Friday 6 April 2018

புனித வின்சென்ட் ஃபெரர்

குழந்தைப்பருவம் முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். அன்பு இரக்கம், கீழ்ப்படிதல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற நற்பண்பில் சிறந்து விளங்கினார். இறைவார்த்தையை வாழ்வாக்கி கற்பித்த தலைசிறந்த மறைவல்லுநர். இறைவனின் நிலைவாழ்வுதரும் வார்த்தைகளை தவறின்றி போதித்தவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் பற்றும் பாசமும் கொண்டு தூயவராக வாழ்ந்து வந்தவரே புனித வின்சென்ட் ஃபெரர். இவர் 1350ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார்.


     வின்சென்ட் ஃபெரர் ஏழை எளிய மக்களிடத்தில் அன்பு கொண்டு அவர்களுக்கு உதவி செய்தார். ஏழைகள் இறைவனின் அன்பு பிள்ளைகள் எனவே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந்தார். அன்னை மரியிடமும். ஏழைகளிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டார். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நோன்பிருந்து  இறைச்சி மற்றும் உயர்தர உணவுகளை உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர்கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார்.


        வின்சென்ட் எட்டு வயதில் பாரம்பரிய ஆய்வுக்கான படிப்பைத் தொடங்கினார். பதினான்கு வயதில் தத்துவயியலையும், இறையியலையும் கற்றார். தமது பதினெட்டாம் வயதில், "டொமினிக்கன் சபையில்" சேர்ந்து தன்னை கடவுளுக்கு அர்ப்பணமாக்கினார். அன்னை மரியாவின் துணையால் தனது துன்பங்களை தாங்கிக்கொண்டு துறவு பயிற்சிகளை பெற்று குருவானார். தத்துவயியல் ஆசிரியராகவும் மறைபரப்பு பணியும் செய்தார். இரவு பகலென்று பாராமல் கப்பலில் பயணித்து போதித்தார். இதை கவனித்த கப்பலில் பயணம் செய்த சிலர், இவரை வதைத்து, கேலி செய்வதற்காக உயிருடனிருந்த ஒருவரை இறந்ததுபோல நடிக்கச்செய்தனர். இவர் இறந்த பிணத்தின் முன் செபித்தார். இதை கண்டு அவரைச் சுற்றியிருந்தவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர். ஆனால் இவரின் வல்லமையை வெளிப்படுத்த இறைவன் உண்மையிலேயே அவரை இறக்கச் செய்தார். இதையறிந்த பரிகாசம் செய்தோர் பயம் கொண்டு, தவற்றை உணர்ந்து, தாங்கள் கூறிய பொய்யை மன்னிக்கும்படி வேண்டி, மனம்மாறி கிறிஸ்துவை பின் தொடர்ந்தார்கள்.


   வின்சென்ட் இடைவிடாது இறைவேண்டலில் ஈடுபட்டார். குருத்துவ வாழ்வில் பலவிதமான நோய்களை குணமாக்கி, இறைசக்தியை வெளிப்படுத்தினார்.  21 ஆண்டுகள் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாவிகள் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்து, செய்யும் செயல்களில் "உன்னை நினைப்பதற்கு மாறாக இறைவனை நினைத்துக்கொள்" என்ற இப்புனிதரின் வார்த்தை மற்றவர்களை ஆழமாக சிந்தித்து செயல்பட தூண்டியது. தனது இறுதி மூச்சு வரை ஓர் சிறந்த குருவாகவே வாழ்ந்து, ஏப்ரல் 5ம் நாள் 1418ம் ஆண்டு இறந்தார்.


No comments:

Post a Comment