Tuesday 17 April 2018

ஏப்ரல் 16. புனித பெர்னதெத்


        “துன்பத்தை அன்பு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் ஆண்டவர் அவருடைய நண்பருக்கு முட்களால் ஆன கிரீடத்தைக் கொடுக்கிறார். அதை விடச் சிறப்பானதைத் தேடாதீர்கள். கிரீடம் அணிந்த அரசியை விடவும், என் படுக்கையில் என் சொந்தச் சிலுவைகளோடு மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்று வாழ்வால் வாழ்ந்துகாட்டியவர். இயேசுவை இதயத்திலும், அமல உற்பவியான அன்னை மரியாவைத் தன் கரங்களிலும் பற்றி, ஏழ்மையிலும் மகிழ்ச்சியாகவும், செபமும், ஒறுத்தலும் ஆயுதமாகப் பயன்படுத்தி பாவிகளின் மனமாற்றத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து, வேதனைகளையும், சோதனைகளையும் இன்முகத்தோடு ஏற்றுத் தூய்மையாக வாழ்ந்தவரே புனித பெர்னதெத். இவர் பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியிலுள்ள லூர்து நகரில் பிரான்சிஸ் என்பவருக்கு, கி.பி.1844ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7ஆம் நாள் பிறந்தார்.

       பெர்னதெத்  குடும்பத்தில் வறுமையும், ஏழ்மையும் நுழைந்தத் தருணம் அன்பும், பாசமும் தலைதூக்கி அவற்றை மறைத்தன. தனது குடும்பத்தின் வறுமையை உணர்ந்தவர். தாய்க்கு உதவுவதில் மிகுந்த கவனம் செலுத்தினார். இவர் சிறுவயதிலேயே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு பலவிதமானத் துன்ப துயரங்களைச் சந்தித்தார். நோயின் வேதனைக்குத் தாயின் அன்பும், அரவணைப்பும் அருமருந்தாயின. சரியான மருத்துவமும், போதுமான உணவும் கிடைக்காத நேரங்களில் அமைதியாக இருந்தார்.


         பெர்னதெத் காட்டில் ஆடுகளை மேய்க்கும்போது கற்களால் சிறிய பீடம் அமைத்து, திருச்சிலுவையை நாட்டிச் செபித்தார். இறைமகன் இயேசுவை இதயத்தில் நற்கருணை வழியாகப் பெற்றிட மறைக்கல்வியும், செபங்களும் கற்று தனது 14ஆம் வயதில் முதல் முறையாக நற்கருணையைப் பெற்றுக்கொண்டார். அன்றைய நாள் “என் வாழ்நாள் முழுவதும் என் இதயம் இயேசுவை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும்” என்று தீர்மானித்து அவ்வாறே வாழ்ந்த. செபமாலை செபிப்பதை ஒருபோதும் அவர் மறக்கவில்லை. ஒருபோதும் தன்னைப் பற்றி தற்பெருமையாக நினைத்ததில்லை. எப்பொழுதும் தாழ்ச்சியுடன், உண்மையைப் பேசி, எல்லோருக்கும் மதிப்பும் மரியாதையும் செலுத்தினார். கள்ளங்கபடற்ற குழந்தையுள்ளம் கொண்டவராய்க் காணப்பட்டார். தாய் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.


      நேவேர் ஆயர் லூர்து நகருக்கு வந்தபோது பெர்னதெத் ஆயரிடம் சென்று, “நான் ஒரு துறவியாக வாழ விரும்புகிறேன். ஆனால் நான் ஒரு ஏழை; படிப்பறிவு இல்லாதவர்; நோயாளி; என்னைத் துறவறச் சபையில் சேர்க்க அனுமதித் தாருங்கள்” என்றார். ஆயரும் பெர்னதெத்திடம்“நீர் இரண்டு ஆண்டுகள் ஓஸ்பீஸ் கன்னியர் இல்லத்தில் தங்க வேண்டும்” என்றார். அவ்வாறு அன்னை மரியின் அன்பும், அரவணைப்பும் பெற்ற லூர்து நகரை விட்டுப்பிரிய மனமில்லாமல், நெவேர் நகரில் இருந்த பிறரன்பு சகோதரிகள் இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் செபத்திலும் சேவையிலும் செலவிட்டார்.

“மகளே! நீ பாவிகளுக்காகச் செபம் செய்! பாவிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகின்றது. எனவே பாவிகளுக்காக நன்கு செபம் செய்” என்று கூறிய அன்னை மரியாவின் அழைப்பிற்குச் செவிமடுத்து பாவிகள் மனமாற தியாகம் செய்து செபித்தார். பெர்னதெத்“என் ஆயுதங்கள் செபமும், ஒறுத்தலும். அவற்றை நான் சாகும் வரையில் கடைபிடிப்பேன். ஒறுத்தல் ஆயுதம் இவ்வுலகில் முடிந்துவிடும். செப ஆயுதமோ என்னோடு விண்ணகத்துக்குவரும்”  என்ற பெர்னதெத்  1879ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் இயற்கை எய்தி வான்வீட்டில் நுழைந்தார். 

No comments:

Post a Comment