Friday 2 November 2018

இறந்த விசுவாசிகள் நினைவு

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற மக்கள் உத்திரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக தங்கள் செபத்தின் வழியாக உதவி செய்வார்கள். ஏனெனில் அவர்கள் இயேசுவின் சகோதரர்கள், சிறையிலிருக்கும் சகோதரர்கள், விண்ணக மாட்சிமை என்னும் ஆடையின்றித் தவிக்கும் சகோதரர்கள். அவர்களுக்கு உதவி செய்யும்பொழுது நாம் இயேசுவுக்கு உதவி செய்கின்றோம்.
        
     இறந்த விசுவாசிகள் அனைவரையும் இன்று நாம் நினைனக்கும் நாள். திருச்சபைத்தாய் இறந்து விண்ணகத்தில் இருக்கின்றவர்களையும், உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமாக்களையும் நினைகின்ற புனிதமான நாள். உயிர் வாழ்வோர் செபம், தவம், தானதர்மம் வழியாக இறந்துபோன ஆன்மாக்களுக்கு உதவி செய்யும் புனிதம் மிகுந்த நாள்.  உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்கள் இறைவனை முகமுகமாய் தர்சிக்க உதவி செய்கின்ற தூய நாள். இறந்த ஆன்மாக்கள் அனைவரும் விண்ணக பேரின்பத்தில் நுழைய வழிகாட்டும் நாள்.

   புனிதர்கள் மரித்துப்போன ஆன்மாக்களின் மீட்புக்காகக் கண்ணீரோடும், முழந்தாள்படியிட்டும், கரங்ளை விரித்துப்பிடித்தும் செபித்தனர். ஒருமுறை புனித ஜெத்துருவிடம் இயேசு கிறிஸ்து காட்சியளித்து “இயேசு, மரியா, சூசை நான் உங்களை அன்பு செய்கிறேன் என்று செபிக்கின்றபோது ஒரு ஆன்ம உத்தரிக்கின்ற இடத்திலிருந்து விண்ணக வாழ்வுக்கு கடந்து செல்கின்றது”  என்று கூறினார்.

   ஒருமுறை காவல்தூதர் ஒருவர் பவுஸ்தீனாவை உத்தரிக்கின்ற ஸ்தல ஆன்மாக்களைச் சந்திக்க தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு ஏராளமான ஆன்மாக்கள் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆர்வமாய் செபிக்கிறார்கள்; பலன்ஒன்றுமில்லை. இந்த ஆன்மாக்களுக்கு நம்மால் மட்டுமே உதவி செய்ய முடியும். எரியும் நெருப்பின் இடையில் சென்ற பவுஸ்தீனாவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இறைவனின் அன்பும், இறைவனின் பிரசன்னமும் இல்லாமல் தவிக்கும் நிலையே உத்தரிக்கிற இடத்திலுள்ள ஆன்மாக்களின் மிகபெரிய துன்பம். இவர்களின் தாகம் இறைவனோடு இணைதல். பவுஸ்தீனா இவர்களுக்காகப் பரிகாரம் செய்து செபிக்க வேண்டுமென்று கூறி வானதூதர் மறைந்தார்.
      
        அன்னை மரியா அங்கு தோன்றினார். உத்தரிக்கின்ற இடத்திலுள்ள ஆன்மாக்கள் உரத்த குரல் ‘மனுக்குலத்தின் தாயே’ என்று அழைத்தார்கள். அன்னை அவர்களை ஆறுதல்படுத்தினார். அப்போது பவுஸ்தீனா, “எனது இரக்கம் ஆன்மாக்களின் வேதனையைக் குறைக்கும்” என்ற குரல் கேட்டார். அன்று முதல் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காகச் செபிக்க தொடங்கினார்.

     இயேசு கிறிஸ்துவை அன்பு செய்கின்ற ஆன்மாக்கள் மண்ணக வாழ்வை விட்டுபிரிந்தாலும் விண்ணகத்தில் அவருடன் வாழ்கின்றனர். விண்ணகப்பேரின்பத்தை இழந்துபோன மக்களுக்கு உயிர் வாழ்வோரின் பரிந்துரை செபத்தால் இறந்தோர் அனைவரும் விண்ணக வாழ்வை உரிமையாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே இறந்துபோன அனைத்து விசுவாசிகளுக்காகவும் செபிப்போம்.

No comments:

Post a Comment