Monday 23 April 2018

புனித ஜார்ஜியார்

     கிறிஸ்துவுக்காக துன்பங்கள் ஏற்றுக்கொண்ட தியாகம் மிகுந்த ஒரு பெரிய புனிதர். இறைபக்தியும் இறையன்பும் இறைஞானம் தனதாக்கிய துறவி. கிறிஸ்தவ மக்களால் பேரரசருக்கு பாதுகாப்புதானே அன்றி பாதகம் இல்லை என்றுகூறி துன்புற்ற கிறிஸ்த மக்களுக்காக பேரரசனிடம் பரிந்து பேசியவர். மிகவும் தாழ்மையானவர், செபம் தனது உயிர் மூச்சாக மாற்றியவர். பொறுமையும் இறைபக்தியும் மிகுந்த சிறந்த இராணுவ வீரர். இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்து இடுக்கமான பாதையில் புனிதமுடன் பயணம் செய்து புனிதராக மாறியவரே புனித ஜார்ஜியார். இவர் பாலஸ்தினாவில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் 275ஆம் ஆண்டு திரு.ஜெரோன்சியஸ் திருமதி பாலிக்ரோனியா என்பவரின் மகனாகப் பிறந்தார்.


    கிறிஸ்தவ விசுவாசத்தில் வாழ்ந்த பெற்றோர் ஜார்ஜியாரை இறைபக்தியிலும் பொறுமையிலும் திறமையிலும் வளர்ந்துவர கற்றுக்கொடுத்தார்கள். அறிவில் சிறந்து விளங்கிய ஜார்ஜியார் தனது 20ஆம் வயதில்  சிறந்த முறையில் போர் பயிற்சி பெற்று டயோக்ளியஸ் பேரரசன் போர் படையில் சேர்ந்தார். பேரரசருக்கு ஒரு ஏகாதிபத்திய பாதுகாவலராக பணியாற்றினார். போர் வீரராக தனது பணியாற்றியத் தருணத்தில் தனது பெற்றோரை இழந்தார். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் இன்றி தவித்தபோது இறைவனின் துணை நாடினார். இறைவனின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் பெற்றுக்கொண்டார். அரசரின் மனம் கவர்ந்த சிறந்த போர் வீரராகவும் உற்ற தோழனாகவும், அரசவைத் தலைவர்களுள் ஒருவராகவும் படைத் தளபதியாகவும் உயர்ந்தார்.



   ஒருமுறை ஜார்ஜியார் சைலனா என்னும் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். சைலனா என்னும்  இடத்தில் பறவை நாகம் ஒன்று ஊருக்குள் வந்து மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்தது. பறவை நாகத்திற்கு விலங்குகள் பறவைகள் இரையாகப் போட்டார்கள். நாட்கள் நகர விலங்குகளை இரையாக போட வேண்டிய நிலை ஏற்பட்டது. தினமும் குலுக்கல் முறையில் மக்களை தேர்ந்தெடுத்தார்கள். ஒருமுறை அரசரின் மகளின் பெயர் விழுந்தது. இத்தருணத்தில் அரசன் பறைவை நாகத்திடமிருந்து தனது மகளை காப்பற்றுவோருக்கு தனது மகளை திருமணம் செய்து தருவதாகவும் அத்துடன் தனது செல்வம் அனைத்தும் தருவதாக வாக்களித்தார். இத்தருணத்தில் ஜார்ஜியார் பறவை நாகத்தை கொன்று அரசரின் மகளை காப்பாற்றினார். அரசனின் மகளை திருமணம் செய்யாமல் நற்செய்தி அறவிக்க அனுமதி கேட்டார். அரசனின் அனுமதிப் பெற்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்தார். எண்ணற்ற மக்கள் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மாறினர்.


    கிறிஸ்தவம் விரைவாக பரவிக்கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட டயோக்ளியஸ் அரசன் கிறிஸ்தவ மக்களை கொலை செய்ய ஆணையிட்டான். இதைக்கேள்விப்பட்ட ஜார்ஜியார், டயோக்ளியஸ் பேரரசனிடம் சென்று கிறிஸ்தவர்களுக்காக பரிந்துபேசினார். ஜார்ஜியார் கிறிஸ்தவர் என்று உணர்ந்துகொண்ட அரசன் கொந்தளித்தான். அப்பொல்லோவை வணங்க ஆணையிட்டான். கிறஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட வீரதளபதி ஜார்ஜியார் கிறஸ்து ஒருவரை மட்டுமே ஆராதிப்பேன் என்று உறுதியுடன் கூறினார். அரசன் கோபம் கொண்டு ஜார்ஜியாரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான். பலவாறு துன்பங்கள் ஏற்ற ஜார்ஜியார் கிறிஸ்துவை மறுதலிக்காமல் வீரமுழக்கம் செய்தார். ஜார்ஜியார் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கை பார்த்த இராணுவ வீரர்களும் மந்திரவாதியும் மனம் மாறினர். டயோக்ளியஸ் மிகுந்த கோபம் கொண்டு ஜார்ஜியாரை கழுமரம் ஏற்றி கொலை செய்து உடலை கடலில் வீசினான். ஜார்ஜியார் மறுநாளே உயிருடன் வந்தார். மீண்டும் அவரை தீயிட்டு எரித்தனர். அதிலிருந்நும் உயிர் பிழைத்தார். இறுதியாக சக்கரத்திலிட்டு அரைத்து உருக்கிய ஈயத்திலிட்டு மூடி ஆழ்குழியில் புதைத்தான். அவ்வாறு ஜார்ஜியார் 303ஆம் ஆண்டு ஏப்பல் திங்கள் 23ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment