Saturday 7 April 2018

புனித யோவான் பேப்டிஸ்ட் தெலசால்

      இறைவனே தஞ்சம் என்று கருதி தனது கடமைகளை சரிவர செய்து வாழ்ந்தவர். காலத்திற்கேற்ற கல்விமுறைத் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தாழ்ச்சியிலும் பக்தியில் சிறந்து விளங்கியவர். ஒயாமல் இறையாட்சி பணி செய்தவர். துன்பத்தின் சூழலில் இறைவனே தஞ்சம் என்று நம்பிக்கையுடன் முன்னேறினார். ஏழை எளிய மக்களை அன்பு செய்து அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்தவரே புனித யோவான் பேப்டிஸ்ட் தெலசால். 
     
      யோவான் பேப்டிஸ்ட் தெலசால் பிரான்ஸ் நாட்டில் 1651ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 30ஆம் நாள் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியிலும் பிறரன்பிலும் வளர்ந்து வந்தார். செப வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிதல் உள்ளவராக வளர்ந்து வந்தார். சிறுவயதிலே பெற்றோரை இழந்தார். பெற்றோரை இழந்தபோது இறைவனிடம் தஞ்சம் அடைந்தார். அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு தாயன்பை அன்னையிடம் பெற்றுக்கொண்டார். 
   
    பேப்டிஸ்ட் தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இறையாட்சி பணி செய்ய விரும்பினார். குருத்துவ பயிற்சி பெற்று 1678ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார். இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். இளைஞர்களிடம் தோழமை உறவு கொண்டு தவறான வழியில் சென்று பாவத்தின் பிடியில் வாழ்ந்த மக்களுக்கு நல்வழிகாட்டி மனந்திருப்பினார். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கற்க உதவினார். தனது நேரத்தை ஏழை மக்களுக்காக செலவிட்டு கல்வி கற்பித்தார்.
 
     யோவான் பேப்டிஸ்ட் வசதியான வாழ்க்கை முறைகளையும் பணத்தின் மீதும், பதவிகள் மீதும் பற்றற்று வாழ்ந்தார். தனது செல்வத்தையும் பொருளையும் நேரத்தையும் ஏழை எளிய மக்களுக்காக செலவிட்டார். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க புதிய முறைகளை பின்பற்றினார். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். இளைஞர்களுக்கு நல்வழி காட்டினார். கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு சான்றாக வாழ்ந்து மற்றுள்ளவரையும் அந்நிலைக்கு கொண்டுவர கடினமாக உழைத்த யோவான் பேப்டிஸ்ட் தெலசால் 1719ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment