Friday 27 April 2018

ஏப்ரல் 27. புனித சீட்டா

      கிறிஸ்துவின் அன்பையையும் எரக்கத்தையும் தனதாக்கி நம்பிக்கை மிகுந்த உழியனாக பணியாற்றியவர். மனிதருக்கு என்பதைவிட இறைவனுக்கே பணி செய்தவர். தனது பணிகளில் நேர்மையும் பொறுப்பும் மிகுந்தவராக செயல்பட்டார். தன்னனை நாடி வந்த அனைவருக்கும் உதவிகள் செய்தார். தன்னை துன்புறுத்தியவர்களையும் அன்பு செய்து வாழ்ந்தவரே புனித சீட்டா. இவர் இத்தாலி நாட்டில் 1218ஆம் ஆண்டு பிறந்தார். சீட்டா தனது 12ஆம் வயதில் லூக்காவில் இருந்த ஃபட்டிநெல்லி என்பவரின் வீட்டில் வேலை செய்தார். தனது கடமைகளை நேரிய உள்ளத்தோடு செய்தார். இக்காரணத்தால் அனைவரின் நன்மதிப்பை பெற்றார். தனது வாழ்க்கை முழுவதும் ஏழைகளுக்காக கையளித்த சீட்டா 1271ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் இறந்தார்.

ஏப்ரல் 26. புனித அனாக்ளீட்டஸ்

       கிறிஸ்துவின்மீது அன்பு கொண்டு வாழ்ந்தவர். திருச்சபையின் வளர்ச்சிக்காக தனது வாழ்வை கையளித்தவர். கிறிஸ்துவின் வழிதடங்களில் நடந்து மறைசாட்சியாக மாறியவரே புனித அனாக்ளீட்டஸ். இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர். புனித பேதுருவின் மறைவுக்குப் பின் திருச்சபையை வழிநடத்தியவர். புனித பேதுருவின் போதனையால் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு இறைவார்த்தையை வாழ்வாக்கி கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். “என் ஆடுகளை மேய் என்று இயேசு பொறுப்பு கொடுத்தவரும், முதல் திருத்தந்தையுமான பேதுருவின் போதனையால் மனம் மாறியவர் மற்றும் அவர் கையாலே திருத்தொண்டராகவும், குருவாகவும் அருள்பொழிவு பெற்றவர் அனாக்ளீட்டஸ்” என்று புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் கூறினார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்தால் பேரரசர் நீரோவின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி 88ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

ஏப்ரல் 25. புனித பிலிப்பு நேரி

       “தாழ்ச்சி என்ற புண்ணியத்தை எல்லாரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தாழ்ச்சியோடும், கீழ்ப்படிதலோடும் இருங்கள். அப்போது தூய ஆவியார் செபிப்பது எப்படியென்று உங்களுக்குக் கற்றுத் தருவார்” என்று கூறியவர். தூய்மையான வாழ்க்கையாலும், தாழ்ச்சியான அர்ப்பணத்தாலும் “உரோமையின் இரண்டாம் அப்போஸ்தலர்” என்று அழைக்கப்படுபவரே புனித பிலிப்பு நேரி. இத்தாயில் ஃபுளோரன்ஸ் நகரில் 1515ஆம் ஆண்டு ஜøலை 22 ஆம் நாள் பிறந்தார். கடினமாக உழைக்கும் தருணங்களில் இறைவனின் துணை வேண்டினார்.

         இளவயதில்  பிலிப்பு நேரி பிளாரன்சு நகரில் இருந்த சாமிநாதர் சபையில் சான் மாற்கோ துறவிகளிடம் கல்வி பயின்றார்.  பிலிப்பு நேரி செபத்தில் தன்னிறைவு பெற்றதால், தமது உள்ளத்தில் தெளிவு பெற்றார். உலகச் செல்வங்களோடு வாழ்வதைத் தவிர்த்தார். கடவுளுக்காக இறைபணி செய்ய தமது 26ஆம் வயதில் வணிகத் தொழிலைக் கைவிட்டார். தனது ஆன்மநலனைக் குறித்தும், இறைமக்களின் ஆன்ம ஈடேற்றத்தை முன்னிட்டும் உரோமைநகர் சென்றார். மெய்யியல் மற்றும் இறையியல் பயின்றார். செபத்திலும் தவமுயற்சியிலும் முழு ஈடுபாடு கொண்டவராய் வனத்துறவி போலவே வாழத் தொடங்கினார்.


        பிலிப்புநேரி கடவுளுக்காகப் பணிசெய்ய அன்பும் ஆசீரும், சக்தியும் ஆற்றலும், பண்பும், பணிவும், இரக்கமும் இறைஞானமும் நிறைவாகப் பெற்றுக்கொண்டார். மருத்துவமனைக்குச் சென்று தீராத நோயுடன் தவித்திடும் மக்களுக்குத் தனது சேவையைத் தொடங்கினார். தெரு வழியாகச் செல்லும் போது ஆன்மீகத்தில் அக்கறையற்றுப் பின்தங்கியவர்களை இனங்கண்டு தமது திறமையானப் பேச்சினாலும், அணுகு முறையினாலும் அவர்களை இறைவனிடம் கொண்டு வந்தார். குருத்துவப் பயிற்சி பெற்று 1551ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

    இளைஞர்கள் எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கவும், ஆழமான இறையனுபவம், தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளைக் கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனம் பெறுதல் போன்றவைகளை  கற்றுத்தந்தார். தினந்தோறும் வைகறையில் துயில் எழும்பி இறைவனிடம் “ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரத்தால் வழி நடத்தும், இல்லாவிட்டால் பிலிப்பு உம்மை மறுதத்துவிடுவான்” என்று செபித்து தமது 80வது வயதில் 1595இல் இயற்கை எய்தினார். 

ஏப்ரல் 24. புனித ஃபிதேலிஸ்

    இயேசு கிறிஸ்துவின் மனநிலையை பெற்றுக்கொள்ள ஆர்வமுடன் நற்கருணையின் முன்பாக கண் விழித்து செபித்தவர். தனது நற்பண்புகள் வழியாக சமூகத்தில் நன்மதிப்பு பெற்று ஆசிரியர் பணியின் வழியாக இறையாட்சி பணி செய்தவர். தனது செல்வத்தை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். ஏழைகளின் நண்பராக, உதவியாளராக வாழ்ந்தவர். இறைவனின் அன்பிற்கு சான்றாக நக்பிக்கைக்குரியவராக வாழ்ந்தவரே புனித ஃபிதேலிஸ். இவர் 1577ஆம் ஆண்டு ஜெர்மனியில் சிக்மரிங்கன் என்ற இடத்தில் பிறந்தார்.


          இறைபக்தியில் சிறந்து விளங்கிய ஃபிதேலிஸ்மெய்யியல் பயின்று பேராசிரியராக பணியாற்றினார். சட்டம் பயின்று முனைவர் பட்டம் பெற்று ஏழை எளிய மக்களின் வழக்குரைஞராக பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றார். வாய்ப்பு கிடைத்த தருணங்களில் திரும்பலியில் கலந்து கொண்டார். நற்கருணை ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட அவர் முன்பாக மண்டியிட்டு செபித்தார். தனது உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். நேர்மையாக பணியாற்ற வழக்குரைஞர் பணி தடையாக இருப்பதை உணர்ந்து வழக்குரைஞர் பணியை துறந்து ஃபிதேலிஸ் கப்புச்சியன் துறவு சபையில் சேர்ந்தார்.


       ஃபிதேலிஸ் துறவு வாழ்வின் பயிற்சிகள் பெற்று 1612 குருத்துவ அருள்பொழிவு பெற்றார். மறையுரைகள் வழியாக இறைவனின் அன்பையையும் இறைவார்த்தையையும் எடுத்துரைத்தார். ஒப்புரவு வழங்க தனது நேரத்தை செலவிட்டார். கால்வின் தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். பிறர் தன்னை குற்றப்படுத்திய தருணங்களில் அமைதியாக இருந்தார். ஆர்வமுடன் தனது உயிர்மூச்சாக நினைத்து நற்கருணை ஆண்டவரை ஆராதித்த ஃபிதேலிஸ் 1622ஆம் ஆண்டு கால்வினின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார். 

Monday 23 April 2018

புனித ஜார்ஜியார்

     கிறிஸ்துவுக்காக துன்பங்கள் ஏற்றுக்கொண்ட தியாகம் மிகுந்த ஒரு பெரிய புனிதர். இறைபக்தியும் இறையன்பும் இறைஞானம் தனதாக்கிய துறவி. கிறிஸ்தவ மக்களால் பேரரசருக்கு பாதுகாப்புதானே அன்றி பாதகம் இல்லை என்றுகூறி துன்புற்ற கிறிஸ்த மக்களுக்காக பேரரசனிடம் பரிந்து பேசியவர். மிகவும் தாழ்மையானவர், செபம் தனது உயிர் மூச்சாக மாற்றியவர். பொறுமையும் இறைபக்தியும் மிகுந்த சிறந்த இராணுவ வீரர். இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்து இடுக்கமான பாதையில் புனிதமுடன் பயணம் செய்து புனிதராக மாறியவரே புனித ஜார்ஜியார். இவர் பாலஸ்தினாவில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் 275ஆம் ஆண்டு திரு.ஜெரோன்சியஸ் திருமதி பாலிக்ரோனியா என்பவரின் மகனாகப் பிறந்தார்.


    கிறிஸ்தவ விசுவாசத்தில் வாழ்ந்த பெற்றோர் ஜார்ஜியாரை இறைபக்தியிலும் பொறுமையிலும் திறமையிலும் வளர்ந்துவர கற்றுக்கொடுத்தார்கள். அறிவில் சிறந்து விளங்கிய ஜார்ஜியார் தனது 20ஆம் வயதில்  சிறந்த முறையில் போர் பயிற்சி பெற்று டயோக்ளியஸ் பேரரசன் போர் படையில் சேர்ந்தார். பேரரசருக்கு ஒரு ஏகாதிபத்திய பாதுகாவலராக பணியாற்றினார். போர் வீரராக தனது பணியாற்றியத் தருணத்தில் தனது பெற்றோரை இழந்தார். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் இன்றி தவித்தபோது இறைவனின் துணை நாடினார். இறைவனின் அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் பெற்றுக்கொண்டார். அரசரின் மனம் கவர்ந்த சிறந்த போர் வீரராகவும் உற்ற தோழனாகவும், அரசவைத் தலைவர்களுள் ஒருவராகவும் படைத் தளபதியாகவும் உயர்ந்தார்.



   ஒருமுறை ஜார்ஜியார் சைலனா என்னும் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். சைலனா என்னும்  இடத்தில் பறவை நாகம் ஒன்று ஊருக்குள் வந்து மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்தது. பறவை நாகத்திற்கு விலங்குகள் பறவைகள் இரையாகப் போட்டார்கள். நாட்கள் நகர விலங்குகளை இரையாக போட வேண்டிய நிலை ஏற்பட்டது. தினமும் குலுக்கல் முறையில் மக்களை தேர்ந்தெடுத்தார்கள். ஒருமுறை அரசரின் மகளின் பெயர் விழுந்தது. இத்தருணத்தில் அரசன் பறைவை நாகத்திடமிருந்து தனது மகளை காப்பற்றுவோருக்கு தனது மகளை திருமணம் செய்து தருவதாகவும் அத்துடன் தனது செல்வம் அனைத்தும் தருவதாக வாக்களித்தார். இத்தருணத்தில் ஜார்ஜியார் பறவை நாகத்தை கொன்று அரசரின் மகளை காப்பாற்றினார். அரசனின் மகளை திருமணம் செய்யாமல் நற்செய்தி அறவிக்க அனுமதி கேட்டார். அரசனின் அனுமதிப் பெற்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்தார். எண்ணற்ற மக்கள் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மாறினர்.


    கிறிஸ்தவம் விரைவாக பரவிக்கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட டயோக்ளியஸ் அரசன் கிறிஸ்தவ மக்களை கொலை செய்ய ஆணையிட்டான். இதைக்கேள்விப்பட்ட ஜார்ஜியார், டயோக்ளியஸ் பேரரசனிடம் சென்று கிறிஸ்தவர்களுக்காக பரிந்துபேசினார். ஜார்ஜியார் கிறிஸ்தவர் என்று உணர்ந்துகொண்ட அரசன் கொந்தளித்தான். அப்பொல்லோவை வணங்க ஆணையிட்டான். கிறஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட வீரதளபதி ஜார்ஜியார் கிறஸ்து ஒருவரை மட்டுமே ஆராதிப்பேன் என்று உறுதியுடன் கூறினார். அரசன் கோபம் கொண்டு ஜார்ஜியாரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான். பலவாறு துன்பங்கள் ஏற்ற ஜார்ஜியார் கிறிஸ்துவை மறுதலிக்காமல் வீரமுழக்கம் செய்தார். ஜார்ஜியார் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கை பார்த்த இராணுவ வீரர்களும் மந்திரவாதியும் மனம் மாறினர். டயோக்ளியஸ் மிகுந்த கோபம் கொண்டு ஜார்ஜியாரை கழுமரம் ஏற்றி கொலை செய்து உடலை கடலில் வீசினான். ஜார்ஜியார் மறுநாளே உயிருடன் வந்தார். மீண்டும் அவரை தீயிட்டு எரித்தனர். அதிலிருந்நும் உயிர் பிழைத்தார். இறுதியாக சக்கரத்திலிட்டு அரைத்து உருக்கிய ஈயத்திலிட்டு மூடி ஆழ்குழியில் புதைத்தான். அவ்வாறு ஜார்ஜியார் 303ஆம் ஆண்டு ஏப்பல் திங்கள் 23ஆம் நாள் இறந்தார். 

Sunday 22 April 2018

புனித சோட்டரூஸ்

      வறுமையில் வாழ்ந்த மக்களை தேடிச்சென்று உதவி செய்தவர். தன்னை நாடி வந்தோர்மீது அன்பையையும் பாசத்தையும் பொழிந்தார். புனிதமான படிகளுக்கு முக்கியவத்துவம் கொடுத்து வாழ்ந்தவரே புனித சோட்டரூஸ். இவர் ஐத்தாலி நாட்டில் ஃபான்டி என்ற இடத்தில் பிறந்தார். சிறுவயது முதல் இறைபக்தியில் வளர்ந்து நற்பணிகள் செய்தார். தனது வாழ்வை இறையாட்சி பணிக்காக அர்ப்பணம் செய்து குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார்.


    இறைவன் காட்டிய பாதையில் பாதங்கள் பதராமல் அனைவருக்கும் நன்மைகள் செய்து பிறரண்பு பணிகள் செய்து தூயவராக வாழ்ந்தார். தன்னை சந்தித்த மக்களுக்கு நன்மைகள் செய்தார். வறுமையில் வந்த மக்களுக்கு உதவி செய்தார். இறைவார்த்தையை ஆர்முடன் வாழ்க்கை சான்றுக்ள வழியாக போதித்தார். இறைவேண்டுதலுக்கு முதன்மையான இடம் கொடுத்த வாழ்ந்த சோட்டரூஸ் 166ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  திருச்சபை மக்களை இறைபாதையில் வழி நடத்திய சோட்டரூஸ் 175ஆம் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார்.

ஏப்ரல் 21, புனித ஆன்செலம்

          இறைவன் வெளிப்படுத்திய மறையுண்மைகளை நூல்கள் வழியாக வெளிப்படுத்தியவர். இறைபக்தி மிகுந்தவர். எழுத்தாற்றல் நிறைந்தவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தாயை இழந்து தவித்த வேளையில் தாயன்பை அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவர். தந்தையின் துன்புறுத்தலுக்கு உள்ளானத் தருணங்களில் இறைவேண்டுதல் செய்து பொறுமையாக இருந்தவரே புனித ஆன்செலம். இவர் லொம்பார்டு நாட்டில் 1033ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்தார். தந்தையின் துன்புறுத்துதல் அதிகரித்த வேளையில் வீட்டிலிருந்து வெளியேறினார்.


      இறைவனின் துணையை ஒவ்வொரு நிமிடமும் தேடினார். இறைவேண்டுதல் செய்வதில் ஆர்வம் காட்டினார். தூய ஆவியின் துணையை பெற்று கல்வி கற்பதில் சிறந்து விளங்கினார். 1057ஆம் ஆண்டு பெக் என்ற இடத்திலுள்ள புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்தார். இறைஞானத்தில் வளர்ந்து தூய்மையாக வாழ்ந்து நற்பண்பில் சிறந்து விளங்கினார். 1060ஆம் ஆண்டு துறவு ஆடைபெற்று உத்தம துறவியாக இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்தார்.


      ஆன்செலம் 1070ஆம் ஆண்டு ஆசிவாதப்பர் சபையின் தலைமை பொறுப்பேற்று துறவிகளை இறைவனின் வழியில் தூயவர்களாக வாழ நற்சான்று நல்கி சபையை திறம்பட வழிநடத்தினார். நூல்கள் வழியாக இறைவனை பற்றி மறையுண்மைகளை இறைவார்த்தையின் உட்பொருளை வெளிப்படுத்தினார். விவிலியம் ஆர்வமுடன் கற்பித்தார். 1093ஆம் கான்றர்பரி மறைமாவட்டத்தின் பேராயராக அருள்பொழிவு பெற்றார். இறைமக்களை இறையாட்சியின் பாதையில் வழிநடத்திய ஆன்செலம் 1109ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் இறந்தார்.

Saturday 21 April 2018

ஏப்ரல் 20. புல்சியானோ நகர் புனித ஆக்னஸ்

   குழந்தைப்பருவம் இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து வாழ்ந்தவர். செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையை விரும்பியவர். குழந்தை இயேசுவிடம் அதிக அன்பும் பற்றும் கொண்டவர். அன்னை மரியாவை தனது தாயாக ஏற்றுக்கொண்டு இறையன்பின் நிறைவில் வாழ்ந்தவரே புல்சியானோ நகர் புனித ஆக்னஸ். இவர் இத்தாலி நாட்டில் மோன்ட்ரே புல்சியானோ என்ற இடத்தில் 1268ஆம் ஆண்டு பிறந்தார்.

       ஆக்னஸ் தனது ஆறாம் வயதில் துறவு மடம் செல்ல விரும்பினார். அருகிலுள்ள துறவு மடத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். அவர் பிறந்தபொழுது அப்பகுதியில் அற்புதமான ஒளி சூழ்ந்தது.  தனது தூய்மையான வாழ்க்கையால் தீமைகளை தூயதாக மாற்றினார். தனது ஒன்பதாம் வயதில் பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் சேரந்தார். உலக இன்பங்களையும் வசதியாகன வாழ்க்கை முறைகளை துறந்து ஏழ்மையை பின்பற்றினார். சாக்கு உடை அணிந்து தவம் மேற்கொண்டார். அன்னை மரியாவிடம் தன்னை அர்ப்பணம் செய்தார்.

      ஆக்னஸ் அன்னை மரியாவின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். தனது இன்பத்துன்பங்களை அவரோடு பகர்ந்து கொண்டார். ஒருமுறை அன்னை மரியா குழந்தை இயேசுவுடன் காட்சி கொடுத்தார். அத்தருணம் குழந்தை இயேசுவை ஆக்னஸ் கொடுத்தார். தனது 17ஆம் வயதில் புல்சியானோ நகரில் இருந்த துறவு மடத்தின் பெறுப்பு ஏற்று துறவிகளை சிறந்த முறையில் வழிநடத்தினார். பணியாளர்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டபோது அற்புதமான முறையில் உணவு பலுக செய்தார். இறைவனின் வழிகாட்டுதலால் பிரான்சிஸ்கன் துறவு மடத்திலிருந்து வெளியேறி 1306ஆம் ஆண்டு புதிய துறவு சபையை தோற்றுவித்தார். தியானம், தவ வாழ்விற்கு முக்கியத்தும் கொடுத்தார். அன்னை மரியாவின் கரம் பிடித்து இறையன்பில் வளர்ந்து, நோயுற்றோரை நலமாக்கிய ஆக்னஸ் 1317ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20ஆம் நாள் இறந்தார்.

ஏப்ரல் 19. புனித ஒன்பதாம் சிங்கராயர்

           
         கத்தோலிக்க விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்து நின்றவர். இறைவனின் கருணையை அளவில்லாமல் பெற்றவர். இவரது இயற்யெர் புருனோ என்பதாகும். கல்வி கற்பதில் சிறந்து விளங்கினார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரே புனித ஒன்பதாம் சிங்கராயர். இவர் பிரான்ஸ் நாட்டில் எகிசிம் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தை இரண்டாம் கான்ராடின் என்ற அரசரின் உதவியாளராக பணியாற்றினார்.


         சிங்கராயர் தனது ஐந்து வயது முதல் டோல் மறைமாவட்ட ஆயர் பெர்த்தோல்டு என்பரின் பாதுகாப்பில் வளர்ந்தார். ஆயரிடமிருந்து செபிக்க கற்றுக்கொண்டு இறைபக்தியில் வளர்ந்து வந்தார். பள்ளிப்பருவத்தில் விடுமுறைக்காக வீட்டிற்கு வரும் வழியில் விலங்குகளால் தாக்கப்பட்டு உயிருக்காக போராடினார். இத்தருணத்தில் சிலுவையில் தொங்கிய இயேசுவிடம் உருக்கமாக வேண்டுதல் செய்தார். சிங்கராயருக்கு பாடுகள் ஏற்ற இயேசு காட்சி கொடுத்து அவரை குணமாக்கினார்.


         சிங்கராயர் இறைவனின் அன்பும் அரவணைப்பும் பெற்று வளர்ந்தார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை ஆரம்பித்தார். 1027ஆம் ஆண்டு டோல் மறைமாவட்டத்தின் ஆயராக பெறுப்பு ஏற்று இறைமக்களை இறையாட்சி பாதையில் வழிநடத்தினார். திருச்சபையை அன்பு செய்தார். பஞ்சத்தில் துன்புற்ற மக்களுக்கு உதவி செய்தார். 1049ஆம் ஆண்டு திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த சிங்கராயர்1054ஆம் ஆண்டு இறந்தார்.


Friday 20 April 2018

ஏப்ரல் 18. புனித கால்டினுஸ்

          செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். உலக இன்பங்களையும் செல்வங்களையும் இறைவன்மீது கொண்ட அன்பினால் துறந்தவர். கல்வி அறிவில் சிறந்து விளங்கினார். தூய்மையான வாழ்வை விரும்பினார். தன்னால் இயன்றவரை பிறருக்கு உதவியாக வாழ்ந்தவரே புனித கால்டினுஸ். இவர் இத்தாலி நாட்டில் மிலான் நகரில் 1100ஆம் ஆண்டு செல்வந்த கடும்பத்தில் பிறந்தார். கால்டினுஸ் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையை பின்பற்றினார். அன்பும் அமைதியும் மிகுந்த குடும்பத்தில் வாழ்ந்தார். கல்வி கற்று இறைஞானம் மிகுந்தவராக வளர்ந்தார். 


     கால்டினுஸ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணிக்க திருவுளம் கொண்டார். தனது வாழ்வை இறைவனுக்காக இறையாட்சி பணி செய்ய திருத்தொண்டராக அருள்பொழிவு பெற்றார். சிறந்த முறையில் இறைவார்த்தையை மறையுரை வழியாக எடுத்துரைத்தார். துன்பங்கள் சவால்கள் மிகுந்த காலத்தில் வாழ்ந்த கால்டினுஸ் 1165ஆம் ஆண்டு உரோமையில் உள்ள சாந்த சபினா பேராலயத்தின் பங்கு தந்தையாக திருந்தந்தையால் நியமணம் பெற்று இறைமக்களை இறைவல்லமையால் வழிநடத்தினார். இறைவனுக்காக இறையாட்சி பணி செய்த கால்டினுஸ் 1176ஆம் ஆண்டு இறந்தார்.  

ஏப்ரல் 17 புனித அனிசெத்தூஸ்

       இறைஞானத்தின் வல்லமையால் இறைமக்களுக்கு நல்வழிகாட்டியவர். இறைவனின் திருவுளத்திற்கேற்ப தாழ்ச்சியின் வழியில் பயணம் செய்து நற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். புனிதர்களின் வாழ்க்கை முறைகளை ஆர்முடன் அறிந்துகொண்டு அவர்களை போல இறைவனை அன்பு செய்தவர். தன்னலமற்ற பணிகள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவரே புனித அனிசெத்தூஸ்.


       அனிசெத்தூஸ் 155ஆம் வண்டு திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். இவருடை ஆட்சி காலத்தில் திருச்சபை மக்கள் பல துன்பங்களுக்கு உள்ளாகினர். பிரச்சனைகளை தூய ஆவியின் வல்லமையால் சுலபமாக எதிர்கொண்டு தீர்வு கண்டார். புனிதர்கள் யோவான் மற்றும் பிலிப்பு ஆகியோரின் வழியில் இறைமக்களை வழிநடத்தினார். துன்பத்தில் இறைவன்மீது நம்பிக்கை கொண்டு வாழ கற்பித்தார்.


        அனிசெத்தூஸ் திருத்தந்தையாக இருந்தக் காலத்தில் புனிதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பாரம்பரியங்களைப் பின்பற்றி உயிர்ப்புப் பெருவிழா நிசான் மாதத்தின் 14ஆம் நாள் கொண்டாட நடைமுறைக்கு கொண்டு வந்தார். திருச்சபையை இறைவனின் விரும்பியபடி வழி நடத்தினார். மாற்குஸ் அவுரேலியுஸ் என்பவர் கிறிஸ்தவ மக்களை கிறிஸ்துவை மறுதலிக்க துன்புத்தினான். அனிசெத்தூஸ் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக 161ஆம் ஆண்டு இறந்தார்.

Tuesday 17 April 2018

ஏப்ரல் 16. புனித பெர்னதெத்


        “துன்பத்தை அன்பு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் ஆண்டவர் அவருடைய நண்பருக்கு முட்களால் ஆன கிரீடத்தைக் கொடுக்கிறார். அதை விடச் சிறப்பானதைத் தேடாதீர்கள். கிரீடம் அணிந்த அரசியை விடவும், என் படுக்கையில் என் சொந்தச் சிலுவைகளோடு மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்று வாழ்வால் வாழ்ந்துகாட்டியவர். இயேசுவை இதயத்திலும், அமல உற்பவியான அன்னை மரியாவைத் தன் கரங்களிலும் பற்றி, ஏழ்மையிலும் மகிழ்ச்சியாகவும், செபமும், ஒறுத்தலும் ஆயுதமாகப் பயன்படுத்தி பாவிகளின் மனமாற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து, வேதனைகளையும், சோதனைகளையும் இன்முகத்தோடு ஏற்றுத் தூய்மையாக வாழ்ந்தவரே புனித பெர்னதெத். இவர் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியிலுள்ள லூர்து நகரில் பிரான்சிஸ் என்பவருக்கு, கி.பி.1844ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7ஆம் நாள் பிறந்தார்.

       பெர்னதெத்  குடும்பத்தில் வறுமையும், ஏழ்மையும் நுழைந்தத் தருணம் அன்பும், பாசமும் தலைதூக்கி அவற்றை மறைத்தன. தனது குடும்பத்தின் வறுமையை உணர்ந்தவர். தாய்க்கு உதவுவதில் மிகுந்த கவனம் செலுத்தினார். இவர் சிறுவயதிலேயே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பலவிதமானத் துன்ப துயரங்களைச் சந்தித்தார். நோயின் வேதனைக்குத் தாயின் அன்பும், அரவணைப்பும் அருமருந்தாயின. சரியான மருத்துவமும், போதுமான உணவும் கிடைக்காத நேரங்களில் அமைதியாக இருந்தார்.


         பெர்னதெத் காட்டில் ஆடுகளை மேய்க்கும்போது கற்களால் சிறிய பீடம் அமைத்து, திருச்சிலுவையை நாட்டிச் செபித்தார். இறைமகன் இயேசுவை இதயத்தில் நற்கருணை வழியாகப் பெற்றிட மறைக்கல்வியும், செபங்களும் கற்று தனது 14ஆம் வயதில் முதல் முறையாக நற்கருணையைப் பெற்றுக்கொண்டார். அன்றைய நாள் “என் வாழ்நாள் முழுவதும் என் இதயம் இயேசுவை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும்” என்று தீர்மானித்து அவ்வாறே வாழ்ந்த. செபமாலை செபிப்பதை ஒருபோதும் அவர் மறக்கவில்லை. ஒருபோதும் தன்னைப் பற்றி தற்பெருமையாக நினைத்ததில்லை. எப்பொழுதும் தாழ்ச்சியுடன், உண்மையைப் பேசி, எல்லோருக்கும் மதிப்பும் மரியாதையும் செலுத்தினார். கள்ளங்கபடற்ற குழந்தையுள்ளம் கொண்டவராய்க் காணப்பட்டார். தாய் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.


      நேவேர் ஆயர் லூர்து நகருக்கு வந்தபோது பெர்னதெத் ஆயரிடம் சென்று, “நான் ஒரு துறவியாக வாழ விரும்புகிறேன். ஆனால் நான் ஒரு ஏழை; படிப்பறிவு இல்லாதவர்; நோயாளி; என்னைத் துறவறச் சபையில் சேர்க்க அனுமதித் தாருங்கள்” என்றார். ஆயரும் பெர்னதெத்திடம்“நீர் இரண்டு ஆண்டுகள் ஓஸ்பீஸ் கன்னியர் இல்லத்தில் தங்க வேண்டும்” என்றார். அவ்வாறு அன்னை மரியின் அன்பும், அரவணைப்பும் பெற்ற லூர்து நகரை விட்டுப்பிரிய மனமில்லாமல், நெவேர் நகரில் இருந்த பிறரன்பு சகோதரிகள் இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் செபத்திலும் சேவையிலும் செலவிட்டார்.

“மகளே! நீ பாவிகளுக்காகச் செபம் செய்! பாவிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றது. எனவே பாவிகளுக்காக நன்கு செபம் செய்” என்று கூறிய அன்னை மரியாவின் அழைப்பிற்குச் செவிமடுத்து பாவிகள் மனமாற தியாகம் செய்து செபித்தார். பெர்னதெத்“என் ஆயுதங்கள் செபமும், ஒறுத்தலும். அவற்றை நான் சாகும் வரையில் கடைபிடிப்பேன். ஒறுத்தல் ஆயுதம் இவ்வுலகில் முடிந்துவிடும். செப ஆயுதமோ என்னோடு விண்ணகத்துக்குவரும்”  என்ற பெர்னதெத்  1879ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் இயற்கை எய்தி வான்வீட்டில் நுழைந்தார். 

Sunday 15 April 2018

புனித பெனடிக்ட் ஜோசப் லாப்ரே

     
     இறைவனின் அழைப்பை உணர்ந்து இறையாட்சி பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர். தனது கரங்களில் செபமாலை, விவிலியம் எப்பெழாதும் வைத்திருந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் கருத்தாய் இருந்தவர். இறையாட்சி பணி செய்ய தடையாக இருந்தவற்றை செபத்தின் வழியாக வெற்றியின் படிகளாக மாற்றியவரே புனித பெனடிக்ட் ஜோசப் லாப்ரே. இவர் பிரான்ஸ் நாட்டில் பொலோன் மறைமாவட்டத்தில் அமெட்டஸ் என்னுமிடத்தில் 1748ஆம் ஆண்டு பிறந்தார்.


          பெனடிக்ட் ஜோசப் லாப்ரே சிறுவயது முதல் தனது சித்தப்பாவின் வீட்டில் தங்கி கல்வி கற்றார். சிறந்த முறையில் கல்வி கற்றார். சிறுவயது முதல் செபிப்பதில் ஆர்வம் காட்டினார். இறைவனுக்காக பணி செய்ய இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்தார். தனது சித்தப்பாவின் வழிகாட்டுதலால் லா ட்ராப்பே என்ற இடத்திலுள்ள சிஸ்டர்சியன் துறவு இல்லத்தில் சேர்ந்து குருவாக இறையாட்சி பணி செய்ய சென்றார். தமது தாழ்ச்சியின் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார்.


     பெனடிக்ட் ஜோசப் லாப்ரே தாழ்ச்சியின் வழிகளில் நடந்து இறைவனுக்கு உகந்த முறையில் இறையாட்சி பணி செய்தார் இரக்கம் நிறைந்த பணிகள் செய்தார். அன்பு, அமைதி, பொறுமை போன்ற புண்ணியங்களில் வளர்ந்து அனைவரின் அன்பிற்கு தகுதியானார். கடும்தவ முயற்சிகள் மேற்கொண்டு தியாகச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். இறைவனோடு வேண்டுதல் செய்த தருணத்தில் இறைவனின் குரல் கேட்டார். உலக இன்பங்களை துறந்து கடும்தவ வாழ்வை மேற்கொண்டார். எங்கு சென்றாலும் தனது கரங்களில் விவிலியம், செபமாலை எடுத்து சென்றார். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்த பெனடிக்ட் ஜோசப் லாப்ரே 1783ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் இறந்தார்.

Friday 13 April 2018

ஏப்ரல் 10 புனித ஃபுல்பெர்ட்

   
         இறைஞானத்தில் சிறந்து சிறந்த முறையில் கல்வி கற்றவர்.  தூய சிந்தனை உடையவர். துறவு வாழ்கையின்மீது அதிக ஆர்வம் கொண்டு வாழ்ந்தவரே புனித ஃபுல்பெர்ட். இவர் 952ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்தவர். சிறுவயது முதல் அன்பிலும் அறிவிலும் பக்தியிலும் நற்பண்பிலும் சிறந்து விளங்கினார். தெளிந்த சிந்தனையுடன் தூய வாழ்க்கை வாழ் விரும்பி முயற்சி செய்தார். இறைவனின் முன்பாக அமர்ந்து செபிப்பதில் ஆனந்தம் அடைந்தார்.


         இறைநம்பிக்கையில் சிறந்து விளங்கிய ஃபுல்பெர்ட் குருவாக அருள்பொழிவு பெற்று இறைபணி செய்ய விரும்பினார். 1007ஆம் ஆயராக அருள்பொழிவு பெற்றார். கல்வி பணியும் புனித ஹிலாரி ஆலயத்தின கருவூலக்காப்பாளராக பணியாற்றினார். சமூக விரோதிகளால் துன்புறுத்தப்பட்டபோது இறைவனிடம் தஞ்சம் புகுந்தார். தன்னை துன்புறுத்திய மக்களுக்காக வேண்டுதல் செய்தார். அனைவரிடமும் அன்பும் பாசமும் கொண்டு துறவிகள், குருக்கள் மற்றும் இறைமக்களையும் வழி நடத்தினார். பாடல்கள் எழுதிய இறைவனை போற்றி புகழ்ந்த ஃபுல்பெர்ட் 1029ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் இறந்தார். 

ஏப்ரல் 9 புனித வால்டேட்ரூடிஸ்

         
    இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து புண்ணிய வாழ்க்கை வாழ்ந்தவர். அழகும் அறிவும் அர்ப்பணிப்பும் மிகுந்தவர். கனிவும், தூய்மையும், புண்ணியமும், நற்பண்புகளும் நிறைந்தவர். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வாழ்ந்தவரே புனித வால்டேட்ரூடிஸ். இவர் ஏழாம் நூற்றாண்டில் பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர்.

         அறிவும் அழகும் நிறைந்த வால்டேட்ரூடிஸ்  நற்பண்பில் வளர்ந்து வந்தார். அவரை பலர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவரது பெற்றோர் மடெல்கார் என்ற இளைஞரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைத்தார்கள். வால்டேட்ரூடிஸ் தன் கணவருடன் சேர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவினார். நற்பண்பில் சிறந்து விளங்கினார். நான்கு பிள்ளைகளுக்கு தாயாக மாறினார். பிற்களை நற்பண்பிலும் தூய்மையிலும் வளர்த்தினார்.

         வால்டேட்ரூடிஸ் செய்து நற்பணிகளை விரும்பாத சிலர் அவர்மீது குற்றம் சுமத்தினர். அவரது கணவருரிடம் அவரை பற்றி தவறாக கூறினார்கள். பல துன்பங்களை சந்தித்தவேளையில் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவிடம் அர்ப்பணம் செய்து வாழ்ந்தார். தனது கணவரின் அனுமதியுடன் தனது சொத்துகளை விற்று ஏழை மக்களுக்கு பகிர்ந்தார். கணவரின் அனுமதி பெற்று வாழ்வின் இறுதி காலக்கட்டத்தில் துறவு இல்லத்தில் வாழ்ந்தார். இறைவனை தஞ்சம் என்று வாழ்ந்த வால்டேட்ரூடிஸ் 688ஆம் ஆண்டு இறந்தார்.

Sunday 8 April 2018

புனித ஜøலி பில்லியார்ட்

      ஆண்டவரை ஒளியாக வழியாக அன்பாக அருளாக கண்முன் வைத்து வாழ்ந்தவர். ஆசியர் பணியின் மீது தணியாத தாகம் கொண்டவர். ஆன்மீக வாழ்க்கையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். திருச்சபையின் விசுவாசக் கோட்பாடுகளை முறையாக பின்பற்றி இறைநம்பிக்கையில் வளர்ந்து வந்தார். ஆலயம் சென்று திருப்பலியில் பங்கு கொண்டார். நற்கருணையின் மீது அதிக பக்தியும் பற்றும் கொண்டு வாழ்ந்தவரே புனித ஜøலி பில்லியார்ட். இவர் பிரான்ஸ் நாட்டில் குவில்லி என்ற இடத்தில் 1751ஆம் ஆண்டு பிறந்தார்.

       ஜøலி குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் வளர்ந்து வந்தார். ஆசிரியர் பணியை விரும்பினார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் வளர்ந்து நற்பண்பில் சிறந்து விளங்கினார். புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆர்வமுடன் கற்றார். ஜøலியாவின் தந்தையிடம் பகை கொண்டவர் அவரின் தந்தையை சுட்டபோது ஜøலி மீது பட்டன. குண்டிப்பட்ட ஜøலி 30ஆண்டுகள் துன்புற்றார். துன்பங்களின்போது இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தார். தனது துன்பங்களை ஆன்மாக்களின் மீட்புக்காக ஒப்புக்கொடுத்தார்.
      ஜøலிக்கு உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து துறவுகளுடன் காட்சி தந்தார். காட்சியின் வழியாக குணமடைந்தார். கிறிஸ்துவுக்காக வாழ்வை அர்ப்பணம் செய்து அவரது இறையாட்சி பணி செய்ய விரும்பினார். தனது தோழியுட் இணைந்து 1803ஆம் ஆண்டு புதிய சபையை தோற்றுவித்தார். ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கல்வி கற்பித்தார். சமூகத்தில் கல்விப்பணி வழியாக கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தைகளை அறிவித்தார். துறவு வாழ்க்கையின் விதிகளை முறையாக பின்பற்றினார். அனாதைகள் ஏழை எளிய மக்களின் அன்னையாக பணியாற்றிய ஜøலி 1816ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் இறந்தார்.

Saturday 7 April 2018

புனித யோவான் பேப்டிஸ்ட் தெலசால்

      இறைவனே தஞ்சம் என்று கருதி தனது கடமைகளை சரிவர செய்து வாழ்ந்தவர். காலத்திற்கேற்ற கல்விமுறைத் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தாழ்ச்சியிலும் பக்தியில் சிறந்து விளங்கியவர். ஒயாமல் இறையாட்சி பணி செய்தவர். துன்பத்தின் சூழலில் இறைவனே தஞ்சம் என்று நம்பிக்கையுடன் முன்னேறினார். ஏழை எளிய மக்களை அன்பு செய்து அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்தவரே புனித யோவான் பேப்டிஸ்ட் தெலசால். 
     
      யோவான் பேப்டிஸ்ட் தெலசால் பிரான்ஸ் நாட்டில் 1651ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 30ஆம் நாள் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியிலும் பிறரன்பிலும் வளர்ந்து வந்தார். செப வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெற்றோருக்கும் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிதல் உள்ளவராக வளர்ந்து வந்தார். சிறுவயதிலே பெற்றோரை இழந்தார். பெற்றோரை இழந்தபோது இறைவனிடம் தஞ்சம் அடைந்தார். அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு தாயன்பை அன்னையிடம் பெற்றுக்கொண்டார். 
   
    பேப்டிஸ்ட் தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இறையாட்சி பணி செய்ய விரும்பினார். குருத்துவ பயிற்சி பெற்று 1678ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார். இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். இளைஞர்களிடம் தோழமை உறவு கொண்டு தவறான வழியில் சென்று பாவத்தின் பிடியில் வாழ்ந்த மக்களுக்கு நல்வழிகாட்டி மனந்திருப்பினார். ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி கற்க உதவினார். தனது நேரத்தை ஏழை மக்களுக்காக செலவிட்டு கல்வி கற்பித்தார்.
 
     யோவான் பேப்டிஸ்ட் வசதியான வாழ்க்கை முறைகளையும் பணத்தின் மீதும், பதவிகள் மீதும் பற்றற்று வாழ்ந்தார். தனது செல்வத்தையும் பொருளையும் நேரத்தையும் ஏழை எளிய மக்களுக்காக செலவிட்டார். மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க புதிய முறைகளை பின்பற்றினார். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். இளைஞர்களுக்கு நல்வழி காட்டினார். கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு சான்றாக வாழ்ந்து மற்றுள்ளவரையும் அந்நிலைக்கு கொண்டுவர கடினமாக உழைத்த யோவான் பேப்டிஸ்ட் தெலசால் 1719ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் நாள் இறந்தார்.

புனித முதல் செலஸ்டின்

    கிறிஸ்துவின் ஒளியாக வழியாக அன்பின் பணியாளராக வாழ்ந்தவர். அன்னை மரியாவிடம் அன்பும் மதிப்பும் பக்தியும் கொண்டு வாழ்ந்தவர். இறைவனை நினைத்து வாழ்ந்தவர். திருச்சபைக்கு எதிராக எழுந்த தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்கி நற்சான்றுகளுடன் நற்செய்தி அறிவித்தவர். திருச்சபையை அன்பு செய்தவர். பாவிகள் மீது பரிவன்பு கொண்டு நல்வழி காட்டியவரே புனித முதலாம் செலஸ்டின். இவர் உரோம் நகரில் கம்பானியாவில் பிறந்தார். 




செலஸ்டின் மிலான் நகரில் வாழ்ந்த புனி அம்புரோஸ் அவர்களை ஆன்மீக தந்தையாக ஏற்றுக்கொண்டு அவருடன் வாழ்ந்தார். திருத்தந்தை முதலாம் இன்னொசென்டின் ஆட்சி காலத்தில் திருத்தொண்டராக பணியாற்றினார். திருச்சபையின் வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டார். நெஸ்தோரியஸின் தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். கிறிஸ்துவின் உண்மை சீடராக வாந்தார். 


அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு அன்னை மரியாவுக்கு எதிராக கூறப்பட்ட தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அன்னை மரியாவின் அன்பும் அரவணைப்பு பெற்று திருச்சபையின் விசுவாசக் கோட்பாடுகளை அறிவித்தார். அன்னை மரியாவின் ஆலயத்தை புது பொலிவுடன் சீரமைத்தார். புனித ப்ராஸ்பர் அவர்களால் “செலஸ்டின், உரோமையில் நம்பிக்கையைக் காப்பாற்றினார். கிறிஸ்துவை அறியாத அயர்லாந்தில் கிறிஸ்துவின் ஒளியை கொண்டிருந்தார்” என்று கூறினார்.  இறைவனுக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்து அவருக்காக வாழ்ந்த செலஸ்டின் 432ஆம் ஆண்டு ஜøலை 27ஆம் நாள் இறந்தார்.

Friday 6 April 2018

புனித வின்சென்ட் ஃபெரர்

குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்பு இரக்கம், கீழ்ப்படிதல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற நற்பண்பில் சிறந்து விளங்கினார். இறைவார்த்தையை வாழ்வாக்கி கற்பித்த தலைசிறந்த மறைவல்லுநர். இறைவனின் நிலைவாழ்வுதரும் வார்த்தைகளை தவறின்றி போதித்தவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் பாசமும் கொண்டு தூயவராக வாழ்ந்து வந்தவரே புனித வின்சென்ட் ஃபெரர். இவர் 1350ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார்.


     வின்சென்ட் ஃபெரர் ஏழை எளிய மக்களிடத்தில் அன்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்தார். ஏழைகள் இறைவனின் அன்பு பிள்ளைகள் எனவே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந்தார். அன்னை மரியிடமும். ஏழைகளிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டார். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நோன்பிருந்து  இறைச்சி மற்றும் உயர்தர உணவுகளை உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர்கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார்.


        வின்சென்ட் எட்டு வயதில் பாரம்பரிய ஆய்வுக்கான படிப்பைத் தொடங்கினார். பதினான்கு வயதில் தத்துவயியலையும், இறையியலையும் கற்றார். தமது பதினெட்டாம் வயதில், "டொமினிக்கன் சபையில்" சேர்ந்து தன்னை கடவுளுக்கு அர்ப்பணமாக்கினார். அன்னை மரியாவின் துணையால் தனது துன்பங்களை தாங்கிக்கொண்டு துறவு பயிற்சிகளை பெற்று குருவானார். தத்துவயியல் ஆசிரியராகவும் மறைபரப்பு பணியும் செய்தார். இரவு பகலென்று பாராமல் கப்பலில் பயணித்து போதித்தார். இதை கவனித்த கப்பலில் பயணம் செய்த சிலர், இவரை வதைத்து, கேலி செய்வதற்காக உயிருடனிருந்த ஒருவரை இறந்ததுபோல நடிக்கச்செய்தனர். இவர் இறந்த பிணத்தின் முன் செபித்தார். இதை கண்டு அவரைச் சுற்றியிருந்தவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். ஆனால் இவரின் வல்லமையை வெளிப்படுத்த இறைவன் உண்மையிலேயே அவரை இறக்கச் செய்தார். இதையறிந்த பரிகாசம் செய்தோர் பயம் கொண்டு, தவற்றை உணர்ந்து, தாங்கள் கூறிய பொய்யை மன்னிக்கும்படி வேண்டி, மனம்மாறி கிறிஸ்துவை பின் தொடர்ந்தார்கள்.


   வின்சென்ட் இடைவிடாது இறைவேண்டலில் ஈடுபட்டார். குருத்துவ வாழ்வில் பலவிதமான நோய்களை குணமாக்கி, இறைசக்தியை வெளிப்படுத்தினார்.  21 ஆண்டுகள் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாவிகள் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்து, செய்யும் செயல்களில் "உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனை நினைத்துக்கொள்" என்ற இப்புனிதரின் வார்த்தை மற்றவர்களை ஆழமாக சிந்தித்து செயல்பட தூண்டியது. தனது இறுதி மூச்சு வரை ஓர் சிறந்த குருவாகவே வாழ்ந்து, ஏப்ரல் 5ம் நாள் 1418ம் ஆண்டு இறந்தார்.


Wednesday 4 April 2018

புனித இசிதோர்


 இறைவனால் அழைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டவர். துறவிகள் குருக்கள் மீது அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டவர். எண்ணற்ற மக்களுக்கு ஆன்மீக தந்தையாக இருந்து வழிகாட்டியவர். உலக இன்பங்களில் மூழ்கி இறைவனை மறந்து வாழ்ந்த மக்களின் தவறுகளை எடுத்துரைத்தவர். இறைவனை தியானம் செய்து இறைபிரசன்னத்தின் வழியாக இறைவனை மாட்சி படுத்தியவரே புனித இசிதோர். இவர் 560ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார்.


இறைவேண்டுதல் செய்து ஞானமும் அறிவும் பெற்றார். இலத்தின், கிரேக்கம் போன்ற மொழிகளை பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். இறைபக்தி மிகுந்த இசிதோர் அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அன்னையின் துணையை ஒவ்வொரு நிமிடமும் நாடினார். இறையாட்சி பணிக்காக இறைவன் தன்னை அழைப்பதாக உணர்ந்து இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்தார். குருத்துவ பயிற்சி பெற்று குருவாக அருள்பொழிவு பெற்று சிறந்த முறையில் இறையாட்சி பணி செய்தார்.



     இசிதோர் குருக்கள், துறவிகள் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். ஏழை எளிய மக்களின் நலன்மீது மிகுந்த அக்கறை செலுத்தி அவர்களுக்கு உதவிகள் செய்தார். செவிலே நகரின் ஆயராக அருள்பொழிவு பெற்றார். மக்கள் ஆன்மீக வாழ்வில் அக்கறையற்று வாழ்ந்தபோது அவர்களுக்கு நல் வழிகாட்டினார். தாய்நாட்டின் கலாச்சாரங்களை மறந்து மக்கள் வாழ்ந்தபோது அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி இறைவனை இனம் காட்டினார். இறைமக்களுக்காக வாழ்ந்து இறையாட்சி பணி செய்த இசிதோர் 636ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் இறந்தார்.

புனித ரிச்சர்ட்


         புனிதமான வாழ்வை விரும்பியவர். இறைவனின் துணையை நாடி அவரது நிழலில் வாழ்ந்தவர். இறைபாதத்தில் அமர்ந்து தனது அறிவை வளர்த்துக்கொண்டாவர். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் ஆதரவும் பெற்று தூயவராக வாழ்ந்தார். துன்பத் துயரங்களில் இறைவனே தஞ்சம் என்று வாழ்ந்தவரே புனித ரிச்சர்ட். இவர் 1197ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ட்ரூய்ட்விச் என்னும் இடத்தில் பிறந்தவர். இளம்வயதில் தந்தையை இழந்தார். தாயின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். 

        தனது அறிவை வளர்த்துக்கொள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்றார். வசதியான ஆடம்பரமான வாழ்க்வை வாழ்வதற்கான வாய்ப்புகள் பெற்றிருந்தாலும் எளிமையான வாழ்வை விரும்பி ஏழ்மையை பின்பற்றினார். கிறிஸ்துவின் எளிமையை பின்பற்றி வாழ்ந்தார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டபோது தூயவராக வாழ்ந்தார். ரிச்சர்ட் தூய வாழ்க்கையை பார்த்த வின்கோன் ஆயர் ராபர்ட் இவரை தனது மறைமாவட்டத்தின் தலைமைச் செயலராக நியமணம் செய்தார். அனைவரிடமும் அன்புடன் தோழமை உணர்வுடன் பழகினார். ரிச்சர்ட் இறைவனோடு உறவுகொண்டு அவருக்காக வாழ விரும்பினார். ஓர்லியன்ஸ் இடத்திலுள்ள சாமிநாதர் துறவு மடத்தில் சேர்ந்து இறையியல் கற்று குருவாக அருள்பொழிவு பெற்று 1253ஆம் ஆண்டு இறந்தார். 

Monday 2 April 2018

செபமாலை



         "அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே!" என்று செபமாலை யில் நாம் வாழ்த்துகிறோம். எந்த ஒரு தனிமனிதரோ, திருச்சபையோ இந்த வாழ்த்தை உருவாக்கவில்லை. இது, கடவுளால் உருவாக்கப்பட்ட வாழ்த்து. தந்தையாம் இறைவனே கபிரியேல் தூதர் வழியாக, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்ற வார்த்தைகளால் மரியாவை வாழ்த்தினார். கடவுளின் மீட்புத் திட்டத்தை மரியாவுக்கு அறிமுகம் செய்த வார்த்தைகள் இவை. "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" (லூக்கா 1:35) என்ற வானதூதரின் வார்த்தைகளுக்கு, "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற் படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று பதிலளித்த தால் மரியா இயேசுவின் தாயானார்.

புனித பிரான்சிஸ் பவுலா


           புனித பிரான்சிஸ் பவுலா இவர் குருத்துவ அருட்பொழிவு பெறாத துறவி ஆவார். இத்தாலியில் கலாப்ரியா என்னும் பகுதியில் பவோலா என்னுமிடத்தில் மார்ச் 27, 1416ம் ஆண்டில் பிறந்தார். மிகவும் பக்தியுள்ள இவரது பெற்றோருக்கு திருமணமாகி சில காலம் குழந்தைப் பாக்கியம் இல்லாததால் புனித "அசிஸியின் ஃபிரான்சிஸ்" நோக்கி செபித்தனர். அதன் காரணமாய் பிறந்த முதல் குழந்தைக்கு புனிதரின் நினைவாக ஃபிரான்சிஸ் என்றே பெயரிட்டனர். ஃபிரான்சிஸ் தொட்டில் குழந்தையாக இருக்கையில், ஒருமுறை அவரது கண்களில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, அவரது ஒரு கண்பார்வை அருகிப்போனது. அவர்கள் மீண்டும் புனிதர் "அசிஸியின் ஃபிரான்சிஸ்" அவர்களை நோக்கி வேண்டினர். கண்கள் குணமானதும் அப்புனிதரின் ஏதாவது ஒரு துறவு சபையில் வாழ்நாள் முழுதும் துறவு உடையில் வாழ வேண்டுதல் செய்தனர்.
       
       தமது பதின்மூன்றாவது வயதிலே தமது பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப ஃபிரான்சிஸ்கன் சபையின் துறவு மடம் ஒன்றில் இணைந்தார். செபம், தாழ்ச்சி, எளிமை போன்ற நற்பண்பில் சிறந்து விளங்கினார். துறவு மடத்தில் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்த ஃபிரான்சிஸ், தமது பெற்றோருடன் ரோமிலுள்ள அசிஸி மற்றும் சில வெவ்வேறு நகரங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து பவோலா திரும்பிய அவர், தமது தந்தையின் தோட்டத்திலிருந்த தனிமையான குகை ஒன்றில் வசிக்க தொடங்கினார். பின்னர், இத்தாலியின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் தனிமையான குகையில்  சென்று வாழ்ந்தார்.
     
           1435ல், அவருடன் இரண்டு பேர் அவருடன் தியானத்தில் இணைந்தனர். ஃபிரான்சிஸ் அவர்கள் மூவருக்காகவும் சிறு சிறு அறைகள் மற்றும் ஒரு சிற்றாலயம் அமைத்து தியான வாழ்வை தொடங்கினார். 17 ஆண்டுகளுக்கு பின், துறவியரின் எண்ணிக்கை கூடிய தருணத்தில், ஃபிரான்சிஸ் தமது துறவியர் சபைக்கான கோட்பாடுகளை எழுதுவதற்கு 1474ல் திருத்தந்தை  நான்காம் சிக்ஸ்தூஸ் அவர்கள் அனுமதி வழங்கினார். ஃபிரான்சிஸ் தவத்தை நேசித்தார். பாவிகளை மனந்திருப்பினார். பிளேக் போன்ற கொள்ளை நோய்களைத் தடுத்தார். நோய்களைக் குணப்படுத்தினார்.
     
           திருத்தந்தையின் கட்டளைக்குக் கீழ்படிந்து ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்று அரசர் "பத்தாம் லூயிசை"  நல்ல மரணத்திற்கு தயாரித்தார். ஏழ்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பெண்களுக்காக துறவு இல்லங்கள் நிறுவினார்.  உலகில் வாழ்ந்தாலும் உலக இன்பங்கள் துறவிகள் கைவிட்டு வாழ வழிகாட்டினார். பிற்காலத்தில் நடக்கவிருப்பதை முன் அறிவித்தார். திருப்பாடுகளின் வெள்ளி அன்று யோவான் எழுதிய இயேசுவின் பாடுகளை வாப்பதை கேட்டுக்கொண்டே 1507ஆம் ஆண்டு இறந்தார்.


புனித க்யூ


       
         சிறுவயது முதல் கிறிஸ்துவின் அன்பினை சுவைத்து வாழ்ந்தவர். நற்பண்பில் சிறந்து விளங்கியவர். கடவுளின் அன்பை இரக்கத்தை தனது அன்பு பணிகள் வழியாக வெளிப்படுத்தியவர்.
தூயவராக வாழ்ந்து உத்தம துறவியாக இறையாட்சி பணி செய்தவர். “தனது மகிழ்ச்சியைவிட கடவுளை மகிழ்ச்சிப்படுத்துவதே சாலச் சிறந்தது” என்ற கொள்கையுடன் வாழ்ந்தவரே புனித க்யூ. இவர் பிரான்ஸ் நாட்டில் டஃபின் என்னும் இடத்தில் 1053ஆம் ஆண்டு பிறந்தார்.

     கிறிஸ்துவின் வழித்தடங்களில் வாழ்ந்த அவருடைய பெற்றோர் கிறிஸ்துவின் அன்பில் இறைபக்தியில் வளர வழிகாட்டியபோது, பொற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். க்யூ சிறுவயது முதல் கடவுளுக்கு தன்னை அர்ப்பணம் செய்து துறவு வாழ்க்கை வாழ விரும்பினார். துறவு வாழ்க்கைக்கு தேவையான நற்பண்பில் சிறந்து விளங்கினார். இறைபிரசன்னத்தில் இடைவிடாமல் வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துவின் இறையாட்சி பணி செய்ய விரும்பி வலன்ஸ் பேராலயத்தில் குருவாக அருட்பொழிவு பெற்று இறையாட்சி பணியை சிறப்பாக செய்தார்.

    கடவுளின் இரக்கத்தையும் அன்பையையும் தமது நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தைகளை அறிவித்தார். எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டனர்.  க்ரேனோபிள் மறைமாவட்டத்தின் ஆயராக அருள்பொழிவு பெற்று இறைவனை மாட்சிமைப் படுத்தினார். க்யூ புனித புருனோவை தனது ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுத்து தூயவராக வாழ்ந்த க்யூ 1132ஆம் ஆண்டு இறந்தார்.