Tuesday 31 October 2017

புனித அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ்

                                                
        இதயத்தில் இறைவார்த்தையையும், கரங்களில் செபமாலையும், அன்பை ஆயுதமாகவும், எளிமையை வாழ்வின் அடித்தளமாகவும் கொண்டு, “இதோ வருகிறேன் ஆண்டவரே” என்றுகூறி இறைவனுக்காக அயராது இறைபணி செய்தவரே புனித அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ். இவர் ஸ்பெயின் நாட்டில் 1532ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 25ஆம் நாள் பிறந்தார். குழந்தைப்பருவம் முதலே ஆன்மிக வாழ்வில் கவனம் செலுத்தினார். நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்றார்.

        அல்போன்சுஸ் தமது 26ஆம் வயதில் மரியா ஃபிரன்சிஸ் சுவாரஸ் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்தார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். திடீரென மனைவியும் மூன்று பிள்ளைகளும் இறந்தனர். இந்நிகழ்வுகள் அவரை கிறிஸ்துவோடு ஒன்றிணைத்தது. தமது 50ஆம் வயதில் இயேசு சபையில் துணை சகோதரராக சேர்ந்தார். உலக இன்பங்களை துறந்தார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். தன்னொடுக்க முயற்சிகளில் ஈடுப்பட்டு தன்னை புனிதப்படுத்தினார். “இறைவனை நான் முழுமையாக அன்பு செய்தால் எனக்கு என்னுடையது, என்று எதுவும் இருக்க முடியாது” என்றுகூறிய அல்போன்சுஸ் மயோர்கா தீவில் கல்லூரியில் வாயிற் காப்பாளராக பணியாற்றினார்.

     தனது நற்பண்புகளினால் அனைவரின் அன்புக்கு பாத்திரமானார். துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் கூறினார். இருளில் இருப்பவர்களை உலகின் ஒளியான கிறிஸ்துவிடம் அழைத்து வந்தார். அடிமைகளாக விற்க்கப்பட்ட மக்களின் ஆன்மாவைக் குறித்து கவலைப்பட்டார். அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடினார். அன்னை மரியாவின் துணை நாடினார். “அன்னை மரியா என்னிடம் என்ன விரும்புகின்றார்களோ அதுதான் என் விரும்பம்” என்று வாழ்ந்த அல்போன்சுஸ் ரொட்ரிகுவஸ் 1617ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் இறந்தார். திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் 1888ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் இவரை புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

No comments:

Post a Comment