Wednesday 7 November 2018

புனித வில்லிபிரார்ட்

             கிறிஸ்துவை இதயத்தில் சுமந்து, கிறிஸ்துவுக்காக துன்பங்கள் ஏற்று நற்செய்தி அறிவித்தார். மக்களுக்கு இறைநம்பிக்கையை அமுதாய் ஊட்டினார். வேதகலாபனையில் கிறிஸ்தவ மக்களுக்கு தைரியம் பகர்ந்தார்.  தனது ஆன்மாவையும் உடலையும் கறைப்படுத்தாமல், கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்து தூய்மையில் வாழ்ந்தார். இவர் நார்த்தம்பிரியாவில் 658ஆம் ஆண்டு பிறந்தார்.வில்லிபிரார்ட் சிறுவயது முதல் புனித வில்லிஃபிரட் என்பவரின் கண்காணிப்பில் வளர்ந்தார். அவரிடமிருந்து கிறிஸ்துவின் விழுமியங்களை கற்றுக்கொண்டார்.

         செபத்தின் வழியாக கிறிஸ்துவில் ஒன்றாக இணைந்தார். கிறிஸ்துவுக்காக ஆன்மாக்களை மீட்க தூய ஆவியின் தூண்டுதல் பெற்றார். தனது 20ஆம் வயதில் அயர்லாந்து சென்று புனித எக்பெர்ட் வழிகாட்டுதலில் நற்செய்தி அறிவித்தார். கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ்ந்த வில்லிபிராட் 695ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் ஆயராகத் திருப்பொழிவுப் பெற்றார்.

         துறவிகளின் உதவியோடு கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தார். ராட்போர்ட் அரசன் கிறிஸ்தவ மக்களை கொடுமைப்படுத்தினான். கிறிஸ்தவ மறையை விட்டுவிலக வற்புறுத்தினான். தமது தெய்வச் சிலைகளை வைத்து ஆலயத்தை அவமதித்தான். ஆலயங்களைத் தீக்கிரையாக்கினான். மறைபணியாளர்களை கொலை செய்தான். தன் உயிரை இழக்கவேண்டிய சூழலிலும் நற்செய்தியை அறிவித்தார்.

        கிறிஸ்துவுக்காக ஆலயங்கள் எழுப்பினார். மக்கள் துன்பத்தில் மனம் தளராமல் விசுவாசத்தில் உறுதியுடன் முன்நோக்கி செல்ல வழிகாட்டினார். கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து இறைவல்லமை பெற்றார். துறவு மடத்தை ஏற்படுத்தினார். தனது ஆன்மாவையும் உடலையும் கறைப்படுத்தாமல், கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்து தூய்மையில் வாழ்ந்த வில்லிபிரார்ட் 739ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 7ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து உயிர் துறந்தார். 

No comments:

Post a Comment