Sunday 25 October 2020

புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான்

  


புனித கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் உரோமை நகரில் செல்வந்த குடும்பத்தில் 3ஆம் நூற்றாண்டு பிறந்தனர். சமூகத்தில் மதிப்பும், மாண்பும், செல்வாக்கும் பெற்றவர்கள். இறைவன்மீது அன்புகொண்டு விவிலியம் வாசித்து இறையனுபவம் பெற்றனர். செபம், ஒறுத்தல், உழைப்பு, வழியாக இறையன்பின் சுடர்வீசினர். கிறஸ்துவை ஒப்பற்ற செல்வமாக ஏற்றுக்கொண்டனர். பிரான்ஸில் பாதணி தயாரிக்கும் மக்கள் மத்தியில் இறைபணி செய்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அடிமைகளுக்கும் உதவினர். மாக்சிமியான், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை வெறுத்து, கொடூரமாக துன்புறுத்தினான். பாதணி செய்து விற்றுக்கொண்டு கிறிஸ்துவை போதித்து வந்த கிறிஸ்பின் மற்றும் கிறிஸ்பியான் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். எங்களது வாழ்க்கை கிறிஸ்துவுக்கே. கிறிஸ்துவுக்காக இறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியபோது இருவரையும் தலைவெட்டி கொன்றனர்.

 கிறிஸ்துவின் வார்த்தையை தினந்தினம் வாசித்து     கிறிஸ்துவின் அரும்முகம் தினந்தினம் தியானிப்போம் ”!.

Saturday 24 October 2020

புனித அந்தோனி மரிய கிளாரட்

  


    மரியா என் தாய், என் பாதுகாவலி, என் எஜமானி, என் வழிகாட்டி,என் ஆறுதல், என் பலம், என் அடைக்கலம் என்றுகூறி அன்னையிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர். இறைவனின் மாட்சிக்காகவும், அயலானின் மீட்புக்காகவும், விசுவாசிகளின் நல்வழிகாட்டியாகவும் மாறியவர். இறைவார்த்தையில் ஆழ்ந்த பற்றும், இறைவார்த்தை வழியாக தான் யார் என்பதையும், எதற்காக வாழவேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்து இறைவனின் திருவுளம் நிறைவேற்றியவரே புனித அந்தோனி மரிய கிளாரட். இவர் ஸ்பெயின் நாட்டில் கட்டலோனியா என்னும் இடத்தில் 1807ஆம் ஆண்டு நெசவு தொழிலாளியின் மகனாகப் பிறந்தார்.


    கிளாரட் சிறுவயது முதல் இறைபக்தியில் வளர்ந்தார். ஓய்வு நேரங்களை நன்கு பயன்படுத்தினார். தினந்தோறும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்றார். என்னுடைய இதயத்தில் இயேசு எப்போது வருவார் என்று தன்னிடம் கேட்டுக்கொள்வார். கறைபடாத, களங்கமற்ற உள்ளத்தோடும், பக்தியோடும் தனது பத்தாம் வயதில் முதல் முறையாக நற்கருணை நாதரை தனது இதயத்தில் ஏற்றுக்கொண்டார். “இயேசுவே நீர் என்னை ஒரு புனிதனாக மாற்றும்” என்று செபித்தார். பக்தியும் புத்தியும் மிகுந்த கிளாரட் இறைவன் தன்னை அழைப்பதை உணர்ந்து கொண்டார். இறைவனுக்காக இறையாட்சி பணி செய்யவும், கர்த்தூசியன் துறவியாகும் எண்ணத்துடன் பார்சலோனாவை விட்டு கிளம்பி விக் என்ற இடத்தில் இருந்த மடத்தில் 1826ஆம் ஆண்டு சேர்ந்தார். 1835ஆம் ஆண்டு ஜøன் 13ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார். 
    
   இறையன்பின் பணியாளராக கிறிஸ்துவின் அன்பை பற்பல பணிகள் வழியாக பகிர்ந்தளித்தார். அன்னை மரியாவிடம் பல மணிநேரம் செபித்தார். இரவு காலங்களில் நற்கருணை நாதரே தஞ்சம் என்று வாழ்ந்தார். இறைவார்த்தையை தியானிக்கும்போது அமைதியாக அமரமுடியாத அளவுக்கு அன்புத் தீ அவரில் எரிந்தது. “இறைவா! உமது திருவுளம் என்னவென்று எனக்குக் காண்பியும்! அதை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்” என்றுகூறி, ஆன்மாக்களை மீட்க ஆர்வமாக உழைத்தார். ஆன்மாக்களை இறைவனிடம் கொண்டு வருவதையே தனது இலக்காக கொண்டார். மக்களது இதயத்தில் கிறிஸ்துவின் ஆட்சியை ஏற்படுத்த நூல்கள் பல எழுதினார். 1849ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் கிளரீசியன் சபையைத் தோற்றுவித்தார். 

     “ஒவ்வொரு நாளும் மரியே நான் உங்கள் பிள்ளையென்பதையும், நீங்கள் என் தாயென்பதையும் மறந்துவிட வேண்டாம். எனது கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்” என்று செபித்தார். சந்தியாகோ பேராயராக 1850ஆம் ஆண்டு திருப்பொழிவு பெற்றார். இக்கட்டு இடையூறுகளில் செபத்தின் வழியாக ஆறுதல் அடைந்தார். மறையுரையின் போதும் திருப்பலியின் போதும் இறையொளி அவரை சூழ்ந்திருப்பதை மக்களால் பார்க்க முடிந்தது. 1869ஆம் ஆண்டு உரோமை சென்று முதல் வத்திக்கன் சங்கத்தில் பங்குகொண்டார். இரவு பகலாக எப்பொழுதும் கிறிஸ்துவை இதயத்தில் சுமந்த, அந்தோனி மரிய கிளாரட் நோயுற்று 1870ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் உயிர்நீத்தார். திருதந்தை 12ஆம் பத்திநாதர் 1950ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் துணிவியாபாரிகளின் பாதுகாவலர். திருநாள் அக்டோபர் 24ஆம் நாள்

Friday 23 October 2020

புனித யோவான் கப்பிஸ்திரான்

               

      புனித யோவான் கப்பிஸ்திரான் இத்தாலி நாட்டில் 1386ஆம் ஆண்டு øன் 24ஆம் நாள் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்தபோது தாயின் அரவணைப்பில் இறைபக்தியில் வளர்ந்தார். சட்டம் படித்து இறைஞானம் மிகுந்தவராக நேப்பிள்ஸ் அரசர் லடிஸ்லாஸ் பெருஜியாவின் ஆளுநராக பணி செய்தார். உலக இன்பங்களை துறந்து பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து மறைப்பணியாளராகப் பணியாற்றினார். 1425ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று, இறையன்பை உலகிற்கு அறிவித்தார். ஓய்வின்றி ஆன்மாக்களின் மீட்பிற்காக இடையராது போதித்த சிறந்த மறையுரையாளர். ஒருமுறை ப்ரெசியா என்ற இடத்தில் 1,20,000 மக்கள் இவருடைய மறையுரையைக் கேட்டனர். இயேசுவின் பெயரால் சிலுவை அடையாளம் வரைந்து நோயாளிகளைக் குணப்படுத்திய யோவான் கப்பிஸ்திரான் 1456ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் ஆண்டு இறந்து, 1690ஆம் ஆண்டு புனிதரானார். இவர் நீதிபதிகளின் பாதுகாவலர்.

      இறைவனின் அன்பை உலகில் நாளும்அறிவித்து இறைபணி வழி ஆன்மாக்களை நாளும் மீட்போம்

Thursday 22 October 2020

புனித இரண்டாம் ஜான்பால்

 


       புனித இரண்டாம் ஜான்பால் போலந்து நாட்டில் 1920ஆம் ஆண்டு மே 18ஆம் பிறந்தார். திருப்பலியில் பங்கேற்று நற்கருணை பக்தியில் வளர்ந்தார். மரியாவை அன்பு செய்து சமூகப்பார்வை உள்ளவராக திகழ்ந்தார். 1946ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார். 1958ஆம் ஆண்டு பேராயர் பாசியாக் என்பவருக்கு துணை ஆயரானார். 1967ஆம் ஆண்டு ஜøலை 28ஆம் நாள் கர்தினால் ஆனார். உலகில் ஒழுக்கத்தையும், நீதியையும் மனித உயிரின் மாண்பிணையும் பாதுகாத்து சமத்துவ வாழ்வுக்காக பாடுபட்டார். 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் திருத்தந்தையானார். நீதி, சாமதானம், ஒற்றுமைக்கான கால் நூற்றாண்டு கண்ட சகாப்தம் போப் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இரண்டாம் ஜான்பால் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் இறந்து புனிதரானார். உலக இளையோர் தின பாதுகாவலர்.

                        “இயேசுவின் அன்பை வாழ்நாள் முழுவதும் சுவைத்து                                                      இயேசுவின் அன்பிற்கும் அமைதிக்கும் சாட்சியாவோம்”!.


Wednesday 14 October 2020

புனித முதலாம் கலிஸ்துஸ்

   


புனித முதலாம் கலிஸ்துஸ் தான் கிறிஸ்தவர் என்று பெருமையுடன் கூறி புண்ணிய செயல்கள் செய்தார். உரோமையில் கார்போபோரஸ் என்பவரிடம் பணம் பாதுகாக்கும் பணி செய்தார். தன்னிடம் இருந்த பணத்தை தொலைத்துவிட்ட காரணத்தால் கைதியாக சுரங்கத்தில் வேலைக்கு சென்றார். அரசி மார்சியா என்பவரின் உதவியால் விடுதலையானார். திருத்தந்தை செப்பரினஸ் திருத்தொண்டராக நியமித்து கிறிஸ்தவர்களின் கல்லறையை பாதுகாக்கும் பணிக்கு அமர்த்தினார். 217ஆம் ஆண்டு திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். திருச்சபைக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென முழங்கினார். 18 ஆண்டுகள் திருச்சபையில் தப்பறை போதித்து, தனக்கு இடைஞ்சல் செய்த இப்போலித்து என்பவரை மன்னித்து அன்பு செய்தார். பாவத்தை கடவுளின் உதவியால் மட்டுமே கைவிட இயலும் என்றுகூறி இறையன்பராக வாழ்ந்த கலிஸ்துஸ் 222ஆம் இறந்தார். 

                 “தனிமையிலும் துன்பத்திலும் இறைவனின் கரம்பற்றி              தனக்கு இடைஞ்சல் செய்வோரை மன்னிப்போம்” !.


Sunday 11 October 2020

புனித 23ஆம் யோவான்

    “தான் திருமுழுக்கின் வழியாக பெற்ற புனிதத் தன்மையை என்றுமே இழந்ததேயில்லை” என்று கூறியவர். தூய ஆவியால் வழிநடத்தப்பட்டவர்; மக்களின் திருத்தந்தை;  அவனில் அமைதி ஏற்படுத்தியவர்; மனித மாண்பு மிகுந்தவர்; அன்பானவர்; புனிதமானவர்;  கிறிஸ்தவ ஒன்றிப்பின் முன்னோடி; நகைச்சுவை நாயகன்; திருச்சபையின் மேலாண்மையை உலகிற்கு உணர்த்தியவர்; மக்களின் இன்னல்களை நீக்கி இறை ஆசீர் பெற்றுக் கொடுத்தவரே புனித 23ஆம் யோவான். இவர் இத்தாலி நாட்டில் 1881ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் பிறந்தார்.  குழந்தைப்பருவம் முதல் விசுவாசக் கோட்பாடுகளை முறையாகக் கற்று பக்தியில் சிறந்து விளங்கினார். அன்னை மரியாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஆன்மீக வாழ்வில் ஆர்வம் கொண்டு தினந்தோறும் ஆர்வமாக ஆலயம் சென்றார்.

உலகில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்ட குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். 1892ஆம் ஆண்டு பெர்கமோ என்ற குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தனது குருத்துவப் படிப்பைத் தொடங்கினார். புனித பிரான்சிஸ் அசிசியாரின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு ஏழ்மையையும் தூய்மையையும் கடைப்பிடித்து வந்தார். 1904ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 10ஆம் நாள் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். துன்பப்படுவோரையும், ஏழைகளையும் தேடிச் சென்றார். 1925ஆம் ஆண்டு புள்கேரிய நாட்டின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.  கீழ்படிதலும், அமைதியும் விருதுவாக்காக தேர்வு செய்தார்.

1953ஆம் ஆண்டு வெனீஸ் நகரின் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இளையோர்களை அளவில்லாமல் அன்பு செய்தார். ஆன்மீகப் பாதையில் வளர்ந்திட நல்வழிகாட்டினார். இளைஞர்களுக்காக ஆன்மப் பரிபாலனைக்காக ஒரு இல்லம் தொடங்கினார். ஏழைகளையும், ஆதரவற்றோரையும், துன்பப்படுவோரையும் அன்பு செய்தவர், 1958ஆம் ஆண்டு அக்டோர் திங்கள் 28ஆம் நாள் 23ஆம் அருளப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாக அருள்பொழிவுபெற்றார். திருச்சபையில் அன்பும், அமைதியும், ஒற்றுமையும், ஒழுங்கும் ஏற்படுத்தினார்.

1963ஆம் ஆண்டு வெளியிட்ட “அவனில் அமைதி” என்ற சுற்று மடல் வழியாக தனி மனிதனின் மாண்பையும், சுதந்திரத்தையும் வலியுறுத்தினார். ஆழமான இறையன்பில் வளர்ந்து மக்களின் நலனுக்காகவே உழைத்தார். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் திருச்சபையைப்பற்றியும், திருச்சபைக்கும் உலகுக்கும் இடையே உள்ள உறவுகள் பற்றியும் 16 ஏடுகள் வெளியிட்டது. இரண்டாம் வத்திக்கன் சங்கத்தின் முதல் அமர்விற்கு பின் 1963ஆம் ஆண்டு ஜøன் 3ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Tuesday 6 October 2020

புனித மரிய பவுஸ்தீனா

   


 “நமது வாழ்க்கையில் நற்கருணை பெறுகின்றநேரம் இன்பமான ஆசீர்வதிக்கப்பட்ட நேரம். இதற்காக நான் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்”என்று கூறியவ
ர். இறைவனின் அளவற்ற இரக்கத்தைப் பெற்று, அகிலமெங்கும் இறை இரக்கத்தை அறிவிக்கும் கருவியாய், விண்ணகத் தந்தையின் விருப்பமான பலிபொருளாய் மாறியவரே 
புனித மரிய பவுஸ்தீனா கோவஸ்கா. இவர் போலந்து நாட்டில் 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் நாள் பிறந்தார். செல்வத்தில் ஏழைகளானாலும் அன்பிலும், பக்தியிலும், ஒழுக்கத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். பவுஸ்தீனா தனது ஏழாம் வயதில் முதல் முறையாக நற்கருணை பெற்றார். இறைவன் தன்னைத் துறவு வாழ்வுக்கு அழைப்பதாக உணர்ந்தார். தனது பெற்றோரிடமிருந்து நற்பண்புகளைக் கற்றுக்கொண்டார். நற்கருணைமீதும் அன்னை மரியாவின்மீதும் அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். 

    பவுஸ்தீனா தவம் மேற்கொண்டு நற்பண்பில் வளர்ந்தார். துன்புறும் ஏழைகள் மீதும், நோயாளிகள் மீதும் இரக்கம் கொண்டு அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுதல் செய்தார். இறைவனோடு உறவுகொண்டு ஆன்மாக்களின் மீட்புக்காகவும், இறைவனுக்கு உகந்த பலிபொருளாகவும் தன்னை அர்ப்பணித்தார். என் இனிய இயேசுவே! எனது குழந்தைப்பருவம் முதல் புனிதராக மாறவேண்டும் என்ற ஆவல் உமக்குத் தெரியுமே. இயேசுவே, “உம்மை இதுவரை அன்பு செய்துள்ள ஆன்மாக்களை விடமேலாக உம்மை அன்பு செய்ய நான் விரும்புகிறேன்” என்றுகூறி துறவற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். 
 

   பவுஸ்தீனா இரக்கத்தின் அன்னை சபையில் 1928, ஏப்ரல் 30ஆம் நாள் துறவற வார்த்தைப்பாடுகளான கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் மூலம் இறைவனுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்தார். ஹெலன்கா என்ற இயற்பெயரை நற்கருணை ஆண்டவரின் மரிய பவுஸ்தீனா என்று மாற்றினார். “பவுஸ்தீனா என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று பொருள். 1931ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22ஆம் நாள் காட்சி கண்டார். தனது ஆன்ம குருவானவர் அருட்தந்தை மிக்கேல் சொபாகே அவரிடம் தான் கண்ட காட்சியைப்பற்றி கூறினார். இயேசு இறை இரக்கத்தின் அரசராகக் காட்சி அளித்தார். வெள்ளை ஆடை அணிந்திருந்தார். அவருடைய இதயத்தில் இருந்து வெள்ளை மற்றும் சிவப்புநிற ஒளி பாய்ந்து வந்தது. இதனை அப்படியே வரைந்து அதன் கீழ் “இயேசுவே உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்” என்று எழுதும்படி கூறினார். இறை இரக்கத்தின் அரசரான என்னை வணங்குகிறவர்களின் ஆன்மா அழிந்து போகாமல் பாதுகாப்பேன். முதலில் உனது ஆலயத்திலும், பிறகு உலகம் முழுவதும் என்னை வணங்கும்படி செய் என்று கூறினார்.  
           

   ஒருமுறை போலந்தில் கொடுங்காற்றுடனும், இடிமின்னலுடனும் மழை பெய்தது. இயற்கையில் பலவிதமான மாற்றங்கள் நிகழ்ந்தன. பேரழிவு ஏற்பட்டதைப் பார்த்து பவுஸ்தீனா இறைவனால் கற்றுத்தரப்பட்ட இரக்கத்தின் செபமாலை செபித்தார். உடனே காற்றும், இடி மின்னலுடன் கூடிய மழையும் நின்றது.  நற்கருணையின் பவுஸ்தீனா உடல் நலக்குறைவினால் 1938ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். 

Sunday 19 July 2020

புனித ஃபிரட்ரிக்

               உண்மை வழியில் அன்பிற்கு சாட்சியாக வாழ்ந்தவர். இறைவார்த்தையை ஆர்வமுடன் கற்றவர். அறநெறி பண்புகளில் சாலச்சிறந்தவர். நற்கருணை ஆண்டவரை ஆராதனை செய்து இறையருளைப் பெற்றுக்கொண்டவர். தன்மீது பொய் குற்றம் சுமத்தியவர்களை மன்னித்து அன்பு செய்தவரே புனித ஃபிரட்ரிக் என்பவர். இவர் 780ஆம் ஆண்டு ஃபிரிஸ்லாந்தில் பிறந்தார். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறையன்பில் வளர்ந்து வந்தார். இறையாட்சி பணி செய்ய ஆர்வம் கொண்ட ஃபிரட்ரிக் குருத்துவக் கல்வி கற்றார். உட்ரெக்ட் மறைமாவட்டத்திற்காக குருவாக அருள்பொழிவு பெற்றார். 

   
   ஃபிரட்ரிக் வால்செரன் பகுதியில் கிறிஸ்துவை அறியாக மக்களுக்கு கிறஸ்துவை அறிவித்தார். கிறிஸ்துவின் விழுமியங்களில் மக்கள் வளர்ந்துவர பயிற்சி அளித்தார். இவரது பணிகளை விரும்பாத மக்கள் இவருக்கு எதிராக பொய்குற்றம் சுமத்தினர். இறைவல்லமையால் துன்பங்களை துணிவுடன் தாங்கிக்கொண்டார். 816ஆம் ஆண்டு உட்ரெக்ட் மறைமாவட்ட ஆயராக அருள்பொழிவு பெற்றார். பக்தியுடன் திருப்பலி நிறைவேற்றினார். மைன்ஸில் நடந்த ஆயர் கூட்டத்தில் பற்கேற்று, இறைஞானத்தின் சொற்களைப் பேசினார். 838ஆம் ஆண்டு ஜøலை 18ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றி நற்கருணை ஆராதனை நடந்தவேளையில் எதிரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

Thursday 23 April 2020

தூய ஜார்ஜியார் (ஏப்ரல் 23)

       
          ஜார்ஜியார் வாழ்ந்த நான்காம் நூற்றாண்டில் லிபியா என்ற நகரில் மனிதர்களை ஒவ்வொருநாளும் நரபலி கொடுக்கும் மந்திரவாதி ஒருவன் இருந்தான். ஒருநாள் ஜார்ஜியார் அந்நகர் வழியாகச் சென்றபோது மந்திரவாதி அந்நாட்டு இளவரசியைப் பிடித்து வைத்துக்கொண்டு, அவளை நரபலி கொடுப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஜார்ஜியார் அவனோடு போர்தொடுத்து அவனை வீழ்த்தினார். பின்னர் அவர் இளவரசியை அவளுடைய தோளில் போட்டிருந்த துணியால் மந்திரவாதியைக் கட்டி வழியெங்கும் இழுத்துவரச் சொல்லி அவனை தண்டிக்கச் சொன்னார். அதன்படியே இளவரசி செய்தாள். இறுதியில் அந்த கொடிய மந்திரவாதி வரும் வழியிலே இறந்துபோனான். பின்னர் ஜார்ஜியார் அந்த இளவரசியிடம், “கடவுள் உன்னை அற்புதமாகக் காப்பாற்றி இருக்கின்றார். ஆகையால் அவரைப் பற்றிய மெய்மறையை உன்னுடைய நாடு முழுவதும் பரப்புஎன்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.


       ஜார்ஜியார் இஸ்ரயேலைச் சேர்ந்த கேரேன்தியேசு மற்றும் பாலிகிரோனி என்பவருடைய மகனாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பான குடும்பம். இவர் தன்னுடைய பெற்றோரை இளம் வயதிலேயே இழந்தார். இதனால் பெற்றோர் இல்லாமல் பெரிதும் கஷ்டப்பட்டார். இளைஞனாக மாறிய பிறகு அப்போது உரோமை நகரில் அரசனாக இருத்த தியோகிளேசியன் என்பவனுடைய படையில் படைவீரராகச் சேர்ந்தார். இவருடைய நற்பண்புகளையும் திறமையையும் பார்த்த அரசன் சிறிய படைப்பிரிவிற்கு தலைவனாக ஏற்படுத்தினார். அதன்பின்னர் இவரை பாதுகாப்புப் படையின் தலைவராக உயர்ந்தார். இவ்வாறு ஒவ்வொருநாளும் ஜார்ஜியார் அரசன் தனக்குக் கொடுத்த பொறுப்புகளை கண்ணும் கருத்துமாகச் செய்து, நாளும் நாளும் உயர்ந்துகொண்டிருந்தார்.

          ஒருமுறை அரசன் தான் வணங்கி வந்த தெய்வத்தை எல்லாரும் வணங்க வேண்டும் என்ற கட்டளையைப் பிறப்பித்தான். அப்படி வணங்காதவர்களை கொன்றுபோடுவதாகவும் எச்சரித்தான். ஆனால் நிறைய கிறிஸ்தவர்கள் அரசன் சொன்னதற்கு அடிபணியாது, கிறிஸ்து ஒருவரையே வணங்கி வந்தார்கள். இதைக் கண்டு சினம்கொண்ட அரசன் தன்னுடைய கடவுளை வணங்காத மக்களை ஒன்றாக இழுத்துவந்து அவர்களை வதைக்கச் சொன்னான். அந்தப் பொறுப்பை அரசன் ஜார்ஜியாரிடம் ஒப்படைத்தான். ஆனால் ஜார்ஜியாரோ, “நான் யாரையும் வதைக்கமாட்டேன். நானும் ஆண்டவர் இயேசுவைத் தவிர வேறு எவருக்கும் வணக்கம் செலுத்தமாட்டேன்என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். இதனால் அரசன் இன்னும் சினமுற்றான். தன்னிடம் பணிசெய்யும் ஒருவன் தன்னுடைய கட்டளைக்குப் பணிந்து வாழாமல் இருப்பதா? என்று அவன் மிகவும் சினமுற்றான். ஆனாலும் ஜார்ஜியாரைப் போன்று ஒரு வீரனை அவர் இழக்க விரும்பவில்லை. அதனால் அவரை எப்படியாவது சூழ்ச்சியால் மயக்கி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென அரசன் நினைத்தான்.

        ஒருநாள் அரசன் ஜார்ஜியாரை அழைத்து, “உனக்கு வேண்டிய மட்டும் நிலபுலன்கள், சொத்து, சுகங்கள் எல்லாவற்றையும் தருகிறேன். ஆனால் நீ கிறிஸ்துவை மறுதலித்துவிட்டு என்னுடைய தெய்வத்தை வணங்கவேண்டும்என்று சொன்னான். அதற்கு ஜார்ஜியார், “நான் எக்காரணத்தைக் கொண்டும் ஆண்டவர் இயேசு ஒருவரைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன்என்று மிக உறுதியாகச் சொல்லிவிட்டார். இதனால் அரசனுக்குக் கோபம். இருந்தாலும் அவன் அதனை வெளியே காட்டி கொள்ளாமல், அவரை எப்படி சூழ்ச்சியால் ஒழிக்கலாம் என திட்டம் தீட்டினான். அதற்கு அவன் ஒரு மந்திரவாதியை அழைத்து, ஜார்ஜியாரை சூழ்ச்சியால் கொன்றுபோட சொன்னான். மந்திரவாதியும் அரசனுடைய கட்டளைக்குப் பணிந்து, ஜார்ஜியார் குடிக்கும் பாலில் விஷம் கலக்கிக்கொடுத்தான். ஆனால் ஜார்ஜியார் அந்த பாலின் மீது சிலுவை அடையாளம் வரைந்து, அதனைக் குடிக்க அது ஒன்றுமே செய்யவில்லை. இப்படியாக அரசன் வைக்கும் சூழ்சிகள் அனைத்தையும் ஜார்ஜியார் இறைவல்லமையால் வெற்றிக்கொண்டார்.

         ஒருமுறை ஜார்ஜியாரைக் கொல்ல நினைத்த அத்தனேசியா என்ற மந்திரவாதியும் அந்நாட்டு அரசியும் ஜார்ஜியாரை அழைத்து, அவருக்கு முன்பாக ஒரு பிணத்தை கொண்டு வைத்து, “இந்த பிணத்தை உயிர் பெற்றெழச் செய்தால் நாங்கள் அனைவரும் நீ வணங்கும் கடவுள்மீது நம்பிக்கை கொள்வோம்என்றார்கள். அதன்படி ஜார்ஜியார் தனக்கு முன்பாகக் கொண்டுவந்து வைக்கப்பட்ட பிணத்தின் மீது கைகளை வைத்து ஜெபித்தார். அவர் இறைவனிடம் ஜெபித்த சில மணித்துளிகளிலேயே இறந்த மனிதர் உயிர்பெற்று எழுந்தார். இதைக் கண்டு மந்திரவாதி, அரசி என அனைவருமே ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். மக்களும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள. இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பெருகியது. எல்லாவற்றையும் பார்த்து கடுஞ்சினம் அரசன் அரசி மந்திரவாதி, ஜார்ஜியார் என மூவரையும் 303 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் வாளுக்கு இரையாக்கினான். 449 ஆம் ஆண்டு திருத்தந்தை கலேசியஸ் இவரைப் புனிதராக உயர்த்தினார்.