Monday 6 November 2017

இரக்கத்தின் தாய்


“மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்பு பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். (யோவான்2:1þ3). திருமண வீட்டில் பலநிலைகளிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள், உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று வருகை தந்திருந்தார்கள்.

         திராட்சை இரசம் தீர்ந்து போகவே அன்னை மரியாவின் அன்பு இதயம் திருமண வீட்டார் மேல் பரிவிரக்கம் கொண்டது. மணமகனும், மணமகளும் அவமானங்களுக்கு உள்ளாகாமல் இருக்க இரக்கத்தின் அன்னை விரைந்து சென்று தன் மகனின் உதவியை நாடினார். இயேசுவும், தம் தாயின் இரக்கமுள்ள இதயம் ஆறுதல்பெற பணியாளர்கள் ஆறு ஜாடிகளில் கொண்டு வந்த தண்ணீரை இரசமாக மாற்றினார். இதையே நோவானுஸ், “இறைவனின் தாய் கேளாமலேயே, தேவையிலிருந்தோருக்கு இவ்வளவு விரைந்து உதவி செய்தார்களென்றால், இரக்கத்தின் தாயான அன்னை மரியாளிடம் உதவியைக் கேட்போருக்கு எவ்வளவு விரைந்து உதவமாட்டார்?” என்கிறார்.
   
       புனித லாரன்ஸின் ரிச்சார்ட், “ஒரு நல்ல தாய் புண்கள் தொற்றிய தன் குழந்தைக்கு, அப்புண்கள் எவ்வளவு தான் வெறுப்பூட்டுமளவிற்கு அருவருப்பாயிருந்தாலும், மருந்துதடவத் தயங்கமாட்டார். அவ்வாறே, இரக்கத்தின் தாயான அன்னை மரியாவும், நம் பாவங்கள் நம்மில் ஏற்படுத்தியப் புண்கள் எவ்வளவு தான் நம்மை அருவருப்புக்குரியவர்களாய் மாற்றினாலும் குணப்படுத்தக் கேட்டு, அவர்களை மன்றாடும் போது நம்மை உதறித் தள்ளமுடியாதவராக இருக்கிறார்கள்”என்று கூறுகிறார். இரக்கத்தின் தாய் அன்னை மரியா எந்நிலையிலும் நமக்கு உதவ எப்போதும் தயார் நிலையிருக்கிறார். திருத்தந்தை மூன்றாம் இன்னசென்ட், “பாவஇருளில் இருந்த போது இந்த இனிய தேவதாயின் உதவியை வேண்டி அடையாது போன நபர் யார் இருக்கின்றார்?” என்று கூறுகிறார். 


No comments:

Post a Comment