Monday 2 April 2018

புனித பிரான்சிஸ் பவுலா


           புனித பிரான்சிஸ் பவுலா இவர் குருத்துவ அருட்பொழிவு பெறாத துறவி ஆவார். இத்தாலியில் கலாப்ரியா என்னும் பகுதியில் பவோலா என்னுமிடத்தில் மார்ச் 27, 1416ம் ஆண்டில் பிறந்தார். மிகவும் பக்தியுள்ள இவரது பெற்றோருக்கு திருமணமாகி சில காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாததால் புனித "அசிஸியின் ஃபிரான்சிஸ்" நோக்கி செபித்தனர். அதன் காரணமாய் பிறந்த முதல் குழந்தைக்கு புனிதரின் நினைவாக ஃபிரான்சிஸ் என்றே பெயரிட்டனர். ஃபிரான்சிஸ் தொட்டில் குழந்தையாக இருக்கையில், ஒருமுறை அவரது கண்களில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, அவரது ஒரு கண்பார்வை அருகிப்போனது. அவர்கள் மீண்டும் புனிதர் "அசிஸியின் ஃபிரான்சிஸ்" அவர்களை நோக்கி வேண்டினர். கண்கள் குணமானதும் அப்புனிதரின் ஏதாவது ஒரு துறவு சபையில் வாழ்நாள் முழுதும் துறவு உடையில் வாழ வேண்டுதல் செய்தனர்.
       
       தமது பதின்மூன்றாவது வயதிலே தமது பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப ஃபிரான்சிஸ்கன் சபையின் துறவு மடம் ஒன்றில் இணைந்தார். செபம், தாழ்ச்சி, எளிமை போன்ற நற்பண்பில் சிறந்து விளங்கினார். துறவு மடத்தில் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்த ஃபிரான்சிஸ், தமது பெற்றோருடன் ரோமிலுள்ள அசிஸி மற்றும் சில வெவ்வேறு நகரங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து பவோலா திரும்பிய அவர், தமது தந்தையின் தோட்டத்திலிருந்த தனிமையான குகை ஒன்றில் வசிக்க தொடங்கினார். பின்னர், இத்தாலியின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் தனிமையான குகையில்  சென்று வாழ்ந்தார்.
     
           1435ல், அவருடன் இரண்டு பேர் அவருடன் தியானத்தில் இணைந்தனர். ஃபிரான்சிஸ் அவர்கள் மூவருக்காகவும் சிறு சிறு அறைகள் மற்றும் ஒரு சிற்றாலயம் அமைத்து தியான வாழ்வை தொடங்கினார். 17 ஆண்டுகளுக்கு பின், துறவியரின் எண்ணிக்கை கூடிய தருணத்தில், ஃபிரான்சிஸ் தமது துறவியர் சபைக்கான கோட்பாடுகளை எழுதுவதற்கு 1474ல் திருத்தந்தை  நான்காம் சிக்ஸ்தூஸ் அவர்கள் அனுமதி வழங்கினார். ஃபிரான்சிஸ் தவத்தை நேசித்தார். பாவிகளை மனந்திருப்பினார். பிளேக் போன்ற கொள்ளை நோய்களைத் தடுத்தார். நோய்களைக் குணப்படுத்தினார்.
     
           திருத்தந்தையின் கட்டளைக்குக் கீழ்படிந்து ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்று அரசர் "பத்தாம் லூயிசை"  நல்ல மரணத்திற்கு தயாரித்தார். ஏழ்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெண்களுக்காக துறவு இல்லங்கள் நிறுவினார்.  உலகில் வாழ்ந்தாலும் உலக இன்பங்கள் துறவிகள் கைவிட்டு வாழ வழிகாட்டினார். பிற்காலத்தில் நடக்கவிருப்பதை முன் அறிவித்தார். திருப்பாடுகளின் வெள்ளி அன்று யோவான் எழுதிய இயேசுவின் பாடுகளை வாப்பதை கேட்டுக்கொண்டே 1507ஆம் ஆண்டு இறந்தார்.


No comments:

Post a Comment