Thursday 30 November 2017

அன்னை மரியின் இனிய நாமம்



           புனித பெர்னார்து, “மரியன்னையின் பக்கம் திரும்பி உமது இனிய நாமத்தின் பொருட்டு ஓ! பேருபகாரியே, பக்தி மிகுந்தவரே, முற்றிலும் நீர் போற்றுதற்குரியவரே என்றுகூறிப் பூரிப்படைகின்றார். உமது இனிய நாமத்தை உச்சரித்தாலே, இறையன்பும் உம்மீது கொண்ட அன்பும் எங்கள் உள்ளத்தில் ஊற்றாகச் சுரக்கின்றது” என்றார். புனித பொனவெந்தூர், “மரியே உமது இனிய நாமத்தைப் பக்தி வணக்கத்துடன் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் தப்பாமல் ஒரு நன்மை உபகாரத்தைப் பெற்றுக்கொள்கிறோம்” என்றார்.


         புனித அம்புரோஸ்,“மரியே உமது நாமம் ஒரு வாசனைத் தைலம். அதன் நறுமணம் அருங்கொடையைப் பொழிகின்றது” என்று கூறுகிறார். இரண்டாம் வத்திக்கான் சங்கம், “நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கின்றார். தாம் பறைசாற்றப்படும் போதும் வணங்கப்படும் போதும் நம்பிக்கை கொண்டோரைத் தம் மகனிடமும் அவரது தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார். எனவே தன் திருத்தூதுப் பணியிலும் கிறிஸ்துவை ஈன்றவரையே திருச்சபை வழியாக நம்பிக்கை கொண்டோர் இதயங்களிலும் கிறிஸ்து பிறந்து வளர வேண்டும் என்பதற்காகவே தூய ஆவியால் கருவாகி, அவர் கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரியையாய் உள்ளார்” என்று கற்பிக்கிறது. 



புனித அந்திரேயா


 
இயேசுவின் அப்பேஸ்தலர்களில் ஒருவர். சீமோன் பேதுருவின் சகோதரர். கலிலேயக் கடலில் பிடித்து வாழ்ந்தவர். சமுகத்தில் திறமைசாலியாக நற்சான்றுடன் வாழ்ந்தவர். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். மீட்பராகி இயேசு கிறிஸ்துவின் போதனையால் அப்போஸ்தலராக மாறியவரே புனித அந்திரேயா. இவர் கலிலேயாவில் பெத்சாய்தவில் பிறந்தவர். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்தவர். இயேசு திருமுழுக்குப் பெற்ற தருணத்தில் திருமுழுக்கு யோவான் தம்முடன் இருந்த சீடர்களிடம், இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்று கூறினார். இதைக்கேட்ட அந்திரேயா இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசு தங்கியிருக்கும் இடம் கேட்டு அவருடன் சென்று தங்கி இயேசுவின் அப்போஸ்தளராக மாறினார்.

         அந்திரேயா இயேசுவின் நெருக்கமான சீடர்களில் ஒருவராக மாறினார். இயேசு அப்பங்களை பலுகச் செய்த தருணத்தில் ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பங்கள் இருப்பதை கூறினார். கிரோக்கர்களுக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்தார்.  இயேசு இறந்து உயிர்த்த பிறகு, யார் யார் எந்தெந்த நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கப்போவது என்று சீட்டுப்போட்டத் தருணத்தில் சித்தியா நாடு அந்திரேயாவுக்கு கிடைத்தது. தூய ஆவியைப் பெற்ற பின் கப்பதோசியா, கலாசியா, பிதீனியா, திராஸ், அக்காயா,  பிளாக் கடல் மற்றும் கிரீஸ், துருக்கி ஆகிய இடங்களில் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவித்தார்.

          அந்திரேயா நோயுற்றோரை நலமாக்கினார். பார்வையற்றவருக்கு பார்வை அளித்தார். போய்களை ஒட்டினார். பத்தாரஸ் பட்டணத்தில் நற்செய்தி அறிவித்தபோது ஆளுநன் ஏஜெடிஸ் மனைவி மாக்ஸிமில்லாவை இறப்பின் பிடியலிலிருந்து காப்பாற்றினார். மாக்ஸிமில்லா கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். ஆத்திரம் அடைந்த ஏஜெடிஸ் அந்திரேயாவை கைது செய்து சிறையில் அடைத்தான். கிறஸ்துவை மறுதலிக்க பலவாறு துன்புறுத்óதினான், ஏழு கசையடிகள் கொடுத்தான். அந்திரேயா கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.

       ஆளுநன் ஏஜெடிஸ், அந்திரேயாவை சிலுவையில் அறைய தீர்மானித்தான். அந்திரேயா சிலுவை கண்டதும், “ஒ விலையேறப் பெற்ற சிலுவையே வாழ்க! என் ஆண்டவரது உறுப்புகள் உன்னை ஆபரணங்கள்போல் அலங்கரித்தன. மகிழ்ச்சியுடன் நான் உன்னிடம் வருகிறேன். உன்னை நான் உருக்கமாக அன்பு செய்கிறேன். வாஞ்சையுடன் உன்னை தேடினேன். என்னை உனது கரங்களில் ஏற்றுக்கொள். மனிதரிடையிலிருந்து என்னை எடுத்து என் தலைவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைப்பாயாக. உன்னில் தொங்கி என்னை மீட்டவர் உன் வழியாய் என்னை ஏற்றுக்கொள்வாராக” என்று கூறினார். இதைக்கேட்ட ஆளுநன் கோழபம் கொண்டு எக்ஸ் வடிவில் சிலுவையில் அறைந்து கொன்றான். 70, நவம்பர் 30 அன்று இறந்தார்.


Wednesday 29 November 2017

செபமாலை செபித்து புனிதராவோம்


           பெரிய பெரிய புனிதர்கள் உருவாக்கும் பணி உலகின் இறுதிவரை மரியன்னைக்கு முற்றிலும் உரித்தானது. ஒவ்வொரு புனிதர்களும் அன்னை துணையோடு தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து புனிதர்களாக மாறினார்கள். செபமாலை செபிக்கின்றவர்களிடம் அலகை நெருங்காது. புனித ஜான்போஸ்கோ, நான் மரியாளைப் பார்க்காமல் கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். புனித அம்புரோஸ், மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும் என்று செபித்தார்.

         புனித கிறிஸ்சோஸ்தம் அருளப்பர், கடவுளின் அன்னையுமான மரியே நீர் வாழ்க; விண்ணகத்தில் வீற்றிருப்பவரும் அரியணையின்று அருள்வளங்களை வாரி இறைப்பவருமான இறை இயேசுவிடம், மரியே எமக்காகப் பரிந்து பேசி, நாங்கள் இறுதிநாள் தீர்ப்பில் மாட்டிக்கொள்ளாதிருக்கவும், இறைவனை முகமுகமாகத் தரிசிக்க வரமும் பெற்றுத்தாரும் என்று மன்றாடினார்.  வறியோருக்கு நம்பிக்கையின் நங்கூரம் என்கிறார் புனித லாரன்ஸ் ஜஸ்டினியன். புனித பெர்னார்து மரியா பாவிகளின் ஏணிப்படி என்கிறார். ஏனெனில் இரக்கத்தின் அரசி மரியா, பாவச்சேற்றில் அமிழ்ந்துக் கிடப்போர்க்குத் தனது கரத்தை நீட்டி, பாவ பாதாளத்தினின்று வெளியேறவும் இறைவனுடன் ஒப்புரவாகவும் உறுதுணையாய் இருக்கும் ஏணிப்படியே அன்னை மரியா.
           ஒருமுறை புனித ஜெர்த்ரூத்துக்கு மரியன்னை ஒரு போர்வையால் ஏராளமான காட்டு விலங்குகளை உள்ளடக்கி அவற்றை அரவணைத்து அவற்றிற்குப் புகலிடம் கொடுத்ததாகத் தனக்குக் கிடைத்த காட்சியில் குறிப்பிடுகின்றார். இத்தகைய காட்சியின் மூலம் இறைமகனின் தாய் எத்தகைய பாவிகளையும் தமது  தாய்மை என்னும் போர்வைக்குள் வைத்து அரவணைத்துக் கொள்கின்றார் என்று தெளிவுப்படுத்துகிறார். எனவே நாம் நோவாவின் பேழை என்று அழைக்கப்படும் இயேசுவின் தாயின் கரங்களில் நம்மை ஒப்படைப்போம்.  

புனித ஹியுபெர்ட்


             இயேசுவுடன் உரையாடுவதில் எவ்வளவோ பேரானந்தம் என்று கூறியவர். தனது நற்பண்புகளால் அனைவரின் அன்புக்கும் மதிப்புக்கும் தகுதியானவர். தனது வாழ்வின் பெரும் பகுதியை வேட்டையாடுவதில் செலவிட்டவர். வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவர். ஆன்மீக வாழ்வில் இறையொளி பெற்று இறையனுபவம் பெற்ற தருணத்தில் இறைவனின் அழைப்புக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். உலக நாட்டங்களைத் துறந்து குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சிபணி செய்தவரே புனித ஹியுபெர்ட்

                 

          இவர் 656ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டில் பிறந்தார். ஹியுபெர்ட் இளம்வயதில் பாரிஸ் சென்றார். பாரிஸ் அரசர் தியோடரிக் அரண்மணையில் தனது பணியை ஆரம்பித்தார். தனது நற்பண்புகளால் அரசரின் மனம் கவர்ந்தவர் ஆனார். அரசனோடு இணைந்து வேட்டையாட செல்வது வழக்கம். வேட்டையாடுவதில் பேரானந்தம் அடைந்தார். அரண்மணை மேயர் அனைவரையும் கொடுமைப்படுத்தினார். அவரது கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அரண்மணையிலிருந்து ஹியுபெர்ட் வெளியேறி ஹெரிஸ்டல் பகுதி அரண்மணையில் மேயராக பணி செய்தார். இத்தருணத்தில் ஃபுளோரிபான்னே என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவரது மனைவி பேறுகால வேதனையில் இறந்தார்.
         


      மனைவி இறந்தப் பின் அரண்மனை வாழ்வையும் உலக இன்பங்களையும் துறந்து தவம் மேற்கொள்ள பயணம் செய்தார். செபம் செய்வதில் ஆர்வம் கொண்டார். ஆன்மீக வாழ்வில் இறையொளி பெற்றார். இறையாட்சி பணிக்காக இறைவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். ஆயர் லாம்பெர்ட்டைச் சந்தித்து அவர் வழியாக குருத்துவப் பணி செய்ய அழைப்பு பெற்றார். தனது செல்வங்களை விற்று ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார்.       

             

         குருத்தவ வாழ்வின் வழியாக இறையாட்சிப் பணியை சிறப்பாக செய்தார். இறைவனோடு நீண்டநேரம் செபிப்பதில் ஆனந்தம் அடைந்தார். ஒரு வேலையை தொடங்கும் முன்பாக, “என் இயேசுவே எல்லாம் உமக்காக” என்று கூறுவார். மறையுரை வழியாக நற்செய்தியை அறிவித்தார். எண்ணற்ற மக்களை கிறிஸ்தவராக மாற்றினர். இறைவனின் திருமுன்பாக அமர்ந்து செபிப்பதில் ஆனந்தம் அடைந்தார். “இயேசுவோடு தங்கியிருப்பது எவ்வளவோ பேரானந்தம்” என்றுகூறிய ஹியுபெர்ட் 727ஆம் ஆண்டு இறந்தார். இவர் வேட்டைக்காரர், உலோகத் தொழிலாளிகள் ஆகியோரின் பாதுகாவலர்.

Tuesday 28 November 2017

அன்னை மரியா, புனித கேத்தரின் லாபுரே

   
         புனித கேத்தரின் அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தவர். அன்னை மரியாவை தன் தயாகவே ஏற்றுக்கொண்டார். அன்னை மரியா இவருக்கு பல முறை காட்சிக்கொடுத்தார். 1830ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 27ஆம் நாள் ஆலயத்தில் செபித்துக்கொண்டிருந்த தருணத்தில் அன்னை மரியா காட்சிக்கொடுத்தார். அன்னையைச் சுற்றிலும் ஓர் ஒளி சுற்றி நிற்க காடóசி கொடுத்தார். ஒளியின் நடுவில், “பாவமில்லாமல் உற்பவித்த ஒ மாமரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்னும் சொற்கள் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அப்போது நான் தருகின்ற சுரூபம் அனைவரும் அணிய வேண்டும். இந்த சுருபத்தை அணிகின்றவர்கள் கேட்கும் வரத்தை பெற்றுக்கொள்வார்கள் என்று கூறினார் மரியா. 

           சுரூபத்தின் ஒரு பகுதியில் அன்னை மரியா இருகரங்களையும் விரித்தவராய் இருக்கிறார். மறுபக்கத்தில் எம் என்ற எழுத்தும், அதன் மேல் திருச்சிலுவையையும், இயேசுவின் திருதயம், அதைச் சுற்றிலும் முட்கள் அதன் அருகில் வாள் ஊடுருவிய மரியாவின் இருதயம் இருந்தது. கேத்தரின் பார்த்த காட்சியைப்பற்றி பணியாளர்  அருள்தந்தை யோவான் மரியா அலடெல் என்பவரிடம் சொல் என்றார் மரியா. கேத்தரின் தந்தையின் துணையுடன் சுரூபத்தை தயார் செய்து பறைசாற்றினார். இந்த சுரூபத்தை நம்பிக்கையுடன் அணிகின்றவர்கள் இறைவனின் அருள்வரங்களை நிறைவாகப் பெற்றுக்கொள்வர். இந்த சுரூபம் வழியாக எண்ணற்ற புதுமைகள் நிகழ்ந்தன. இக்காரணத்தால் இந்த சுரூபம் புதுமை சுரூபம் என்று அழைக்கப்படுகிறது.

புனித கேத்தரின் லாபுரே


            அன்பு அன்னை மரியே இனி நீதான் என் தாய் என்று கூறியவர். நோயளிகளை அன்பு செய்து அவர்களுக்கு பணிவிடை செய்தவர். இறைவனின் அழைப்பை ஏற்று இறைபணிக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர். நற்கருணை ஆண்டவரை அன்பு செய்து வாழ்ந்தவரே புனித கேத்தரின் லாபுரே. இவர் பிரான்ஸ் நாட்டில் 1806ஆம் ஆண்டு மே திங்கள் 2ஆம் நாள் பிறந்தார்.


        தாயின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தினமும் அதிகாலையில் எழுந்து ஆலயம் சென்று திருப்பலியில் பங்குகொண்டார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தினமும் தவறாமல் செபமாலை செபித்து வந்தார். குழந்தைப் பருவத்தில் தன் தாயை இழந்தார். இத்óதருணத்தில் அன்னை மரியாவை தன் தாயாகவே ஏற்றுக்கொண்டு, அன்னை மரியாவின் அரவனைப்பில் வாழ்ந்தார். 
              திருப்பலியில் பங்கேற்ற தருணத்தில் இறைவன் தனது பணிக்காக அழைப்பதை உணர்ந்து இறைவனுக்கு தன்னை முழுமையாய் அர்ப்பணித்தார். நற்செய்தியை வாழ்வின் மையமாக மாற்றினார். வாழ்வு தருகின்ற, நலமளிக்கின்ற, ஞானத்தை, அன்பை, அமைதியைத் தரக்கூடிய இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். புனித வின்சென் தே பவுல் இவரது கனவில் தோன்றி சேவையின் சகோதரிகள் துறவற சபையில் சேர அழைப்பு விடுத்தார். அவ்வாறு 1830ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் சேவையின் சகோதரிகள் சபையில் சேர்ந்தார்.

             நற்கருணை ஆண்டவரின் முன்பாக செபித்துக்கொண்டிருந்த தருணத்தில் இயேசுவை கண்டார். நேயாளிகளுக்காக பணிவிடைகள் செய்து முதியோர்களை அன்பு செய்தார். அன்னை மரியாவை பலமுறை நேரில் கண்டார். அன்னை மரியாவின் அன்பிற்கு சான்றாக வாழ்ந்த கேத்தரின் 1876ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார். திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் 1947ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 27ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்

Monday 27 November 2017

புனித பாஸ்கல் பைலோன்


புனித பாஸ்கல் பைலோன் தனது தியாகம் மிகுந்த மண்ணக வாழ்வை இயேசு கிறிஸ்துவின் கல்வாரி பலியோடு இணைத்து வாழ்ந்தவர். பலமுறை அற்புதமான முறையில் தேவநற்கருணை பெற்றுக்கொண்டார். இவர் ஸ்பெனில் டொரேஹெர்மோசா என்னும் இடத்தில் 1540ஆம் ஆண்டு மே திங்கள் 24ஆம் நாள் பாஸ்கா திருவிழா அன்று பிறந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். உலக செல்வத்தில் ஏழ்மையாக இருந்தாலும் ஆன்மீகச் செல்வத்தில் செல்வாக்கு பெற்று அன்பிலும், அமைதியிலும், ஆனந்தமுடன் வாழ்ந்தார். 
       

      பாஸ்கல் பைலோன் பள்ளிக்கூடம் சென்று படிக்க வசதி இல்லாதக் காரணத்தால் ஆடுமேய்க்கச் சென்றார். பாஸ்கல், தனது பெற்றோருக்கு எப்பொழுதும் உதவி செய்தார். தினந்தோறும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்குபெறவும் நற்கருணை வழியாக இயேசு கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக்கொள்ளவும், நற்கருணைக்கு முன்பாக நீண்டநேரம் செபிக்கவும் விரும்பினார். நற்கருணை பக்தியில் வளர்ந்த பாஸ்கல் முதல் முறையாக தேவநற்கருணை பெற்றுக்கொண்ட தருணத்தில் எல்லா நாட்களும் திருப்பலியில் பங்கேற்று தேவநற்கருணை உட்கொள்வேன் என்று தீர்மானித்தார். ஆடுமேய்க்கும் தருணங்களில் அன்னை மரியாளிடம் செபமாலை செபித்தார்.

          ஒருமுறை மலையின் உச்சிப் பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆலயத்தில் திருப்பலிக்காக மணி ஒலித்தது திருப்பலிக்கு செல்ல ஆவல் கொண்டார். ஆடுகளை என்ன செய்வது? திருப்பலியில் எவ்வாறு பங்கேற்பது?. திருப்பலியில் பங்கேற்கும் ஆர்வத்தால், “ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும்” என்று செபித்தார். உடனே அந்த இடம் முழுவதும் ஓர் அற்புதமான ஒளி தோன்றியது. ஒளியில் மத்தியில் தங்க நிறத்தில் ஒரு காசவும் அதன்மீது நற்கருணை இருப்பதையும் கண்டார். உடனே முழந்தாளிலிட்டு நற்கருணை ஆண்டவரை ஆராதித்து நற்கருணையை பெற்றுக்கொண்டார். இவ்வாறு பலமுறை அற்புதமான முறையில் தேவநற்கருணையைப் பெற்றார். 
 


        1564ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் பொதுநிலை சகோதரராகச் சேர்ந்தார். “நான் ஏழையாகப் பிறந்தேன். ஏழ்மையில் வாழ்ந்து ஒறுத்தல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தி அவருக்காக மறைச்சாட்சியாக மாறிட ஆசைப்படுகிறேன்” என்றார். நற்கருணையை அளவில்லாமல் அன்பு செய்த பாஸ்கல் 1592ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் திருப்பலியின் மத்தியில் இறந்தார். திருத்தந்தை எட்டாம் அலக்ஸôண்டர் 1690ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ஆம் நாள் புனிதராக உயர்த்தினார். 1897ஆம் ஆண்டு திருத்தந்தை 13ஆம் சிங்கராயர், பாஸ்கல் பைலோன் நற்கருணை மாநாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.


Sunday 26 November 2017

அன்னை மரியா, புனிதர்கள்


             யோவான் பெர்க்மான்ஸ், “என்னும் நான் வாழ்நாள் முழுவதும் தூய்மையான வாழ்க்கை வாழ்வேன் என்று நற்கருணை ஆண்டவர் முன்பாக உறுதிமொழி எடுத்தார். அன்னையே உமது அமல உற்பவத்தை நம்புகிறேன். மரியே என்னைக் கைவிடாதேயும்; நான் உம்முடைய மகன்; எனக்கு ஆயிரம் இதயங்கள் இருந்தாலும், அவற்றால் உம்மை நேசிப்பேன்” என்று எழுதி இரத்தத்தால் கையொப்பமிட்டார்.

           புனித ஜான்போஸ்கோ, “நான் மரியாவப் பார்க்காமல்கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன்” என்றார். புனித அம்புரோஸ், “மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும்” என்று செபித்தார். புனித கிறிஸ்சோஸ்தம் அருளப்பர், “கடவுளின் அன்னையுமான மரியே நீர் வாழ்க; விண்ணகத்தில் வீற்றிருப்பவரும் அரியணையின்று அருள்வளங்களை வாரி இறைப்பவருமான இறை இயேசுவிடம், மரியே எமக்காகப் பரிந்து பேசி, நாங்கள் இறுதிநாள் தீர்ப்பில் மாட்டிக்கொள்ளாதிருக்கவும், இறைவனை முகமுகமாகத் தரிசிக்க வரமும் பெற்றுத்தாரும்” என்று மன்றாடினார்.  

புனித யோவான் பெர்க்மான்ஸ்

           
            “இளைஞராக இருக்கும்போது புனிதராக மாறவில்லை என்றால், நான் ஒரு போதும் புனிதராகிட முடியாது” என்று வாழ்க்கையால் சான்று பகர்ந்தவரே புனித யோவான் பெர்க்மான்ஸ்
. இவர் பெல்ஜியம் நாட்டில் டயஸ்ட் என்னும் கிராமத்தில் 1599ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் நாள் பிறந்தார். பெர்க்மான்ஸ் அளவற்ற அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர். இவருடைய வாழ்நாளில் கோபம், கடுஞ்சொற்கள், கெட்டவார்த்தை பேசியதில்லை என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 
       பெர்க்மான்ஸ் எல்லா நாட்களும் அதிகாலையில் எழுந்து ஆலயத்திற்குச் சென்று திருப்பலிக்கு உதவி செய்வது வழக்கம். நற்கருணையிலிருந்து இறைஞானம் பெற்று எண்ணற்ற நன்மைகள் செய்தார். தனது நற்பண்புகளால் அனைவரையும் வசீகரித்தார். இவரது நற்செயல்களைப் பார்த்த பங்குத் தந்தை, “பெர்க்மான்ஸ் வழியாக இறைவன் எண்ணற்ற புதுமைகள் செய்வார்” என்று கூறினார்.

       ஒரு குருவானவராக இறைபணி செய்ய ஆவல் கொண்டார். கடவுளின் திருவுளம் கண்டறிந்து நிறைவேற்றிட இயேசு சபையில் சேர்ந்தார். நவதுறவறப் பட்டம் பெற்ற நாள் தனது குறிப்பேட்டில், “நான் ஒரு புனிதராக மாறவேண்டும். புனிதம் என்பது பெரிய காரியங்களைச் செய்வதில் அல்ல. கீழ்ப்படிதலையும், கட்டளையிடுவதையும், அறிவுரை கொடுப்பதையும் நன்றாகச் செய்வதில்தான் இருக்கிறது” என்று எழுதி அவ்வறே வாழ்ந்து வந்தார்.
           நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை மெய்யாகவே உணர்ந்தார். ஒரு நண்பரோடு உரையாடுவது போல் இயேசுவுடன் உரையாடினார். பெர்க்மான்ஸ், அமலோற்பவ அன்னையிடம் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். அன்னை மரியாவின் துணையுடன் சபையின் ஒழுங்குகளை முழு மனதுடன் கடைபிடித்தார். பெர்க்மான்ஸ் எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் காணப்பட்டதால், “மகிழ்ச்சி மிக்க சகோதரர்” என்று அழைக்கப்பட்டார். 
          ஒருமுறை,“யோவான் பெர்க்மான்ஸ் என்னும் நான் வாழ்நாள் முழுவதும் தூய்மையான வாழ்க்கை வாழ்வேன் என்று நற்கருணை ஆண்டவர் முன்பாக உறுதிமொழி எடுத்தார். அன்னையே உமது அமல உற்பவத்தை நம்புகிறேன்” என்று எழுதி இரத்தத்தால் கையொப்பமிட்டார். 1621ஆம் ஆண்டு ஜøலை மாதம் எதிர்பாராமல் திடீரென நோயுற்றார். உடல் பலவீனத்திலும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். உடல் பலவீனமானக் காரணத்தால் நோயில்பூசுதல் கொடுத்து, நற்கருணையும் வழங்கப்பட்டது. நற்கருணை அருந்தியவுடன் அன்னை மரியாவின் உண்மையானக் குழந்தையாக வாழ்ந்து இறக்கவே விரும்புகிறேன் என்று கூறினார்.

         மேலும், “திருச்சிலுவை, செபமாலை, சபை ஒழுங்கு புத்தகம் இவற்றை நெஞ்சோடு அணைத்தார். இவையே என் வாழ்வின் மூன்று பொக்கிங்கள். இவற்றோடு நான் மகிழ்வுடன் இறப்பேன்” என்று கூறினார். “மரியே என்னைக் கைவிடாதேயும்; நான் உம்முடைய மகன்; எனக்கு ஆயிரம் இதயங்கள் இருந்தாலும், அவற்றால் உம்மை நேசிப்பேன்” என்றுகூறி 1621ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் இயற்கை எய்தி இம்மண்ணகம் விட்டு விண்ணகம் சென்றார். திருத்தந்தை 13ஆம் சிங்காராயர் 1888ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 15ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். புனித யோவான் பெர்க்மான்ஸ் பீடச்சிறுவர்களின் பாதுகாவலர்.


Saturday 25 November 2017

அலெக்ஸôந்திரியா நகர் புனித கேத்தரீன்


தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ்ந்தவர். இந்த உலகில் அறிவும், அழகும், செல்வமும், நற்குணமும், வல்லமையும், ஆற்றலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என்று உணர்ந்துக்கொண்டவர். இவ்வுலகின் அதிபர் அரசர்களுக்கெல்லாம் அரசராகிய ஆண்டவராகிய கிறிஸ்துவை நான் திருமணம் செய்துகொள்வேன் என்றுகூறி அவருக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவரே அலெக்ஸôந்திரியா நகர் புனித கேத்தரின்.


        கேத்தரின் 282ஆம் ஆண்டு அலெக்ஸôந்திரியாவை ஆட்சி செய்தவரின் மகளாக பிறந்தார். இவர் அழகும் அறிவும் திறமையும் மிகுந்தவர். செல்வ செழிப்பில் வாழ்ந்தாலும் தனது கன்னிமைக்கு கலங்கம் ஏற்படால் வாழ்ந்தார். இளம் வயதை நெருங்கிய தருணத்தில் இவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். தனது பெற்றோரிடம் இவ்வுலகில் மாபெரும் செல்வந்தராக இருப்பவரை திருணம் செய்துகொள்கிறேன் என்றார். இளமைப் பருவத்தில்தான் ஆண்டவராகிய அறிந்து கிறிஸ்தவராக மாறினார். இந்த உலகின் மாபெரும் செல்வந்தர் ஆண்டவராகிய இயேசு ஒருவரே என்று உணர்ந்து அவருக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்தார்.
       
      இத்தருணத்தில் மாக்செந்தியுஸ் உரோமையின் பேரரசர். இவர் கிறிஸ்தவ மக்களை கொடூரமாகத் துன்புறுத்தி, கிறிஸ்துவை மறுதலித்து சிலைகளை வழிபட கட்டயப்படுத்தினான். கேத்தரீன் இவற்றிக்கு எதிராக குரல் கொடுத்தார். மாக்செந்தியுஸ் கேத்தரீன் துணிவைக் கண்டு வியந்தான். தத்துவ ஞானிகளை அழைத்து தான் வழிபடுகின்ற கடவுளே உண்மை கடவுள் என்று விவாதித்தான். கேத்தரீன் உலகின் மிக சிறந்த ஞானிகளை கண்டு பயப்படாமல் கிறிஸ்துவே உண்மையாண கடவுள் என்று துணிவுடன் கூறினார். கேத்தரின் பேச்சைக்கேட்டு ஞானிகளில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். 

            மாக்செந்தியுஸ் தோல்வியுற்றக் காரணத்தால் கேத்தரீனை சிறையில் அடைத்தான். மாக்செந்தியுஸ் மனைவி சிறையில் கேத்தரீனை சந்தித்தப்பின் அவரும் சிறைகாவலர்களும் கிறிஸ்துவராக மாறினர். இதைக்கேள்விப்பட்ட அரசன் கேத்தரீன் அருகில் சென்று நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தினான். அரசன் தனது விருப்பத்திற்கு இணங்காத கேத்தரீனை சித்தரவதை செய்து சக்கரத்தின் அடியில் இட்டு கொலை செய்தான். இவ்வாறு கேத்தரீன் 305ஆம் ஆண்டு கிறிதுவுக்காக இறந்தார். 

அன்னை மரியா, புனித அல்போன்ஸ் லிகோரி


புனித அல்போன்ஸ் லிகோரி தனது வாழ்வில் சந்தித்தத் தடைகளை செபமாலை வழியாக வெற்றியின் படிக்கற்களாக மாற்றினார். ஆன்மீக வாழ்வில் இறையன்பின் உச்ச நிலைக்கு அடைந்தது செபமாலை வழியாகவே என்று கூறினார். வயதான நிலையில் ஒருமுறை சக்கர வண்டியில் வைத்து அவரை ஒரு சகோதரர் மடத்துக்கு வெளியே காற்றோட்டமான இடத்திற்கு தள்ளிக்கொண்டு வந்தார். அப்போது லிகோரி அந்த சகோதரனைப் பார்த்து, ‘இன்று நீ செபமாலை செபித்தாயா?’ என்று கேட்டார். அந்த சகோதரன், ‘எனக்கு ஞாபகமில்லை’ என்று கூறினார். உடனே அல்போன்ஸ் கோரி, ‘அப்படியென்றால் நாம் இப்பொழுது செபமாலை செபிப்போம்’ என்றார். அச்சகோதரன், ‘நீங்கள் களைப்பாகத்தானே இருக்கிறீர்கள், ஒருநாள் செபமாலை செபிக்கவில்லை என்றால் என்ன ஆகிவிடப்போகிறது?’ என்று பதில் கூறினார். அதற்கு லிகோரி, “ஒருநாள் செபமாலை செபிக்காவிட்டால் நான் என் முடிவில்லா மீட்பைப்பெ றத் தவறிவிடுவேனோ? என்று அஞ்சுகிறேன்” என்றார்.

Friday 24 November 2017

புனித ஆன்ட்ரூ குங் லாக்


           உலக செல்வத்தில் ஏழையாக வாழ்ந்தாலும், இறை செல்வத்தின் மாமனிதர். ஹனோய் பகுதியில் வாழ்ந்த வேதியரிடமிருந்து கிறிஸ்தவ நம்பிக்கையை பெற்றுக்கொண்டவர். கிறிஸ்துவின் உண்மை சீடராகமாறி நற்செய்தியை வாழ்வாக்கி சான்று பகர்ந்தவர். குருத்துவ அருள்பொழிவு பெற்று அனைவரையும் மீட்க வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எடுத்துரைத்த சிறந்த மறையுரையாளராக மாறியவரே புனித ஆன்ட்ரூ குங் லாக் என்பவர்.

        ஆன்ட்ரூ குங் லாக் என்பவர் வடக்கு வியட்நாமில் 1795ஆம் ஆண்டு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தின் வறுமைக் காரணமாக ஹனோய் பகுதிக்கு குடியேறினர். ஹனோவில் வைத்து திருமுழுக்கு பெற்று தனது பெயரை ஆன்ரூட் என்று மாற்றினார். ஆன்ரூட் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார்.  இத்தருணத்தில் பேரரசன் மினங் மான்ங் என்பவர் கிறிஸ்த மக்களை துன்புறுத்தி கொலை செய்தான். கிறிஸ்தவ மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. ஆன்ரூட் துன்பங்களை கண்டு மனம்தளராமல் துணிவுடன் கிறிஸ்துவை அறிவிக்க குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்து 1823ஆம் ஆண்டு மார்ச்சி திங்கள் 15ஆம் குருவாக அருள்பொழிவு பெற்றார்.
    

       ஆன்ட்ரூ கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற இறைவார்த்தையை வாழ்வாக்கி நற்சான்றுகளுடன் நற்செய்தி அறிவித்தார். இவரின் மறையுரையைக் கேட்ட மக்கள் மனம்மாறி கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெற்றனர். இவரது செயல்களை கேள்விப்பட்ட பேரரசன் கோபம் கொண்டு மூன்று முறை சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினான். ஆன்ரூட் கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் தாங்கிக்கொண்டார். இயேசு கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்தினால் 1839ஆம் ஆண்டுடிசம்பர் திங்கள் 21ஆம் நாள் தலை வெட்டி கொலை செய்தனர். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1988ஆம் ஆண்டு ஜøலை 19ஆம் நாள் புனிதராக உயர்த்தினார். இவர் வீடுகளுக்கு பாதுகாவலர்.


அன்னை மரியா, புனித குரியாக்கோஸ்

மரியாவின் கரம் பிடித்தவர்


             புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா, “அம்மா மாமரியே! உம்மில் சரணடைகின்றேன். உமது நினைவுகள் இதயத்திற்கு இன்பம் தருகின்றன. உமது திருமுன்னில் அடியேன் என்னை அர்ப்பணிக்கின்றேன். உமது நினைவுகள் என் நெஞ்சில் நீங்காதிருக்க வரம்தாரும்” என்று நாளும் செபித்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். கார்மல் அன்னையிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்த காரணத்தினால்தான் இவர் தொடங்கிய துறவற சபைக்கு கார்மல் அன்னையின் பெயரை வைத்தார். அன்னையின் துணையோடு இறையாட்சி பணியைத் திறம்பட செய்தார். குழந்தைப்பருவம் முதல் அன்னை மரியாவிடம், “அம்மா மாமரியே! நான் தூய்மையிலும், ஞானத்திலும், அறிவிலும் வளர்ந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த முறையில் பணி செய்து, இறைவனை மகிமைப்படுத்த வரம்தாரும்” என்று செபித்தார்.

         தனது சபை மக்களை அன்னையின் கரத்தில் ஒப்படைத்தார். நாளும் அன்னை மரியாவின் கரம்பற்றி நடந்தார். அவரிடமே இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டார். அன்னை மரியாவை தனது வாழ்க்கையின் முன்மாதிரியாக தேர்ந்தெடுத்தார். இறைவனின் விருப்பத்திற்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தார். அன்னையின் அருளால் இறைவனையும், சகோதரர்களையும் அளவில்லாமல் அன்பு செய்தார். இறைவனின் திட்டத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். தனிப்பட்ட வாழ்விலும், சமுக வாழ்விலும், பங்குதளத்திலும் சந்தித்த சவால்களை அன்னையின் துணையுடன் வெற்றி கண்டார். இயேசுவிடம், “என் இயேசுவே! எங்களுக்கு அன்னையாக அடைக்கலமாக இருக்கின்ற மரியாவின் திருமுகத்தின் தகுதியால் எங்கள் மேல் இரக்கமாயிரும்” என்று செபிக்க கற்றுக்கொடுத்தார்.

Thursday 23 November 2017

மரியா கிறிஸ்தவர்களின் சகாயம்


               புனித தொன்போஸ்கோவின் பாதுகாப்பில் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவரது தாய் துணையாக இருந்து பற்பல பணிவிடைகள் புரிந்து வந்தார். மாலையில் விவிலியக் கதைகளைக் கற்றுக்கொடுத்தார். இரவில் சிறுவர்களின் கிழிந்துபோன உடைகளைத் தையல் போட்டு சீர்ப்படுத்தினார். திடீரென அவரது தாய் இறந்துவிட்டார். அன்னையின் அரவணைப்பையும், பாதுகாப்பையும் இழந்த தொன்போஸ்கோ, அன்னை மரியாவிடம், “கன்னிமரியே, எனது பிள்ளைகளைப் பாரும். இவர்களுக்கு இனிமேல் எந்தத் தாயும் இல்லை. இந்நேரம் முதல் நீரே இவர்களுக்குத் தாயாக துணையாக இருப்பீராக”  என்று செபித்தார். அன்று முதல் அன்னை மரியாவை, ‘கிறிஸ்தவர்களின் சகாயமே’ என்று அழைத்தார். அன்னை மரியாவின் அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் வாழ்ந்து புனிதராக மாறினார்.

புனித கொலும்பானுஸ்



        இறைஞானத்தின் மனிதராக, இரவும் பகலும் இடைவிடாமல் இறைவனை போற்றிப் புகழ்ந்தவர். மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அரண்மணையில் வாழ வாய்ப்பு கிடைத்தபோது ஏழ்மையை விரும்பி குடிசையில் வாந்தவரே புனித கொலம்பானுஸ். இவர் அயர்லாந்தில் நோபர் என்னும் இடத்தில் 540ஆம் ஆண்டு பிறந்தார்.  கொலம்பானுஸ் என்றால். “வெள்ளைப் புறா என்பது பொருள்”. 
       
பெற்றோரின் வழி காட்டுதலால் நாளும் நற்பண்புகளில் சிறந்து விளங்கினார். ஏழையாகப் பிறந்த கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தார். தனக்கென்று திட்டம் வகுக்காமல் இறைவிருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். குலுவானிஸ் துறவு மடத்தின் தலைவர் சிநெல் என்பவரின் வழிகாட்டுதலில் துறவு வாழ்வை மேற்கொண்டார். எளிய வாழ்க்கை வழியாக இறைவனோடு இணைந்து இறையனுபவத்தில் ஆனந்தம் அடைந்தார். இறைவனுக்காக இவ்வுலக வாழ்வை கையளிப்பதில் பேரானந்தம் அடைந்தார். இறைவனின் தூண்டுதலால் திருப்பாடல் நூலிற்கு விளக்கம் எழுதினார். பல இடங்களில் துறவு இல்லங்களை நிறுவினார். மக்களுக்கு இடைவிடாமல் ஒப்புரவு வழங்கினார். சக துறவிகளுக்கு தவ முயற்சிகள் செய்யவும், துறவு இல்லத்தின் ஒழுங்குமுறைகளை கடைப்படிக்கவும் முன்மாதிரியாக வாழ்ந்து வழி காட்டினார்.

    எண்ணற்ற மக்கள் இறையமைதி பெற்றுக்கொள்ள வழிகாட்டினார். பாவத்திற்கு பரிகாரம் செய்ய மக்களைத் தூண்டினார். பாவத்தின்மீது வெறுப்பு ஏற்படும் அளவுக்கு தவமுயற்சிகளை மேற்கொண்டார். இறுதியாக நியூஸ்திரியா பகுதியில் நற்செய்தி பணியாற்றினார். புதுமைகள் பல செய்தார். நோயுற்றோரை நலமாக்கினார். சமூகத்தில் நிலவி தவறுகளை கண்டித்தார். இறுதிவரை இறைவழியில் நடந்த கொலம்பானுஸ் 615ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்.



Wednesday 22 November 2017

புனித செசிலியா

          கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு உரிய செயல்களை விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்து கொள்ளுங்கள் என்று வீரமுழக்கம் செய்து இறுதிவரை இறைவனுக்காக வாழ்ந்தவரே புனித செசிலியா. இவர் உரோமை நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் 2ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். சிறுவயது முதல் இறையன்பில் தன்னைக் கரைத்துக்கொண்டார். நாளும் செபம் செய்வதில் ஆனந்தம் அடைந்தார். வாழ்நாள் முழுவதும் இறைவனின் திருவுளப்படி வாழ இறைவனுக்குத் தன்னை அர்ப்பணம் செய்தார்.
         
செசிலியா நற்பண்பிலும், தூய்மையிலும் சிறந்து விளங்கினார். இறைவனை மாட்சிமைப் படுத்துவதை இலட்சியமாகக் கொண்டார். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இசைக்கருவிகளை ஆர்வத்தோடு இசைத்தார். இசைகளின் வாயிலாக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார். வாழ்வு தருகின்ற,  நலமளிக்கின்ற, ஞானத்தைத் தரக்கூடிய விவிலியத்தை எங்கு சென்றாலும் தம் கரங்களில் ஏந்திச் சென்றார். 

           தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்ந்த செசிலியாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர், இயேசு கிறிஸ்துவைத் அறியாத வலேரியன் என்பவரைத் தேர்ந்தெடுத்து இறையன்பு, அறிவு, அழகு, தூய்மை நிறைந்த செசிலியாவை வலேரியன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமண விழாவில் இசைக்கருவிகள் இசைத்து தனது பாடல் வழியாக தனது கன்னிமை இறைவனுக்கு மட்டுமே சொந்தம் என்று பாடினார். வலேரியன் திருமுழுக்கு பெற்றுக்கொள்ள விரும்பினார். பின் அர்பன் என்னும் திருத்தந்தையிடம் சென்று திருமுழுக்கு பெற்றுகொண்டார்.
          

      வேத விரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. செசிலியாவைக் கைது செய்து தெர்த்துல்லியனிடம் ஒப்படைத்தார். செசிலியாவிடம் இயேசுவின் பெயரை அறிக்கையிடக்கூடாது; கிறிஸ்து இயேசுவை மறுதலிக்க வேண்டும்; உரோமை கடவுளுக்கு பலிசெலுத்தவும் உத்தரவிட்டான். செசிலியா, “நான் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி” என்பதை நீ தெரிந்துகொள் என்று துணிவுடன் கூறினார். இதைக்கேட்ட தெர்த்துல்லியன் கோபங்கொண்டு செசிலியாவின் தலையை வெட்டிக் கொலை செய்தான்.
   

Tuesday 21 November 2017

புனித தார்சிசியுஸ்


ஆண்டவரின் திருவுடலை காக்க, அவமதிப்போரிடம் தருவதை விட சாவதே மேல் கிறிஸ்துவின் வல்லமையால் என்னால் முடியும் என்று கூறியவர். கிறிஸ்துவின் நற்செய்தியை மையப்படுத்தி புனிதமான வாழ்க்கை வாழ்ந்தவர். டயோக்ளியாசுக்கு அஞ்சி குகைகளிலும், சுரங்கங்களிலும் ஒளிவீசும் தீபங்களாக வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு நற்கருணை கொண்டு கொடுப்பவர். 

          ஓய்வு நேரங்களில் கிறிஸ்தவ முதியோர்களிடம் சென்று மறைச்சாட்சிகளைப் பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டவர். கிறிஸ்துவின்மீதும், நற்கருணையின்மீதும், அன்னை மரியாவின்மீதும் அளவு கடந்து அன்பும் பக்தியும் கொண்டிருந்தவரே புனித தார்சிசியுஸ். இவர் உரோமையில் மூன்றாம் நூற்றாண்டில் பிறந்தார். இத்தருணத்தில் உரோமை பேரரசர் டயோக்ளியஸின் கிறிஸ்தவ மக்களை மிகக்கொடூரமான முறையில் துன்புறுத்தினான்.  


      தார்சிசியுஸ் இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட தருணத்தில் வேதவிரோதிகளின் ஆதிக்கம் அதிகரித்தன. ஆங்காங்கே கிறிஸ்தவர்கள் காரணமின்றி துன்புறுத்தப்பட்டு, உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. பெரும் சூறாவளிபோன்று உரோமைப்பேரரசு முழுவதும் கலகம் ஏற்பட்டது. எண்ணற்ற கிறிஸ்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இத்தருணத்தில் கிறிஸ்தவ மக்கள் மறைவாக நற்கருணை வழிபாடு நடத்தினர். சிறையில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்கள் இறக்கும் முன்பாக நற்கருணை வழங்க திருசபை தலைவர்கள் தீர்மானித்தனர்.

        தார்சிசியுஸ் மறைமுகமாக நடைப்பெற்ற நற்கருணை வழிபாட்டில் கலந்துக்கொண்டார். நற்கருணை வழிபாடு முடிந்ததும் குருவானவர், “ஒவ்வொரு நாளும் சிறையில் துன்புறும் கிறிஸ்தவ மக்களுக்கு நற்கருணை எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அவ்வாறு காவலர்களின் கண்களில் படாமல் நற்கருணை கொண்டு செல்ல யார் தயாராக இருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். இது கேட்டவுடன் 12வயது நிரம்பிய தார்சிசியுஸ் கரம் உயர்த்தினார். குருவானவர், ஆச்சரியமும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைந்தார். தார்சிசியுஸ், “உன்னால் முடியுமா?” என்று கேட்டார். தார்சிசியுஸ் “கிறிஸ்துவின் வல்லமையால் என்னால் முடியும்” என்று உறுதியுடன் பதில் அளித்தார். குருவானவர், அவரிடம் நற்கருணையை கொடுத்து அனுப்பினார். தார்சிசியுஸ் நற்கருணையுடன் நடந்து சென்றபோது, சிறைகாவலரின் கையில் சிக்கினார். “என்ன மறைத்து எடுத்து வருகிறாய்?” என்று கேட்டார். காவலரின் வற்புறுத்தலாலின் காரணமாக தார்சிசியுஸ், நற்கருணை கொண்டு வருவதாகக் கூறினார்.


         இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத வேதவிரோதிகள், “இந்த அப்பத்தை எங்களுக்கு தா” என்று கோபத்துடன் கேட்டனர். தார்சிசியுஸ், அவர்களிடம் கொடுக்க மறுத்து நற்கருணையை தனது மார்போடு அணைத்து கொண்டார். மீண்டும் காவலர்கள் அவரை கட்டாயப்படுத்தினர். தார்ச்சியுஸ் தமது பிடியில் உறுதியாய் இருந்தார். இக்காரணத்தால் அவரை தடியால் அடித்தார்கள். தலையில் ஏற்பட்ட காயத்தால் சுயநினைவு இழந்து கீழேவிழுந்தார். கிறிஸ்தவ படைவீரர் கீழே மயங்கி கிடந்த தார்சிசியுஸ்ûஸ தூக்கினார். அவரிடம் நற்கருணை ஒரு சிமிழில் முத்திரை வைக்கப்பட்டதை கண்டு நற்கருணை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதித்தார். ஆண்டவரின் திருவுடலை சுமந்து சென்ற தார்சிசியுஸ் ஆண்டவரின் உடலை காக்க, அவமதிப்போரிடம் தருவதை விட சாவதே மேல் என்று கருதி ஆகஸ்ட் 15ஆம் நாள் மறைச்சாட்சியாக இறந்தார்.  

அன்னை மரியா, புனித பத்தாம் பத்திநாதர்

      அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். திருச்சபையில் மாற்றங்கள் ஏற்படுத்த அன்னை மரியாவின் கரம்பற்றி நடந்தார். அன்னை மரியாவின் சிந்தனைகளை, செயல்பாடுகளை தனதாக்கினார். பத்திநாதர், இயேசுவை எவ்வாறு அன்பு செய்தாரோ அவ்வாறே அன்னை மரியாவை அன்பு செய்தார். மரியாவின் துணையால் தனது இறையாட்சி பணியைச் சிறப்பான முறையில் செய்தார். 

     
வாழ்வில் சந்தித்த மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் செய்தார். திருச்சபையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தினார். தொடங்கிய செயல்கள் அனைத்திலும் வெற்றி அடைந்தார். “செபமாலை ஆண்டவரிடமிருந்து நமக்கு வரங்களைப் பெற்றுத்தரும். மரியாவுக்கு சொல்லப்படும் செபங்களிலேயே அழகானதும் வளமையானதும் செபமாலையே. அது கடவுளின் தாய் மரியாவின் உள்ளத்தை தொடும் செபம். தினமும் செபமாலை சொல்லுங்கள்” என்று கூறினார்.


        செபமாலை வழியாக இறைவனின் அருளை நிறைவாகப் பெற்றுக்கொண்டார். அன்னை மரியாவின் கரம்பிடித்து ஏழ்மை, கீழ்ப்படிதல், இறைபக்தி, இரக்கம் ஆகியவற்றைத் தனதாக்கி, திருச்சபையின் பணிகளைச் செம்மையாகச் செய்தார். அன்னை மரியாவின் துணையோடு, இயேசு வழியாக எல்லாம் புதுப்பிக்கத்தார். அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தார். எல்லா மக்களும் செபமாலை செபிக்கத் தூண்டினார்.

Monday 20 November 2017

வாலுவா நகர் புனித ஃபெலிக்ஸ்


         ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவிகள் எதுவும் வீணாய் போகாது என்ற உண்மையை அறிந்தவர். துறவற வாழ்வின் வழியாக கிறிஸ்து அன்பை அனுபவித்தார். நற்பண்புகளின் புண்ணியங்களின் நாயகனாக மக்கள் மத்தியில் வாழ்ந்தார். செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து வனத்தில் சிறிய குடில் அமைத்து தியானம் செய்த வாலுவா நகர் புனித ஃபெலிக்ஸ் 1127 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 16ஆம் நாள் பிறந்தார்.


          செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையை பின்பற்றினார். ஏழைகளை அன்பு செய்தார். ஒருமுறை ஃபெலிக்ஸ் சாலையில் பிச்சைக்காரர் ஒருவரைக் கண்டார். குளிரில் நடுங்கும் ஏழை மனிதனுக்கு தமது மேலங்கியை போர்த்திவிட்டு வீடு திரும்பினார். ஏழை மனிதனுக்கு போர்த்திய ஆடை அவரது கட்டிலில் இருப்பதைக் கண்டார். சின்னச் சிறிய சகோதரர்களுக்கு செய்யும் உதவி கிறிஸ்துவுக்கே செய்கிறோம் என்ற உண்மையைப் புரிந்துக்கொண்டார்.

          இளமைப்பருவத்தில் ஆண்டவரை கண்டடைவோர் பேறுப்பெற்றவர் ஆவர். உலக இன்பங்களை வெறுத்து துறவற வாழ்வை தேர்ந்தெடுத்தார். இத்தாலி சென்று ஆல்ப்ஸ் மலையில் இருந்த வயதான துறவிடம் சேர்ந்து கிறிஸ்துவின் அன்பை சுவைத்தார். கொடிய காட்டு விலங்குகளின் மத்தியில் புனிதம் மிகுந்த வாழ்வை இறைவனுக்கு கையளித்தார். நோன்பிருந்து செபித்தார். தூய்மைக்கு இடறல் ஏற்படுத்தும் செயல்களை அகற்றினார்.

           ஸ்பெயின், வடஅமெரிக்க போன்ற நாடுகளில் மூர் இனத்தவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் வாழும் மக்களை மீட்க இறைவன் அழைப்பதை உணர்ந்தார். ஆயரின் துணையும் திருத்தந்தையின் ஆசியுடன் புனித மேத்தா ஜான் என்பவரின் உதவியுடன் மூவொரு இறைவனின் சபை ஆரம்பித்தார். செபத்தின் வழியாக இறைத்திட்டம் உணர்ந்து செயல்பட்ட வாலுவா நகர் புனித பெலிக்ஸ்1212 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 4ஆம் நாள் விண்ணகம் நுழைந்தார். திருத்தந்தை நான்காம் அர்பன் 1666, அக்டேபர் 21ஆம் நாள் புனித நிலைக்கு உயர்த்தினார்.

அன்னை மரியா, புனித பவுஸ்தீனா


 
            ஒருமுறை குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா தோன்றினார். அன்னை மரியாவிடம், “கன்னி மரியே! எனது தாயே! நான் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பது உமக்குத் தெரியுமே” என்றார். அன்னை மரியா, “மகளே நீ அதிகமாகத் துன்பப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும். பயப்பட வேண்டாம். நானும் உன்னுடன் இணைந்தே துன்பப்படுகிறேன். எப்பொழுதும் உன் அருகில் ஆறுதலாய் இருப்பேன்” என்று புன்முறுவலோடு கூறி மறைந்தார். பவுஸ்தீனாவும் துன்பங்களை எதிர்கொள்ள ஆற்றலும் ஆறுதலும் பெற்றார். இத்தருணத்தில், “இயேசுவே நீரே என் அமைதி! நீரே என் ஆனந்தம்” என்று கூறினார். அந்நேரம் முதல் மூவொரு இறைவனின் பிரசன்னமும் அன்னை மரியாவின் பிரசன்னமும் உணர்ந்து வாழ்ந்தார்.

           ஒரு குழந்தை தன் தாயுடன் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறு அன்னை மரியாவோடு உறவு கொண்டிருந்தார். தனது கீழ்ப்படிதல் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தினார். அன்னை மரியா இயேசுவுடன் தோன்றி, “மகளே பவுஸ்தீனா உனது தூய்மையான இதயம் கறைபடாமல் இருக்க எனது நிலையான அன்பை உனக்கு நான் தருகிறேன். இனிமேல் சோதனைகள் உன்னை நெருங்காது. திருப்பலி நேரத்தில் நீ என் மகனின் துன்பத்தில் பங்கு சேர்ந்து மனுக்குல மக்களுக்காக செபிக்க வேண்டும். சிறப்பாக உத்தரிக்கும் இடத்திலுள்ள ஆன்மாக்கள் தந்தையின் இரக்கம் பெற, “நித்திய பிதாவே எங்கள் ஆண்டவரும் உமது நேசருமான, இயேசு கிறிஸ்துவின் உடலையும் உதரத்தையும் ஆன்மாவையும் தெய்வீகத்தையும் எங்கள் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்” என்று செபிக்கக் கற்றுக்கொடுத்தார். 


Sunday 19 November 2017

புதுமைகள் செய்யும் வரம் பெற்ற புனித கிரகோரி


             மக்களை பசி பட்டினியிலிருந்து விடுவித்து நல்வழி காட்டியவர். எண்ணற்ற மக்களை கிறிஸ்துவின் உண்மை சீடராக மாற்றினார். நோயுற்றோரை நலமாக்கினார். செபத்தை தனது ஆயுதமாக பயன்படுத்தி சிறந்த மறையுரையாளருராக மாறினார். இவர் சிறிய ஆசியாவில் உள்ள போந்துஸ் பகுதியின் தலைநகரான நியோ செசரியாவில் 213ஆம் ஆண்டு பிறந்தார்.பெற்றோரின் வழிகாட்டுதலால் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். 
         தனது பதினான்காம் வயதில் தந்தையை இழந்தார். பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அரசராக ஏற்று கொண்டார். தன்னை இறைவனின் அடியார்களுக்கு அடியான் என்று அழைத்தார். சட்டம் பயின்று சட்டத்தில் புலமை பெற்றார். உரோமை ஆளுநரின் சட்ட ஆலோசனை குழுவில் பணியாற்றினார். உரோம் நகரில் காணப்பட்ட சீர்கேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

         ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார். துறவற இல்லங்களை ஏற்படுத்தி துறவிகளுக்கு பொருளுதவி செய்தார். குருக்களின் அன்றாட வாழ்விற்கு வழிகாட்டினார். திருப்பயணிகளுக்கென மருத்துவ மனைகள் தொடங்கினார். லஞ்ச நிர்வாகத்தை குறை கூறினார். உரோமை நகரை பசி பட்டினியிலிருந்தும், போரிலிருந்தும் காப்பாற்றினார். மெய்யியல், இறையியல் திறம்பட கற்றுத்தேர்ந்தார். அறிவிலும் ஒழுக்கத்திலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார்.
         தனது 40ஆம் வயதில் செசாரியா மறைமாவட்டத்தின் ஆயராகத் திருப்பொழிவு பெற்றார். மறைமாவட்டத்தில் 17 கிறிஸ்தவர்கள்தான் இருந்தனர். தம் போதனையால் எண்ணற்றோரை கிறிஸ்தவ மறைக்கு திருப்பினார். வருங்காலத்தில் முன்னறிவிக்கும் வரம் பெற்றிருந்தார். இவருடைய கடின உழைப்பால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கிறிஸ்துவின் போர் வாளாக பணியாற்றிய கிரகோரி 270ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்.

அன்னை மரியா, புனித ஜெர்மேன் குசேன்


         


       ஜெர்மேன் அன்னை மரியாவின்மீது அளவுகடந்த பாசமும், மிகுந்த பற்றுறுதியும் கொண்டார். ஆலயத்தில் அன்னை மரியாவின் திருசொருபம் முன்பாக மண்டியிட்டு பக்தி உருக்கத்துடன் செபிக்கின்ற காட்சியே கண்கொள்ளாக் காட்சியாகும். அன்னை மரியாவிடம் பெற்ற அன்பை தனது உடன் பிறவா சகோதர சகோதரிகளிடமும், சிறுவர் சிறுமிகளிடமும் காட்டினார். ஆதலால் சிறுபிள்ளைகள் அனைவரும் அக்கா அக்கா என்று அவளையே சுற்றி வருவார்கள்.                 


        காட்டிற்குச் சென்று ஆடுகளை மேய்க்கும் போது ஆட்டுக்கோ, அவருக்கோ எந்த ஆபத்தும் நேராதபடி மரியன்னை நிழல்போல் அமர்ந்து பாதுகாத்தார். ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டிற்குச் சென்று நீண்ட நேரம் செபம் செய்வார். இரவில் அவருக்குத் துணையாக அன்னை மரியாவும் காவல் தூதரும் வருவார்கள். ஜெர்மேன் உள்ளம் அன்னையின் அருளால் நனைந்தது. அன்னை மரியா எவ்வாறு, “என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது” எனப்பாடினாரோ அவ்வாறேஜெர்மேன்  உள்ளமும் ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தது.

Saturday 18 November 2017

புனித ரோஸ் பிலிப்பைன் துசேசன்


எப்போதும் காட்சித் தியானம் செய்து மறைபணியாளராக பணி செய்தவர். இறையழைத்தலை உணர்ந்தபோது ஆண்டவரே! உம் பணிக்காக நான் செல்கிறேன் என்று கூறியவர். குழந்தைகளுக்கு நற்செய்தி அறிவித்தவர். நற்கருணை ஆண்டவரை இதயத்தில் சுமந்து இறையாட்சி பணிசெய்தவரே புனித ரோஸ் பிலிப்பைன் துசேசன். இவர் பிரான்ஸ் நாட்டில், க்ரேனோபிள் என்னும் இடத்தில் 1769ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் ஆண்டு பிறந்தார்.


        பிலிப்பைன் குழந்தையாக இருந்த தருணத்தில் அவரது பெற்றோரை சந்திக்க எண்ணற்ற மறைபணியாளர்கள் வீட்டிற்கு வந்தனர். அவர்களிடமிருந்து கிறிஸ்துவை கேட்டு தெரிந்துகொண்டார். கிறிஸ்துவின்மீது தணியாத தாகம் கொண்டு இறைப்பணிக்காக துறவு வாழ்வை தேர்ந்தெடுத்தார். பிரஞ்சு புரட்சியின் போது சுரங்களில் மறைவாக வாழ்ந்த கிறிஸ்தவ மக்களுக்கு உதவி செய்தார். துறவற வாழ்வை தேர்ந்தெடுத்த பிலிப்பைன் 1804இல் துறவற வார்த்தைப்பாடுகள் வழியாக இறைவனுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.


       ஏழை எளிய மக்கள் மத்தியில் இறையன்பின் பணியாளராக கடந்து சென்றார். ஏழை எளிய மக்களுக்கு உதவினார். குறிப்பாக குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் ஆர்வம் காட்டினார். அனைவரின் தேவையை அறிந்து உதவினார். நற்கருணை முன்பாக பலமணி நேரம் செபிப்பதில் ஆர்வம் காட்டினார். வாழ்வுதருகின்ற நலமளிக்கின்ற இறைவார்த்தையை ஆர்வமாக அறிவித்த பிலிப்பைன் 1852ஆம் ஆண்டு இறந்தார். திருத்தந்தை இரண்டாம் ஜானபால் 1988ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 3ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

Friday 17 November 2017

வாழ்வுதரும் வார்த்தை

             
             ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. இல்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! (திருப்பாடல் 131: 1-3).

ஹங்கேரி புனித எலிசபெத்


                    “நான் இறந்த பிறகு என்னிடமுள்ள சொத்துக்களை ஏழைகளுக்குப் பகிர்ந்துக் கொடுங்கள். என்னை எளிய ஆடை மட்டும் உள்ள ஏழையாக அடக்கம் செய்யுங்கள்” என்று கூறியவர். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். அரசியாக அரண்மணையில் வாழ்ந்தாலும் ஏழ்மையை கடைப்பிடித்து ஏழைகளில் ஒருவராக வாழ்ந்தவரே புனித ஹங்கேரி புனித எலிசபெத். ஹங்கேரியில் பிரஸ்பர்க் என்னும் இடத்தில் எலிசபெத் 1207ஆம் பிறந்தார். 


       ஹங்கேரியில் பிறந்த எலிசபெத் துருக்கியா நாட்டு முதலாம் ஹெர்மான் என்பவர் தம் மூத்த மகன் ஹெர்மான் என்பவருக்கு நான்கு வயதில் திருமண நிச்சயம் செய்தர்கள். அன்றுமுதல் துருக்கியாவில் வாழ்ந்தார்.  இறையன்பிலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரத்தை வெறுத்தார். ஏழைகள்மீது அதிக கவனம் செலுத்தினார். அரண்மனைக்கு வருகின்ற மக்களுக்கு தேவையான பொன்னும் பொருளும் கொடுத்தார்.

        செபம், தவம், ஒறுத்தல்கள் வழியாக இறைவனுக்கு உகந்தவராய் மாறினார். அரண்மனையில் இளவரசர் ஹெர்மான் இவரை மதிப்புடன் வழிநடத்தினார். திருமண ஏற்பாடுகள் நடந்தத் தருணத்தில் ஹெர்மான் இறந்தார். அவரது தம்பியை திருமணம் செய்தார். எலிசபெத், கணவரின் ஆதரவோடு இரக்கச் செயல்கள் செய்தார். “என் ஆண்டவர் இயேசு முள்முடி அணிந்திருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் நகைகள்” என்றுகூறி விலையுர்ந்த ஆடை ஆபரணங்களை அகற்றினார்.


        1226ஆம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களை அரண்மனைக்கு அழைத்துவந்து உதவி செய்தார். மக்களின் நலன் கருதி மருத்துவமனை கட்டிக்கொடுத்தார். நோயளிகளை அன்புடன் கவனித்துக் கொண்டார். தம் செல்வத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்கு கொடுத்தார். கணவர் இறந்தப் பின் பிள்ளைகளுக்கும் ஏழைகளுக்கும் செல்வத்தை பகிர்ந்தளித்து பிரான்சிஸ் அசிசியாரின் மூன்றாம் சபையில் சேர்ந்து தவ வாழ்வை மேற்கொண்ட எலிசபெத் 1231ஆம் ஆண்டு இறந்தார். திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி 1235ஆம் ஆண்டு மே திங்கள் 27ஆம் நாள் புனிதர் பட்டம் கொடுத்தார்.

அன்னை மரியா, புனித யூப்ராஸியா

செபமாலை மீட்புக்கான ஆயுதம்
             யூப்ராஸியா, அன்னை மரியாவின் துணையால் இயேசுவை அளவில்லாமல் அன்பு செய்தார். அன்னை மரியாவைத் தனது வாழ்க்கையின் முன்மாதிரியாக தேர்ந்தெடுத்தார். எல்லா நாள்களும் செபமாலையைப் பக்தியுடன் செபித்தார். அமலோற்ப அன்னை இரவுநேரங்களில் காட்சி கொடுத்து, தனது அன்பை பகிர்ந்து கொடுத்தார். யூப்ராஸியாவும் அன்னை மரியாவிடம் மனம் திறந்து உரையாடினார். அலகையால் துன்புறுத்தப்பட்டத் தருணங்களில் அன்னையின் அருளாசீரால் அலகையை வென்றார்.


         தனது கரங்களில் செபமாலையைச் சுற்றியும் திருச்சிலுவையை நெஞ்சோடு அணைத்தும் பிடிப்பார். “போர்வீரர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருப்பது போர்வாள். அவ்வாறே தன்னுடையதும், மற்றவருடையதுமான ஆன்மிக மீட்புக்கான ஆயுதம் செபமாலை” என்று கூறினார். மக்களிடம் பணம், பட்டம், பதவி ஒருநாள் இல்லாமல் போகும் என்றுகூறி செபமாலை பக்தியில் வளர வழிகாட்டினார். யூப்ராஸியா அன்னை மரியாவின் அரவணைப்பில் நாளும் வளர்ந்து வந்தார். யூப்ராஸியா அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தார். 

       தனது மன்றாட்டுகளை தாழ்ச்சியுடன் அன்னையின் பாதத்தில் அர்ப்பணித்தார். “தூய்மையின் நிறைகுடமான அன்னை மரியே! இயேசுவை முழு இதயத்துடன் அன்பு செய்ய எனக்கு கற்றுத்தாரும்” என்று நாளும் செபித்தார். சக்தி வாய்ந்த, வல்லமை நிறைந்த, புனிதமான நாமங்களான, “இயேசு மரி சூசை” என்ற பெயரை இடைவிடாமல் செபித்து, நன்மைகள் பல பெற்று, இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். நவகன்னியர்களை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நவகன்னியர்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, “அன்னை நீரே இவர்களை உமது திருகுமாரனுக்கு ஏற்ற மணமக்களாக மாற்றும்” என்று செபித்தார். 

Thursday 16 November 2017

புனித ஜெத்ரூத்



          உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக இடைவிடாமல் இறைவனிடம் மன்றாடியவர். இறைவழிபாடு என்பது செபவாழ்வின் அடித்தளம் என்றுகூறி இடைவிடாமல் இறைவனை மாட்சிமைப் படுத்தியவர். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் துன்பங்களை மகிழ்வுடன் தாங்கிக்கொண்டவர். இவர் ஜெர்மனியில் 1256ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் பிறந்தார்.

             ஐந்து வயதுமுதல் துறவு இல்லத்தில் வாழ்ந்தார். சிறுவயது முதல் துறவு இல்லத்தின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்தார். இலக்கியம், மெய்யியல் ஆகியவற்றை திறம்பட கற்றுத்தேர்ந்தார். இறைவனுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணம் செய்து துறவற வாழ்வை தேர்ந்தெடுத்தார். இறையன்பு, இறைஞானம், சகோதர அன்பு, இறைபக்கி மற்றும் நற்பண்புகளில் நாளும் சிறந்து விளங்கினர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 
           

            ஒவ்வொரு நிமிடமும் அன்னை மரியாவின் பாதுகாப்பும் அரவணைப்பும் பெற்று இறையுறவில் வளர்ந்து வந்தார். இறைவார்த்தையை நாளும் தியானித்தார். வார்த்தையான கிறிஸ்துவிடமிருந்து ஞானத்தை பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நற்கருணை முன்பாக பலமணிநேரம்  காத்திருந்தார். இவருடை சொற்களை கேட்போர் இறையன்பால் ஈர்க்கப்பட்டனர். ஏழை எளியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர், படித்தவர் படிக்காதோர், பணக்காரர் பாமரர் என்ற வேறுபாடு இல்லால் அனைவரிடத்திலும் நட்புடன் பழகினார். 

         
ஒருமுறை இயேசு, ஜெத்ரூத்க்கு காட்சி அளித்து “இயேசு, மரியா, சூசை என்று ஒருமுறை செபிக்கின்றபோது உத்தரிக்கிற ஒரு ஆன்மா மீட்புபெறும்” என்று கூறினார். தனது வாழ்வின் பெரும் பகுதியை உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக வேண்டுதல் செய்து நிலைவாழ்வு பெற்றுக்கொள்ள வழிகாட்டிவர். ஜெத்ரூத் 1302ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார். இவர் பயணிகளின் பாதுகாவலர்.

வாழ்வுதரும் இறைவார்த்தை


     
            இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என் பொருட்டுத் தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர். மனிதர் உலகம் முழுவதையும் ஆதயாமக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?” என்றார்.

அன்னை மரியா, புனித ஜோசப் குப்பெர்டினோ


              ஜோசப் குப்பெர்டினோ, தனது துறவற வாழ்வை  அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தார். ஒவ்வொரு நாளும் அனனை மரியாவின் துணை நாடினார். தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை, நம்பிக்கை, புனிதமான சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் சிறந்து வளங்கினார். துறவற வார்த்தைப்பாடுகள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வழியாக இறைவனுக்கு தன்னை அர்ப்பணமாக்கி உத்தமத் துறவியாக வாழ்ந்தார்.  

          இறைமாட்சிமைக்காகத் தனது வேலைகளைச் செய்தார். ஜோசப்பின் நல்ல வாழ்க்கையைப் பார்த்த சபைத் தலைவர் அருட்பணியாளராகப் பணிசெய்ய அனுமதி கொடுத்தார். ஜோசப் உயர் கல்விக்கு சென்றார். இறையியல் கற்பதில் பின்தங்கியவராகக் காணப்பட்டார். தேர்வில் தோல்வி அடைந்தார். இக்காரணத்தால் அவருக்கு மற்றொரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் மறையுரை நிகழ்த்தவேண்டும் என்பதாகும்.


          ஆலயத்தில் மறையுரை நிகழ்த்தும் முன்பாக அன்னை மரியாவிடம் உருக்கமாக வேண்டுதல் செய்தார். தூய ஆவியின் வல்லமையால் நிறைந்தார். இறைவனின் அன்பைப் பற்றியும், அன்னை மரியாவைப் பற்றியும் மறைவல்லுநரைப் போல் எளிய நடையில் கேட்பவரின் உள்ளத்தை ஊடுருவிப்பாயும் அளவுக்கு மறையுரை நிகழ்த்தினார். இதைக் கேட்ட பலர் பாவ வாழ்க்கையிலிருந்து மனம்மாறி, இறைவனிடமும் அன்னை மரியாவிடமும் நம்பிக்கை கொண்டனர். இக்காரணத்தால் அருட்பணியாளராக 1628, மார்ச் 28ஆம் நாள் அருட்பொழிவுப் பெற்று, இறைவனுக்கு உகந்த பணியாளனாய் மாறினார். வாசிக்கத் தடுமாறிய ஜோசப், கற்றறிந்த நபர்களைவிட எதற்கும் தெளிவாக விளக்கம் அளித்ததற்கு காரணம் அனனை மரியாவின் அருளும் அன்பும்  இறைஞானமாக மாறியது.  

Wednesday 15 November 2017

சிறுப்பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்

வாழ்வுதரும் வார்த்தை

         
                   சிறுப்பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, “சிறுப்பிள்ளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார். (மத்தேயு 19:13-15)

புனித பெரிய ஆல்பர்ட்


              நீதியும் அன்புமே நிரந்தர அமைதிக்கு அடிப்படை; இந்த இரண்டுமின்றி நீடிக்கும் அமைதி ஒருபோதும் நீடிக்காது. உலக அமைதிக்காக அன்னை மரியா காட்டும் வழிகளை நாம் கையாளவேண்டும் என்று கூறியவர்.  இறைஞானத்துடன் செயல்பட்டவர். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர். ஆன்மிக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றடுத்தியவர். இவர் பாவாரியாவில் சுவாபியா போல்ஸ்தாத் பிரபுக்கள் பாரம்பரியத்தில் ஏறக்குறைய 1200ஆம் ஆண்டு பிறந்தார்.


              ஆல்பர்ட் சிறுவயது முதல் இறைபக்தியல் சிறந்து விளங்கினார். அனனை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு அன்பிலும் நீதியிலும் ஒழுக்கத்திலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அன்னை மரியா காட்சி தந்து சாமிநாதர் சபை துறவியாகும்படி கேட்டுக்கொண்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ஆல்பர்ட் தனது பெற்றோரிடம் துறவற வாழ்வை மேற்கொள்ள அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. பல எதிர்ப்புகளைத் தாண்டி 1223ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் சேர்ந்தார்.


           ஆல்பர்ட் இறையியலில் முனைவர் பட்டம் பெற்று விரிவுரையாளராக கல்லூரியில் பணியாற்றினார். 1254ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் 1254ஆம் ஆண்டு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மிகுந்த இறைஞானத்துடன் செயல்பட்டார். துறவிகளின் ஆன்ம நலனுக்காக கருத்துடன் செயல்பட்டார். ஆன்மீக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றடுத்தினார். இறைவார்த்தையின் அடிப்படையில் வாழ்வை கட்டியெழுப்பு வழிகாட்டினார்.

           1260ஆம் ஆண்டு ரீகன்ஸ்பர்க் மறைமாவட்டத்தின் ஆயராக பதவி ஏற்றார். இறைமக்களின் நலனுக்காக அரும்படுப்பட்டார். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தார். அனைத்து மக்களும் இறையன்பிலும் சகோதர அன்பிலும் வளர்ந்திட வழிகாட்டினார். அன்னை மரியாவிடம் தனது மறைமாவட்ட மக்களை அர்ப்பணம் செய்தார். பகைமை உள்ள இடத்தில் அமைதியை ஏற்படுத்தினார். இறைமக்களின் நலனுக்காக  உழைத்த ஆல்பர்ட் 1280ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.


அன்னை மரியா புனித குழந்தை தெரசா


 
              புனித குழந்தை இயேசுவின் தெரசா சிறுவயதில் தன் தாயை இழந்தார். அன்னை இறந்தபின் அக்காவின் கண்காணிப்பில் வளர்ந்தார். தெரசா நோயுற்ற தருணத்தில் அம்மா! அம்மா! என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருந்தார். தோட்டத்திலிருந்த அன்னை மரியாவின் திருசொரூபத்தை நோக்கித் திரும்பினார். இவ்வுலகில் எந்த உதவியும் பெற இயலாத தெரசா, அன்னை மரியாவிடம் சரண் அடைந்தார். தன்மீது இரக்கம் காட்டும்படி முழுஇதயத்தோடு மன்றாடினார். உடனடியாக அருள் நிறைந்த அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அவரது அன்பையும், அருளையும் வெளிக் கொணர்ந்து புன்னகைத்தார்.
       
     தெரசா அனுபவித்த வேதனைகள்அன்னை மரியாவின் அருளால் மாறி எண்ணில்லா ஆனந்தம் அடைந்தார். அந்நேரம் முதல் இன்ப துன்பங்களில் அன்னை மரியின் அரவணைப்பையும் துணையையும்  நாடினார். 1884ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் முதல் முறையாக நற்கருணை பெற்றார். அந்நாளை இயேசுவின் முதல் முத்தம் பெற்ற நாள் என்று கூறுகிறார். தொடர்ந்து இயேசுவின் முத்தம் பெற ஆசைப்பட்டு பெüலீன் அக்காவைப்போல கார்மெல் மடத்தில் சேர விழைந்தார். அன்னையின் துணையோடு துறவற வாழ்வை மேற்கொண்டு புனிதராக மாறினார்.

Tuesday 14 November 2017

புனித லீமாரோஸ்

       
         

              துன்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. சிலுவை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு இல்லை  என்று உணர்ந்து கொண்டு, “ஆண்டவரே எனது துன்பத்தை அதிகமாக்கும். எனது இதயத்தில் உம்மீதுள்ள அன்பைப் பெருகச் செய்யும்” என்றுகூறி வாழ்நாள் முழுவதும் தனது துன்பத்தின் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தியவரே புனித லீமாரோஸ். இவர் தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் உள்ள லீமா என்னும் ஊரில் 1586ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் பிறந்தார்.           
                   

             குழந்தைப்பருவம் முதல் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராக வாழ்ந்து வந்தார்.. இவருக்கு  திருமுழுக்கின் போது இட்ட பெயர் இசபெல். குழந்தையாக இருந்தபோது ஒருமுறை இவரது முகம், ரோஜா மலர் போல் ஒளி வீசுவதை வீட்டில் உள்ளவர்கள் பார்க்க நேர்ந்தது. மேலும் குழந்தையாகத் தொட்டில் கிடந்த தருணம் ஓர் அழகிய ரோஜா மலர் தொட்டில் விழுவதை அவரது தாய் கண்டார். அன்று முதல் ரோஸ் என்று அழைக்கப்பட்டார். ரோஸ் துறவு மேற்கொண்டு இறைவனை அன்பு செய்யத் தீர்மானித்தார்.
                

         தனது 20ஆம் வயதில் புனித சாமிநாதரின் மூன்றாம் சபையில் சேர்ந்தார். ரோஸ் நோன்பு இருந்து தியாகச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தி தூயவராக வாழ்ந்து வந்தார். ஏழைகளிடம் மிகுந்த அன்பும், கரிசனையும், இரக்கமும் காட்டினார். ஏழைகளுக்கும், நோளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உதவினார். “நமது ஆன்மாவை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும் சாலை தான் சிலுவை. சிலுவையைத் தவிர விண்ணகத்திற்கு ஏறிச் செல்ல வேறு எந்த ஏணியும் இல்லை” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

             

            னது தியாக வாழ்வால் இறைவனை மாட்சிமைப்படுத்திய ரோஸ், கூர்மையான ஆணிகளால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை கிரீடமாகச் செய்து தலையில் அணிந்துகொண்டார். கூர்மையான ஆணிகள் குத்தி இரத்தம் வெளிவந்தது. இதையாரும் பார்க்காமல் மறைத்துக் கொள்வார். பக்கவாதத்தால் கடுமையாகத் தாக்குண்டார். 1617ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள் இயற்கை எய்தினார். திருத்தந்தை 10ஆம் கிளமண்ட் 1671ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் தோட்டபணியாளர், மலர் விற்பனையாளர், தையல்காரர், இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்க பழங்குடியினர் ஆகியோரின் பாதுகாவலர்.  

அன்னை மரியா, புனித பியோ



              தந்தை பியோ அன்னை மரியாவின்மீது மிகுந்த அன்பு கொண்டு, அதிக நேரம் அன்னை மரியாளைப் புகழ்ந்து போற்றினார். ஒருமுறை ஒரு எழுத்தாளர் அவரிடம், “உங்கள் வாழ்வில் அன்னை மரியின் பங்கு என்ன?” என்று கேட்டார். அதற்குத் தந்தை பியோ,“என்னில் செயலாற்றும் அதிசய ஆற்றலுக்கும், அருட்கொடைகளுக்கும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் அற்புத ஆற்றலுக்கும், வானதூதர்களோடு நட்புடன் உரையாடுவதற்கும் காரணம், அன்னை மரியாவின் அருட்கரம் என்மீது செயலாற்றுவதே” என்று பதிலளித்தார்.

         1959ஆம் ஆண்டு பாத்திமா அன்னையின் சொரூபம் ரெட்டோன்போ ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பியோ, அன்னைக்கு தங்கச் செபமாலை ஒன்றை அணிவித்தபோது, நோயின் காரணமாக சோர்ந்து கீழே விழுந்தார். ரொட்டோன்டோ ஆசிரமத்திலிருந்த அன்னையின் திருசொரூபம் ஹெகாப்டர் மூலமாக எடுத்துச் சென்றனர். அப்போது தந்தை பியோ, என் அன்பு அன்னையே நீ இத்தாலிக்கு வரும்போது உம் மகனாகிய நான் நோயுடன் துடிப்பதை நீ அறிவாய். இப்போதும் நான் துன்பப்படுவதை நீ காண்கிறாய். அம்மா! நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் இந்த தருணத்திலாவது உன் மகனை கடைக்கண்நோக்கி பார்க்கமாட்டாயா என்று வேதனையோடு கதறி அழுதார்.  அப்போது அன்னையின் சொரூபத்தோடு ஆசிரமத்திற்கு மேல் பறந்து சென்ற விமானம் மூன்று முறை ஆசிரமத்தை வட்டமடித்தது. அந்நேரம் இறையொளி அவரில் ஊடுருவிச் சென்று உடலிருந்த புற்றுக்கட்டி மறைந்து குணமடைந்தார். 

            அன்னை மரியாவின் அன்பு அளவு கடந்தது. தம் மகனை நமக்காகப் பலியாகத் தருகின்ற அளவுக்கு ஆழமானது. எனவே, “அன்னையின் அன்பு இதயத்தில் உங்கள் செவிகளை வைத்துக்கொள்ளுங்கள். அன்னை மரியாவின் ஆலேசனைக்கு செவிகொடுங்கள்” என்று கூறினார். ஒரு நாளைக்கு 35 முறை 153 மணி  செபமாலை சொல்லுவார். அனைத்து மக்களிடமும், “அன்னை மரியாளை அன்பு செய்யுங்கள். அன்றாடம் செபமாலை செபியுங்கள். உலகத்தின் தீமைகளை வெல்ல அதுதான் சிறந்த ஆயுதம். மேலும் கடவுள் கொடுக்கும் அனைத்து வரங்களுமே அன்னை மரியாவின் வழியாக வருகின்றன” என்று கூறினார். அன்னையின் அன்பில் மெழுகாகக் கரைந்த தந்தை பியோ அன்றாடம் ஆசிரமத்திலுள்ள அன்னை மரியாவின் திருசொரூபம் முன்பாக முழந்தாள்படியிட்டு, கரங்களை விரித்தவாறே செபித்து வந்தார்.
 

Monday 13 November 2017

புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா


         
              இயேசுவை சொந்தமாக்க விழைவோர் அன்னை மரியாவிடம் செல்ல வேண்டும் என்று கூறியவர். அன்னை மரியாவின் துணையால், நாளும் இறையன்பின் இனிமையைச் சுவைத்து; இறைவனுக்குத் தன் வாழ்வை அர்ப்பணமாக்கியவரே புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா. இவர் போலந்து நாட்டில் தாட்ஸ்கோ நகரில் 1550ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 28ஆம் நாள் பிறந்தார். தீமையை வெறுத்து நன்மை செய்வதிலும், பகர்ந்து வாழ்வதிலும், செபிப்பதிலும் அனைவருக்கும் முன்மாதிரியானார். 
     
            அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும், அன்பும் செலுத்தினார். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா 1564ஆம் ஆண்டு கல்வி கற்க, வியன்னாவிலுள்ள இயேசு சபை கல்லூரியில் சேர்ந்து திருமறையை ஆர்வமுடன் படித்தார். திருச்சபையின் எதிரிகளை அழிப்பதற்காகத் தன்னைத்தயார் செய்தார். கல்லூரியில் குருவானவர்களின் அன்பும், இரக்கமும், பகரும் மனநிலையும், தூய்மையான வாழ்வும் அவரைக் கவர்ந்தன. ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா கடின உழைப்பு, செப வாழ்வு, நற்செய்தியின் மதிப்பீடுகளான அன்பு, நீதி, இரக்கம் இவற்றிற்கேற்ப தன் வாழ்வை மாற்றியமைத்தார். 

            ஸ்தனிஸ்லாஸ் பல துன்பங்களுக்கும், ஏளனங்களுக்கும், இகழ்ச்சிக்கும் உட்பட்டபோது உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ அவற்றையே தேர்ந்தெடுத்து, தூயவராக வாழ்ந்தார். இளமைப்பருவம் முதல் புனிதமான செயல்களை மட்டுமே செய்தார். அவரது சிந்தனை, சொல், செயல்களில் கிறிஸ்துவின் அன்பும், அமைதியும், இரக்கமும், பொறுமையும், மன்னிப்பும், இறைமாட்சியும் வெளிப்பட்டது.

           இயேசு சபையில் துறவியாக பயிற்சி பெற்று கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் போன்ற துறவற வார்த்தைப்பாட்டின் வழியாக இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்தார். தூய்மையான வாழ்க்கை, சகோதர அன்பு, இறைஞானம்  கலந்த பேச்சு மற்றும் அன்போடும், பொறுமையோடும், பாசத்தோடும், கனிவோடும் இறையாட்சி  பணிசெய்தார். ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா நோயுற்றார். அவரின் முகம் இறைபிரசன்னத்தால் ஒளிர்ந்தது. “அன்னையே இதோ! நான் வருகின்றேன். என்னை ஏற்றுக்கொள்ளும். உம் திருமகனிடம் என்னை ஒப்படைத்தருளும்” என்று செபமாலையை கரங்களில் பிடித்தவாறேகூறி 1568ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் உயிர் துறந்தார். திருத்தந்தை பதின்மூன்றாம் ஆசீர்வாதப்பர் 1726ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.


மரியா, புனித ஸ்தனிஸ்லாஸ் கோஸ்கா


               ஒருமுறை ஸ்தனிஸ்லாஸின் அறையில் ஓர் ஒளி தோன்றியது. ஒளியின் இடையில் அன்னை மரியா குழந்தை இயேசுவுடன் தோன்றினார். புன்முறுவலுடன் மரியன்னை சற்றே குனிந்து ஸ்தனிஸ்லாஸிடம் குழந்தை இயேசுவைக் கொடுத்தார்.  குழந்தை இயேசுவும் தம் கரங்களால் புனிதரைத் தழுவினார். இந்நேரத்தில் மரியன்னை ஸ்தனிஸ்லாஸிடம் இயேசு சபையில் சேருமாறு கூறினார்.


      அன்று முதல், “இயேசுவின் தாய் எனது தாய்” என்றுகூறி அவ்வாறே வாழ்ந்து வந்தார். அன்னை மரியாவின் தூண்டுதலால் தமது 17ஆம் வயதில் சாக்கு உடை அணிந்து, கால்நடையாகச் சென்று இயேசு சபையில் சேர்ந்து துறவற வாழ்வின் வழியாக புனிதராக மறினார். “அன்னையே இதோ! நான் வருகின்றேன். என்னை ஏற்றுக்கொள்ளும். உம் திருமகனிடம் என்னை ஒப்படைத்தருளும்” என்று செபமாலையை கரங்களில் பிடித்தவாறே தனது இறுதி நாட்களில் செபித்தார்.