Friday 27 April 2018

ஏப்ரல் 25. புனித பிலிப்பு நேரி

       “தாழ்ச்சி என்ற புண்ணியத்தை எல்லாரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தாழ்ச்சியோடும், கீழ்ப்படிதலோடும் இருங்கள். அப்போது தூய ஆவியார் செபிப்பது எப்படியென்று உங்களுக்குக் கற்றுத் தருவார்” என்று கூறியவர். தூய்மையான வாழ்க்கையாலும், தாழ்ச்சியான அர்ப்பணத்தாலும் “உரோமையின் இரண்டாம் அப்போஸ்தலர்” என்று அழைக்கப்படுபவரே புனித பிலிப்பு நேரி. இத்தாயில் ஃபுளோரன்ஸ் நகரில் 1515ஆம் ஆண்டு ஜøலை 22 ஆம் நாள் பிறந்தார். கடினமாக உழைக்கும் தருணங்களில் இறைவனின் துணை வேண்டினார்.

         இளவயதில்  பிலிப்பு நேரி பிளாரன்சு நகரில் இருந்த சாமிநாதர் சபையில் சான் மாற்கோ துறவிகளிடம் கல்வி பயின்றார்.  பிலிப்பு நேரி செபத்தில் தன்னிறைவு பெற்றதால், தமது உள்ளத்தில் தெளிவு பெற்றார். உலகச் செல்வங்களோடு வாழ்வதைத் தவிர்த்தார். கடவுளுக்காக இறைபணி செய்ய தமது 26ஆம் வயதில் வணிகத் தொழிலைக் கைவிட்டார். தனது ஆன்மநலனைக் குறித்தும், இறைமக்களின் ஆன்ம ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோமைநகர் சென்றார். மெய்யியல் மற்றும் இறையியல் பயின்றார். செபத்திலும் தவமுயற்சியிலும் முழு ஈடுபாடு கொண்டவராய் வனத்துறவி போலவே வாழத் தொடங்கினார்.


        பிலிப்புநேரி கடவுளுக்காகப் பணிசெய்ய அன்பும் ஆசீரும், சக்தியும் ஆற்றலும், பண்பும், பணிவும், இரக்கமும் இறைஞானமும் நிறைவாகப் பெற்றுக்கொண்டார். மருத்துவமனைக்குச் சென்று தீராத நோயுடன் தவித்திடும் மக்களுக்குத் தனது சேவையைத் தொடங்கினார். தெரு வழியாகச் செல்லும் போது ஆன்மீகத்தில் அக்கறையற்றுப் பின்தங்கியவர்களை இனங்கண்டு தமது திறமையானப் பேச்சினாலும், அணுகு முறையினாலும் அவர்களை இறைவனிடம் கொண்டு வந்தார். குருத்துவப் பயிற்சி பெற்று 1551ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

    இளைஞர்கள் எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கவும், ஆழமான இறையனுபவம், தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளைக் கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனம் பெறுதல் போன்றவைகளை  கற்றுத்தந்தார். தினந்தோறும் வைகறையில் துயில் எழும்பி இறைவனிடம் “ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரத்தால் வழி நடத்தும், இல்லாவிட்டால் பிலிப்பு உம்மை மறுதத்துவிடுவான்” என்று செபித்து தமது 80வது வயதில் 1595இல் இயற்கை எய்தினார். 

No comments:

Post a Comment