Monday 1 October 2018

குழந்தை இயேசுவின் புனித தெரசா


      “கிறிஸ்துவே என் அன்பு; அவரே என் நிறைவாழ்வு; அன்புக்காக இறப்பதே எனது நம்பிக்கை; இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல். அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்கு” என்று கூறியவர். இன்பத்திலும், துன்பத்திலும், வறுமையிலும், வளமையிலும், நோயிலும், சாவிலும், இருளிலும், ஒளியிலும் எந்நிலையிலும் அஞ்சாது, இயேசுவில் சரணடைந்து, குழந்தை போல் அவரது தோளில் சாய்ந்து, குழந்தையாகவே மாறி அன்புக்காகவே வாழ்ந்தவரே குழந்தைஇயேசுவின் தெரசா. இவர் பிரான்ஸ் நாட்டில் அலென்சோனில், பாசமும், நேசமும், அன்பும், பற்றும், அரவணைப்பும், கரிசனையும் கலவையாக இருந்த குடும்பத்தில் 1873ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் நாள் பிறந்தார். 
 
       தெரசா குழந்தை இயேசுவை அதிகம் அன்பு செய்தார். வாழ்வில் சோர்வுறும் போது  குழந்தை இயேசுவிடம் செபித்து ஆறுதலும், ஆற்றலும் அடைந்தார். அன்பு, அமைதி, பொறுமை, தாழ்ச்சி இவைகளுக்குச் சொந்தக்காரர். தெரசா ஒரு நாள் செபம் முடித்து புத்தகத்தை மூடுகையில், பாடுபட்ட இயேசுவின் ஒரு படம் பாதி வெளியே நழுவி இருந்தது. அதில் துளையுண்டு இரத்தம் சிந்தும் கிறிஸ்துவின் கரம் அவர் கண்ணுக்குப் புலனாகியது. தெரசா அதுவரை அனுபவிக்காத ஒருவகை உணர்ச்சியில் மூழ்கி மெய்சிலிர்த்தார். அந்த தெய்வீக இரத்தம் ஒழுகி கீழே விழுவதும், அதைச் சேர்த்துவைக்க யாரும் முயற்சி செய்யாதிருப்பதைப் பார்த்து நெஞ்சம் நைந்தார். மீட்பின் ஊற்றான அந்த தெய்வீக இரத்தத்தைச் சேர்த்துவைத்து, ஆன்மாக்களின் மீது அதைப் பொழியும் பொருட்டு, என் வாழ்வு இனி சிலுவையின் அடியிலே அமையும் என்று அன்றே முடிவு செய்தார். அந்நேரம் முதல் இயேசுவின் இரத்தத்தைச் சேகரித்து ஆன்மாக்களின் மீட்புக்காக ஒப்புக்கொடுக்க தன் வாழ்வை கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தார்.

        தனது 15 ஆம் வயதிலேயே இறையழைத்தலை உணர்ந்து, கார்மேல் இல்லம் சென்றார். ஆனால் இளம் வயதின் காரணமாக கார்மேல் மடத் துறவிகள், இவரை ஏற்க மறுத்தனர். இதனால் ஆயரிடம் சென்று, தன் விருப்பத்தை தெரிவித்து மீண்டும் கார்மேல் சபைக்குள் நுழைந்தார். இருப்பினும் வார்த்தைப்பாடுகளைப் பெற இவருக்கு வயது இல்லாததால், வார்த்தைப்பாடுகளை பெறாமல் போனார். இதனால் ஆயருடன் உரோம் நகர் சென்று, திருத்தந்தை 13 ஆம் லியோவை சந்தித்து, அவருடன் உரையாடி, கார்மேல் சபையில் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க அனுமதிப் பெற்றார். 

            துறவற வாழ்வில் ஒன்பது ஆண்டுகள் இறைபணியாற்றினார். இருப்பினும் இந்த ஒன்பது ஆண்டுகளும் ஆண்டவருக்காகச் சொல்லற்கரிய சிலுவைகளை மிகுந்த பொறுமையோடும், மகிழ்வோடும், மனவமையோடும் சுமந்து கொண்டார். கார்மெல் மடத்தில் சிலுவைகள் நிறைந்த இவரது வாழ்வு ஒரு மறைசாட்சியின் வாழ்விற்கு ஒப்பாகவே இருந்தது. தெரசா பலவகையான நோய்களினால் பாதிக்கப்பட்டார்.  துன்புற்றபோதும் அவரது முகம் முகமலர்ச்சியோடுக் காணப்பட்டது. இறுதியாக எலும்புருக்கி நோயினால் தாக்கப்பட்ட தெரசா தமது 24ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment