Saturday 24 October 2020

புனித அந்தோனி மரிய கிளாரட்

  


    மரியா என் தாய், என் பாதுகாவலி, என் எஜமானி, என் வழிகாட்டி,என் ஆறுதல், என் பலம், என் அடைக்கலம் என்றுகூறி அன்னையிடம் மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர். இறைவனின் மாட்சிக்காகவும், அயலானின் மீட்புக்காகவும், விசுவாசிகளின் நல்வழிகாட்டியாகவும் மாறியவர். இறைவார்த்தையில் ஆழ்ந்த பற்றும், இறைவார்த்தை வழியாக தான் யார் என்பதையும், எதற்காக வாழவேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்து இறைவனின் திருவுளம் நிறைவேற்றியவரே புனித அந்தோனி மரிய கிளாரட். இவர் ஸ்பெயின் நாட்டில் கட்டலோனியா என்னும் இடத்தில் 1807ஆம் ஆண்டு நெசவு தொழிலாளியின் மகனாகப் பிறந்தார்.


    கிளாரட் சிறுவயது முதல் இறைபக்தியில் வளர்ந்தார். ஓய்வு நேரங்களை நன்கு பயன்படுத்தினார். தினந்தோறும் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கேற்றார். என்னுடைய இதயத்தில் இயேசு எப்போது வருவார் என்று தன்னிடம் கேட்டுக்கொள்வார். கறைபடாத, களங்கமற்ற உள்ளத்தோடும், பக்தியோடும் தனது பத்தாம் வயதில் முதல் முறையாக நற்கருணை நாதரை தனது இதயத்தில் ஏற்றுக்கொண்டார். “இயேசுவே நீர் என்னை ஒரு புனிதனாக மாற்றும்” என்று செபித்தார். பக்தியும் புத்தியும் மிகுந்த கிளாரட் இறைவன் தன்னை அழைப்பதை உணர்ந்து கொண்டார். இறைவனுக்காக இறையாட்சி பணி செய்யவும், கர்த்தூசியன் துறவியாகும் எண்ணத்துடன் பார்சலோனாவை விட்டு கிளம்பி விக் என்ற இடத்தில் இருந்த மடத்தில் 1826ஆம் ஆண்டு சேர்ந்தார். 1835ஆம் ஆண்டு ஜøன் 13ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார். 
    
   இறையன்பின் பணியாளராக கிறிஸ்துவின் அன்பை பற்பல பணிகள் வழியாக பகிர்ந்தளித்தார். அன்னை மரியாவிடம் பல மணிநேரம் செபித்தார். இரவு காலங்களில் நற்கருணை நாதரே தஞ்சம் என்று வாழ்ந்தார். இறைவார்த்தையை தியானிக்கும்போது அமைதியாக அமரமுடியாத அளவுக்கு அன்புத் தீ அவரில் எரிந்தது. “இறைவா! உமது திருவுளம் என்னவென்று எனக்குக் காண்பியும்! அதை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்” என்றுகூறி, ஆன்மாக்களை மீட்க ஆர்வமாக உழைத்தார். ஆன்மாக்களை இறைவனிடம் கொண்டு வருவதையே தனது இலக்காக கொண்டார். மக்களது இதயத்தில் கிறிஸ்துவின் ஆட்சியை ஏற்படுத்த நூல்கள் பல எழுதினார். 1849ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் கிளரீசியன் சபையைத் தோற்றுவித்தார். 

     “ஒவ்வொரு நாளும் மரியே நான் உங்கள் பிள்ளையென்பதையும், நீங்கள் என் தாயென்பதையும் மறந்துவிட வேண்டாம். எனது கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்” என்று செபித்தார். சந்தியாகோ பேராயராக 1850ஆம் ஆண்டு திருப்பொழிவு பெற்றார். இக்கட்டு இடையூறுகளில் செபத்தின் வழியாக ஆறுதல் அடைந்தார். மறையுரையின் போதும் திருப்பலியின் போதும் இறையொளி அவரை சூழ்ந்திருப்பதை மக்களால் பார்க்க முடிந்தது. 1869ஆம் ஆண்டு உரோமை சென்று முதல் வத்திக்கன் சங்கத்தில் பங்குகொண்டார். இரவு பகலாக எப்பொழுதும் கிறிஸ்துவை இதயத்தில் சுமந்த, அந்தோனி மரிய கிளாரட் நோயுற்று 1870ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் உயிர்நீத்தார். திருதந்தை 12ஆம் பத்திநாதர் 1950ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் துணிவியாபாரிகளின் பாதுகாவலர். திருநாள் அக்டோபர் 24ஆம் நாள்

No comments:

Post a Comment