Tuesday 6 November 2018

புனித லியோனார்ட்

 
    அரண்மனை வாழ்வை துறந்து, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றகூறி ஏழை எளிய மக்களை அன்பு செய்து, இறையாட்சி பணியை வாழ்வின் இலக்காகக் கொண்டவர். 
எண்ணற்ற மக்களின் இதயத்தில் கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற வார்த்தையை வித்தவரே புனித லியோனார்ட். இவர் பிரான்ஸ் நாட்டில் செல்வாக்கு மிகுந்த அரச குடும்பத்தில் 469ஆம் ஆண்டு பிறந்தார்.

        லியோனார்ட், முதலாம் குளோவிஸ் அரண்மனையில் உயர் பதவியில் பணியாற்றினார். தனது பதவியை பயன்படுத்தி அனைவருக்கும் நன்மைகள் செய்தார். புனித ரெமிஜிஸ் ஆயரின் போதனையால் திருமுழுக்கு பெற்றார். கிறிஸ்துவின் அன்பினால் ஆள்கொள்ளப்பட்ட தருணத்தில் அரண்மனை வாழ்வை துறந்து செபம், தவம் செய்ய மைசி என்ற இடத்திலுள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

     லியோனார்ட் வனாந்தரத்தில் கடுமையான தவமுயற்சிகள் மேற்கொண்டார். இறைவனோடு ஒன்றிணைய தனது வாழ்வின் இலக்காக மாற்றினார். இறைவா என்னை உம்மோடு ஒன்றிணைத்தருளும் என்று நாளும் மன்றாடினார். ஒறுத்தல் செய்து தன்னை புனிதப்படுத்தினார். பிரான்ஸ் நாட்டு அரசி குழந்தை பெற்றெடுக்கும் தருணத்தில் வலியால் துடிதுடித்தார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் லியோனார்ட் இறைவனின் வல்லமையால் தாயும், சேயும் காப்பாற்றினார்.
அரசன் அன்பளிப்பாக வழங்கிய இடத்தை துறவு இல்லமாக மாற்றினார். அரசரிடம் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய பரிந்துபேசி விடுதலை பெற்று தந்தார். பாவத்தின் சிறையில் வாழ்ந்தோரையும் விடுதலை செய்து தூயவராக மாற்றினார். மக்களின் உடல், உள்ளம், ஆன்மா வளர்ச்சிக்காக அரும்பாடுப்பட்டார். உரிமை வாழ்வுக்காக குரல் கொடுத்தார். சிறைப்பட்டோர்மீது மிகுந்த அன்பு செலுத்திய லியோனார்ட் மண்ணக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து 559ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6ஆம் இயற்கை எய்தினார். இவர் சிறைக்கைதிகள், பிரசவ வலியால் துடிப்பவர்கள் ஆகியோரின் பாதுகாவலர்.

No comments:

Post a Comment