Friday 17 November 2017

அன்னை மரியா, புனித யூப்ராஸியா

செபமாலை மீட்புக்கான ஆயுதம்
             யூப்ராஸியா, அன்னை மரியாவின் துணையால் இயேசுவை அளவில்லாமல் அன்பு செய்தார். அன்னை மரியாவைத் தனது வாழ்க்கையின் முன்மாதிரியாக தேர்ந்தெடுத்தார். எல்லா நாள்களும் செபமாலையைப் பக்தியுடன் செபித்தார். அமலோற்ப அன்னை இரவுநேரங்களில் காட்சி கொடுத்து, தனது அன்பை பகிர்ந்து கொடுத்தார். யூப்ராஸியாவும் அன்னை மரியாவிடம் மனம் திறந்து உரையாடினார். அலகையால் துன்புறுத்தப்பட்டத் தருணங்களில் அன்னையின் அருளாசீரால் அலகையை வென்றார்.


         தனது கரங்களில் செபமாலையைச் சுற்றியும் திருச்சிலுவையை நெஞ்சோடு அணைத்தும் பிடிப்பார். “போர்வீரர் தனது பாதுகாப்பிற்காக வைத்திருப்பது போர்வாள். அவ்வாறே தன்னுடையதும், மற்றவருடையதுமான ஆன்மிக மீட்புக்கான ஆயுதம் செபமாலை” என்று கூறினார். மக்களிடம் பணம், பட்டம், பதவி ஒருநாள் இல்லாமல் போகும் என்றுகூறி செபமாலை பக்தியில் வளர வழிகாட்டினார். யூப்ராஸியா அன்னை மரியாவின் அரவணைப்பில் நாளும் வளர்ந்து வந்தார். யூப்ராஸியா அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தார். 

       தனது மன்றாட்டுகளை தாழ்ச்சியுடன் அன்னையின் பாதத்தில் அர்ப்பணித்தார். “தூய்மையின் நிறைகுடமான அன்னை மரியே! இயேசுவை முழு இதயத்துடன் அன்பு செய்ய எனக்கு கற்றுத்தாரும்” என்று நாளும் செபித்தார். சக்தி வாய்ந்த, வல்லமை நிறைந்த, புனிதமான நாமங்களான, “இயேசு மரி சூசை” என்ற பெயரை இடைவிடாமல் செபித்து, நன்மைகள் பல பெற்று, இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். நவகன்னியர்களை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நவகன்னியர்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, “அன்னை நீரே இவர்களை உமது திருகுமாரனுக்கு ஏற்ற மணமக்களாக மாற்றும்” என்று செபித்தார். 

No comments:

Post a Comment