Tuesday 31 October 2017

மரியா இறைவனின் தாய்

                                                    

         


ஒரு தாயானவள் தனது பிள்ளைகள்மீது வைக்கும் பாசம் இயற்கையானது. தாய்க்கு நிகர் தாயே. தாய் என்றால் அன்பும் ஆதரவும், பண்பும் பாசமும், நேர்மையும் நேசமும், தியாகமும் இரக்கமும், கனிவும் ஈகையும் நிறைவாகப் பெற்றவர். இதையே கவிஞர் ஒருவர்,தாயன்பை எடுத்துரைக்க உலக மொழிகளில் போதிய  வார்த்தைகளே இல்லை என்கிறார். ஆம்! சாதாரண மனிதனை ஈன்ற தாயை வருணிக்கப்போதிய வார்த்தைகளே இல்லை என்றால், விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆள்கின்ற கிறிஸ்து அரசரை ஈன்ற தாயை நாம் எவ்வாறு வருணிக்க முடியும். இதையே புனித அகுஸ்தினார், ஒரு மனிதனின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாதுஎன்கிறார்



அன்னை மரியா இறைவனின் தாய்; நம் ஒவ்வொருவரின் தாய். இதையே எசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரல், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று கேட்கிறார். மரியா ஆண்டவரின் தாய் என்றால், உண்மையிலேயே இறைவனின் தாய். கி.பி 431ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச்சங்கம், இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள்; எனவே பேறுபெற்ற கன்னி மரியா உண்மையிலேயே இறைவனின் தாய்; ஏனெனில் அவர் கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடல் ஈன்றெடுத்தார். எவரொருவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர் சபிக்கப்பட்டவராவார்என்று தெளிவாகக் கூறுகிறது. நாம் சபிக்கப்பட்டவர்களாய் மாறாமல் அன்னை மரியா இறைவனின் தாய் என்றும், சிறப்பாக நம் ஒவ்வொருவரின் தாயாகவே ஏற்றுக்கொள்வோம்.

         

மரியா, கடவுள்மீது கொண்டுள்ளப் பேரன்பால் நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். புனித யோவான் பெர்க்மான்ஸ், “! மிகவும் இனிய மாமரியே! தங்களை அதிகமாக அன்பு செய்பவன் பேறுபெற்றவன். மரியாவை நான் அன்பு செய்தால், நிச்சயம் விண்ணகத்தில் உறுதியுடனிருப்பேன். கடவுளிடமிருந்து கேட்பவற்றையெல்லாம் பெற்றுக்கொள்வேன் என்றார். புனித பிரான்சிஸ் சலேசியார், “அம்மா மாமரியே! நான் நித்திய நரகத்திற்குச் செல்லாமருக்க, இவ்வுலகில் பாவம் செய்யாமல் இறைவனையும், உம்மையும் அதிகமாக அன்பு செய்து தூய்மையுடன் வாழ வேண்டும்என்று மன்றாடினார்.

     

புனித பியோ,இயேசுவின் சிலுவையில் அன்னை மரியாளோடு சாய்ந்து நில்; அப்போது நீ ஆறுதலடைவாய். இறைவன் தன் அன்பு மகன் இயேசு கிறிஸ்து அனுபவித்த வேதனைகளை உனக்கென வைத்திருந்தால், நீ கலங்குவதற்குப் பதிலாக உன்னையே இறைவன் முன்னிலையில் தாழ்த்துன்று கூறினார். இறைவன் முன்பாகத் தன்னைத் தாழ்த்தி, அன்னை மரியாளின் கரம்பிடித்து  இறைவனின் தாயாக, கிறிஸ்தவர்களின் சகாய அன்னையாக, மாசற்ற இரக்கத்தின் அரசியாக இருக்கின்ற அன்னை மரியாவை அதிகமாக அன்பு செய்வோம்.


புனித அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ்

                                                
        இதயத்தில் இறைவார்த்தையையும், கரங்களில் செபமாலையும், அன்பை ஆயுதமாகவும், எளிமையை வாழ்வின் அடித்தளமாகவும் கொண்டு, “இதோ வருகிறேன் ஆண்டவரே” என்றுகூறி இறைவனுக்காக அயராது இறைபணி செய்தவரே புனித அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ். இவர் ஸ்பெயின் நாட்டில் 1532ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 25ஆம் நாள் பிறந்தார். குழந்தைப்பருவம் முதலே ஆன்மிக வாழ்வில் கவனம் செலுத்தினார். நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்றார்.

        அல்போன்சுஸ் தமது 26ஆம் வயதில் மரியா ஃபிரன்சிஸ் சுவாரஸ் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்தார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். திடீரென மனைவியும் மூன்று பிள்ளைகளும் இறந்தனர். இந்நிகழ்வுகள் அவரை கிறிஸ்துவோடு ஒன்றிணைத்தது. தமது 50ஆம் வயதில் இயேசு சபையில் துணை சகோதரராக சேர்ந்தார். உலக இன்பங்களை துறந்தார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். தன்னொடுக்க முயற்சிகளில் ஈடுப்பட்டு தன்னை புனிதப்படுத்தினார். “இறைவனை நான் முழுமையாக அன்பு செய்தால் எனக்கு என்னுடையது, என்று எதுவும் இருக்க முடியாது” என்றுகூறிய அல்போன்சுஸ் மயோர்கா தீவில் கல்லூரியில் வாயிற் காப்பாளராக பணியாற்றினார்.

     தனது நற்பண்புகளினால் அனைவரின் அன்புக்கு பாத்திரமானார். துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் கூறினார். இருளில் இருப்பவர்களை உலகின் ஒளியான கிறிஸ்துவிடம் அழைத்து வந்தார். அடிமைகளாக விற்க்கப்பட்ட மக்களின் ஆன்மாவைக் குறித்து கவலைப்பட்டார். அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். அன்னை மரியாவின் துணை நாடினார். “அன்னை மரியா என்னிடம் என்ன விரும்புகின்றார்களோ அதுதான் என் விரும்பம்” என்று வாழ்ந்த அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ் 1617ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் இறந்தார். திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் 1888ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

விண்ணேற்பு அன்னை

அன்னை மரியா நம் அனைவருக்கும் விண்ணகத்தின் முன்சுவையைத் தருகின்றவராக இருக்கின்றார். “அமல உற்பவியும், கடவுளின் தாயும், என்றும் கன்னியுமான மரியாள், இவ்வுலக வாழ்க்கைப் பயணத்தை முடித்துவிட்டு, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்”. இதைத் திருத்தந்தை பன்னிரெண்டாம் பத்திநாதர் 1950இல் விசுவாசப் பிரகடனம் செய்தார். மரியாவின் விண்ணேற்றத்தின் போது, மரியாவின் பெயரை வானதூதர்கள் மும்முறை, “பாலை நிலத்திருந்து புகைத்தூண்போல் எழுந்து நறுமணம் கமழ வருவது யாரோ?. மீண்டும் விடிவேளை வானம்போல் எட்டிப்பார்க்கும் அவள் யாரோ?” என்று வியந்து போற்றினர். (காண்.இபா3:6). இனிமை மிகுபாடல் காணப்படும் நாயகி, தம் திருமகனுடன் வெற்றி வாகைசூடி, விண்ணக மணவாட்டியாய், உயர்த்தப்பட்ட மரியாவின் உருவகமாகக் காணப்படுகிறார்.

                  அன்னை மரியா இன்றும் அருள்வரங்களையும், அருளையும் இயேசுவிடமிருந்து நமக்குப் பெற்றுத்தருகிறார். இனிமையான மரியின் நாமத்தை உச்சரிப்போம். காரணம், “மாமரியினுடைய பெயர் கடவுளின் தெய்வீகக் கருவூலத்திருந்து வந்தது” என்கிறார் புனித பீட்டர் டேமியன். மாமரியின் நாமம் சகல இனிமையும், தெய்வீக நறுமணமும் நிறைந்துள்ளது. இதைப்பற்றி பிராங்கோன் என்ற மடாதிபதி, “இறைமகன் இயேசுவின் நாமத்திற்கு அடுத்தாக, விண்ணிலோ, மண்ணிலோ, மாமரியின் நாமத்தைப் போல் வேறெந்த நாமமும் கிடையாது. அந்நாமத்திருந்து பக்தியுள்ள நெஞ்சங்கள் எவ்வளவோ அருட்கொடைகளையும், நம்பிக்கையையும், இனிமையையும், புனிதத்தையும் நிறைவாகப் பெறுகின்றன” என்கிறார். 

Monday 30 October 2017

புனித ஜெரார்டு மஜெல்லா

           
        நற்கருணையில் கிறிஸ்து மறைந்திருக்கிறார். எனது அயலானில் கிறிஸ்துவைக் காண்கிறேன் என்றுகூறி வாழ்நாள் முழுவதும் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தவர். இறைவனையும், அன்னை மரியாவையும் அளவில்லாமல் அன்பு செய்தவரே புனித ஜெரார்டு மஜெல்லா. இவர் தென் இத்தாலியில் நேப்பிள்ஸ் முரோ என்னுமிடத்தில் 1726ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் பிறந்தார். ஐந்து வயது முதல் ஆலயத்திற்கு தினந்தோறும் தன் தாயுடன் திருப்பலிக்கு செல்வது வழக்கம்.

          ஒருமுறை தனது தாயுடன் ஆலயத்தில் சென்று திருப்பலியில் பங்கேற்று, நற்கருணை அருந்த வரிசையில் நின்றார். குருவானவர் மஜெல்லாவிற்கு 10வயது பூர்த்தியாகக் காரணத்தால் நற்கருணை வழங்கவில்லை. கவலையோடு வீடுதிரும்பினார். மஜெல்லாவை அன்பு செய்த இயேசு அவரது கவலையைப்போக்க விரும்பினார். அன்றிரவு மிக்கேல் அதிதூதர் தூக்கத்திலிருந்த மஜெல்லாவை எழுப்பினார். தான் கொண்டு வந்த நற்கருணையை வழங்கினார். மஜெல்லாவும் பக்தி ஆதரவோடு நற்கருணை பெற்றுக்கொண்டார்.

         இறைவனை முழுமையாக நம்பினார். பகல் முழுவதும் வேலை செய்தார். இரவு முழுவதும் ஆலயத்தில் சென்று செபித்தார். இவரது தியாக வாழ்வைக் கண்ட மக்கள் சிலர் இவரை ‘வாழ்கின்ற புனிதர்’  என்று கூறினர். “நான் ஒரு புனிதனாவதற்காகச் செல்கிறேன்” என்றுகூறி இரட்சகர் சபையில் சேர்ந்தார். 1752ஆம் ஆண்டு ஜøலை 16இல் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாடுகளுடன் இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். எளிய பணிகள் செய்து எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக மாறினார்.

            தனது அறையில் பெரிய சிலுவை ஒன்றை வைத்தார். சிலுவையில்  இயேசுவே  காயங்களை உற்றுநோக்கி தியானித்தார்.  கட்டிலில் கூர்மையான கல்லும், முள், ஆணி, வைக்கோல் போன்றவைகளைப் பரப்பி அதன்மீது படுத்து உறங்கினார். தலையணைக்குப் பதிலாக இரண்டு செங்கற்களை வைத்துக் கொண்டார். இயேசுவே, அம்மா மரியே என்று அழைத்தவாறு 1755ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் இயற்கை எய்தினார். திருத்தந்தை 10ஆம் பத்திநாதர் 1904ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Sunday 29 October 2017

கன்னி மரியா


 
           இறைவன் தம் ஒரே அன்பு மகனை, உலகிற்கு அனுப்ப திருவுளம் கொண்ட அந்த நொடிப் பொழுதிலிருந்தே, அதற்கான வழிமுறைகளையும் திட்டமிடுகின்றார். அவ்வாறு இறைமகன் இயேசு மண்ணில் அவதரிக்கத் தூய்மையான, மாசற்ற கன்னி மரியா கடவுல் தோந்தெடுக்கப்பட்டார். இறைவனின் தூதர்  கபிரியேல், மரியாவின்  இல்லம் வந்து, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். மரியா, அஞ்சவேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்; இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்; அவர் பெரியவராயிருப்பார்; உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார்; தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்; அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ” என்றார்.

         அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். “தூய ஆவி உன் மீது வரும். உன்னதக் கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். பின் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று மனுக்குலத்தின் சார்பாக சம்மதத்தைத் தெரிவித்தார். அத்தருணமே மரியாவின் உதரத்தில் இறைமகன் இயேசு உருவெடுத்தார். மரியாள் இப்பொழுது கன்னிகை மட்டுமல்ல தாயுமானார். மரியா முப்பொழுதும் கன்னியாவார். தூய இஞ்ஞாசியார், “மரியாவின் கன்னிமை, அவருடைய தாய்மை மற்றும் இயேசுவின் பிறப்பு ஆகிய மூன்று மறைபொருளும் இவ்வுலக அறிவுக் கண்களின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது” என்று கூறுகின்றார். அதிசயிக்கத்தக்க இந்நிகழ்வினால் முற்காலத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாகக் கடவுள் உரைத்த, “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார்”(எசா7: 14). எனும் வாக்குறுதி நிறைவேறுகிறது.


           இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியினால் மரியாவின் கன்னித்தன்மை ஒருபோதும் குறைந்துவிடவில்லை. ரெய்மெண்ட் பிரௌன் எனும் விவிலிய அறிஞர், “இயேசுவின் பிறப்பு மரியாவின் கன்னித்தன்மையைக் குறைக்கவில்லை. மாறாக, புனிதப்படுத்தியிருக்கிறது” என்கிறார். மேலும் தூய அகுஸ்தினார், “மரியா இயேசுவை ஈன்றெடுப்பதற்கு முன்னும்; ஈன்றெடுத்தப் போதும்; ஈன்றெடுத்தப் பின்னும் கன்னியாவே இருந்தார்” என்று கூறினார். மரியா என்றும் கன்னி என்பது நமது கத்தோலிக்க விசுவாசமாகும். மரியா கன்னிமையில், இயேசுவை ஈன்றெடுத்ததைப் பற்றி புனித அகுஸ்தினார், “வியப்படையுங்கள்; ஏனெனில் ஒரு கன்னி கருவுற்றிருக்கிறார். மேலும் வியப்படையுங்கள். ஏனெனில் கன்னி ஒரு குழந்தையை ஈன்றுள்ளார். குழந்தை ஈன்ற பின்னும் கன்னியாகவே இருக்கின்றார். என்னே வியப்பு! என்னே புதுமை! புதுமையிலும் புதுமை” என்று கூறினார். அன்னை மரியா தூதர் அறிவித்தவாறே இறைமகன் இயேசுவை இவ்வுலகில் ஈன்று அவரின் மீட்பின் பாடுகளின் இறுதி நேரம்வரை ஏன் இன்றும் விண்ணகத்தில் மூவோர் இறைவனோடு கன்னியாகவே நமக்காகப் பரிந்துரைக்கின்றார்.                           
 


புனித நார்சிசுஸ்

                                          

           இறைவனோடு உறவு கொண்டு, புனிதம் மிகுந்த வாழ்க்கை வழியாக பிளவுபட்டு வாழ்ந்த மக்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்.இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து இறைபணியிலும் சமூகபணியிலும் சிறந்து விளங்கினார். குழந்தைப்பருவம் முதல் ஆன்மிக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்கள் மத்தியில் சிறந்து மாமனிதராக, வாழும் புனிதராக வாழ்ந்தவரே புனித நார்சிசுஸ். இவர் எருசலேமில் 99ஆம் ஆண்டு பிறந்தார்.  


           இறைவார்த்தையை வாசித்து தியானித்து வாழ்வாக்கியபோது கிறிஸ்துவின் இறையாட்சி பணி அவரில் வேரூன்றி வளர்ந்தது. இறைவார்த்தை வழியாக தனது இறையழைத்தலை உணர்ந்துகொண்டார். குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை ஆரம்பித்தார். இயன்றவரை இறைமக்களை அன்பு செய்தார். மக்களின் ஆன்மிக தேவைகளை நிறைவேற்றினார். மக்கள் மத்தியில் புனிதராக வாழ்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை  பிரதிபலித்தார்.


       இறைவனின் அன்பை நற்செயல்கள் வழியாக பகிர்ந்தளித்தார். நிலைவாழ்வு தரும் இறைவார்த்தையை மறையுரை வழியாக பரைசாற்றினார். தனது செல்லிலும் செயலிலும் கிறிஸ்துவை பிரதிபலித்த நார்சிசுஸ் 180ஆம் ஆண்டு எருசலேமின் 30வது ஆயராக அருள்பொழிவு பெற்றார். பாலஸ்தீனத்தில் நடைப்பெற்ற ஆயர்களின் மாநாட்டிற்கு தலைமை ஏற்று சிப்பாக வழி நடத்தினார். உயிர்ப்பு திருவிழா ஞாயிற்று கிழமை கொண்டாடுகின்ற முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

       ஒருமுறை உயிர்ப்பு திருவிழாவின்போது ஆலயத்தில் உள்ள விளக்குகளில் போதுமான அளவு எண்ணெய் இல்லை. இத்தருணத்தில் தண்ணீரை எண்ணெயாக மாற்றினார். இறைபணியில் ஏற்றபட்ட தடைகளை இறை வேண்டுதலால்  வெற்றி படிகளாக மாற்றினார். தனக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்களை முழுமனதுடன் மன்னித்து அன்பு செய்து, ஆசிமழை பொழிந்த நார்சிசுஸ் 116ஆம் வயதில் 216ஆம் இயற்கை எய்தினார். திருநாள் அக்டோபர் 29               

Saturday 28 October 2017

அன்னை மரியா அமல உற்பவி

           “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் இடையே பகையை உண்டாக்குவோம். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொ.நூல் 3:15) என்று இறைவன் பாம்பிடம் கூறினார். அலகையை அழிக்கும் அவளது வித்து என்பது இயேசு கிறிஸ்துவே. அந்தத் தாய் அன்னை மரியா. இவரே பாம்பின் தலையை நசுக்கி, அழிக்க முன்குறிக்கப்பட்டவர். எனவே அன்னை மரியா நிச்சயமாகவே தன் பிறப்பு முதல் பாவக்கறையற்று பிறந்திருப்பார். 1839ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் “பாவக்கறையற்று கருவான அரசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்று செபித்தார்.

       மேலும் “மிகவும் பேறுபெற்ற கன்னிமரியா கருவான முதல் நொடியிருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும் மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும் விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். இக்கோட்பாடு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதாகும். எனவே, இது எல்லா விசுவாசிகளாலும், உறுதியாக இடைவிடாது விசுவசிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிக்கையிடுகிறோம், அறிவிக்கிறோம், வரையறுக்கிறோம்” என்று திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1854ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் அறிவித்தார்.

            பெர்னதெத்தின் தந்தை கடுங்குளிரினால் நோயுற்றார். மருத்துவம் செய்ய வசதியில்லை. தந்தையின் அறையில் அனல் மூட்டுவதற்கான விறகுகள் இல்லை. தந்தையின்மீது கொண்ட பாசத்தால் தாயின் அனுமதியுடன் தனது தங்கை மேரி, அண்டை வீட்டுப் பெண் யோவான் ஆகியோருடன் சேர்ந்து விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியில் தண்ணீர் குகை இருந்தது. அது மசபியேல் குகை எனப்பட்டது. தண்ணீர் குகையைக் கடந்து செல்ல வேண்டும். மேரி, யோவான் தண்ணீர் குகையை எளிதில் கடந்தனர். பெர்னதெத் குளிரால் தண்ணீரில் கால் வைக்கத் தயங்கி நின்றார். அப்போது பலமான காற்று வீசியது சுற்றிலும் பார்த்தார்.
          

        அருகிலிருந்த குகையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார். “அமல உற்பவியான அன்னை மரியா, எழில் மிக்க ஓர் இளம் பெண்ணாகத் தோற்றமளித்தார். அன்னை மரியின் முகம் விண்ணக ஒளியினால் பிரகாசித்தது. நீண்ட வெள்ளைநிற ஆடையணிந்து, இடையில் நீலநிற இடைக்கச்சைக் கட்டியிருந்தார். பாதங்கள் மஞ்சள் நிற ரோஜா மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தன. கரத்தில் செபமாலை தொங்கியது. அன்னை மரியா பெர்னதெத்தை தன்னுடன் சேர்ந்த்து செபமாலை செபிக்க அழைத்தார்”.  சிறிது நேரத்திற்குப் பின்னர் அன்னை மரியா மறைந்தார். இவ்வாறு பல நாட்கள் தோன்றினார். 

           

        விறகு சேகரிக்கச் சென்ற பெர்னதெத், அன்னை மரியாவைத் தரிசித்தார். இந்த செய்தியைக் கேட்ட சிலர் நம்பினார்கள். பலர் ஏளனமாகப் பேசினர். திரளானோர் அவருடன் அன்னையைத் தரிசிக்கச் சென்றார்கள். பலமுறை மகிழ்ச்சியோடு காட்சியளித்த அன்னை மரியா, ஒரு நாள் முகத்தில் பெரும் துயரத்துடன் காணப்பட்டார். பெர்னதெத் “அம்மா! ஏன் இன்று வருத்தமாக இருக்கின்றீர்கள்”  என்றார். “மகளே! உலகில் எண்ணற்ற மக்கள் கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனம் மாற நீ செபமாலை செபிக்க வேண்டும்” என்றார். 

       

        மற்றொரு நாள், “தவம்! தவம்! தவம்!” என்று அன்னை கூறினார். அன்னையின் அறிவுரைக்கேற்ப, “பாவிகள் மனம்மாற செபமாலை செபிக்கவும், தவ முயற்சிகள் செய்வேன்” என்று உறுதிகொண்டார். இதைக் கேள்விப்பட்ட சபைத் தலைவர்கள், காவலர்கள் பெர்னதெத்தைக் குகைக்குச் செல்ல தடை விதித்தனர். பெர்னதெத்தின் தந்தை தன் மகள் இறையொளியால் வழி நடத்தப்படுகிறார் என்பதை உணர்ந்து குகைக்குச் செல்ல அனுமதித்தார்.
    

             பங்கு குருவானவர், “நீ அவர்களிடம் பெயர் என்ன? என்று கேள்” என்றார். 1858, ஜøலை 16ஆம் தேதிக்குள் மொத்தம் 18 முறை பெர்னதெத்திற்குக் காட்சி தந்தார். அன்னை மரியிடம் “நீங்கள் யார்? உங்கள் பெயர் என்னவென்று சொல்வீர்களா?” என்றார். 16வது காட்சியின் போது அன்னை மரியாள், “நாமே அமல உற்பவம், அதாவது நான் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவள்” என்று கூறி மறைந்தார். 

      

      அங்கு அற்புதமான நீரூற்றும் உருவாயிற்று. அந்த நீரைப்பருகியோர் நோயிருந்து விடுதலை பெற்றனர். இப்புதுமையான காட்சி பற்றிய தகவல் எங்கும் பரவியதும். நான்கு திசையில் இருந்து மக்கள் அலையெனத் திரண்டு லூர்துநகர் நோக்கிவர ஆரம்பித்தார்கள். அன்னை மரியாமீது அளவு கடந்தப் பக்தி வளரத் தொடங்கியதால் இது குறித்து ஆராய்வதற்காகத் தார்பஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் ஒரு குழுவை ஏற்படுத்தினார்.

    

       பலதரப்பட்ட மக்களை நான்கு ஆண்டுகள் விசாரித்த அக்குழு தமது அறிக்கையை ஆயரிடம் கொடுத்தார்கள். அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆயர் லாரன்ஸ் 1862ஆம் ஆண்டு, “பெர்னதெத் குகையில் கண்ட அனைத்தும் முற்றிலும் உண்மையே. மேலும் அவள் குகையில் கண்ட பெண்மணி பிரகடனப் படுத்தியது அது வேறு யாருமல்ல, அது கன்னி மரியே” என்று உறுதிப்படுத்தினார். 

          

             பல நிகழ்ச்சிகளுக்குப் பின் அங்கு ஆலயம் கட்டப்பட்டது. “மிகவும் பேறுபெற்ற கன்னிமரியா கருவான முதல் நொடியிருந்தே, எல்லாம் வல்ல இறைவனுடைய தனிப்பட்ட அருளாலும், சலுகையாலும் மனித குலத்தின் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டுச் சென்மப் பாவத்தின் எல்லாக் கறையினின்றும் விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். இக்கோட்பாடு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதாகும். எனவே, இது எல்லா விசுவாசிகளாலும், உறுதியாக இடைவிடாது விசுவசிக்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிக்கையிடுகிறோம், அறிவிக்கிறோம், வரையறுக்கிறோம்” என்று திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் 1854ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8ஆம் நாள் அறிவித்தது முற்றிலும் உண்மையே.  

புனித சீமோன், புனித யூதா



         புனித சீமோன் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். இவர் கானான் நாட்டில்   பிறந்தார். இவரை தீவிரவாதியாய் இருந்த சீமோன் என்று அழைத்தனர். இறைகட்டளைகளை பின்பற்றுவதிலும், பாவத்தை எதிர்த்து போராடுவதிலும், இறைவனிடம் மக்களை கொண்டு சேர்ப்பதிலும் ஆர்வமுடன் உழைத்தார்.

        

       பரசீக நாட்டில் கிறிஸ்துவின் நற்செய்தியை ஆர்முடன் அறிவித்தார். கி.பி 67ஆம் ஆண்டு உரோமில் தலைகீழாக சிலுவையில், இரத்தசாட்சியாய் இறந்தார். இவர் மரம் வெட்டுவோர், கரியர்கள் ஆகியோரின் பாதுகாவலர்.                                                                                 

                                                         

        புனித யூதா என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். சின்னயாக்கோபின் சகோதரர், இயேசுவின் உறவினர். தூய ஆவியை பெற்றுக்கொண்ட பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சரியா, மெசபொத்தோமியா மற்றும் லீபியா போன்ற இடங்களில் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். 


     புனித யூதா எழுதிய நிரூபம் மிகச் சிறியதாக இருந்தாலும் மிகப் பயனுள்ள கருத்துக்களை உள்ளடக்கியது. 67ஆம் ஆண்டு லெபனான் நாட்டில் கோடாரியினால் வெட்டப்பட்டு இரத்தச்சாட்சியாய் இறந்தார். இவர் கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்.

Friday 27 October 2017

செபமாலை

           “செபமாலை ஆண்டவரிடமிருந்து நமக்கு வரங்களைப் பெற்றுத்தரும். 


நாம் செபிக்கும்  செபங்களிலேயே அழகானதும் வளமையானதும் 


செபமாலையே. அது கடவுளின் தாயான அன்னை மரியாவின் உள்ளத்தைத் 


தொடும் செபம். எனவே தினமும் செபமாலை சொல்லுங்கள்”.


( திருத்தந்தை 10ஆம் பத்திநாதர்.)



 

  




                                                                                                                                     


புனித ஃப்ருமென்சியஸ்


கிறிஸ்தவ மக்களிடம், “அச்சமின்றி தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று வெளிக்காட்டுங்கள். உங்கள் வாழ்க்கை முறையால் சான்று பகிருங்கள்” என்று கூறியவர். தனது சொல்லாலும், செயலாலும் எண்ணற்ற மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்தவர். திருச்சபையின் வளர்ச்சிக்காகவும், இறையாட்சி பணிக்காகவும் தனது பெரும் செல்வத்தை பயன்படுத்தியவரே புனித ஃப்ருமென்சியஸ். கிரேக்க வகுப்பை சேர்ந்த இவர் டயர் பகுதியில் நான்கமாம் நூற்றாண்டில்  பிறந்தார்.

     
         ஃப்ருமென்சியஸ் சிறுவனாக இருந்த தருணத்தில் தனது மாமவுடன் எத்தோப்பியாவுக்கு கப்பலில் பயணம் செய்தார். கப்பல் செங்கடல் பகுதியிக்கு அருகில் நின்றது. கொள்ளையர்கள் கப்பலில் பயணம் செய்த மக்களை வாளுக்கு இரையாக்கினர். ஃப்ருமென்சியஸ் மற்றும் அவரது தம்பியையும் கொலை செய்யாமல் அக்சும் அரசன் இஸனா என்பவரிடம் ஒப்படைத்தனர். தனது அன்பிலும், அறிவிலும் சிறந்து அரசரின் மனம் கவர்ந்தார். அரசனின் மகனுக்கு கல்வி கற்பிக்கும் பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது. இவரின் இறைஞானமும் கடவுள் பக்தியும் இவரை அரசனின் ஆலோசகராக மாறியது.           

          

        அரண்மணையில் வாழ்ந்தாலும் ஆடம்பரத்தை அகற்றி ஏழ்மையில் இறையன்பின் ஒளியாக வாழ்ந்தார். எத்தோப்பியாவில் இறைவார்த்தை விதைப்பதற்கான நிலம் தயாராக இருப்பதை உணர்ந்துகொண்டார். அன்பின் பாதையில் அப்பகுதி மக்களுக்கு கிறிஸ்தவ நெறிகளை கற்பித்தார். இயேசு கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு அறிக்கையிட தயங்கிய மக்களிடம் அச்சமின்றி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அறிக்கையிட கூறினார். இவரது போதனையால் அப்பகுதியில் கிறிஸ்தவம் வளரத்தொடங்கியது.
 

      ஃப்ருமென்சியஸ் மீண்டும் தனது தாய் நாடான டயர் பகுதிக்கு வந்தார். அலெக்ஸôந்திரிய பேராயர் அத்தனாசியாரை சந்தித்து எத்தோப்பியா நற்செய்தி விதைக்க தகுந்த நிலம் என்று கூறினார். அத்தனாசியார், ஃப்ருமென்சியûஸ ஆயராக அருள்பொழிவு செய்தார். ஃப்ருமென்சியஸ், “நான் இறைப்பணியாளராகப் பணியாற்ற விரும்புகிறேன்” என்றுகூறி, தன்னுடன் குருக்களையும், துறவிகளையும் அழைத்து எத்தோப்பியா சென்று இறைப்பணியை ஆரம்பித்தார். மக்களை கிறிஸ்துவின் உண்மை சீடராக மாற்றினர். “கீழ்ப்படிதல் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையால் கிறிஸ்துவை நெருங்கலாம்” என்று கற்பித்தார். அரசன் இஸôனாவும் மனம்மாறி கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டான். அவ்வாறு எத்தோப்பியாவில் கிறிஸ்தவம் வளரத்தொடங்கியது.  ஃப்ருமென்சியஸ் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து  383ஆம் ஆண்டு விண்ணக வாழ்வில் நுழைந்தார். அரசன், “எங்களுக்கு கிறிஸ்துவின் ஒளியை வெளிப்படுத்தியவர்” என்று கூறினார்.



   

Thursday 26 October 2017

புனித தார்சிசியுஸ்

             தார்சிசியுஸ்  தார்சிசியுஸ் ஆண்டவரின் உடலை காக்க, அவமதிப்போரிடம் தருவதை விட சாவதே மேல்  என்று கூறியவர். இவர்   உரோமையில் மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தார். இத்தருணத்தில் உரோமை பேரரசர் டயோக்ளியஸின் கிறிஸ்தவ மக்களை மிகக்கொடூரமான முறையில் துன்புறுத்தினான். டயோக்ளியாசுக்கு அஞ்சி குகைகளிலும், சுரங்கங்களிலும் ஒளிவீசும் தீபங்களாக வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு தார்சிசியுஸ் நற்கருணை கொண்டு கொடுப்பது வழக்கம். இவர் கிறிஸ்துவின் நற்செய்தியை மையப்படுத்தி புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார். 


        ஓய்வு நேரங்களில் கிறிஸ்தவ முதியோர்களிடம் சென்று மறைச்சாட்சிகளைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டார். கிறிஸ்துவின்மீதும், நற்கருணையின்மீதும், அன்னை மரியாவின்மீதும் அளவு கடந்து அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். தார்சிசியுஸ் வாழ்ந்த தருணத்தில் வேதவிரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தன. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, கைது செய்து சிறையில் அடைத்தனர். கிறிஸ்தவ மக்கள் மறைவாக நற்கருணை வழிபாடு நடத்தினர். சிறையில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்கள் இறக்கும் முன்பாக நற்கருணை வழங்குவது வழக்கம். தார்சிசியுஸ் மறைமுகமாக நடைப்பெற்ற நற்கருணை வழிபாட்டில் கலந்துக்கொண்டார். 

        12வயது நிரம்பிய தார்சிசியுஸ் சிறையில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு நற்கருணையை எடுத்து சென்றார். தார்சிசியுஸ் நற்கருணையுடன் நடந்து சென்றபோது, சிறைகாவலரின் கையில் சிக்கினார். இக்காரணத்தால் அவரை தடியால் அடித்தார்கள். தலையில் ஏற்பட்ட காயத்தால் சுயநினைவு இழந்து கீழேவிழுந்தார். நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர்ந்தார். ஆண்டவரின் திருவுடலை சுமந்து சென்ற தார்சிசியுஸ் ஆண்டவரின் உடலை காக்க, அவமதிப்போரிடம் தருவதை விட சாவதே மேல் என்று கருதி ஆகஸ்ட் 15ஆம் நாள் மறைச்சாட்சியாக இறந்தார். 
 

Wednesday 25 October 2017

புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான்

       

            இயேசு கிறிஸ்துவின் உயிருள்ள வார்த்தையை வாழ்வாக்கி, செபமும், கடின உழைப்பையும் படிகற்களாக மாற்றி, இறையாட்சி பணியின் வழியாக இறையன்பின் ஒளியாக சுடர்வீசியவர்கள் புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான். உரோமை நகரில் செல்வந்த குடும்பத்தில் 3ஆம் நூற்றாண்டு பிறந்தார்கள். இருவரும் ஒருதாய் பிள்ளைகள் என்று நம்பப்படுகிறது. இவரது பெற்றோர் சமூகத்தில் மதிப்பும், மாண்பும், செல்வாக்கும் பெற்றவர்கள்.

             நற்செய்தியின் மீதான ஆர்வத்தின் மிகுதியாலும், இறையாட்சி பணி ஈடுபாட்டினாலும் செல்வாக்கு மிகுந்த வாழ்வை கைவிட்டு கிறஸ்துவை ஒப்பற்ற செல்வமாக ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்துவின் இறையாட்சி பணியை தங்களது பணியாக ஏற்றுக்கொண்டனர். அழியா நிலைவாழ்வு தரும் இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்திட பிரான்ஸில் சொய்சோன் பகுதிக்கு சென்று தங்களது இறைபணியை ஆரம்பித்தனர். பிரான்ஸில் சொய்சோன் பகுதியில் பாதணி தயாரிக்கும் மக்களில் ஒருவராகவே மாறினர். அம்மக்களோடு இணைந்து பாதணி தயாரிக்கும் வேளையில் ஈடுப்பட்டனர். இயேசுவின் நெஞ்சுக்கு நெருக்கமாக மாறினர். தோழமை உணர்வில், மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து இறைபணி கிறிஸ்துவை அறிவித்தனர்.  

           உரோமையின்  டயோக்கிளிசியன் பேரரசனின் ஆளுநன் மாக்சிமியான் கிறிஸ்துவ மக்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி மகிழ்ந்தான். கிறிஸ்தவர்களை அடியோடு அழிக்க ஆவல் கொண்டான். பாதணி தொழில் செய்து, கிறிஸ்துவை போதித்து வந்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். அவர்கள், “எங்களது வாழ்க்கை கிறிஸ்துவுக்காகவே. நாங்கள் இறந்தாலும் அது எங்களுக்கு ஆதாயமே.  கிறிஸ்துவுக்காக இறப்பதில் மன மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மாக்சிமியன் கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தினான். கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் தலைவெட்டி கொன்றனர். கிறிஸ்துவுக்காக தங்கள் இன்னுயிரை கையளித்து கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் மறைசாட்சியானார்கள்.

Monday 23 October 2017

புனித அந்தோனி மரிய கிளாரட்

           மரியா என் தாய், என் பாதுகாவலி, என் எஜமானி, என் வழிகாட்டி,என் ஆறுதல், என் பலம், என் அடைக்கலம் என்றுகூறி அன்னையிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர். இறைவனின் மாட்சிக்காகவும், அயலானின் மீட்புக்காகவும், விசுவாசிகளின் நல்வழிகாட்டியாகவும் மாறியவர். இறைவார்த்தையில் ஆழ்ந்த பற்றும், இறைவார்த்தை வழியாக தான் யார் என்பதையும், எதற்காக வாழவேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்து இறைவனின் திருவுளம் நிறைவேற்றியவரே புனித அந்தோனி மரிய கிளாரட். இவர் ஸ்பெயின் நாட்டில் கட்டலோனியா என்னும் இடத்தில் 1807ஆம் ஆண்டு நெசவு தொழிலாளியின் மகனாகப் பிறந்தார்.
 

        கிளாரட் சிறுவயது முதல் இறைபக்தியில் வளர்ந்தார். ஓய்வு நேரங்களை நன்கு பயன்படுத்தினார். தினந்தோறும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்றார். என்னுடைய இதயத்தில் இயேசு எப்போது வருவார் என்று தன்னிடம் கேட்டுக்கொள்வார். கறைபடாத, களங்கமற்ற உள்ளத்தோடும், பக்தியோடும் தனது பத்தாம் வயதில் முதல் முறையாக நற்கருணை நாதரை தனது இதயத்தில் ஏற்றுக்கொண்டார். “இயேசுவே நீர் என்னை ஒரு புனிதனாக மாற்றும்” என்று செபித்தார். பக்தியும் புத்தியும் மிகுந்த கிளாரட் இறைவன் தன்னை அழைப்பதை உணர்ந்து கொண்டார். இறைவனுக்காக இறையாட்சி பணி செய்யவும், கர்த்தூசியன் துறவியாகும் எண்ணத்துடன் பார்சலோனாவை விட்டு கிளம்பி விக் என்ற இடத்தில் இருந்த மடத்தில் 1826ஆம் ஆண்டு சேர்ந்தார். 1835ஆம் ஆண்டு ஜøன் 13ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார்.

இறையன்பின் பணியாளராக கிறிஸ்துவின் அன்பை பற்பல பணிகள் வழியாக பகிர்ந்தளித்தார். அன்னை மரியாவிடம் பல மணிநேரம் செபித்தார். இரவு காலங்களில் நற்கருணை நாதரே தஞ்சம் என்று வாழ்ந்தார். இறைவார்த்தையை தியானிக்கும்போது அமைதியாக அமரமுடியாத அளவுக்கு அன்புத் தீ அவரில் எரிந்தது. “இறைவா! உமது திருவுளம் என்னவென்று எனக்குக் காண்பியும்! அதை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்” என்றுகூறி, ஆன்மாக்களை மீட்க ஆர்வமாக உழைத்தார். ஆன்மாக்களை இறைவனிடம் கொண்டு வருவதையே தனது இலக்காக கொண்டார். மக்களது இதயத்தில் கிறிஸ்துவின் ஆட்சியை ஏற்படுத்த நூல்கள் பல எழுதினார். 1849ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் கிளரீசியன் சபையைத் தோற்றுவித்தார். 

“ஒவ்வொரு நாளும் மரியே நான் உங்கள் பிள்ளையென்பதையும், நீங்கள் என் தாயென்பதையும் மறந்துவிட வேண்டாம். எனது கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்” என்று செபித்தார். சந்தியாகோ பேராயராக 1850ஆம் ஆண்டு திருப்பொழிவு பெற்றார். இக்கட்டு இடையூறுகளில் செபத்தின் வழியாக ஆறுதல் அடைந்தார். மறையுரையின் போதும் திருப்பலியின் போதும் இறையொளி அவரை சூழ்ந்திருப்பதை மக்களால் பார்க்க முடிந்தது. 1869ஆம் ஆண்டு உரோமை சென்று முதல் வத்திக்கன் சங்கத்தில் பங்குகொண்டார். இரவு பகலாக எப்பொழுதும் கிறிஸ்துவை இதயத்தில் சுமந்த, அந்தோனி மரிய கிளாரட் நோயுற்று 1870ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் உயிர்நீத்தார். திருதந்தை 12ஆம் பத்திநாதர் 1950ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் துணிவியாபாரிகளின் பாதுகாவலர்.