Sunday 22 October 2017

புனித ஜோசப் குப்பெர்டினோ

“கடவுளை அன்பு செய்; கடவுளின் அன்பு ஒருவரிடம் ஆட்சி செய்யுமானால் அவரே உண்மையானச் செல்வந்தர்” என்று வாழ்க்கை அனுபவத்தால் மொழிந்தவர். வானதூதரின் தூய்மையும், அன்னை மரியாவின் தாழ்ச்சியும், அசிசியாரின் ஏழ்மையையும் தனதாக்கி வாழ்ந்தவரே புனித ஜோசப் குப்பெர்டினோ. இவர் இத்தாலி நாட்டிலுள்ள நேப்பிள்ஸ் அருகிலுள்ள குப்பெர்டினோ என்ற இடத்தில் ஏழ்மையும், தூய்மையும் நிறைந்த எளிய குடும்பத்தில் 1603ஆம் ஆண்டு பிறந்தார்.
 

          ஜோசப் குப்பெர்டினோ கல்வி கற்பதில் பின்தங்கிய மாணவராக இருந்தார். 8 வயது முதல் இறைகாட்சிகள் காணும் வரம் பெற்றிருந்தார். தனது 17ஆம் வயதில் தருமம் கேட்டு வந்த பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த துறவியைப் பார்த்தார். தானும் ஒரு துறவியாக மாறிட ஆவல் கொண்டார். தனது 17ஆம் வயதில் பிரான்சிஸ்கன் துறவற சபையில் துணைச் சகோதரராகச் சேர்ந்தார். பல தடைகள் வந்த தருணத்தில் நற்கருணை ஆண்டவர் முன்னிலையில் அமர்ந்து தனது தடைகள் நீங்க வேண்டுதல் செய்தார். தடைகளைப் படிக்கற்களாக மாற்றி 1628, மார்ச் 28ஆம்  நாள் குருவாக அருட்பொழிவுப் பெற்று, இறைவனுக்கு உகந்தவராக மாறினார்.

இறைமாட்சிமைக்காகத் தனது வேலைகளைச் செய்தார். அன்னை மரியாவின்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். கடவுள் இவருக்கு வருங்கால நிகழ்வுகளை முன்னறிவிப்பது, நோயாளிகளை குணமாக்குவது போன்ற பல அரிய வரங்கள் கொடுத்திருந்தார். ஜோசப் திடீரென ஆலய வாசலிருந்து பலிபீடத்திற்குப் பறந்து செல்வார். ஆலய மணியோசை கேட்டாலோ அல்லது இயேசு மற்றும் அன்னை மரியாவின் பெயரைக் கேட்டாலோ தன்நிலை மறந்து இறையனுபவத்தில் காற்றில் உயர்ந்து பறந்துவிடுவார். ஜோசப் ஆண்டிற்கு ஒருமுறை நாற்பது நாள் நோன்பு இருந்தார். இறைவன் தனது அன்பின் பாதையைக் காட்டிய போது, அந்தப் பாதையில் இறுதிவரை பாதங்கள் பதறாமல் நடந்து இறையன்பின் செல்வந்தரானார். 

       

            1657ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் அன்னை மரியாவின் விண்ணேற்பு திருநாளன்று கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். நான் இறந்த பின் என்னை யாரும் பார்க்க முடியாத இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்று கூறினார். 1663 செப்டம்பர் 18ஆம் நாள் மண்ணுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து மரணம் வழியாக இறைவனடிச் சேர்ந்தார். திருத்தந்தை 13ஆம் கிளமண்ட், 1767ஆம் ஆண்டு  ஜøலை திங்கள் 16ஆம் நாள் ஜோசப் குப்பெர்டினோவை புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் மாணவர்களின் பாதுகாவலர். ஆகாய விமான போக்குவரத்து, மனம் பேதத்தவர்களின் பாதுகாவலர். செப்டம்பர் 18ஆம் நாள் திருநாள். 


No comments:

Post a Comment