Thursday 11 October 2018

புனித 23ஆம் அருளப்பர்



       “தான் திருமுழுக்கின் வழியாக பெற்ற புனிதத் தன்மையை என்றுமே இழந்ததேயில்லை” என்று கூறியவர். தூய ஆவியால் வழிநடத்தப்பட்டவர்; மக்களின் திருத்தந்தை;  அவனில் அமைதி ஏற்படுத்தியவர்; மனித மாண்பு மிகுந்தவர்; அன்பானவர்; புனிதமானவர்;  கிறிஸ்தவ ஒன்றிப்பின் முன்னோடி; நகைச்சுவை நாயகன்; திருச்சபையின் மேலாண்மையை உலகிற்கு உணர்த்தியவர்; மக்களின் இன்னல்களை நீக்கி இறை ஆசீர் பெற்றுக் கொடுத்தவரே புனித 23ஆம் அருளப்பர். இவர் இத்தாலி நாட்டில் 1881ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் பிறந்தார்.  குழந்தைப்பருவம் முதல் விசுவாசக் கோட்பாடுகளை முறையாகக் கற்று பக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஆன்மீக வாழ்வில் ஆர்வம் கொண்டு தினந்தோறும் ஆர்வமாக ஆலயம் சென்றார்.

           உலகில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். 1892ஆம் ஆண்டு பெர்கமோ என்ற குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தனது குருத்துவப் படிப்பைத் தொடங்கினார். புனித பிரான்சிஸ் அசிசியாரின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஏழ்மையையும் தூய்மையையும் கடைப்பிடித்து வந்தார். 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 10ஆம் நாள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். துன்பப்படுவோரையும், ஏழைகளையும் தேடிச் சென்றார். 1925ஆம் ஆண்டு புள்கேரிய நாட்டின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.  கீழ்படிதலும், அமைதியும் விருதுவாக்காக தேர்வு செய்தார்.

           1953ஆம் ஆண்டு வெனீஸ் நகரின் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இளையோர்களை அளவில்லாமல் அன்பு செய்தார். ஆன்மீகப் பாதையில் வளர்ந்திட நல்வழிகாட்டினார். இளைஞர்களுக்காக ஆன்மப் பரிபாலனைக்காக ஒரு இல்லம் தொடங்கினார். ஏழைகளையும், ஆதரவற்றோரையும், துன்பப்படுவோரையும் அன்பு செய்தவர், 1958ஆம் ஆண்டு அக்டோர் திங்கள் 28ஆம் நாள் 23ஆம் அருளப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாக அருள்பொழிவுபெற்றார். திருச்சபையில் அன்பும், அமைதியும், ஒற்றுமையும், ஒழுங்கும் ஏற்படுத்தினார்.

       1963ஆம் ஆண்டு வெளியிட்ட “அவனில் அமைதி” என்ற சுற்று மடல் வழியாக தனி மனிதனின் மாண்பையும், சுதந்திரத்தையும் வலியுறுத்தினார். ஆழமான இறையன்பில் வளர்ந்து மக்களின் நலனுக்காகவே உழைத்தார். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் திருச்சபையைப்பற்றியும், திருச்சபைக்கும் உலகுக்கும் இடையே உள்ள உறவுகள் பற்றியும் 16 ஏடுகள் வெளியிட்டது. இரண்டாம் வத்திக்கன் சங்கத்தின் முதல் அமர்விற்கு பின் 1963ஆம் ஆண்டு ஜøன் 3ஆம் நாள் இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment