Wednesday 4 August 2021

புனித ஜாண் மரிய வியான்னி

 

நற்கருணையின் முன்னால் செலவிடும் நேரத்தைப் பொன்னான நேரமாகக் கருதவேண்டும் என்றுகூறி அவ்வாறே வாழ்ந்தவர். இறைமக்களுக்கு விண்ணகம் செல்ல பாதை காட்டியவர்.  நான் குருவானால் கடவுளுக்காக ஏராளமான ஆன்மாக்களை வென்றெடுப்பேன் என்ற கூறியவர். பங்கு குருக்களின் முன்மாதிரியாக வாழ்ந்தவரே புனித ஜாண் மரிய வியான்னி. இவர் பிரான்ஸ் நாட்டில் இலயன்ஸ் நகரில் டார்டிலி என்ற கிராமத்தில் 1786ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தமது 13ஆம் வயதில் நற்கருணை பெற்றுக்கொண்டார். குருவாகப் பணிசெய்ய விரும்பினார். இறையியல் படிப்பையும் இலயன்ஸ் நகரில் முடித்தார். 1815ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் ஜாண் மரிய வியான்னி குருவாக அருள்பொழிவு பெற்றார். 

    ஜாண் மரிய வியான்னி ஆர்ஸ் என்ற சிற்றூரின் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆர்ஸ் கிராமம் செல்ல வழி தெரியாமல் திகைத்தபோது ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வழிகாட்டினான். தனக்கு வழிகாட்டிய சிறுவனிடம், ஜாண் மரிய வியான்னி, “நீ எனக்கு ஆர்சுக்கு வழிகாட்டினாய். நான் உனக்கு விண்ணகத்திற்கு வழிகாட்டுவேன்” என்றார். வீடு வீடாய் சென்று மக்களைச் சந்தித்தார். காலையில் முதல் மாலைவரை ஆலயத்தில் செபித்தார். நோயாளிகளையும் அவர்களது இல்லங்களையும் தவறாமல் சந்தித்தனார். பங்கின் பாதுகாவலர் விழாவைச் சிறப்பாக கொண்டாடினார். ஆதரவற்றோரைப் பராமரிக்க இறைபராமரிப்பு இல்லம் தொடங்கி கவனித்தார். குழந்தைகளுக்கு கல்வி புகட்டினார். தனது மறையுரையில் ‘விண்ணகம்’ என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தினார். 

  பிறரைப் புனிதப்படுத்த தன்னை புனிதப்படுத்தினார். மரிய வியான்னியின் செப, தவ முயற்சியின் பலனாக ஆர்ஸ் சிற்றூர் மறைமாவட்டத்திலேயே ஒரு முன்மாதிரியான பங்குதளமாக 1835இல் அறிவிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கினார். கரடு முரடான படுக்கையில் படுத்து உறங்கினார். உணவிற்காக ஒரு சில வேகவைத்த உருளைக் கிழங்குகளை உண்டார். அலகையின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். 1859, ஜøலை 29ஆம் நாள் தனது அன்றாட அலுவலான போதிக்கும் பணி மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் பணியை முடித்து படுக்கைக்கு திரும்பினார். இறையன்பராக, ஏழ்மையின் இலக்கணமாக வாழ்ந்த ஜாண் மரிய வியான்னி 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் நாள் இயற்கை எய்தினார். 

Monday 2 August 2021

புனித வால்தியோஃப்

 புனித வால்தியோஃப் 1095ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோரின் அன்பில் வளர்ந்து பக்தியுடன் ஆலயம் சென்று செபித்தார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரமின்றி எளியவராக வாழ்ந்தார். தூயவரான ஆல்ரெட் என்பவரை பின்பற்றி 1130ஆம் ஆண்டு அகுஸ்தினார் துறவு மடத்தில் சேர்ந்து செபம், தவம், ஒறுத்தல்கள் செய்தார். 

    தன்னலமற்ற தலைவராகவும் அன்பின் சேவகராகவும் பணிவுடன் அனைவருக்கும் பணிவிடை செய்தார். ஆயர் பதவி தன்னை தேடிவந்தபோது தாழ்ச்சியுடன் நான் தகுதியற்றவன் என்று கூறினார். இறையன்பும், கனிவும், இரக்கமும் தனதாக்கி எல்லாருக்கும் இறைபிரசன்னத்தை பகிர்ந்து அனைவரின் நன்மதிப்பையும் மரியாதையும் பெற்றார். மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆயராது உழைத்த வால்தியோஃப் 1160ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் நாள் இறந்தார்.