Monday 12 November 2018

புனித மார்ட்டீன்


        கிறிஸ்துவைத் தனதாக்கிட இராணுவப் பணியைத் துறந்தவர். ஏழ்மை கோலம் பூண்டு துறவியாக மாறியவர். எளியவரில் எளியவராக, ஏழைகளின் நண்பராக வாழ்ந்தவரே புனித மார்ட்டீன். இவர் கி.பி. 316ஆம் ஆண்டில் பிறந்தவர். இராணுவத்தில் இணைந்து  படைத்தலைவனாக மாறிய மார்ட்டீன் தனது பணியாளர்கள் அனைவரிடமும் நண்பராகவே பழகினார். கிறிஸ்தவப் போர்வீரர்களிடம் நெருங்கிப் பழகினார். மார்ட்டீன் சில நாட்களுக்குப் பின் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். 

      
           இயேசு கிறிஸ்துவைத் தனது தலைவராகவும் நண்பராகவும் ஏற்றுக் கொண்டார். ஓய்வு நேரங்களில் ஆலயத்திற்குச் சென்று இயேசுவிடம் உரையாடவும், இறைவார்த்தையைத் தியானிக்கவும், செபிக்கவும் ஆர்வம் காட்டினார். அந்நாட்களில் பாலஸ்தீனத்திருந்து திருத்தலப் பயணிகளாக சிலர் வந்தனர். அவர்கள் காடு, மலைகளில் செபம், அமைதி, தியானம், வேலைகள் பல செய்து கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து, துறவிகளாக  வாழ்ந்தவர்களைச் சந்தித்தார். தானும் துறவியாக மாறிட ஆவல் கொண்டார்.

           மார்ட்டீன், ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். தன் வருவாயில் பெரும் பகுதிகளை ஏழைகளுக்குக் கொடுத்தார். குளிர் காலத்தில் உணவு, உடை, உறைவிடமின்றி தவித்தவர்களுக்கு உதவினார். ஒருநாள் ஓர் ஏழை மனிதன் குளிரில் நடுங்கியவாறு தன்மீது இரக்கம் காட்டுமாறு கெஞ்சினார். இரத்தத்தையும் உறைய வைக்கும் குளிரில் அவர் தவிப்பது கண்டு மனம் துடித்தார். தன்னிடம் எதுவும் இல்லாத நிலையில் திடீரென வாளினால் தனது போர்வையை இரண்டாகக் கிழித்து அதன் ஒரு பகுதியை அந்த ஏழைக்குப் போர்த்திவிட்டார்.   
           
               ஆயர் ஹிலாரியஸ் உதவியோடு விவியத்தை கற்றுக்கொண்டார். இறைவார்த்தையைத் தியானித்தும், செபத்திலும் நேரத்தைச் செலவிட்டார். மக்களுக்கு நலம் தரும் நற்செய்தியைப் போதிப்பதில் ஆர்வம் காட்டினார். கடினமான வேலை, ஏழ்மையான வாழ்வு, இறைபற்று மிகுந்த செபம், ஆழ்நிலை தியானம் இவைகளின் வழியாகப்  படைகளின் ஆண்டவரை மாட்சிமைப் படுத்தினார். இவரின் புனிதமான வாழ்க்கை, செப முறைகளைக் கண்ட பலர் இவருடன் இணைந்து துறவறம் மேற்கொண்டனர். 397ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 11ஆம் நாள் இயற்கை எய்தினார்.  

No comments:

Post a Comment