Thursday 1 December 2022

புனித எட்மண்ட் காம்பியன் மற்றும் தோழர்கள்

    

    புனித எட்மண்ட் காம்பியன் லண்டன் நகரில் ஜனவரி 25ஆம் நாள் பிறந்தார். கத்தோலிக்க திருச்சபை மீது ஈர்ப்பு கொண்டிருந்தார். தோவாய் பல்கலைக்கழகத்தில் தெயவீகத்தன்மை பாடத்தில் பட்டம் பெற்றார். இயேசு சபை கல்லூரியில் 6 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். 1573ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். 1580ஆம் ஆண்டு நகை வியாபாரி வேடமிட்டு நற்செய்தி பணிக்காக இங்கிலாந்து சென்றார்.

 

    குருக்களோடு இணைந்து அருளடையாளங்கள் வழி மக்களை தூய வாழ்வுக்கு வழிகாட்டினார். நற்செய்தியையும், கத்தோலிக்க விசுவாசத்தையும் போதித்தார். ஆங்கலிக்கன் திருச்சபையின் உண்மைத் தன்மையை ஏற்க மறுத்ததால் 1581ஆம் ஆண்டு ஜøலை 15ஆம் நாள் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்தனர். 1581ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாள் எட்மண்ட் காம்பியன் மற்றும் அவரது தோழர்களையும் தலையை வெட்டி கொலை செய்தனர்.

Wednesday 4 August 2021

புனித ஜாண் மரிய வியான்னி

 

நற்கருணையின் முன்னால் செலவிடும் நேரத்தைப் பொன்னான நேரமாகக் கருதவேண்டும் என்றுகூறி அவ்வாறே வாழ்ந்தவர். இறைமக்களுக்கு விண்ணகம் செல்ல பாதை காட்டியவர்.  நான் குருவானால் கடவுளுக்காக ஏராளமான ஆன்மாக்களை வென்றெடுப்பேன் என்ற கூறியவர். பங்கு குருக்களின் முன்மாதிரியாக வாழ்ந்தவரே புனித ஜாண் மரிய வியான்னி. இவர் பிரான்ஸ் நாட்டில் இலயன்ஸ் நகரில் டார்டிலி என்ற கிராமத்தில் 1786ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தமது 13ஆம் வயதில் நற்கருணை பெற்றுக்கொண்டார். குருவாகப் பணிசெய்ய விரும்பினார். இறையியல் படிப்பையும் இலயன்ஸ் நகரில் முடித்தார். 1815ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் ஜாண் மரிய வியான்னி குருவாக அருள்பொழிவு பெற்றார். 

    ஜாண் மரிய வியான்னி ஆர்ஸ் என்ற சிற்றூரின் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆர்ஸ் கிராமம் செல்ல வழி தெரியாமல் திகைத்தபோது ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வழிகாட்டினான். தனக்கு வழிகாட்டிய சிறுவனிடம், ஜாண் மரிய வியான்னி, “நீ எனக்கு ஆர்சுக்கு வழிகாட்டினாய். நான் உனக்கு விண்ணகத்திற்கு வழிகாட்டுவேன்” என்றார். வீடு வீடாய் சென்று மக்களைச் சந்தித்தார். காலையில் முதல் மாலைவரை ஆலயத்தில் செபித்தார். நோயாளிகளையும் அவர்களது இல்லங்களையும் தவறாமல் சந்தித்தனார். பங்கின் பாதுகாவலர் விழாவைச் சிறப்பாக கொண்டாடினார். ஆதரவற்றோரைப் பராமரிக்க இறைபராமரிப்பு இல்லம் தொடங்கி கவனித்தார். குழந்தைகளுக்கு கல்வி புகட்டினார். தனது மறையுரையில் ‘விண்ணகம்’ என்ற சொல்லை அதிகம் பயன்படுத்தினார். 

  பிறரைப் புனிதப்படுத்த தன்னை புனிதப்படுத்தினார். மரிய வியான்னியின் செப, தவ முயற்சியின் பலனாக ஆர்ஸ் சிற்றூர் மறைமாவட்டத்திலேயே ஒரு முன்மாதிரியான பங்குதளமாக 1835இல் அறிவிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கினார். கரடு முரடான படுக்கையில் படுத்து உறங்கினார். உணவிற்காக ஒரு சில வேகவைத்த உருளைக் கிழங்குகளை உண்டார். அலகையின் துன்புறுத்தல்களுக்கு ஆளானார். 1859, ஜøலை 29ஆம் நாள் தனது அன்றாட அலுவலான போதிக்கும் பணி மற்றும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் பணியை முடித்து படுக்கைக்கு திரும்பினார். இறையன்பராக, ஏழ்மையின் இலக்கணமாக வாழ்ந்த ஜாண் மரிய வியான்னி 1859ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் நாள் இயற்கை எய்தினார். 

Monday 2 August 2021

புனித வால்தியோஃப்

 புனித வால்தியோஃப் 1095ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோரின் அன்பில் வளர்ந்து பக்தியுடன் ஆலயம் சென்று செபித்தார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரமின்றி எளியவராக வாழ்ந்தார். தூயவரான ஆல்ரெட் என்பவரை பின்பற்றி 1130ஆம் ஆண்டு அகுஸ்தினார் துறவு மடத்தில் சேர்ந்து செபம், தவம், ஒறுத்தல்கள் செய்தார். 

    தன்னலமற்ற தலைவராகவும் அன்பின் சேவகராகவும் பணிவுடன் அனைவருக்கும் பணிவிடை செய்தார். ஆயர் பதவி தன்னை தேடிவந்தபோது தாழ்ச்சியுடன் நான் தகுதியற்றவன் என்று கூறினார். இறையன்பும், கனிவும், இரக்கமும் தனதாக்கி எல்லாருக்கும் இறைபிரசன்னத்தை பகிர்ந்து அனைவரின் நன்மதிப்பையும் மரியாதையும் பெற்றார். மக்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆயராது உழைத்த வால்தியோஃப் 1160ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் நாள் இறந்தார்.                                                                        

Saturday 31 July 2021

புனித லொயோலா இஞ்ஞாசியார்


   புனித இஞ்ஞாசியார் ஸ்பெயினில் 1491இல் டிசம்பர் 27ஆம் நாள் பிறந்தார். 15ஆம் வயதில் ஸ்பெயின் நாட்டு அரசவையில் போர் வீரரானார். 1521இல் பம்பலூனா கோட்டையைப் பிரெஞ்சுகாரரிடமிருந்து காப்பாற்றும் போரில் அவரது கால்கள் ஊனமுற்றன. ஓய்வு எடுத்தபோது விவிலியம், புனித பிரான்சிஸ் அசிசியார், புனித சாமிநாதார் சரிதை படித்து மனந்திரும்பினார். 

    1522இல் மார்ச் 25ஆம் நாள் அன்னை மரியா வழி இயேசுவுக்கு தன்னை அர்ப்பணித்தார். குருவாக அருள் பெற்று படித்தோருக்கும், பாமரருக்கும் நற்செய்தி போதித்தார். தவறிய பெண்களுக்கு வழிகாட்டி, நோயுற்றோரை நலமாக்கினார். ஒருநாள் 7 மணிநேரம் இறைவனோடிருந்தார். 1534இல் இறை இயேசுவின் சேவகர்கள் சபை தொடங்கினார். இதயத்தில் இயேசுவை சுமந்து அயலானின் மீட்புக்காகவும், இறைவனின் அதி உன்னத மகிமைக்காகவும் இறையாட்சி பணி செய்து 1556, ஜூலை 31ஆம் நாள் இறந்தார்.     

Tuesday 20 July 2021

புனிதர்களான எலியாஸ், ஃபிளேவியன்

    புனிதர்களான எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் வீசுவாத்தின் வீரரார்கள். எலியாஸ் அரபு நாட்டில் பிறந்து துறவு மடத்தில் கல்வி கற்று விசுவாசத்தில் வளர்ந்தார். 457ஆம் ஆண்டு பாலஸ்தீனாவிற்கு சென்று யுத்திமுஸ் என்பவரின் உதவியில் வாழ்ந்தார். ஜெரிக்கோ என்ற குழுமத்தை நிறுவினார். குருத்துவம் வழி இறைவனின் திருவுளம் நிறைவேற்றினார். 494இல் எருசலேம் மறைத்தந்தையானார். அந்தியோக்கு மறைத்தந்தை ஃபிளேவியன் என்பவருடன் தோழமை உறவு கொண்டிருந்தார். இரண்டு மறைத்தந்தையர்களும் ஓரியல்பு கோட்பாடு எதிராக குரல் கொடுத்தனர். பேரரசர் முதலாம் அனஸ்தாசியுஸ் ஓரியல்பு கோட்பாட்டை ஆதரித்தார். பேரரசர், எலியாஸ் மற்றும் ஃபிளேவியன் இருவரையும் ஓரியல்பு கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாகக்கூறி ஆவணத்தில் கையொப்பம் போட சொன்னார். மறுத்த எலியாஸ், ஃபிளேவியன் இருவரையும் 516ஆம் ஆண்டு அய்லா என்ற இடத்திற்கு நாடுகடத்தினார். செல்லும் வழியில் ஃபிளேவியன் இறந்தார். அய்லாவில் எலியாஸ் இறந்தார்.                                                         

Monday 19 July 2021

🔹ஜூலை -18🔹 புனித ஃபிரட்ரிக்

புனித ஃபிரட்ரிக் 780இல் ஃபிரிஸ்லாந்தில் பிறந்தார். இறையன்பில் வளர்ந்து திருநூல் படிப்பின்மீது ஆர்வம் கொண்டு உட்ரெக்ட் நகருக்கு சென்றார். ஆயர் ரிக்ஃபிரிட் கரங்களால் குருவானார். வால்செரன் பகுதியில் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவின் விழுமியங்களையும் நலம்தரும் நற்செய்தியையும் போதித்தார். சமூகத்தில் நிலவிய தவறுகளையும் ஒழுக்கமற்றவர்களின் வாழ்வையும் சுட்டிகாட்டினார். இதனால் மக்களின் எதிர்ப்பை சந்தித்தார். 

   ஃபிரட்ரிக் 816ஆம் ஆண்டு உட்ரெக்ட் மறைமாவட்ட ஆயரானார். 829இல் மைன்ஸில் நடந்த ஆயர் மன்றத்தில் கலந்துக்கொண்டு இறைஞானம் மிகுந்த வார்த்தைகளை பேசினார். இவரது பணிகளை விரும்பாதோர் இவர்மீது பொய்குற்றம் சுமத்தியபோது இறையருளால் அமைதி காத்தார். 388, ஜூலை 18ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றி கடவுளுக்கு நன்றி கூறியபோது எதிரிகள் இரண்டு போர் அவரை வெட்டி கொலை செய்தனர்.                                          

🌷புனித அலெக்சியார்

    புனித அலெக்சியார் உரோமையில் 4ஆம் நூற்றாண்டில் பிறந்தார். வளனார் என்ற மெய்யடியாரிடம் கல்வியும், சாத்திரங்களையும், கலைகளையும் கற்றார். ஏழைகள்மீது தீராத பாசம் கொண்டு தனது செல்வங்களை அனைவருக்கும் வழங்கினார். பக்தியிலும், அறிவிலும் வளர்ந்து விண்ணக வாழ்வில் நாட்டம் கொண்டார். உலகைத் துறந்து கடவுளை தனதாக்கிட மண்ணாசை, பொருளாசை, உடலாசைகளை முற்றிலும் துறந்தார். 

  அலெக்சியார் இறைவா! நான் கற்பு நெறி தவறாமல் தரணியில் வாழ அருள்புரிவீர் என்றார். பெற்றோர் அவருக்கு திருமணம் செய்தனர். அலெக்ஸ் தவம் மேற்கொள்ள வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் புறப்பட்டார். எடேஸ்ஸôவில் 17ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து மக்களுக்கு நன்மைகள் செய்தார். அவரது பெயரும், புகழும் நாடெங்கும் பரவியபோது தவம் குலைந்துவிடும் என்று அஞ்சி தனது நாட்டில் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் தங்கி வீரர்களின் துன்புறுத்தலை ஏற்று இறந்தார். பெற்றோர் தனது மகன் அலெக்ஸ் என்று அறிந்ததும் துயருற்று அழுது  நல்லடக்கம் செய்தனர்.