Monday 27 November 2017

புனித பாஸ்கல் பைலோன்


புனித பாஸ்கல் பைலோன் தனது தியாகம் மிகுந்த மண்ணக வாழ்வை இயேசு கிறிஸ்துவின் கல்வாரி பலியோடு இணைத்து வாழ்ந்தவர். பலமுறை அற்புதமான முறையில் தேவநற்கருணை பெற்றுக்கொண்டார். இவர் ஸ்பெனில் டொரேஹெர்மோசா என்னும் இடத்தில் 1540ஆம் ஆண்டு மே திங்கள் 24ஆம் நாள் பாஸ்கா திருவிழா அன்று பிறந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். உலக செல்வத்தில் ஏழ்மையாக இருந்தாலும் ஆன்மீகச் செல்வத்தில் செல்வாக்கு பெற்று அன்பிலும், அமைதியிலும், ஆனந்தமுடன் வாழ்ந்தார். 
       

      பாஸ்கல் பைலோன் பள்ளிக்கூடம் சென்று படிக்க வசதி இல்லாதக் காரணத்தால் ஆடுமேய்க்கச் சென்றார். பாஸ்கல், தனது பெற்றோருக்கு எப்பொழுதும் உதவி செய்தார். தினந்தோறும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்குபெறவும் நற்கருணை வழியாக இயேசு கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக்கொள்ளவும், நற்கருணைக்கு முன்பாக நீண்டநேரம் செபிக்கவும் விரும்பினார். நற்கருணை பக்தியில் வளர்ந்த பாஸ்கல் முதல் முறையாக தேவநற்கருணை பெற்றுக்கொண்ட தருணத்தில் எல்லா நாட்களும் திருப்பலியில் பங்கேற்று தேவநற்கருணை உட்கொள்வேன் என்று தீர்மானித்தார். ஆடுமேய்க்கும் தருணங்களில் அன்னை மரியாளிடம் செபமாலை செபித்தார்.

          ஒருமுறை மலையின் உச்சிப் பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆலயத்தில் திருப்பலிக்காக மணி ஒலித்தது திருப்பலிக்கு செல்ல ஆவல் கொண்டார். ஆடுகளை என்ன செய்வது? திருப்பலியில் எவ்வாறு பங்கேற்பது?. திருப்பலியில் பங்கேற்கும் ஆர்வத்தால், “ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும்” என்று செபித்தார். உடனே அந்த இடம் முழுவதும் ஓர் அற்புதமான ஒளி தோன்றியது. ஒளியில் மத்தியில் தங்க நிறத்தில் ஒரு காசவும் அதன்மீது நற்கருணை இருப்பதையும் கண்டார். உடனே முழந்தாளிலிட்டு நற்கருணை ஆண்டவரை ஆராதித்து நற்கருணையை பெற்றுக்கொண்டார். இவ்வாறு பலமுறை அற்புதமான முறையில் தேவநற்கருணையைப் பெற்றார். 
 


        1564ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் பொதுநிலை சகோதரராகச் சேர்ந்தார். “நான் ஏழையாகப் பிறந்தேன். ஏழ்மையில் வாழ்ந்து ஒறுத்தல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தி அவருக்காக மறைச்சாட்சியாக மாறிட ஆசைப்படுகிறேன்” என்றார். நற்கருணையை அளவில்லாமல் அன்பு செய்த பாஸ்கல் 1592ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் திருப்பலியின் மத்தியில் இறந்தார். திருத்தந்தை எட்டாம் அலக்ஸôண்டர் 1690ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ஆம் நாள் புனிதராக உயர்த்தினார். 1897ஆம் ஆண்டு திருத்தந்தை 13ஆம் சிங்கராயர், பாஸ்கல் பைலோன் நற்கருணை மாநாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.


No comments:

Post a Comment