Sunday 22 April 2018

ஏப்ரல் 21, புனித ஆன்செலம்

          இறைவன் வெளிப்படுத்திய மறையுண்மைகளை நூல்கள் வழியாக வெளிப்படுத்தியவர். இறைபக்தி மிகுந்தவர். எழுத்தாற்றல் நிறைந்தவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தாயை இழந்து தவித்த வேளையில் தாயன்பை அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவர். தந்தையின் துன்புறுத்தலுக்கு உள்ளானத் தருணங்களில் இறைவேண்டுதல் செய்து பொறுமையாக இருந்தவரே புனித ஆன்செலம். இவர் லொம்பார்டு நாட்டில் 1033ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்தார். தந்தையின் துன்புறுத்துதல் அதிகரித்த வேளையில் வீட்டிலிருந்து வெளியேறினார்.


      இறைவனின் துணையை ஒவ்வொரு நிமிடமும் தேடினார். இறைவேண்டுதல் செய்வதில் ஆர்வம் காட்டினார். தூய ஆவியின் துணையை பெற்று கல்வி கற்பதில் சிறந்து விளங்கினார். 1057ஆம் ஆண்டு பெக் என்ற இடத்திலுள்ள புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்தார். இறைஞானத்தில் வளர்ந்து தூய்மையாக வாழ்ந்து நற்பண்பில் சிறந்து விளங்கினார். 1060ஆம் ஆண்டு துறவு ஆடைபெற்று உத்தம துறவியாக இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்தார்.


      ஆன்செலம் 1070ஆம் ஆண்டு ஆசிவாதப்பர் சபையின் தலைமை பொறுப்பேற்று துறவிகளை இறைவனின் வழியில் தூயவர்களாக வாழ நற்சான்று நல்கி சபையை திறம்பட வழிநடத்தினார். நூல்கள் வழியாக இறைவனை பற்றி மறையுண்மைகளை இறைவார்த்தையின் உட்பொருளை வெளிப்படுத்தினார். விவிலியம் ஆர்வமுடன் கற்பித்தார். 1093ஆம் கான்றர்பரி மறைமாவட்டத்தின் பேராயராக அருள்பொழிவு பெற்றார். இறைமக்களை இறையாட்சியின் பாதையில் வழிநடத்திய ஆன்செலம் 1109ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment