Tuesday 13 November 2018

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா

         இயேசுவை சொந்தமாக்க விழைவோர் அன்னை மரியாவிடம் செல்ல வேண்டும் என்று கூறியவர். அன்னை மரியாவின் துணையால், நாளும் இறையன்பின் இனிமையைச் சுவைத்து; இறைவனுக்குத் தன் வாழ்வை அர்ப்பணமாக்கியவரே புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா. இவர் போலந்து நாட்டில் தாட்ஸ்கோ நகரில் 1550ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 28ஆம் நாள் பிறந்தார். தீமையை வெறுத்து நன்மை செய்வதிலும், பகர்ந்து வாழ்வதிலும், செபிப்பதிலும் அனைவருக்கும் முன்மாதிரியானார். 
     
            அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும், அன்பும் செலுத்தினார். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா 1564ஆம் ஆண்டு கல்வி கற்க, வியன்னாவிலுள்ள இயேசு சபை கல்லூரியில் சேர்ந்து திருமறையை ஆர்வமுடன் படித்தார். திருச்சபையின் எதிரிகளை அழிப்பதற்காகத் தன்னைத்தயார் செய்தார். கல்லூரியில் குருவானவர்களின் அன்பும், இரக்கமும், பகரும் மனநிலையும், தூய்மையான வாழ்வும் அவரைக் கவர்ந்தன. ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா கடின உழைப்பு, செப வாழ்வு, நற்செய்தியின் மதிப்பீடுகளான அன்பு, நீதி, இரக்கம் இவற்றிற்கேற்ப தன் வாழ்வை மாற்றியமைத்தார். 

            ஸ்தனிஸ்லாஸ் பல துன்பங்களுக்கும், ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் உட்பட்டபோது உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ அவற்றையே தேர்ந்தெடுத்து, தூயவராக வாழ்ந்தார். இளமைப்பருவம் முதல் புனிதமான செயல்களை மட்டுமே செய்தார். அவரது சிந்தனை, சொல், செயல்களில் கிறிஸ்துவின் அன்பும், அமைதியும், இரக்கமும், பொறுமையும், மன்னிப்பும், இறைமாட்சியும் வெளிப்பட்டது.

           இயேசு சபையில் துறவியாக பயிற்சி பெற்று கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் போன்ற துறவற வார்த்தைப்பாட்டின் வழியாக இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தார். தூய்மையான வாழ்க்கை, சகோதர அன்பு, இறைஞானம்  கலந்த பேச்சு மற்றும் அன்போடும், பொறுமையோடும், பாசத்தோடும், கனிவோடும் இறையாட்சி  பணிசெய்தார். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா நோயுற்றார். அவரின் முகம் இறைபிரசன்னத்தால் ஒளிர்ந்தது. “அன்னையே இதோ! நான் வருகின்றேன். என்னை ஏற்றுக்கொள்ளும். உம் திருமகனிடம் என்னை ஒப்படைத்தருளும்” என்று செபமாலையை கரங்களில் பிடித்தவாறேகூறி 1568ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் உயிர் துறந்தார். திருத்தந்தை பதின்மூன்றாம் ஆசீர்வாதப்பர் 1726ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

No comments:

Post a Comment