Monday 20 November 2017

அன்னை மரியா, புனித பவுஸ்தீனா


 
            ஒருமுறை குழந்தை இயேசுவுடன் அன்னை மரியா தோன்றினார். அன்னை மரியாவிடம், “கன்னி மரியே! எனது தாயே! நான் எவ்வளவு துன்பப்படுகிறேன் என்பது உமக்குத் தெரியுமே” என்றார். அன்னை மரியா, “மகளே நீ அதிகமாகத் துன்பப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும். பயப்பட வேண்டாம். நானும் உன்னுடன் இணைந்தே துன்பப்படுகிறேன். எப்பொழுதும் உன் அருகில் ஆறுதலாய் இருப்பேன்” என்று புன்முறுவலோடு கூறி மறைந்தார். பவுஸ்தீனாவும் துன்பங்களை எதிர்கொள்ள ஆற்றலும் ஆறுதலும் பெற்றார். இத்தருணத்தில், “இயேசுவே நீரே என் அமைதி! நீரே என் ஆனந்தம்” என்று கூறினார். அந்நேரம் முதல் மூவொரு இறைவனின் பிரசன்னமும் அன்னை மரியாவின் பிரசன்னமும் உணர்ந்து வாழ்ந்தார்.

           ஒரு குழந்தை தன் தாயுடன் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளதோ, அவ்வாறு அன்னை மரியாவோடு உறவு கொண்டிருந்தார். தனது கீழ்ப்படிதல் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தினார். அன்னை மரியா இயேசுவுடன் தோன்றி, “மகளே பவுஸ்தீனா உனது தூய்மையான இதயம் கறைபடாமல் இருக்க எனது நிலையான அன்பை உனக்கு நான் தருகிறேன். இனிமேல் சோதனைகள் உன்னை நெருங்காது. திருப்பலி நேரத்தில் நீ என் மகனின் துன்பத்தில் பங்கு சேர்ந்து மனுக்குல மக்களுக்காக செபிக்க வேண்டும். சிறப்பாக உத்தரிக்கும் இடத்திலுள்ள ஆன்மாக்கள் தந்தையின் இரக்கம் பெற, “நித்திய பிதாவே எங்கள் ஆண்டவரும் உமது நேசருமான, இயேசு கிறிஸ்துவின் உடலையும் உதரத்தையும் ஆன்மாவையும் தெய்வீகத்தையும் எங்கள் பாவங்களுக்கும், அகில உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்” என்று செபிக்கக் கற்றுக்கொடுத்தார். 


No comments:

Post a Comment