Thursday 25 October 2018

புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான்

   இயேசு கிறிஸ்துவின் உயிருள்ள வார்த்தையை வாழ்வாக்கி, செபமும், கடின உழைப்பையும் படிகற்களாக மாற்றி, இறையாட்சி பணியின் வழியாக இறையன்பின் ஒளியாக சுடர்வீசியவர்கள் புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான். உரோமை நகரில் செல்வந்த குடும்பத்தில் 3ஆம் நூற்றாண்டு பிறந்தார்கள். இருவரும் ஒருதாய் பிள்ளைகள் என்று நம்பப்படுகிறது. இவரது பெற்றோர் சமூகத்தில் மதிப்பும், மாண்பும், செல்வாக்கும் பெற்றவர்கள்.

             நற்செய்தியின் மீதான ஆர்வத்தின் மிகுதியாலும், இறையாட்சி பணி ஈடுபாட்டினாலும் செல்வாக்கு மிகுந்த வாழ்வை கைவிட்டு கிறஸ்துவை ஒப்பற்ற செல்வமாக ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்துவின் இறையாட்சி பணியை தங்களது பணியாக ஏற்றுக்கொண்டனர். அழியா நிலைவாழ்வு தரும் இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்திட பிரான்ஸில் சொய்சோன் பகுதிக்கு சென்று தங்களது இறைபணியை ஆரம்பித்தனர். பிரான்ஸில் சொய்சோன் பகுதியில் பாதணி தயாரிக்கும் மக்களில் ஒருவராகவே மாறினர். அம்மக்களோடு இணைந்து பாதணி தயாரிக்கும் வேளையில் ஈடுப்பட்டனர். இயேசுவின் நெஞ்சுக்கு நெருக்கமாக மாறினர். தோழமை உணர்வில், மக்களோடு மக்களாக ஒன்றிணைந்து இறைபணி கிறிஸ்துவை அறிவித்தனர்.  

          


         உரோமையின்  டயோக்கிளிசியன் பேரரசனின் ஆளுநன் மாக்சிமியான் கிறிஸ்துவ மக்களை கொடூரமான முறையில் துன்புறுத்தி மகிழ்ந்தான். கிறிஸ்தவர்களை அடியோடு அழிக்க ஆவல் கொண்டான். பாதணி தொழில் செய்து, கிறிஸ்துவை போதித்து வந்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். அவர்கள், “எங்களது வாழ்க்கை கிறிஸ்துவுக்காகவே. நாங்கள் இறந்தாலும் அது எங்களுக்கு ஆதாயமே.  கிறிஸ்துவுக்காக இறப்பதில் மன மகிழ்ச்சி அடைகிறோம்” என்றனர். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மாக்சிமியன் கிறிஸ்துவை மறுதலிக்க வற்புறுத்தினான். கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் தலைவெட்டி கொன்றனர். கிறிஸ்துவுக்காக தங்கள் இன்னுயிரை கையளித்து கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் மறைசாட்சியானார்கள்.

No comments:

Post a Comment