Friday 5 October 2018

புனித மரிய பவுஸ்தீனா கோவஸ்கா

     
      “நமது வாழ்க்கையில் நற்கருணை பெறுகின்றநேரம் இன்பமான ஆசீர்வதிக்கப்பட்ட நேரம். இதற்காக நான் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்”என்று கூறியவர். இறைவனின் அளவற்ற இரக்கத்தைப் பெற்று, அகிலமெங்கும் இறை இரக்கத்தை அறிவிக்கும் கருவியாய், விண்ணகத் தந்தையின் விருப்பமான பலிபொருளாய் மாறியவரே புனித மரிய பவுஸ்தீனா கோவஸ்கா. இவர் போலந்து நாட்டில் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் நாள் பிறந்தார். செல்வத்தில் ஏழைகளானாலும் அன்பிலும், பக்தியிலும், ஒழுக்கத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். பவுஸ்தீனா தனது ஏழாம் வயதில் முதல் முறையாக நற்கருணை பெற்றார். இறைவன் தன்னைத் துறவு வாழ்வுக்கு அழைப்பதாக உணர்ந்தார். தனது பெற்றோரிடமிருந்து நற்பண்புகளைக் கற்றுக்கொண்டார். நற்கருணைமீதும் அன்னை மரியாவின்மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். 
    

      பவுஸ்தீனா தவம் மேற்கொண்டு நற்பண்பில் வளர்ந்தார். துன்புறும் ஏழைகள் மீதும், நோயாளிகள் மீதும் இரக்கம் கொண்டு அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்தார். இறைவனோடு உறவுகொண்டு ஆன்மாக்களின் மீட்புக்காகவும், இறைவனுக்கு உகந்த பலிபொருளாகவும் தன்னை அர்ப்பணித்தார். என் இனிய இயேசுவே! எனது குழந்தைப்பருவம் முதல் புனிதராக மாறவேண்டும் என்ற ஆவல் உமக்குத் தெரியுமே. இயேசுவே, “உம்மை இதுவரை அன்பு செய்துள்ள ஆன்மாக்களை விடமேலாக உம்மை அன்பு செய்ய நான் விரும்புகிறேன்” என்றுகூறி துறவற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். 
 

   பவுஸ்தீனா இரக்கத்தின் அன்னை சபையில் 1928, ஏப்ரல் 30ஆம் நாள் துறவற வார்த்தைப்பாடுகளான கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் மூலம் இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். ஹெலன்கா என்ற இயற்பெயரை நற்கருணை ஆண்டவரின் மரிய பவுஸ்தீனா என்று மாற்றினார். “பவுஸ்தீனா என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று பொருள். 1931ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22ஆம் நாள் காட்சி கண்டார். தனது ஆன்ம குருவானவர் அருட்தந்தை மிக்கேல் சொபாகே அவரிடம் தான் கண்ட காட்சியைப்பற்றி கூறினார். இயேசு இறை இரக்கத்தின் அரசராகக் காட்சி அளித்தார். வெள்ளை ஆடை அணிந்திருந்தார். அவருடைய இதயத்தில் இருந்து வெள்ளை மற்றும் சிவப்புநிற ஒளி பாய்ந்து வந்தது. இதனை அப்படியே வரைந்து அதன் கீழ் “இயேசுவே உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்” என்று எழுதும்படி கூறினார். இறை இரக்கத்தின் அரசரான என்னை வணங்குகிறவர்களின் ஆன்மா அழிந்து போகாமல் பாதுகாப்பேன். முதலில் உனது ஆலயத்திலும், பிறகு உலகம் முழுவதும் என்னை வணங்கும்படி செய் என்று கூறினார்.  
           

   ஒருமுறை போலந்தில் கொடுங்காற்றுடனும், இடிமின்னலுடனும் மழை பெய்தது. இயற்கையில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்தன. பேரழிவு ஏற்பட்டதைப் பார்த்து பவுஸ்தீனா இறைவனால் கற்றுத்தரப்பட்ட இரக்கத்தின் செபமாலை செபித்தார். உடனே காற்றும், இடி மின்னலுடன் கூடிய மழையும் நின்றது.  நற்கருணையின் பவுஸ்தீனா உடல் நலக்குறைவினால் 1938ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். 

No comments:

Post a Comment