறை ஆசிரமத்தை வட்டமடித்தது. அந்நேரம் இறையொளி அவரில் ஊடுருவிச் சென்று உடலிருந்த புற்றுக்கட்டி மறைந்து குணமடைந்தார். 

            அன்னை மரியாவின் அன்பு அளவு கடந்தது. தம் மகனை நமக்காகப் பலியாகத் தருகின்ற அளவுக்கு ஆழமானது. எனவே, “அன்னையின் அன்பு இதயத்தில் உங்கள் செவிகளை வைத்துக்கொள்ளுங்கள். அன்னை மரியாவின் ஆலேசனைக்கு செவிகொடுங்கள்” என்று கூறினார். ஒரு நாளைக்கு 35 முறை 153 மணி  செபமாலை சொல்லுவார். அனைத்து மக்களிடமும், “அன்னை மரியாளை அன்பு செய்யுங்கள். அன்றாடம் செபமாலை செபியுங்கள். உலகத்தின் தீமைகளை வெல்ல அதுதான் சிறந்த ஆயுதம். மேலும் கடவுள் கொடுக்கும் அனைத்து வரங்களுமே அன்னை மரியாவின் வழியாக வருகின்றன” என்று கூறினார். அன்னையின் அன்பில் மெழுகாகக் கரைந்த தந்தை பியோ அன்றாடம் ஆசிரமத்திலுள்ள அன்னை மரியாவின் திருசொரூபம் முன்பாக முழந்தாள்படியிட்டு, கரங்களை விரித்தவாறே செபித்து வந்தார்.

புனித மார்ட்டீன்


        கிறிஸ்துவைத் தனதாக்கிட இராணுவப் பணியைத் துறந்தவர். ஏழ்மை கோலம் பூண்டு துறவியாக மாறியவர். எளியவரில் எளியவராக, ஏழைகளின் நண்பராக வாழ்ந்தவரே புனித மார்ட்டீன். இவர் கி.பி. 316ஆம் ஆண்டில் பிறந்தவர். இராணுவத்தில் இணைந்து  படைத்தலைவனாக மாறிய மார்ட்டீன் தனது பணியாளர்கள் அனைவரிடமும் நண்பராகவே பழகினார். கிறிஸ்தவப் போர்வீரர்களிடம் நெருங்கிப் பழகினார். மார்ட்டீன் சில நாட்களுக்குப் பின் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். 

      
           இயேசு கிறிஸ்துவைத் தனது தலைவராகவும் நண்பராகவும் ஏற்றுக் கொண்டார். ஓய்வு நேரங்களில் ஆலயத்திற்குச் சென்று இயேசுவிடம் உரையாடவும், இறைவார்த்தையைத் தியானிக்கவும், செபிக்கவும் ஆர்வம் காட்டினார். அந்நாட்களில் பாலஸ்தீனத்திருந்து திருத்தலப் பயணிகளாக சிலர் வந்தனர். அவர்கள் காடு, மலைகளில் செபம், அமைதி, தியானம், வேலைகள் பல செய்து கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து, துறவிகளாக  வாழ்ந்தவர்களைச் சந்தித்தார். தானும் துறவியாக மாறிட ஆவல் கொண்டார்.

           மார்ட்டீன், ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். தன் வருவாயில் பெரும் பகுதிகளை ஏழைகளுக்குக் கொடுத்தார். குளிர் காலத்தில் உணவு, உடை, உறைவிடமின்றி தவித்தவர்களுக்கு உதவினார். ஒருநாள் ஓர் ஏழை மனிதன் குளிரில் நடுங்கியவாறு தன்மீது இரக்கம் காட்டுமாறு கெஞ்சினார். இரத்தத்தையும் உறைய வைக்கும் குளிரில் அவர் தவிப்பது கண்டு மனம் துடித்தார். தன்னிடம் எதுவும் இல்லாத நிலையில் திடீரென வாளினால் தனது போர்வையை இரண்டாகக் கிழித்து அதன் ஒரு பகுதியை அந்த ஏழைக்குப் போர்த்திவிட்டார்.   
           
               ஆயர் ஹிலாரியஸ் உதவியோடு விவியத்தை கற்றுக்கொண்டார். இறைவார்த்தையைத் தியானித்தும், செபத்திலும் நேரத்தைச் செலவிட்டார். மக்களுக்கு நலம் தரும் நற்செய்தியைப் போதிப்பதில் ஆர்வம் காட்டினார். கடினமான வேலை, ஏழ்மையான வாழ்வு, இறைபற்று மிகுந்த செபம், ஆழ்நிலை தியானம் இவைகளின் வழியாகப்  படைகளின் ஆண்டவரை மாட்சிமைப் படுத்தினார். இவரின் புனிதமான வாழ்க்கை, செப முறைகளைக் கண்ட பலர் இவருடன் இணைந்து துறவறம் மேற்கொண்டனர். 397ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 11ஆம் நாள் இயற்கை எய்தினார்.  

Saturday 10 November 2018

இதோ நம் தாய்!


      குழந்தைப்பருவத்தில் தனது பெற்றோரை இழந்த இரண்டாம் ஜான்பால் தனிமை ஆனார். நெஞ்சோடு அரவணைக்க அன்னையின்றி அனாதையானனர். நல் வாழ்விற்கு வழிகாட்ட த் தந்தையின்றி தனிமரமானார். நண்பனாக உறவாடும் சகோதரனை இழந்து கண்கலங்கினார். இத்தருணத்தில் இறைவனை மட்டுமே நம்பி வாழ்ந்தார். தனிமையில் வாழ்ந்த தருணத்தில் அளவில்லாமல் துன்பமடைந்தார். துன்பத்திலும் தனிமையிலும் இறைவனோடு  இணைந்து நடந்தார். 
          

           வாழ்நாள் முழுவதும் அன்னை மரியாவின் துணையை நடினார். தனது பெற்றோரையும் சகோதரனையும் இழந்த நேரம்முதல் அன்னை மரியாவிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அன்னை மரியாவை தன் தாயாகவும், இறைவனை தந்தையாகவும் ஏற்றுக்கொண்டார். அன்னை மரியாவிடமிருந்து தாழ்ச்சி, எளிமை, இறைநம்பிக்கை, இறைவார்த்தையை வாழ்வாக்குதல், மற்றும் இறையன்பிலும், சகோதர அன்பிலும் வளர்ந்துவர கற்றுக்கொண்டார். 
        

         “இதோ உம் தாய்!” என்ற இயேசுவின் வார்த்தைகள் தனக்காகவே ஏற்றுக்கொண்டார். அன்னை மரியாவிடம் தன்வாழ்வை தனது பணிகளையும் அர்ப்பணித்தார். அன்னையின் அருள் பெற்று அவரின் வழிகாட்டுதலில் நடந்தார். இவ்வுலகம் தராமுடியாத இறைவனின் அன்பைச் சுவைத்தார். அன்னை மரியாவை அம்மா என்று அழைத்து தாயின் பாசத்தையும் பாதுகாப்பையும் அரவணைப்பையும் பெற்றுக்கொண்டார்.
        

         தனது வாழ்வை இறையாட்சி பணிக்காக அர்ப்பணித்தார். மக்கள் அன்னை மாரியாவிடம் பக்தியும், நம்பிக்கையும், பற்றுறுதியும் வைக்க ஆர்வமாக உழைத்தார். வாழும் செபமாலை குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த உலகில் நம்மை முழுமையாக அன்பு செய்யும் தாய் அன்னை மரியா. அவரிடம் எந்நிலையிலும் தயங்காமல் செல்வோம். இவரே, “ஒளியின் தேவ ரகசியங்கள்” என்ற புதிய செபமாலை முறையை ஏற்படுத்தினார்

புனித பெரிய சிங்கராயர்

 
      ஆண்டவரே, உமது சிலுவையானது ஆசீர் அனைத்திற்கும் ஊற்று,  அருள் வரங்களின் உரைவிடம், விசுவாசிகள் பலவீனத்தில் பலம் அடைகிறார்கள் என்று கூறியவர். திருச்சபையின் ஒழுங்குமுறைகளை நிலைநிறுத்துவதில் கடுமையாக உழைத்தவர். திருச்சபைக்கு எதிராக எழுந்த தப்பறைகளை தகர்த்தவர். உலகின் ஒளியான கிறிஸ்துவை வாழ்வின் வழியில் நடந்தவர். புனித பேதுருவின் குரலாக திருச்சபையில் பணியற்றியவரே புனித பெரிய சிங்கராயர்.

       பெரிய சிங்கராயர் டஸ்கனி நாட்டில் பிறந்தவர். இறையனுபவமும், இறைஞானமும், அறிவுகூர்மையும், நற்பண்புகளும் நிறைவாக பெற்ற இறைமனிதர். மனத்திடனும், உடல்வலிமையும், தூய ஆவியின் அருள்பொழிவு பெற்றவர். 440ஆம் ஆண்டு திருத்தந்தையாக திருப்பொழிவு பெற்றார். திருச்சபையில் ஒற்றுமை நிலவிட அயராது உழைத்தார்.

       ஒருமுறை அற்றில்லா என்பவர் ஏழு இலட்சம் எதிரிகள் இத்தாலி மற்றும் ரோம் நாட்டின் மீது படையொடுத்து வந்தார். அத்தருணத்தில் திருத்தந்தை பெரிய சிங்கராயர் எதிரிகளை எதிர் கொண்டு போரில் வெற்றிப் பெற்றார். தவறுகளை துணிவுடன் எடுத்துரைத்தார். நற்கருணை ஆண்டவரின் முன்னில் அடைக்கலம் தேடினார். அன்னை மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்து திருச்சபை சிறந்த முறையில் வழி நடத்தினார்.  இறைவனையும் திருச்சபைûயும் அளவில்லாமல் அன்பு செய்த பெரிய சிங்கராயர் 461ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 14ஆம் ஆசிர்வாதப்பர் இவரைத் திருச்சபையின் மறைவல்லுநர் என்று அறிவித்தார்.

Friday 9 November 2018

அன்னை மரியா

     தொன்போஸ்கோ தனது ஒன்பதாவது வயதில் ஒரு கனவு கண்டார். அவரது வீட்டருகில் இருந்த பெரிய விளையாட்டுத் திடல் அவர் நின்றிருந்தார். அங்கு ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் குழுமியிருந்தனர். சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர்; சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்; மிகப் பலர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி சபித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு,  அதிர்ச்சியடைந்து கோபத்துடன் பொங்கியெழுந்தார். ஓடிப்போய் அவர்களுடைய கன்னங்களில் மாறி மாறி அறைந்தார்.

                அப்போது உயர்தரமான, நீண்ட ஒளிரும் வெண்ணிற ஆடை அணிந்து இயேசு அங்கே தோன்றினார். தொன்போஸ்கோவிடம், “நீ இந்த மாணவர்களை அதிகாரத்தினாலோ, அடக்கு முறையினாலோ அல்லாமல் அன்பினால் மட்டுமே வென்றெடுக்க வேண்டும். பாவம் அசிங்கமானது; ஆனால் புண்ணியம் அழகானது; தூய்மையானது என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இப்பணியை இப்போதே செவ்வனே செய்ய வேண்டும்” என்றார். தொன்போஸ்கோ குழப்பத்தோடும், பயத்தோடும், “நா ன் சிறு பையன். இந்த இளைஞர்களிடம் சமயத்தைப்பற்றி எப்படிப் பேச முடியும்” என்று கேட்டார். அந்த நேரத்தில்  இளைஞர்களிடம் இருந்த கூச்சலும், குழப்பமும், வசை மொழிகளும் நின்று, இயேசுவை சூழ்ந்து நின்றனர். தொன்போஸ்கோ, “இது என்னால் முடியாது போல் தோன்றுகிறது” என்றார். அதற்கு இயேசு என் தாயை உனக்கு ஆசிரியையாகத் தருவேன்” என்று கூறினார்.

         உடனே அவர் அருகில் மிகவும் ஒளி பொருந்திய, விண்மீன்களை முடியெனச் சூடிய அழகிய தோற்றத்துடன் அன்னை மரியா தோன்றினார். அவரைப் பாசத்தோடும்,  கரிசனையோடும் அரவணைத்தார். அன்னை மரியா, தொன்போஸ்கோவின் கரங்களைப் பிடித்தவாறு, “இதோ! பார்” என்றார். விளையாட்டுத் திடல் இருந்த மாணவர்கள் இப்போது இல்லை. மாறாக, ஆடுகளும், பூனைகளும், கரடிகளும் பல்வேறு கொடூரமான விலங்குகளும் காணப்பட்டன. “இது தான் உன்னுடைய பணித்தளம். இவர்களிடம் நீ செய்யவேண்டும். அதற்காக உன்னையே நீ தயாரித்துக்கொள். உன்னுடைய பணியினால் நீ இப்போது காண்பதைப் போல் இவர்கள் மாறுவார்கள்” என்றார். அப்போது அந்தக் காட்டு விலங்குகள் கனிவுள்ள ஆட்டுமந்தையாக மாறி, இயேசுவையும் அன்னை மரியாவையும் சூழ்ந்து நின்றன.

Thursday 8 November 2018

புனித காட்ஃப்ரி

  
         ஏழைகள், நோயாளர்களை அன்புடன் கவனித்து, நற்பண்புகளின் நாயகனாக, இறையன்பின் பிறரன்பின் தூதராக வாழ்ந்தவர் புனித காட்ஃப்ரி. 
இவர் பிரான்ஸ் நாட்டில் மொலின்கோட் என்னுமிடத்தில் 1066ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதில் தாயை இழந்தார். இக்காரணத்தால் ஐந்து வயது முதல் ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் தங்கி அன்பிலும், இறைஞானத்தலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்.

துறவு மடத்தில் வாழ்ந்தபோது துறவிகளின் வாழ்க்கை முறைகளை தனதாக்கினார். இறைவனோடு உறவு கொண்டு தியான வாழ்வில் சிறந்து விளங்கினார். துறவு இல்லத்திற்கு வருகின்ற மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை பணக்காரர் என்று வேறுபாடு இல்லாமல் நன்கு உபசரித்தார். நோயார்களிடம் மிகுந்த அன்புகொண்டு நன்கு கவனித்துக்கொண்டார். அவர்களின் அருகில் அமர்ந்து பேசி மகிழ்விப்பார். தனது தலையில் அந்தோணியார் வட்டம் போட்டு உத்தம துறவியாக மாறினார்.

           ஒவ்வொரு நாளும் இறையன்பற்கும் சகோதர அன்பிற்கும் சான்றாக வாழ்ந்தார். காட்ஃப்ரி தனது வாழ்வை இறையாட்சி பணிக்காக அர்ப்பணிக்க விரும்பினார். குருத்துவ படிப்பை முடித்து குருவாக அருள்பொழிவு பெற்றா
ர். நோஜன்ட் என்ற இடத்திலுள்ள துறவு மடத்தின் தலைவராக பொறுப்பேற்றார். தலைவர் பொறுப்பில் இருந்தாலும் அனைவருக்கும் பணியாளராக பணிவிடைகள் செய்தார். 
அன்னை மரியாவிடம் மிகுந்த பற்றும் பக்கியும் கொண்டார். அன்னையின் துணையோடு செப, தவ வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.     
            செப வாழ்வை கைவிட்டு வாழ்ந்த துறவிகளை அன்புடன் திருத்தினார். துறவு இல்லத்தின் ஒழுங்குகளை சீர்படுத்தினார். தனது மறையுரை வழியாக இறைவனின் மாபெரும் கருணை, அன்பு, இரக்கம் ஆகியவற்றை எளியநடையில் எடுத்துரைத்தார். பஞ்சம் ஏற்பட்ட தருணத்தில் மக்களில் ஒருவராக இணைந்து நோன்பிருந்து மன்றாடி பஞ்சம் நீங்கிட வழிகாட்டினார். இறைவனுக்கும் இறைமக்களுக்கும் பணி செய்த காட்ஃப்ரி ஆயராக அருள்பொழிவு பெற்றார். தனது மறைமாட்ட மக்கள் இறைவனிடம் செல்ல நல்வழிகாட்டிய காட்ஃப்ரி 1115ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 8ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்

Wednesday 7 November 2018

புனித வில்லிபிரார்ட்

             கிறிஸ்துவை இதயத்தில் சுமந்து, கிறிஸ்துவுக்காக துன்பங்கள் ஏற்று நற்செய்தி அறிவித்தார். மக்களுக்கு இறைநம்பிக்கையை அமுதாய் ஊட்டினார். வேதகலாபனையில் கிறிஸ்தவ மக்களுக்கு தைரியம் பகர்ந்தார்.  தனது ஆன்மாவையும் உடலையும் கறைப்படுத்தாமல், கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்து தூய்மையில் வாழ்ந்தார். இவர் நார்த்தம்பிரியாவில் 658ஆம் ஆண்டு பிறந்தார்.வில்லிபிரார்ட் சிறுவயது முதல் புனித வில்லிஃபிரட் என்பவரின் கண்காணிப்பில் வளர்ந்தார். அவரிடமிருந்து கிறிஸ்துவின் விழுமியங்களை கற்றுக்கொண்டார்.

         செபத்தின் வழியாக கிறிஸ்துவில் ஒன்றாக இணைந்தார். கிறிஸ்துவுக்காக ஆன்மாக்களை மீட்க தூய ஆவியின் தூண்டுதல் பெற்றார். தனது 20ஆம் வயதில் அயர்லாந்து சென்று புனித எக்பெர்ட் வழிகாட்டுதலில் நற்செய்தி அறிவித்தார். கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ்ந்த வில்லிபிராட் 695ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் ஆயராகத் திருப்பொழிவுப் பெற்றார்.

         துறவிகளின் உதவியோடு கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தார். ராட்போர்ட் அரசன் கிறிஸ்தவ மக்களை கொடுமைப்படுத்தினான். கிறிஸ்தவ மறையை விட்டுவிலக வற்புறுத்தினான். தமது தெய்வச் சிலைகளை வைத்து ஆலயத்தை அவமதித்தான். ஆலயங்களைத் தீக்கிரையாக்கினான். மறைபணியாளர்களை கொலை செய்தான். தன் உயிரை இழக்கவேண்டிய சூழலிலும் நற்செய்தியை அறிவித்தார்.

        கிறிஸ்துவுக்காக ஆலயங்கள் எழுப்பினார். மக்கள் துன்பத்தில் மனம் தளராமல் விசுவாசத்தில் உறுதியுடன் முன்நோக்கி செல்ல வழிகாட்டினார். கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து இறைவல்லமை பெற்றார். துறவு மடத்தை ஏற்படுத்தினார். தனது ஆன்மாவையும் உடலையும் கறைப்படுத்தாமல், கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்து தூய்மையில் வாழ்ந்த வில்லிபிரார்ட் 739ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 7ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து உயிர் துறந்தார். 

Tuesday 6 November 2018

அன்னை மரியா

       அன்னை மரியா மாசணுகாதவர்; அன்பின் உறைவிடம்; தாழ்ச்சியின் சிகரம்; விண்ணகத்தின் வாசல்; விண்ணக மண்ணக அரசி; அமல உற்பவி; இறைவனின் தாய்; விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டவர்; உடன்படிக்கையின் பேழை எனப்பலவாறு அழைக்கிப்படுகின்றார். புனித அல்போன்ஸ் லிகோரி மரியாவிடம் அன்புகொண்டிருந்தார். ஒருநாள் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு செபித்துக் கொண்டிருந்தார். அப்போது கட்டிடம் அதிர்வதைப்போல் உணர்ந்தார். “உலக வாழ்க்கையை விட்டு உனது வாழ்க்கையை இறைவனுக்கு அர்ப்பணமாக்கு” என்ற குரல் கேட்டார். அல்போன்ஸ் மரிய லிகோரி உடனே அருகிலிருந்த மீட்பின் அன்னை ஆலயம் சென்று அன்னையின் திருசொரூபம் முன்பாக முழந்தாளிட்டு, “அன்னை மரியே நான் எனது உடமைகளையும் பதவியையும் இழக்க விரும்புகின்றேன். உலக இன்பங்களும் அதன்மூலம் கிடைக்கின்ற இன்பத்தை இயேசுவுக்காக இழக்கின்றேன். வாழ்நாள் முழுவதும் புனிதம் மிகுந்த குருவாக பணிசெய்ய என் கரம் பிடித்து வழிநடத்தும்” என்று செபித்தார். அன்னை மரியின் துணையோடு வழக்குரைஞர் பணியைத் துறந்து இறையாட்சி பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்து புனிதராக மாறினார்.

புனித லியோனார்ட்

 
    அரண்மனை வாழ்வை துறந்து, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றகூறி ஏழை எளிய மக்களை அன்பு செய்து, இறையாட்சி பணியை வாழ்வின் இலக்காகக் கொண்டவர். 
எண்ணற்ற மக்களின் இதயத்தில் கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற வார்த்தையை வித்தவரே புனித லியோனார்ட். இவர் பிரான்ஸ் நாட்டில் செல்வாக்கு மிகுந்த அரச குடும்பத்தில் 469ஆம் ஆண்டு பிறந்தார்.

        லியோனார்ட், முதலாம் குளோவிஸ் அரண்மனையில் உயர் பதவியில் பணியாற்றினார். தனது பதவியை பயன்படுத்தி அனைவருக்கும் நன்மைகள் செய்தார். புனித ரெமிஜிஸ் ஆயரின் போதனையால் திருமுழுக்கு பெற்றார். கிறிஸ்துவின் அன்பினால் ஆள்கொள்ளப்பட்ட தருணத்தில் அரண்மனை வாழ்வை துறந்து செபம், தவம் செய்ய மைசி என்ற இடத்திலுள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

     லியோனார்ட் வனாந்தரத்தில் கடுமையான தவமுயற்சிகள் மேற்கொண்டார். இறைவனோடு ஒன்றிணைய தனது வாழ்வின் இலக்காக மாற்றினார். இறைவா என்னை உம்மோடு ஒன்றிணைத்தருளும் என்று நாளும் மன்றாடினார். ஒறுத்தல் செய்து தன்னை புனிதப்படுத்தினார். பிரான்ஸ் நாட்டு அரசி குழந்தை பெற்றெடுக்கும் தருணத்தில் வலியால் துடிதுடித்தார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் லியோனார்ட் இறைவனின் வல்லமையால் தாயும், சேயும் காப்பாற்றினார்.
அரசன் அன்பளிப்பாக வழங்கிய இடத்தை துறவு இல்லமாக மாற்றினார். அரசரிடம் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய பரிந்துபேசி விடுதலை பெற்று தந்தார். பாவத்தின் சிறையில் வாழ்ந்தோரையும் விடுதலை செய்து தூயவராக மாற்றினார். மக்களின் உடல், உள்ளம், ஆன்மா வளர்ச்சிக்காக அரும்பாடுப்பட்டார். உரிமை வாழ்வுக்காக குரல் கொடுத்தார். சிறைப்பட்டோர்மீது மிகுந்த அன்பு செலுத்திய லியோனார்ட் மண்ணக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து 559ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6ஆம் இயற்கை எய்தினார். இவர் சிறைக்கைதிகள், பிரசவ வலியால் துடிப்பவர்கள் ஆகியோரின் பாதுகாவலர்.

Monday 5 November 2018

அன்னை மரியா

  
 “கடவுளின் அன்னையும் எங்களின் அன்னையுமான மரியே நீர் வாழ்க; விண்ணகத்தில் வீற்றிருப்பவரும் அரியணையினின்று அருள்வளங்களை வாரி இறைப்பவருமான இறை இயேசுவிடம்
, மரியே எமக்காகப் பரிந்து பேசி, நாங்கள் இறுதிநாள் தீர்ப்பில் மாட்டிக் கொள்ளாதிருக்கவும், இறைவனை முகமுகமாகத் தரிசிக்க வரமும் பெற்றுத்தாரும்”  என்று செபித்தார் புனித கிறிசோஸ்தம் அருளப்பர்.

          புனித பெர்னார்து, “மரியா பாவிகளின் ஏணிப்படி என்றும். இரக்கத்தின் அரசி மரியா, பாவச்சேற்றில் அமிழ்ந்துக் கிடப்போர்க்குத் தனது கரத்தை நீட்டி, பாவப் பாதாளத்தினின்று வெளியேறவும் இறைவனுடன் ஒப்புரவாகவும் உறுதுணையாய் இருக்கின்றார்” என்று கூறுகிறார்.

புனித சார்லஸ் பொரோமியோ

 
“என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். இறைவனுக்கு உகந்ததையே செய்வேன்” என்றுகூறிய நம்பிக்கை வீரர்.
 இறையன்பின் சுடராக உண்மையான சமூக சீர்திருத்தவாதியாக செயல்பட்டவர். இறைவனிடம் மிகுந்த தோழமை கொண்டவர். கிறிஸ்துவுக்காகவும் திருச்சபைக்காகவும் தனது சொத்து, சுதந்திரம் அனைத்தையும் துறந்தவரே புனித சார்லஸ் பெரோமியோ. இவர் 1538ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3ஆம் நாள் பிறந்தார்.
     
   தனது செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் ஆனந்தம் அடைந்தார். பன்னிரண்டாம் வயதில் துறவியாகும் விருப்பத்துடன் உச்சந்தலையில் வட்டம் போட்டுத் தன்னை கிறிஸ்துவுக்கு அர்ப்பணமாக்கினார். இவரது தந்தையும் சகோதரனும் திடீரென்று மரணமடைந்தனர். சார்லஸ் குடும்பத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர்கள்  வற்புறுத்தினர். அவரோ,“நான் குருவானவராக பணிசெய்ய விரும்புகிறேன்” என்றார். 1563, செப்டம்பர் 4ஆம் நாள் குருவாக அருட்பொழிவு பெற்றார்.

       சார்லஸ் தனது முதல் நன்றி திருப்பயை அன்னை மரியாவின் விண்ணேற்புத் திருநாளன்று புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் கல்லறையில் நிறைவேற்றினார். தனது பணியையும், சேவையையும் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கும், ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்கும் பணியாற்றிட அன்னை மரியிடம் வேண்டுதல் செய்தார்.  தனது சேவையின் முதல் கட்டமாக திருத்தெந்து பொதுச்சங்கம் நடத்திய திருத்தந்தைக்கு உதவி செய்ய சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சார்லஸ் 1563 ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் புனித அம்புறோஸ் திருநாள் அன்று மிலான் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

     உயிருள்ள, ஆற்றல், வல்லமை தருகின்ற இறைவார்த்தையை எங்கும் போதித்தார். இவரது போதனையைக் கேட்டவர்கள் மனம்மாறி நன்மை பல செய்தார்கள். தமது வாழ்நாள் முழுவதும் நற்கருணை நாதருக்காகவும், திருச்சபைக்காகவும், ஏழை மக்களுக்காகவும் வாழ்ந்த சார்லஸ் 1560ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். சார்லஸ் 1584, நவம்பர் 3ஆம் நாள் இயற்கை எய்தினார். இவரை திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1610, நவம்பர் முதல் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் குடல் கோளாறுகள்; ஆன்மீகத் தலைவர்களின் பாதுகாவலர்

புனித பெர்டில்லா

         
       நமது வேளை உண்மையான பலன் கொடுக்க வேண்டுமானால் நம்மிடம் தாழ்ச்சி இருக்க வேண்டும் என்றுகூறி தாழ்ச்சியுடன் வாழ்ந்தவர். அந்நியர்களை உபசரித்து, நோயளிகளையும், சிறார்களையும் அன்புடன் பராமரித்தவர். அன்பு, கனிவு, இரக்கம், தாழ்ச்சி, தூய்மை மற்றும் இறைஞானம் ஆகியவற்றை பிரதிபலித்தவரே புனித பெர்டில்லா. 
இவர் பிரான்ஸ் நாட்டில் சொய்சன்ஸ் என்னும் இடத்தில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார்.

        குழந்தைப்பருவம் முதல் இறையன்பில் வளர்ந்த பெர்டில்லா தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க தூய ஆவியின் தூண்டுதல் பெற்றார். ஆன்ம குருவின் வழிகாட்டுதலால் புனித கொலும்பனுடைய விதிமுறைகளைப் பின்பற்றிய துறவு மடத்தில் சேர்ந்தார். இறைவனின் உடனிருப்பை உணர்ந்து அவரது பிரசன்னத்தில் வாழ்ந்தார். கிறிஸ்துவின் விழுமியங்களை நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். உடன் வாழ்ந்தக் கன்னியர்களுக்கு முன்மாதியாக வாழ்ந்தார். 

           ஒவ்வொரு நாளும், “ஆண்டவராகிய இயேசுவே! என்மீது இரக்கமாயிரும்” என்று செபித்து இறைவனின் ஆசியுடன் துவங்கினார். தனது செபத்தின் வழியாக எண்ணற்ற மக்களை கிறிஸ்துவோடு இணைத்தார். செப தவ வாழ்வினால் துறவிகளுக்கு முன்மாதிரியாக மாறினார். இவரது வழிகாட்டுதலால் துறவிகள் புனிதமான வாழ்கை வாழ்ந்தனர். பிரான்ஸ் அரசர் குளோவிஸ் இறந்தவுடன் இவரின் வழிகாட்டுதலால் அரசி பத்தில்டிஸ் துறவியானார். செபத்தின் வழியாக இறை மனித உறவில் வாழ்ந்த பெர்டில்லா 692ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து இயற்கை எய்தினார்.

Saturday 3 November 2018

மரியா பாவிகளின் ஏணிப்படி

         
           புனித பெர்னார்து, “மரியா பாவிகளின் ஏணிப்படி என்றும். இரக்கத்தின் அரசி மரியா, பாவச்சேற்றில் அமிழ்ந்துக் கிடப்போர்க்குத் தனது கரத்தை நீட்டி, பாவப் பாதாளத்தினின்று வெளியேறவும் இறைவனுடன் ஒப்புரவாகவும் உறுதுணையாய் இருக்கின்றார்” என்று கூறுகிறார். மேலும், “நோவேயின் காலத்தில் கடவுளின் கட்டளைப்படிக் கட்டப்பட்ட பேழையுடன் மரியாவை ஒப்பிடுகின்றார்.  நோவேயின் நாட்களில் ஜலப்பிரளயம் மனம்மாறாத பாவிகளை வாரிக்கொண்டுபோன போது, எவ்வாறு பேழையில் இடம் பெற்றிருந்த கொடிய விலங்குகள்கூடக் காப்பாற்றப்பட்டனவோ, அவ்வண்ணமே கொடிய பாவிகளுக்கும் மரியா இறை மன்னிப்பைப் பெற்றுத் தருகின்றார்” என்கிறார்.  



புனித மார்ட்டின் தே போரஸ்

       
     வானதூதரை துணையாக பெற்றவர். இரக்கச் செயல்கள் வழியாக தூய்மை அடைந்தவர். செபம், தவம், இறைபக்தி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். நோயளிகளுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்தல் தனது முழுமுதற் கடமையாக கருதினார்.
 தாய் திருச்சபையின் மறையுண்மைகளையும், விவிலியம், அன்னை மரியாவை பற்றியும் மறைக்கல்வி வழிகாக கற்பித்தவர். தனது முன்மாதியான வாழ்க்கை வழியாக எண்ணமற்ற மக்களுக்கு இறைவழி காட்டியவரே புனித மார்ட்டின் தே போரஸ்.      

  

          இவர் பெரு நாட்டில் லீமா நகரில் 1579ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9ஆம் நாள் ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்தமாக்குவதை இலட்சியமாக கொண்டார்.   தனது 15ஆம் வயதில் லீமா நகரில் இருந்த சாமிநாதர் சபையில் வேலைக்கு சேர்ந்தார். சிறிய பொருப்புகளிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டார். நற்கருணை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மிகுந்த அன்பு செலுத்தினார். அன்பு, தூய்மை, கீழ்ப்படிதல், தாழ்ச்சி என்ற புண்டியங்களில் சிறந்து விளங்கினார். இரவுநேரங்களில் ஞானநூல்கள், விவிலியம் ஆகியவற்றை படித்தார். தன்னொடுக்க செயல்களால் இறைவனை மாட்சிமைப்படுத்தினார்.

   

        ஏழைகளுக்கு உதவி செய்யும் குழுவில் இணைந்து பணியாற்றினார். இறைவார்த்தையின் வல்லமையால் நோயாளிகளை நலமாக்கினார். நோயுற்ற மக்களுக்கு நாளும் நன்மைகள் பல செய்தவர். நோயாளிகளுக்கு பாசத்துடன் பணியாற்றினார். புதுமை செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார். தன்னிடம் வந்த நோயளிகள்மீது திருசிலுவை வைத்து இயேசு நமாத்தின் சக்தியால் குணப்படுத்தினார். மார்ட்டின் அருகில் ஒரு வானதூர் இருந்தார். இறையொளி இவரை சுற்றிலும் சூழ்ந்திருக்கும்.                      

        

       ஏழைகளுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினார். தன்னிடம் உள்ளதையும், பிறரிடம் கையோந்தி பெற்ற பொருட்கள், பணம் ஆகியவற்றை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். தினமும் 160 ஏழை மக்களுக்கு உணவளித்தார். லீமா நகரில் கைவிடப்பட்ட மக்களுக்காக இல்லங்கள் அமைத்தார்.ஏழைகளின் தந்தையாக வாழ்ந்த மார்ட்டின் தே போரஸ் 1639ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 23ஆம் யோவான் 1962ஆம் ஆண்டு மே திங்கள் 6ஆம் நாள் புனிதராக உயர்த்தினார்.  இவர் இருவேறு இனத்தவர்களுக்கு பிறந்தவர்கள், கறுப்பு நிறமுடையோரின் பாதுகாவலர்.

Friday 2 November 2018

இறந்த விசுவாசிகள் நினைவு

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற மக்கள் உத்திரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக தங்கள் செபத்தின் வழியாக உதவி செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இயேசுவின் சகோதரர்கள், சிறையிலிருக்கும் சகோதரர்கள், விண்ணக மாட்சிமை என்னும் ஆடையின்றித் தவிக்கும் சகோதரர்கள். அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நாம் இயேசுவுக்கு உதவி செய்கின்றோம்.
        
     இறந்த விசுவாசிகள் அனைவரையும் இன்று நாம் நினைனக்கும் நாள். திருச்சபைத்தாய் இறந்து விண்ணகத்தில் இருக்கின்றவர்களையும், உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமாக்களையும் நினைகின்ற புனிதமான நாள். உயிர் வாழ்வோர் செபம், தவம், தானதர்மம் வழியாக இறந்துபோன ஆன்மாக்களுக்கு உதவி செய்யும் புனிதம் மிகுந்த நாள்.  உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்கள் இறைவனை முகமுகமாய் தர்சிக்க உதவி செய்கின்ற தூய நாள். இறந்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணக பேரின்பத்தில் நுழைய வழிகாட்டும் நாள்.

   புனிதர்கள் மரித்துப்போன ஆன்மாக்களின் மீட்புக்காகக் கண்ணீரோடும், முழந்தாள்படியிட்டும், கரங்ளை விரித்துப்பிடித்தும் செபித்தனர். ஒருமுறை புனித ஜெத்துருவிடம் இயேசு கிறிஸ்து காட்சியளித்து “இயேசு, மரியா, சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன் என்று செபிக்கின்றபோது ஒரு ஆன்ம உத்தரிக்கின்ற இடத்திலிருந்து விண்ணக வாழ்வுக்கு கடந்து செல்கின்றது”  என்று கூறினார்.

   ஒருமுறை காவல்தூதர் ஒருவர் பவுஸ்தீனாவை உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்களைச் சந்திக்க தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு ஏராளமான ஆன்மாக்கள் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்வமாய் செபிக்கிறார்கள்; பலன்ஒன்றுமில்லை. இந்த ஆன்மாக்களுக்கு நம்மால் மட்டுமே உதவி செய்ய முடியும். எரியும் நெருப்பின் இடையில் சென்ற பவுஸ்தீனாவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இறைவனின் அன்பும், இறைவனின் பிரசன்னமும் இல்லாமல் தவிக்கும் நிலையே உத்தரிக்கிற இடத்திலுள்ள ஆன்மாக்களின் மிகபெரிய துன்பம். இவர்களின் தாகம் இறைவனோடு இணைதல். பவுஸ்தீனா இவர்களுக்காகப் பரிகாரம் செய்து செபிக்க வேண்டுமென்று கூறி வானதூதர் மறைந்தார்.
      
        அன்னை மரியா அங்கு தோன்றினார். உத்தரிக்கின்ற இடத்திலுள்ள ஆன்மாக்கள் உரத்த குரல் ‘மனுக்குலத்தின் தாயே’ என்று அழைத்தார்கள். அன்னை அவர்களை ஆறுதல்படுத்தினார். அப்போது பவுஸ்தீனா, “எனது இரக்கம் ஆன்மாக்களின் வேதனையைக் குறைக்கும்” என்ற குரல் கேட்டார். அன்று முதல் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காகச் செபிக்க தொடங்கினார்.

     இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற ஆன்மாக்கள் மண்ணக வாழ்வை விட்டுபிரிந்தாலும் விண்ணகத்தில் அவருடன் வாழ்கின்றனர். விண்ணகப்பேரின்பத்தை இழந்துபோன மக்களுக்கு உயிர் வாழ்வோரின் பரிந்துரை செபத்தால் இறந்தோர் அனைவரும் விண்ணக வாழ்வை உரிமையாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே இறந்துபோன அனைத்து விசுவாசிகளுக்காகவும் செபிப்போம்.

Thursday 1 November 2018

புனிதர் அனைவரின் பெருவிழா

மனித வாழ்விற்கான அழைப்பு தூய வாழ்விற்கான அழைப்பு ஆகும்ஒரு நல்ல மனிதன்மெய்யாகவே புனிதனாக இருக்கிறான்இறைநம்பிக்கைமனித வாழ்வைப் புனித வாழ்வாகமாற்றுகிறதுதந்தையாம் கடவுளின் மாட்சியை தரணிக்குத் தந்த ஒரே மகனாம் இயேசுவை அறிந்துஅனுபவித்துவாழ்வாக்கிசான்று பகர்ந்து வாழ்வது தான் புனித வாழ்வு ஆகும்புனிதர்கள் அனைவரும், இறைவனால் தமக்கு வழங்கப்பட்ட தனிப்பட்டக் கொடைகளுக்கு
மதிப்பளித்து, இறை அழைத்தலுக்கு செவிமடுத்து, தன்னலமற்ற தியாக வாழ்வு வாழ்ந்தவர்கள். புனிதர்கள் ஒவ்வொருவரும் இறைமகன் கிறிஸ்துவை தமது மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள்.  புனிதர்களில் பலர், எண்ணற்ற தியாகங்கள் செய்தது மட்டுமல்ல இரத்தம் சிந்தி தமது உயிரையே தியாகப்பலியாக்கி மறைசாட்சியாக இறந்தவர்கள். 

 

இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த அனைவரையுமே தொடக்ககால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. .இதை புனித பேதுருவின்  முதல் திருமுகத்திலே நாம் காணலாம். “ புனிதர்கள் யார்? ” என்று நாம் ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப் பார்க்கின்றபோது, கிடைக்கின்ற பதில்,  “ புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து, அர்ப்பணித்தவர்கள்.” என்பதுவே. ஆம்;. புனிதர்கள் வாழ்வு நமக்குக் கற்றுத் தரக்கூடியதும் அதுவே.  புனிதர் என்றால் பாவங்களிருந்து விலக்கப்பட்டுகடவுளின் அருட்பொழிவு பெற்றவர் ஆவார்.  


புனிதர்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைச் சுவடுகளில் நடந்தவர்கள்இருளிலும் துயரிலும்பலவீனங்களில் வீழ்ந்தும் எழுந்தும்காடு மேடுபள்ளங்களைக் கடந்தும்கிறிஸ்துவின் ஒளியாக வாழ்ந்தவர்கள்ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்கு நற்சான்று நல்கியவர்கள்புனிதர்கள் இவ்வுலகில் நம்மை விட்டு மறைந்தாலும்நம் அகவாழ்வில் மறையாமல் நம்மிடையேஅருள்மாரி பொழிகின்றவர்கள்.


 செசிலியாகிறிஸ்துவின் வீரர்களேஎழுவீர் இரவுக்கு உரியசெயல்களை விட்டுவிடுங்கள்ஒளியின் போராயுதத்தை அணிந்துகொள்ளுங்கள் என்று வீரமுழக்கம் செய்து இறுதிவரை இறைவனுக்காகவாழ்ந்தவரே புனித செசிலியா.புனித ஜோசப் குப்பெர்டினோ,கடவுளைஅன்பு செய்கடவுளின் அனபு ஒருவரிடம் ஆட்சி செய்யுமானால் அவரே உண்மையானச் செல்வந்தர்” என்று வாழ்க்கை அனுபவத்தால் மொழிந்தவர். ஆக்னஸ் உனது வாளினால் என் இரத்தக்கறை படிந்தாலும் கிறிஸ்துவுக்குஅர்ப்பணமான எனது உடலை கறைப்படுத்த முடியாது என்றார்.


பிரான்சிஸ் அசிசி நான் பாவத்தில் வாழ்ந்திருக்கையில்தொழுநோயாளிகளைப் பார்க்க எனக்கு மிகவும் அருவருப்பாககசப்பாகஇருந்ததுஆனால் ஆண்டவர் என்னை அவர்களிடையே அழைத்துச் சென்றார்.ஒரு சமயம் கசப்பாக இருந்த எனக்கு இப்போது ஆன்மாவுக்கும்உடலுக்கும்இனிமையாக இருக்கிறதுஇதற்குப் பின் விரைவிலேயே நான் இவ்வுலகைத்துறந்தேன்” என்று கூறினார்புனித யோவான் பெர்க்மான்ஸ்,“நாம்ஏழைகளுக்குக் கொடுக்கும்போது கிறிஸ்துவுக்கே கொடுக்கிறோம்.கிறிஸ்துவின் அன்பு எம்மை ஆட்கொள்கிறது. இளைஞராக இருக்கும் போதுபுனிதராக மாறவில்லை என்றால் நான் ஒருபோதும் புனிதராகிடமுடியாது” என்றார்.     


திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் சிறந்த ஆளுமையும், அறிவும், அருளும் பெற்ற மாபெரும் தலைவராக திகழ்ந்தார். மரியன்னை மீது அதீத பற்றுகொன்றிந்தார், திருசெபமாலையில் ஒளியின் மறைபொருள் என்பதை புதியதாக அறிமுகம் செய்து இயேசுவின் வாழ்வை புனித மரியன்னையோடு இணைத்து செபிக்க உதவினார். இளையோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கடவுளின்பால் ஈர்த்தார், 1985 ஆம் ஆண்டு முதல் உலக இளையோர் மாநாட்டை தொடங்கி அவர்களுக்கு கிறிஸ்துவின் மதிப்பீடுகள் இலகுவாக சென்றடைய திருச்சபைக்கு வழிவகுத்தார். வாழும் போதே உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டார், கருகலைப்பு, சிசுகொலை, மரணதண்டனை போன்ற அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார். 2005, ஏப்ரல் 2, தனது 84வது வயதில் இயற்க்கை எய்தினார்.