Wednesday 28 February 2018

புனித இலாரியுஸ்


திருச்சபையை அன்பு செய்து திருச்சபையில் ஒற்றுமை நிலவ அரும்பாடுப்பட்டு உழைத்தவர். கிறிஸ்துவின் அன்பை தனதாக்கி நற்செய்தி அறிவித்தவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அன்னை மரியாவை துணையாக கொண்டு திருச்சபையை வழிநடதóதியவரே புனித இலாரியுஸ். இவர் சார்தினியா என்ற இடத்தில் பிறந்தார். திருத்தந்தை முதலாம் சிங்கராயருடன் திருத்தொண்டராக பணியாற்றினார்.


            461ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 19ஆம் நாள் திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். இலாரியுஸ்க்கு முன் திருத்தந்தையாகப் பணியாற்றிய முதலாம் லியோ, ரோம திருச்சபையின் அதிகாரத்தை உறுதியாக நிலைநாட்டி புகழ்பெற்றிருந்தார். இலாரியுஸ் திருத்தந்தை லியோவின் அடியொற்றி பணிபுரிந்தார். திருச்சபையில் 325 ஆண்டு நிகழ்ந்த நீசேயா பொதுச்சங்கம், 431ஆண்டு எபேசு பொதுச்சங்கம், 431ஆண்டு கால்செதோன் பொதுச்சங்கம்,451ஆண்டு திருத்தந்தை லியோ கால்செதோன் பொதுச்சங்கத்திற்கு எழுதிய கடிதம் ஆகியவற்றில் அடங்கியிருந்த போதனைகளை வலியுறுத்தி நிலைநாட்டினார்.

          திருத்தந்தை ரோம் நகரில் பல கோவில் கட்டடங்களை எழுப்பியும், புதுப்பித்து அழகுபடுத்தியும் பணிகள் புரிந்தார். புனித யோவான் பெருங்கோவிலில் மூன்று சிறுகோவில்களைக் கட்ட அவர் ஏற்பாடு செய்தார். அவற்றுள் ஒன்றை அவர் நற்செய்தியாளரான புனித யோவானுக்கு அர்ப்பணித்தார். ஒரு துறவற இல்லத்தை நிறுவினார். திருத்தந்தை இலாரியுஸ், 468ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 28ம் நாள் இறந்தார். 

Tuesday 27 February 2018

வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல்



         
   ஆண்டவரின் திருப்பாடுகளின்பால் ஃபிரான்சிஸ் சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் படத்தையும் வியாகுல அன்னையின் படத்தையும் நெஞ்சில் வைத்ந்தார்   'வியாகுல அன்னையின் புனிதர் கபிரியேல்' ஒரு இத்தாலிய பாடுகளின் சபையின் குருத்துவ மாணவர். மார்ச் 1, 1838 ஆம்  ஆண்டு அசிசி, திருத்தந்தையர் மாநிலத்தில் பிறந்தார். இறைவனின் பாடுகளின் சபையில் சேர்ந்தவர். தமது எதிர்கால இலட்சியங்களை விட்டுக்கொடுத்தவர். துறவு சபையின் வாழ்க்கையில் துறவு சபையின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தார். வியாகுல அன்னையின்பால்  பக்தியின் கொண்டவர்.


          ஃபிரான்சிஸ் மார்ச் 1, 1838ல் இத்தாலியின் அசிசி நகரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் "சான்டே" ஆகும். அவர் அரசு அலுவலகத்தில் உயர் பதவி வகித்தவர். இவருடைய தாயாரின் பெயர் "அக்னேஸ்" ஆகும். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் பதினோறாவது குழந்தை ஆவார். நான்காம் வயதில் தாயை இழந்தார். தமது குழந்தைப் பருவம்  முதல்  பக்தியில் புகழ் பெற்றார்.  தமது ஆரம்ப கல்வியை "கிறிஸ்தவ சகோதரர்களிடம்"  கற்றார். இயேசு சபையின் கல்லூரியில் லத்தீன் மொழியில் பயின்று வெற்றி பெற்றார்.

           இவர் துறவற வாழ்வில் "பாடுகளின் சபையில்" இணைந்தார். அன்னை மரியாளின் சொரூபங்களின் ஊர்வலம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். ஃபிரான்சிஸும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அன்னை மரியாளின் ஒரு சொரூபம் இவரைத் தாண்டிச் செல்கையில், "நீ இன்னும் ஏன் இவ்வுலகில் இருக்கிறாய்" என்று ஒரு குரல் தனக்குள்ளேயே கேட்டதாக உணர்ந்தார். இச்சம்பவம் இவர் துறவற வாழ்வில் இணைய தீவிரமாக தூண்டியது. துறவற வாழ்வில் இன்னல்களையும் தியாகங்களையும் மனமுவந்து ஏற்றார். ஆண்டவரின் திருப்பாடுகளின்பால் ஃபிரான்சிஸ் சிலுவையில் அரையப்பட்ட இயேசுவின் படத்தையும் வியாகுல அன்னையின் படத்தையும் நெஞ்சில் வைத்து வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி "ஓ என் அன்னையே விரைவில் வாரும்" என்று சொல்லி பெப்ரவரி 27,1862ம் உயிர்விட்டார்.


புனித மரிய பெர்டில்லா பொஸ்கார்டின்

           

      நற்கருணையின் மீது அதிக பக்தியும் பற்றும் கொண்டவர். தனது கன்னிமையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்தவர். மருத்துவ மனையில் தாயன்புடன் இறைபணி செய்தவர். கடமைகளை சரிவர செய்து இறைவனை மாட்சிப்படுத்தியவரே புனித மரிய பெர்டில்லா. இவர் 1888ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்தார். பக்தியும் இறைபற்றும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். தாய்க்கு உதவி செய்த காரணத்தால் பள்ளிக்கூடம் செல்லாதவர்.



         பெர்டில்லா அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்து வாந்தார். எட்டாம் வயதில் நற்கருணை பெற்றுக்கொண்டார். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டு மரியாளின் சங்கத்தில் இணைந்து அன்னையின் அருளும் ஆசீரும் பெற்றார். 1904ல் "விகென்ஸா" என்னுமிடத்திலுள்ள "திரு இருதயத்தின் மகள்கள்" அமைப்பின் உறுப்பினராக சேர்ந்தார் தமது பெயரை "மரியா பெர்டில்லா" என மாற்றிக்கொண்டார். அங்கே 3ஆண்டுகள் சமயலறையில் வேலை செய்தார்.
       

         பின் மருத்துவமனையின் "டிப்தீரியா" எனப்படும் தொண்டை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் உள்ள அறையில் பணிபுரிய நியமிக்கப்பட்டார்.மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகள் பிரிவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நோயளிகளையும் அன்புடன் கவனித்த பெர்டில்லா வெகு காலமாக அவரது உடலிலிருந்த கட்டி ஒன்றினால் அவர் மிகவும் வேதனையடைந்தார். அதனை நீக்குவதற்காக அவருக்கு ஒரு அறுவை  சிகிச்சையின்போது மரணமடைந்தார்.


Monday 26 February 2018

புனித செபாஸ்டியன் டி அபரிஸியோ



     
            செபாஸ்டியன் டி அபரிஸியோ மெக்ஸிகோ நாட்டில் குடியேறி வாழ்ந்த ஒரு ஸ்பேனிஷ் நாட்டவராவார். தமது வாழ்நாள் முழுதும் ஒரு கால்நடை வளர்ப்பு பண்ணைப் பணியாளராகவும் சாலைப் பணியாளராகவும் பணிபுரிந்த இவர், ஸ்பெயின் மெக்சிகோவை வெற்றிகொண்ட பிறகு, இளம் துறவிகள் சபையில் ஒரு குருத்துவம் பெறாத துறவியாக இணைந்தார்.இருபத்தாறு ஆண்டுகள் துறவற சபைக்காக பிச்சை எடுத்தார்.

           ஸ்பெயின் நாட்டின் "ஔரென்ஸ்" என்ற இடத்தில் ஜனவரி 20, 1502 ஆம் அபரிஸியோ பிறந்தார். இவரது தந்தை பெயர் "ஜுவான் டி அபரிஸியோ"  ஆகும். தாயார் பெயர் "தெரெசா டெல் ப்ரடோ" ஆகும். இவரது பெற்றோர் மிகவும் பக்தியான ஏழை விவசாயிகளாவர். தமது சிறுவயதிலிருந்தே ஆடு மாடுகளை மேய்க்கும் பணி செய்தார். கல்வி கற்பதற்காக பள்ளிக்கூடம் செல்லாத அபரிஸியோ செபிப்பதற்கு தமது பெற்றோரிடம் கற்றுக்கொண்டார்.

       ஒருமுறை, 1514ல் கொடூரமான பிளேக் நோய் அபரிஸியோவை பீடித்தது. சமூகம் அவரை அங்கிருந்து தனிமைபடுத்தும்படி வற்புறுத்தியது. வேறு வழியற்ற அவரது பெற்றோர் அருகேயிருந்த காட்டில் அவருக்காக மறைவாக ஒரு சிறு குடிலை கட்டி அவரை அங்கே தனிமையில் விட்டுச் சென்றனர். உதவிகளற்ற அபரிஸியோ நோயால் தனிமையில் வாடினார். ஒருநாள் ஒரு பெண் ஓநாய் அங்கே வந்தது. அபரிஸியோ தங்கியிருந்த மறைவிடத்தை கண்டுபிடித்த அது அவரது குடிலுக்குள் தலையை நுழைத்து அவரது நோயால் பாதிக்கப்பட்ட உடலின் ஒரு பாகத்தை முகர்ந்து பார்த்தது. பின்னர் அதைக் கடித்து, நக்கிவிட்டு ஓடிப்போனது. அதன்பின்னர் அபரிஸியோ'வின் நோய் தீர ஆரம்பித்தது.

         அவரது வெளிப்படையான பார்வைக்கு நல்ல தோற்றத்தினால் கவரப்பட்ட பெண்கள் பலரால் அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளானார். அதனால் கற்பு நிலை மாறாத வாழ்க்கை வாழ வேண்டுமென்ற அவரது உறுதி நிலைகுலையும் என்பதை உணர்ந்தார். அங்கிருந்து தப்பிச் சென்ற அபரிஸியோ ஸ்பெயின் மக்களுக்கும் உதவ எண்ணினார். அங்கேயே தமது கத்தோலிக்க விசுவாசத்தை ஊக்குவிக்க விரும்பினார். அங்குள்ள கிராம மக்களுக்கு ஏர் உழவும், எருது மற்றும் குதிரை போன்ற கால்நடைகளை பழக்குவதற்கும் கற்று கொடுத்தார்.

       மிகவும் சாதாரண ஆடைகளை உடுத்திய பெரும்பாலான நேரங்களை ஆலயங்களில் செலவிட்டார். யாரோ தம்மை அடிக்கடி அர்ப்பண வாழ்விற்கு அழைப்பதாக உணர்ந்தார். அவர் அடிக்கடி அங்குள்ள பிரான்சிஸ்கன் துறவு மடத்திற்கு சென்றுவர ஆரம்பித்தார். அங்குள்ள ஒருநாள், அவருக்கு பாவமன்னிப்பு வழங்கும் துறவி ஒருவர், அவருக்கு ஓர் ஆலோசனை சொன்னார். அதன்படி, சில வருடங்களுக்கு முன்னர் மெக்ஸிகோவில் நிறுவப்பட்ட துறவு மடத்திற்கு தமது சொத்துக்கள் அத்தனையையும் கொடுத்து விடுவது சேவை செய்து இறந்தார்.

புனித அடேலா

       
       அடேலா, லத்தீன் அறிவைக் கொண்ட ஒரு சிறந்த கல்வியாளரும், சுறுசுறுப்பும், வீரமும் கொண்டவர்.சுமார் 1083ம் ஆண்டு, அடேலா, தமது பதினைந்தாவது வயதில், பிலாயிஸ் கோமகனின் மகனான “ஸ்டீஃபன் ஹென்றியை” திருமணம் செய்துகொண்டார். இவர் 1067 ஆண்டு பிறந்தார். இங்கிலாந்து நாட்டின் முதல் நார்மன் அரசனான வில்லியமின் மகளாவார். இங்கிலாந்து நாட்டின் அரசியான “மெட்டில்டா” இவரது தாயார். அடேலா, இங்கிலாந்தின் அரசனான ஃபிரான்ஸ் நாட்டின் “இரண்டாம் ஸ்டீஃபனின்” மனைவியுமாவார். தமது கணவர் இல்லாத காலத்தில், “பிலாயிஸ்” நகரின் அரசாட்சிப் பிரதிநிதியுமாவார். வயது வராத தமது மகனுக்குப் பதிலாக அரசாட்சிப் பிரதிநிதியாக ஆண்டார்.


        ஸ்டீஃபன் ஹென்றி, 1096ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அர்பன் என்பவருடன் இணைந்து  “புனித பூமியை” மீட்பதற்காக முதலாம் சிலுவைப் போரில் பங்குகொண்டார். அடேலாவுக்கு ஸ்டீபன் எழுதிய கடிதங்களில் சிலுவைப் போரின் தலைவர்களின் அனுபவங்களையும் வெளிப்படுத்தினார். முதலாம் சிலுவைப் போரின் போது தமது கணவர் நாட்டிலில்லாத காலங்களில் சிறப்பாக ஆட்சிப் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். புதிய தேவாலயங்கள் கட்டுவதற்கு துறவியருக்கு அனுமதியளித்தார்.


        கணவர் இல்லாத காலங்களில் அடேலா நாடு முழுதும் பயணித்தார். பிரச்சனைகளை தீர்த்துவைத்தார். பொருளாதார வளர்ச்சிகளை ஊக்குவித்தார். அரசருடன் இணைந்து போருக்குச் செல்லுமாறு வீரர்களை தூண்டினார்.1100ம் ஆண்டின் ஆரம்பத்தில் நாடு திரும்பிய ஸ்டீஃபன், 1101ம் ஆண்டு இரண்டாம் சிலுவைப் போரில் கலந்துகொண்டார். இறுதியில், 1102ம் ஆண்டு, எகிப்து நாட்டின் “ஃபடிமிட் கலிபேட்” என்பவருடன் நடந்த “ரம்லா போரில்” பொறுப்பேற்றிருந்த ஸ்டீஃபன், நோய்வாய்ப்பட்டு மரித்துப் போனார்.கணவரின் மரணத்தின் பின்னர், வயதுக்கு வராத மகன் “திபௌட்”  ஆட்சி பொறுப்பேற்கும் வரை அடேலா நாட்டை ஆண்டார். மகன் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஆட்சியில் வழிகாட்டினார். பக்தியுள்ள அடேலா  கடவுளின் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டார். மடாலயங்களையும் சிற்றாலயங்களையும் கட்ட நிதியுதவி செய்த வாழ்ந்த அடேலா, 1137ம் ஆண்டு, “மார்சிக்னியில்”  இறந்த்தார்.

புனித பொலிக்கார்ப்

 
        கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டவர். தன்னை துன்புறுத்தியவர்களை அன்பு செய்தவர். பகைவர்களை மன்னித்து அவர்களின் நலனுக்காக மன்றாடினார். கிறிஸ்துவின் நற்செய்தியை வாழ்வாக்கினார். திருத்தூது யோவானின் அன்பு சீடராக நற்செய்தி அறிவித்தவரே புனித பொலிக்கார்ப். இவர் 59ஆம் ஆண்டு பிறந்தார்.  கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தைகளை கிறிஸ்துவின் பிரசன்னமாக வலம் வந்தார். அனைத்து மக்களும் மீட்பு பெற ஆர்வமுடன் உழைத்தார். தன்னை பலியாக கையளிக்க முன்வந்தார்.


         அந்தியோக்கியா நகர் ஆயர் புனித இஞ்ஞாசியார் கொலைக் களத்திற்கு சங்கிலி போட்டு இழுத்துச் செல்லப்பட்ட போது ஸ்மிர்னா நகரில் போலிக்கார்ப் அவரைச் சந்தித்து அவர் கட்டப்பட்டிருந்த சங்கிலியை வணக்கத்துடன் முத்தமிட்டார். “அந்தியோக்கியா நகர் திருச்சபையை கவனித்துக் கொள்ளும்” என்று இவரை உருக்கமாக கேட்டுக் கொண்டார் இஞ்ஞாசியார். கொடுங்கோலன் மார்க்கஸ் ஆலியுஸ் ஆட்சியின் 6ம் ஆண்டில் பெரும் வேத கலாபனை தோன்றியது. திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். அந்தியோக்கு இஞ்ஞாசியார், “பொலிக்கார்ப், உமது மனம் இறைவனை அடித்தளமாகக் கொண்டு, அசைக்க முடியாத பாறைபோல இருக்கிறது. பரிசேயருக்கு எதிராக இயேசு பதில் கூறியதுபோல இருக்கிறது. தப்பறைக் கொள்கைக்கு எதிராக நீ முழங்கும் முழக்கம்” என்று கூறினார்.
     
         ஒருமுறை காட்சியில் இவருடைய தலையணை எரிவதுபோல கண்டார். “நான் நிச்சயம் உயிரோடு எரிக்கப்பட்டு மறைசாட்சி முடி பெறுவேன்” என்று கூறினார். மார்க்கஸ் ஒளரேலியஸ் பேரரசனின் காலத்தில் கிறிஸ்துவை அறிவித்தக் காரணத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்து, கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினர். கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். கிறிஸ்துவை மறுதலிக்காக பொலிக்கார்ப்பை தீயிலிட்டு கொலை செய்தனர். அவ்வாறு 156ஆம் ஆண்டு இறந்தார்.

Thursday 22 February 2018

மரியா உடன்படிக்கைப் பேழை


 
          புதிய உடன்படிக்கையின் அடையாளமாக தாழ்ச்சியால் அணி செய்யப்பட்ட அன்னை மரியா திகழ்கிறார். "உடன்படிக்கைப் பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன." (எபிரேயர் 9:4) புதிய உடன்படிக்கைப் பேழையான அன்னை மரியாவிடம் வானத்தில் இருந்து பொழியப் பட்ட உணவாகிய மன்னாவைக் கொண்ட பொற்சாடிக்கு நிகராக, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் உணவாகிய" (யோவான் 6:51) இயேசுவைத் தாங்கிய கருப்பை மரியாவிடம் இருக்கிறது. 




           மரியா உடன்படிக்கைப் பேழை. "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொலோசையர் 1:20) என்பதால், இயேசுவே மனிதகுலத்தோடு தந்தையாம் கடவுள் செய்துகொண்ட புதிய உடன்படிக்கையாகத் திகழ்கி றார். எனவே, இயேசுவைக் கருத்தாங்கிய அன்னை மரியா 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைக்கப்படுகிறார். புதிய உடன்படிக்கையில் கிறிஸ்து இயேசு போதித்த அன்பே ஆதாரமாக விளங்குகிறது. இந்த அன்பின் உடன்படிக்கையை உலகிற்கு கொண்டுவந்த பேழையாக அன்னை மரியா திகழ்கிறார்.


கோர்டோனா நகர் புனித மார்க்கிரேட்


          ஒறுத்தல் செய்து பக்தியும் தூய்மையும் மிகுந்தவர். ஏழை நோயாளர்களுக்கு அன்பின் பணிவிடைகள் செய்தவர். எளிமையை தனது வாழ்வில் பின்பற்றினார். புனித அசிசியாரைப் போல பிச்சை எடுத்து உணவு அருந்தினார். அன்னை மரியாவின் மிது பக்தியும் பற்றும் கொண்டு தோழமை உறவு கொண்டார். அன்னை மரியாவின் அருளால் துணையால் புனிதராக மாறியவர். துறவு வாழ்க்கை வழியாக தவ வாழ்கை மேற்கொண்டவரே புனித மார்க்கிரேட். இவர் 1247ஆம் ஆண்டு பிறந்தார். இவர் அழகும் அறிவும் திறமையும் பெற்றவர். இவருக்கு ஏழு வயதாகையில் இவரது தாயார் இறந்துப் போனார். தந்தை மறுமணம் செய்துகொண்டார்.
   


           தனது 17ஆம் வயதில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயானர். கணவனாலும், பெற்றோராலும் கைவிடப்பட்ட நிலையில் இறைவனை நோக்கி மன்றாடினார். இறையருளால் வழிநடத்தப்பட்டு கோர்டோனாவில் இருந்த பிரான்சிஸ்கன் துறவியர் இல்லத்திற்குச் சென்று அடைக்கலம் வேண்டினர். தாயையும், மகனையும் ஏற்றுக்கொண்டார்கள். மார்க்கிரேட் கடந்தகாலத்தில் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தினார். 3ஆண்டுகள் நோன்பு இருந்து ஒறுத்தல் செய்தார். தவ ஒறுத்தல்கள் வழியாக தன்னை தூய்மைப்படுத்திய இறைபக்தி மிகுந்த மார்க்கிரேட் புனித பிரான்சிஸின் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார்.


          ஒருமுறை செபித்துக்கொண்டிருந்த தருணத்தில் இயேசு அவருக்கு காட்சி கொடுத்து, “ஏழைப் பெண்ணே உனக்கு என்ன வேண்டும்”  என்று கேட்டார். அதற்கு மார்க்கிரேட், “உம்மைத் தவிர வேறு என்ன வேண்டும். நான் வேறு எதையும் விரும்பவோ, தேடவோ இல்லை”  என்றார். செப தப வாழ்க்கையை மேற்கொண்ட மார்க்கிரேட் நோயுற்ற, வீடற்ற மற்றும் ஏழைகளுக்காக அங்கேயே ஒரு மருத்துவமனையை உருவாக்கினார். அம்மருத்துவமனையின் செவிலியர்க்காக "மூன்றாம் நிலை சகோதரிகள் சபை" என்ற அமைப்பினை நிறுவினார். அவர், "இரக்கத்தின் அன்னை" என்றொரு சபையையும் நிறுவினார். நோயாளிகளுக்கு சேவை செய்வதிலேயே ஈடுப்பட்ட மார்க்கிரேட்  1297ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 22 ம் நாள், மரணமடைந்தார்.


புனிதர் பீட்டர் தமியான்



           

          “எல்லாரும் தங்கள் முன்மாதிரிகையால் மற்றவர்கள் முன் ஒளிர வேண்டும்” என்று கூறியவர். கடவுள் பக்தியும், அறிவும், நற்குணமும் மிகுந்தவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஏழை எளிய மக்களை அன்பு செய்தவர். ஏழை மக்களின் நண்பராக வாழ்ந்தவர். செபத்திற்கும் தனிகவனம் செலுத்தி தனிப்பட்ட நேரம் ஒதுக்கி செப வாழ்வில் கனவம் செலுத்தியவர். உலக நாட்டங்களை துறந்து கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்து குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். விவிலியம் நன்கு கற்று வகுப்புகள் வழியாக பறைசாற்றி வாழ்ந்தவரே புனித பீட்டர் தமியான். இவர் 1007ஆம் ஆண்டு பிறந்தார்.



       

  குழந்தைப்பருவத்தில் தாயிடமிருந்த கிடைக்காத அன்பும் அரவணைப்பும் அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டார். தம்முடைய சகோதரர்களில் ஒருவரால் மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டார். இவர் ஏழைகளின் நண்பனாக இருந்தார்.  உணவு உண்ணுகையில் ஏழைகளுடன் உண்ணுவதையும், அவர்களுக்காக செபிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சொந்த சகோதரர் புறக்கணித்ததால் ரவேன்ன மறைமாவட்டத்தின் குருவாக இருந்த தமது இன்னொரு சகோதரரின் அடைக்கலம் புகுந்தார். அவர் பீட்டர் தமியானை கல்வி கற்க செய்தார். பீட்டர் ஒரு பேராசிரியராக உயர்ந்தார். அவர் மிகவும் ஒழுக்க சீலராக இருந்தார். கடுமையான உழைப்புடன், செபிப்பதற்கென்று பல மணிநேரம் செலவிட்டார்.



         

        ஆசீர்வாதப்பர் சீர்திருத்த சபையில் சேர்ந்து முழுநேர செப வாழ்வில் இணைந்தார். பீட்டர் உறக்கத்தை குறைத்துக் கொண்டு, அதிக நேரம் செபிப்பதில் மிகவும் ஆர்வமாயிருந்தார். திருவிவிலியம் படிப்பதில் செலவிட்டார். ஆசீர்வாதப்பர் சீர்திருத்த சபையின் தலைவராக பொறுப்பேற்றார். சபையின் விதிமுறைகளை ஒழுங்குபடுத்தினார். துறவு மடங்களை விரிவுநடுத்தினார். ரோமிலுள்ள இரண்டு ஆசிரமங்களுக்கும் அரசு அலுவகங்களுக்குமிடையே இருந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். பீட்டர் தமியான், திருத்தந்தை ஒன்பதாம் லியோவோடு இணைந்து கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர் ஆவார். 

            

          ஒப்புரவு அருள்சாதனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். 1057ஆம் ஆண்டு கர்தினாலராக அருள்பொழிவு பெற்றார். தமது கத்தோலிக்க குருவானர்கள் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க ஊக்குவித்தார். மறைமாவட்ட குருக்கள் ஒன்றாக வாழவும், சொகுசு வாழ்க்கை முறையைக் கண்டித்தார்.தமது எழுத்துக்களில் கோட்பாடுகளைவிட, கதைகள் மற்றும் மேற்கோள்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். அவர் எழுதிய வழிப்பாட்டு அலுவலக சந்தங்கள் லத்தீன் மொழியில் அவரது திறமைக்கு சான்றாகும். பிப்ரவரி 22, 1072 அன்று அவர் உயிர் துறந்தார்.


Tuesday 20 February 2018

புனித ஜசிந்தா மற்றும் புனித ஃபிரான்சிஸ்கோ



     
         புனித பிரான்சிஸ் மற்றும் ஜெசிந்தா இருவரும் குடும்ப செபத்தில் ஆர்வமுடன் பங்குபெற்றனர். நற்கருணை வழியாக இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்டு அவரை அன்பு செய்தனர். ஆண்டவருக்கு தங்களை அர்ப்பணம் செய்து ஆராதித்து வந்தனர். ஜசிந்தா, ஃபிரான்சிஸ்கோ போர்ச்சுகீசிய நாட்டில் ஃபாத்திமா எனும் ஊரைச் சேர்ந்தவர்களாவர். ஃபிரான்சிஸ்கோவும் ஜசிந்தாவும், போர்த்துகீசிய கிராமமொன்றின் மிகவும் சாதாரண குடும்பத்தில் "மானுவல்" மற்றும் "ஒலிம்பியா மார்ட்டோ" ஆகியோருக்கு பிறந்தவர்கள். ஜசிந்தா மார்ச் 11, 1910 ஆம் ஆண்டும் ஃபிரான்சிஸ்கோ மார்ட்டோ : ஜூன் 12, 1908 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள்.
   
        போர்ச்சுக்கல் நாட்டில் பாத்திமா என்ற நகரில் 1916ஆம் ஆண்டு லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடுமேய்க்கும் சிறுவர்களுக்கு அன்னை மரியா காட்சி அளித்தார். சிறுவர்கள் ஆடுமேய்த்து கொண்டிருந்த தருணத்தில் வானதூதர் ஒருவர் கரங்களில் நற்கருணை ஏந்தியவாறு சிறுவர்களுக்குத் தோன்றினார். வானதூதர் தன்னை “அமைதியின் தூதர்” என்று அறிமுகம் செய்தார். மேலும் “நான் போர்ச்சுக்கல் நாட்டின் காவல்தூதர் நீங்கள் பாவிகளுக்காக செபிக்க வேண்டும்” என்று மூவரிடமும் கேட்டுக்கொண்டார்.


              நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் செபிக்க பின்வரும் செபத்தை மூவருக்கும் கற்றுக்கொடுத்தார். “என் கடவுளே! நான் உம்மை விசுவசிக்கின்றேன். நான் உம்மை ஆராதிக்கின்றேன். நான் உம்மை நம்புகின்றேன், நான் உம்மை அன்பு செய்கின்றேன், உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும், உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும், உம்மை நம்பாதவர்களுக்காகவும், உம்மை அன்பு     செய்யாதவர்களுக்காகவும் உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார். மேலும் “இயேசு மற்றும் அன்னை மரியா இவர்களின் இதயங்கள் நம் மன்றாட்டுக்குச் செவி கொடுக்கக் காத்திருக்கின்றன” என்று கூறி வானதூதர் மறைந்தார்.

           
           வானதூதர் மறைந்தவுடன் சிறுவர்கள் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த ஒரு புதர்ச் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியதைக் கண்டார்கள். அந்த மேகத்தின் மேல் அன்னை மரியா காட்சி அளித்தார். லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகிய மூவரும் அக்காட்சியைக் கண்டார்கள். அன்னை மரியா அவர்களிடம் “நான் செபமாலையின் அன்னை” என்று அறிமுகம் செய்தார். மூன்று சிறுவர்களிடமும் ஒவ்வொரு மாதமும் 13ஆம் தேதி அதே இடத்திற்கு வருமாறு மரியா கட்டளையிட்டார்.


          ஜøலை 13ம் தேதி காட்சியளித்த தருணத்தில் நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்து “பாவிகள் மனந்திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.மக்கள் நித்திய நரகத்தில் விழாமல் இருக்க “ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னித்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பாக உதவிபுரியும்” என்ற செபத்தைச் செபிக்கக் கற்றுக்கொடுத்தார். மூன்று சிறுவர்கள் பார்த்த செய்தியைக் கேள்விப்பட்ட அதிகாரிகள், அவர்களைப் பல வழிகளில் விசாரணை செய்தார்கள்.“மக்கள் பலரும் அன்னை தோன்றிய மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறுவர்களிடம் மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது. மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்க வேண்டும்; இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும்” என்று கூறி மறைந்தார்.


Monday 19 February 2018

புனித கான்ராட்



       உண்மைக்கு அடிபணிந்து அன்பும் பக்தியும் நிறைந்தவர். பெற்றோரின் வழிகாட்டுதலால் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தனது உடமைகளை விற்று ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். ஆன்மீக காரியங்களில் சிறந்த கவனம் செலுத்தி வாழ்ந்தவரே புனித கான்ராட்.

      கான்ராட் வட இத்தாலியில் உள்ள பியச்சென்சா என்ற இடத்தில் பிறந்தார். இறைபக்தியல் சிறந்து விளங்கினார். வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஒருமுறை வேட்டையாட சென்றபோது ஒரு விலங்கு இவரது குறிக்கு தப்பி புதரில் மறைத்துக்கொண்டது. புதருக்கு தீ மூட்டியபோது அது கொடுந்தீயாய் மாறி காடு முழுவதும் தீக்கிரையானது. இதை சற்றும் எதிர்பாராத கான்ராட் செய்வதறியாமல் நின்றார். இதைப்பார்த்த ஒருவர் அரசரிடம் புகார் செய்தார். அரசன் கைது செய்து சிறையில் அடைத்து மரண தண்டனை விதித்தான்.

             கான்ராட் தனது தவறுகளுக்கு மனம்வருந்தி மன்னிப்பு கேட்டார். தனது சொத்துகளை விற்று கொடுப்பதாக கூறி அவ்வாறே செய்தார். பின் பியச்சென்சாவிற்கு சென்று புனித பிரான்சிஸின் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவு வாழ்கையை ஆரம்பித்தார். 30ஆண்டுகள் செபத்திலும், தவத்திலும் இருந்து இறையருள் பெற்று தூயவராக வாழ்ந்து வந்தார். எண்ணற்ற புதுமைகள் செய்தார். நோயாளிகளை குணப்படுத்தினார். இறைஞானம் பெற்று தூயவராக வாழ்ந்த கான்ராட் 1351ஆம் ஆண்டு  பிப்ரவரி திங்கள் 19ஆம் நாள் இறந்தார்.

Saturday 17 February 2018

மரியா 'விடியற்காலத்தின் நட்சத்திரம்'

          'விடியற்காலத்தின் நட்சத்திரம்' அல்லது 'விடிவெள்ளி' என்பது மரியா என்றப் பெயரின் பொருளாகும். இயேசுவின் தாய் மரியாவை 'விடிவெள்ளி' என்று அழைப்பது, நேரடியாக அவரது பெயரையே குறித்து நிற்கிறது. அதேநேரத்தில், இது கடவுளால் வழங்கப்பட்ட காரணப் பெயராகவும் விளங்குகிறது. ஏனெனில் இயேசு என்ற ஆதவனின் வருகையை முன்னறிவிக்கும் விடிவெள்ளியாகவே உலக வரலாற்றில் மரியா தோன்றினார்.
 
      சூரியனின் கதிர்களால் பிரகாசிக்கும் விடிவெள்ளியைப் போன்று, மரியாவும் இயேசுவின் ஒளியால் பிரகாசிக்கி றார். கதிரவனின் பண்புநலன்களை விடிவெள்ளி பிரதிபலிப்பது போல, இயேசுவின் மாட்சியைப் பிரதிபலிப்பவராக மரியா திகழ்கிறார். "இதனால் தான் திருச்சபையின் உயரிய, சிறப்புப்பெற்ற, முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த உறுப்பாகவும், நம்பிக்கை மற்றும் அன்பின் முன்குறியாகவும் மரியா போற்றப்பெறுகின்றார்.

      கத்தோலிக்கத் திருச்சபையும் தூய ஆவியினால் கற்பிக்கப்பெற்று, பிள்ளைக்குரிய வாஞ்சையோடும் பற்றோடும் அன்புநிறைத் தாயாக அவரை ஏற்கின்றது." (திருச்சபை எண். 53) "இவர் கிறிஸ்து வின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை கொண்டோரின் தாய்." (திருச்சபை எண். 54) எனவே, நமக்கு இறையாட்சியின் விடியலைக் காட்டும் விடிவெள்ளியாக மரியா விளங்கு கிறார் என்பதில் சந்தேகமில்லை.மரியாவும் மனிதகுலத்தின் நெடும்பயணத்தில் நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக ஒளி வீசுகிறார். நமது வாழ்வில் இருள் சூழும் நேரங்களிலும், நம்பிக்கை தரும் விடிவெள்ளியாக வழிகாட்டவும் உதவி செய்வும் மரியா தயாராக இருக்கிறார். "இவ்வுலகில் ஆண்டவரது நாள் வரும்வரை, பயணம் செய்யும் இறைமக்கள் முன்பு உறுதியான நம்பிக்கை யின் அடையாளமாக மரியா ஒளிர்கின்றார்." (திருச்சபை எண். 68)

புனித ஜூலியானா

        புனிதர் ஜூலியானா, ரோம பேரரசன் "டையோக்லெஷியன்" என்பவரது ஆட்சிக் காலத்தில் நடந்த கிறிஸ்தவர்களின் துன்புருத்தல்களின்போது மறைசாட்சியாக கொல்லப்பட்டவர் ஆவார். மத்திய காலங்களில் நெதர்லாந்து நாட்டில் பிரசித்தி பெற்றவராக திகழ்ந்தார். ஜூலியானா, ஓர் மதிப்புமிக்க குடும்பத்தில் 285 ஆம் ஆண்டு 'கம்பேனியா'விலுள்ள 'குமாயே' என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் தந்தை அரசு அதிகார சபை அங்கத்தினர் ஆவார். ஜூலியானா தமது பெற்றோருக்கு தெரியாமலேயே திருமுழுக்கு பெற்றார். ஜூலியானா தனது சிறுவயதிலிருந்தே கடவுள் பக்தியில் வளர்ந்தார். தன் தாய்க்கு தெரியாமல் மறைவாகச் சென்று செபவாழ்வில் ஈடுபட்டார். பல முறை தன் தாயிடம் சொல்லாமலேயே தன் ஊரில் நடக்கும் கிறிஸ்தவ செபக்கூட்டங்களில் பங்கெடுத்தார்.


               ஜூலியானாவுக்கு சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்யப்பட்டது. பேரரசனின் ஆலோசகர்களில் ஒருவரும் அதிகார சபை உறுப்பினருமான "எலாசியஸ்"என்பவருடன் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால், ஜூலியானாவோ, தமது கன்னித் தன்மையை இழக்க விரும்பவில்லை. இவர் இறைவனுக்காகவே வாழ விரும்பினார். தமது விருப்பத்தை தமது பெற்றோரிடமும் தெரிவித்தார்.மிகவும் கீழ்படிதலுள்ள தம் பெண், இங்ஙனம் தம்மை மறுத்து பேசியது, அவரது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை இருந்தது. அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஜூலியானா கேட்கவில்லை. அவர்கள் ஜூலியானாவை எலாசியஸிடம் ஒப்படைத்தனர் எலாசியஸ் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜூலியானா கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதையும் விசாரித்து அறிந்து கொண்டான். ஜூலியானா திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்து விட்டார். இதன் காரணமாகவும் கோபமுற்ற 'ரோம ஆளுனர்' எலாசியஸ், ஜூலியானாவை கைது செய்ய உத்தரவிட்டான். 

     
          கைது செய்யப்பட்ட ஜூலியானா, 'ரோம ஆளுனரின்' முன்பு நிறுத்தப்பட்டார்.கிறிஸ்தவ மதத்தைத் தழுவி அதனைப் பின்பற்றிய காரணத்துக்காக ஜூலியானா கொடூரமாக துன்புறுத்தப் பட்டார். சாட்டையால் அடிக்கப்பட்டார். அவர், அவரது தலை முடியாலேயே கட்டித் தொங்க விடப்பட்டார். பின்னர், அவரது தலை முடி, அவரது தலையிலிருந்து பிடுங்கப்பட்டது.இறுதியில், ஜூலியானா ஒரு உருக்கப்பட்ட செம்பு கொப்பரையின் முன்பு கொண்டு வரப்பட்டார். அவர் அந்த கொப்பரையைத் தொட, அது விழுந்து, அதன் உருக்கப்பட்ட செம்பு அவரை சுட்டு காயப்படுத்தியது. நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள்  கிறிஸ்தவர்களாக மாறுவதற்காக தயாராக காத்திருந்தனர்.இறுதியில், 304 ஆம் ஆண்டு நிக்கொமீடியா, துருக்கியில் ஜூலியானா தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினெட்டு.


Wednesday 14 February 2018

புனித க்ளாத்தெ லா கொலம்பியர்

   
   
என் ஆன்மாவே நீ ஏன் உனது அன்பர் ஆண்டவரோடு நெருங்கி உறவாடத் தயங்குகின்றாய்? ஆண்டவர் உன்னோடு இருப்பதே உனக்கு நலமானது என்று கூறியவர். இயேசுவின் சிலுவைப் பாடுகளில் முழுமையாகப் பங்கு சேர்ந்தவரே புனித க்ளாத்தெ லா கொலம்பியர். இவர் பிரான்ஸ் நாட்டில் 1641ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாள் பிறந்தார். பெற்றோரின் முன்மாதிரியான வாழ்க்கையால் நற்பண்பில் வளர்ந்து வந்தார். தனது ஒன்பதாம் வயதில் திருமறை வழக்கப்படி நற்கருணையும், உறுதிப்பூசுதலும் பெற்றுக்கெண்டார்.
 

     க்ளாத்தெ லா கொலம்பியர் பெற்றோரின் அனுமதியும் ஆசீரும் துறவற வார்த்தைப்பாடுகளான கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வழியாக  இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தனது முதல் நன்றித் திருப்பலியை நிறைவேற்றிய வேளையில், மூவுலகாளும் இறைவனின் திருமகனாம் இயேசு, மனிதராய்ப் பிறந்து, தமது திருவுடலையும் திரு இரத்தத்தையும் பலியாகவும், திருவிருந்தாகவும் ஏற்படுத்தினார். இரத்தம் சிந்தாத வகையில் இயேசுவின் திருவுடலையும், திருஇரத்தத்தையும் கொண்ட திருக்கிண்ணத்தை ஏந்தும் ஒரு குருவானவரின் கரங்கள் எத்துணைப் பேறுபெற்றவை.” என்று கூறினார்.


  இறைவனின் அருளால் முழுநேர மறையுரையாளராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் செயல்பட்டார். நற்செய்தியின் மதிப்பீடுகளை நாளும் உள்வாங்கினார். இறையியலில் கருத்தாழமிக்கக் கருத்துக்களை மறையுரை வழியாக எடுத்துரைத்தார். நற்செய்தியை மக்களுக்கு ஏற்ற விதத்தில் எடுத்துக் கூறினார். பற்பல பணிகள் வழியாக அனைவரின் உள்ளங்களையும் இறைவன்பால் வசீகரித்தார். சிலருடைய பொய்யானக் குற்றச்சாட்டினால், க்ளாத்தெ லா கொலம்பியரை அநீதியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். எல்லாவற்றிற்கும் அமைதியாக அன்புடனும், பொறுமையுடனும், அறிவுப்பூர்வமாகவும் கொலம்பியர் பதில் அளித்தார். அவர் நிரபராதி என்பது தெள்ளத் தெளிவாயிற்று. இதயம் இறையன்பால் நிறைந்தது. முகமோ இறைபிரசன்னத்தைப் பிரதிபலித்தது. பல ஆண்டுகள் இயேசு சபையில் புனிதமான குருத்துவப் பணியைச் செம்மையாகச் செய்து. இயேசுவின் குரலைக் கேட்டவரே க்ளாத்தெ லா கொலம்பியர். இவர் 1682, பிப்ரவரி 15ஆம் நாள்விணணகம் சேர்ந்தார்



அன்னையும் செபமாலையும்



         
            புனித ஜான்போஸ்கோ, “நான் மரியாவைப் பார்க்காமல்கூட இருந்துவிடுவேன். ஆனால் செபமாலை சொல்லாமல் இருக்கமாட்டேன்”  என்று கூறியுள்ளார். 1208 ஆம் ஆண்டில் புனித தோமினிக் திருச்சபைக்கு தினமும் செபமாலை செபிக்கும் முறையை முதன முதல் கற்பித்தார். லூர்து நகரிலும், பாத்திமாவிலும் முக்கியமாக செபமாலை செபிப்பதை பரிந்துரைக்கவே அன்னை மரி காட்சிகளும் செய்திகளும அருளினார். 




அன்னைமரி புனித தோமினிக்கிடம் “செபமாலை உத்தரியம் இவைகளைக் கொண்டு நான் ஒருநாள் உலகைக் காப்பாற்றுவேன்” என்று வாக்களித்தார். அன்னைமரி புனித தோமினிக்கிடமும், முக்தி ஆலனிடமும் “தேவ இரகசியங்களை தியானத்துப் பக்தி உருக்கத்துடன் செபமாலை செபிப்பவர் துர்பாக்கியத்தால் மேற்கொள்ளப்படமாட்டார். இறைவன் அவரை தண்டிக்கமாட்டார். அகால மரணத்திற்கு ஆளாகமாட்டார். அருள் நிலையில் வாழ்ந்;து விண்ணக வாழ்விற்குத் தகுதி பெறுவார்” என்று வாக்களித்திருக்கிறார். இறைவனின் சினத்தைத் தணித்து இரக்கத்தை பெற்று கொள்ள செபமாலை ஒன்றே வழி.
  



        ரயிலில் நான்கு நண்பர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு ஸ்டே~னில் ஒரு வயதான பெரியவர் ஏறினார். நான்கு நண்பர்கள் இருந்த பெட்டியில் அமர்ந்தார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த பெரியவர் செபமாலையை எடுத்து செபிக்க ஆரம்பித்தார். இதைக்கண்ட இளைஞர்கள் ‘இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு ஆசாமியா?’ என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அந்த பெரியவரிடம் “பெரியவரே! காலம் மாறிப் போச்சு! இது அறிவியல் காலம். கடவுளால் முடியாததுகூட மனுசன் செய்றான். இப்படிப்போய் நீங்க அதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம, சும்மா செபமாலை சொல்றீங்களே! உங்க அட்ரசை கொடுங்க. நாங்க நல்ல அறிவியல் கண்டுபிடிப்பு புத்தகமெல்லாம் அனுப்பி வைக்கிறோம்” னு சொல்லி அந்த பெரியவரை கேலி பண்ணுனாங்க. அந்த பெரியவர் தனது முகவரி அட்டையை எடுத்துக் கொடுத்தார். அதைப்படித்து பார்த்த இளைஞர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். “டாக்டர் லூயி பாஸ்டர், அறிவியல் ஆய்வு மையம், பாரீஸ்” னு எழுதியிருந்தது. இளைஞர்கள் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.


புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ்

புனிதர்கள் சிரில் மற்றும் மெதோடியஸ் ஆகிய இரு சகோதரர்களும் "பைஸான்தீனிய"  நாட்டின் கிறிஸ்தவ இறையியலாளர்களும், மறை பரப்பாளர்களுமாவர். தற்போதைய கிரேக்க நாடான "பைஸான்தீனிய" நாட்டில் சிரில் 826 அல்லது 827, ஆம் ஆண்டும் மெதோடியஸ் : 815 ஆம் ஆண்டும் பிறந்த இவர்களிருவரினதும் தந்தை பெயர் "லியோ" ஆகும். "மரியா" இவர்களது தாயார் ஆவார். சிரிலின் இயற்பெயர் "காண்ஸ்டன்டைன்" ஆகும். இவர் தமது மரணத்தின் சிறிது காலத்தின் முன்னே ரோம் நகரில் துறவறம் பெற்றபோது சிரில் என்னும் மதப் பெயரை ஏற்றுக்கொண்டார்.
     
          சிரிலுக்கு பதினான்கு வயது நடக்கையில் அவர்களது தந்தையார் மரணமடைந்தார். அந்நிலையில், பேரரசின் முதலமைச்சர்களுள் ஒருவராயிருந்த "தியோக்டிஸ்டோஸ்" என்பவர் அவர்களின் பாதுகாவலரானார். அவரே அவர்களது கல்விக்கும் உதவி புரிந்தார். சிரில் தமக்கு கிடைத்த ஆளுநர் பதவியை புறக்கணித்தார். ஆனால் அதே வேளையில் அவரது சகோதரரான மெதோடியஸ் "ஸ்லாவிக்" மொழி பேசும் மக்கள் வசிக்கும் பிராந்தியத்தில் அப்பதவியை ஏற்றுக்கொண்டார்.


          சிரில் ஒரு துறவு மடத்தில் இணைந்தார். அவரது சகோதரர் மெதோடியஸ் சிறிது காலம் அரசு பதவியில் பணியாற்றிய பிறகு துறவு மடத்தில் இணைந்தார். சிரிலுடைய முதல் பணி, கிழக்கு விதிமுறைகள் அமலிலிருந்த அப்பிராந்தியத்தில் ஒரு புதிய எழுத்துக்களை கண்டுபிடித்தலாயிருந்தது. பின்னர், அவருடைய சீடர்கள் சிரில்லிக் எழுத்துக்களை உருவாக்கினர். பவுல் எழுதிய கடிதங்கள் மற்றும் வழிபாட்டு புத்தகங்கள் ஆகியனவற்றை இணைந்து "ஸ்லாவோனிக்" மொழியில் மொழிமாற்றம் செய்தனர்.

          மெதோடியஸ் ஸ்லாவிக் மக்களுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக செயல்பட்டார்.  மெதோடியஸ் ஜுர வேகத்தில், எட்டே மாத காலத்தில் மொத்த திருவிவிலியத்தையும் "ஸ்லாவோனிக்"  மொழியில் மொழிபெயர்த்தார். 885ம் ஆண்டின்  ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். கிழக்கு மற்றும் மேற்கு திருச்சபைகளின் ஒன்றிப்பிற்காக சிறப்பாக பணியாற்றியிருந்தனர். 1980ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்  இச்சகோதரர்களை ஐரோப்பிய நாடுகளின்இணை பாதுகாவலர்களாக நியமித்தார். இவரின் நினைவுத் திருநாள் பெப்ரவரி 14 ஆகும். 


புனித கேத்தரின் தே ரிச்சி



        சிறுவயது முதல் செபம் தனது உயிர்மூச்சாக மாற்றியவர். உத்தத்தரிக்கின்ற நிலையில் இருக்கின்ற ஆன்மாக்களின் ஈடேற்றம் பெறவும், இறைவனின் முகம் காணவும் ஒறுத்தல்கள் செய்தவர். அன்னை மரியாவிடம்மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தவரே புனித கேத்தரின் தே ரிச்சி. இவர் 1522ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்தார். குழந்தைப்பருவத்தில் தாயை இழந்தார். தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த கேத்தரின் செபம் செய்வதில் ஆர்வம் காட்டினார்.


           கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். அருகில் இருந்த புனித வின்சென்டின் சாமிநாதர் மடத்தில் சேர்ந்து கல்வி கற்றார். தனது 14ஆம் வயதில் இறையாட்சி பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்ய அம்மடத்தில் துறவியாக சேர்ந்தார். 1536ஆம் ஆண்டு துறவற வார்த்தைப்பாடு கொடுத்த கேத்தரின் இறைவனுக்கு முற்றிலும் சொந்தமானார். இறைவனை அளவில்லாமல் அன்பு செய்தார். ஆன்மீக வாழ்வில் கவனம் செலுத்தி வாழ்ந்த கேத்தரின் இறைகாட்சிகள் காணும் வரம் பெற்றார். நற்கருணை வண்டவர் முன்பாக அடைக்கலம் தேடினார்.

       

          இறைமக்கள் அனைவருக்காகவும் குறிப்பாக உத்தத்தரிக்கிற நிலையிலுள்ள ஆன்மாக்களுக்காக தியாகம் செய்து ஒறுத்தல் வழியாக வேண்டுதல் செய்தார். இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்துவதாக உணர்ந்தார். ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைய அனைவருக்கும் உதவினார்.  இயேசுவின் திருப்பாடுகளை நினைத்து தியானம் செய்தார். ஒறுத்தல்கள் பல செய்தார். தியாக வாழ்வின் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார்.  


          இயேசுவின் துன்பப்பாடுகளை நினைத்து கண்ணீர் சிந்தினார். இயேசு ஆறுதல் அடைய அவர் அடைந்த பாடுகளை தனது உடலில் அனுபவிக்க ஆவல் கொண்டார். இயேசுவும் அவரது துன்பப்பாடுகளை அவரது உடலில் கொடுத்தார். இந்நிகழ்வு வ்வொரு வாரமும் வியாழக்கிழமை பிற்பகல் நான்கு மணி முதல் வெள்ளிக்கிழமை பற்பகல் அதே நேரம் வரை இயேசுவின் துன்பப்பாடுகளை கேத்தரின் தே ரிச்சி தனது உடலில் அனுபவித்து வாழ்ந்த இவர் 1590ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள்  

Tuesday 13 February 2018

அன்னை மரியாவும் செபமாலையும்


           “உங்கள் உள்ளங்களில் இல்லங்களில் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் எனில் தினமும் மாலையில் ஒன்றுகூடி செபமாலை செபிக்க வேண்டும்” என்றார் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர்.  ரயிலில் நான்கு நண்பர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு ஸ்டேனில் ஒரு வயதான பெரியவர் ஏறினார். நான்கு நண்பர்கள் இருந்த பெட்டியில் அமர்ந்தார். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த பெரியவர் செபமாலையை எடுத்து செபிக்க ஆரம்பித்தார்.


           இதைக்கண்ட இளைஞர்கள் ‘இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு ஆசாமியா?’ என கிண்டலடிக்க ஆரம்பித்தனர். அந்த பெரியவரிடம் “பெரியவரே! காலம் மாறிப் போச்சு! இது அறிவியல் காலம். கடவுளால் முடியாததுகூட மனுசன் செய்றான். இப்படிப்போய் நீங்க அதைப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம, சும்மா செபமாலை சொல்றீங்களே! உங்க அட்ரசை கொடுங்க. நாங்க நல்ல அறிவியல் கண்டுபிடிப்பு புத்தகமெல்லாம் அனுப்பி வைக்கிறோம்”  சொல்லி அந்த பெரியவரை கேலி பண்ணுனாங்க. அந்த பெரியவர் தனது முகவரி அட்டையை எடுத்துக் கொடுத்தார். அதைப்படித்து பார்த்த இளைஞர்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். “டாக்டர் லூயி பாஸ்டர், அறிவியல் ஆய்வு மையம், பாரீஸ்” னு எழுதியிருந்தது. இளைஞர்கள் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.

Monday 12 February 2018

புனித கௌடென்சியஸ்


         
           உண்மையின் வழியில் பயணம் செய்து நற்செய்தி அறிவித்தவர். சொந்த நாட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்து அகன்று இறைவன் காட்டிய பாதையில் பாதங்கள் பதறாமல் பயணம் செய்தவர். அன்னை மரியாவை அன்பு செய்து அன்னையின் பாதுகாப்பும் ஆரவணைப்பும் பெற்று வாழ்ந்தவரே புனித கௌடென்சியஸ். இவர் இத்தாலி நாட்டில் பிரெசியா என்னும் நகரில் 360ஆம் பிறந்தார்.


           ஜெருசலேம் திருப்பயணம் செய்த தருணத்தில் ஆயர் பிலாஸ்ட்ரியுஸ் இறந்தார். இத்தருணத்தில் புனித அம்புரோஸியார் ஜெருசலேம் ஆயராக திருபொழிவு செய்தார். ஆயராக பெறுப்பேற்றவுடன் புனித பூமிக்கு  பயணம் செய்து புனித பொருட்களைச் சேகரித்தார். அவற்றை ஆலயத்தில் வைத்து பாதுகாத்தார். புனித யோவான் கிறிஸ்சோஸ்தம் அவருடன் நண்பராக பழகினார். அவரின் துணையுடன் நன்மைகள் செய்த புனித கௌடென்சியஸ் 427ஆம் ஆண்டு இறந்தா

அமல உற்ப அன்னை மரியா

      பிரான்சு நாட்டின் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் கி.பி. 1858 பிப்ரவரி 11ந்தேதி முதல் ஜூலை 16ந்தேதி வரை அன்னை மரியா பதினெட்டு முறை காட்சி அளித்தார்பெர்னதெத் சூபிரூஸ் என்ற இளம்பெண் அன்னையின் காட்சியைக் காணும் பேறுபெற்றார். மரியன்னை பெர்னதெத்திடம், "நானே அமல உற்பவம். எனக்காக இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும். பாவிகளின் மனமாற்றத்திற்காக மக்கள் செபமும் தவமும் செய்ய வேண்டும்" என்று கூறினார். அன்னை, நாளுக்கு ஒரு மறையுண்மை என்ற வகையில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறையுண்மைகள் அனைத்தையும் 15 காட்சிகளில் பெர்னதெத்தை செபிக்கச் செய்தார். அன்னை மரியாவின் காட்சிக்கு அடையாளமாக அற்புத நீரூற்று ஒன்றும் தோன்றியது.

Sunday 11 February 2018

புனித லூர்து அன்னை

 
            பிரான்ஸ் நாட்டில் 1858ஆம் ஆண்டு பெர்னதெத் என்ற சிறுமி, தனது தங்கை மேரி மற்றும் உறவினர் யோவான் ஆகியோருடன் சேர்ந்து விறகு சேகரிக்க கேவ் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியில் தண்ணீர் குகை இருந்தது. அது மசபியேல் குகை என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் குகையைக் கடந்து செல்ல வேண்டும். 
பெர்னதெத் குளிரால் தண்ணீரில் கால் வைக்க முடியாமல் தயங்கி நின்றார். அப்போது பலமான காற்று வீசியது சுற்றிலும் பார்த்தார். அருகிருந்த குகையில் ஓர் அற்புதமான காட்சியைக் கண்டார். “அமல உற்பவியான அன்னை மரியா, எழில் மிக்க ஓர் இளம் பெண்ணாகத் தோற்றமளித்தார். அன்னையின் முகம் விண்ணக ஒளியினால் பிரகாசித்தது. நீண்ட வெள்ளைநிற ஆடையணிந்து, இடையில் நீலநிற இடைக்கச்சைக் கட்டியிருந்தார். பாதங்கள் மஞ்சள் நிற ரோஜா மலர்களால் அழகு செய்யப்பட்டிருந்தன. கரத்தில் செபமாலை தொங்கியது. மரியா பெர்னதெத்தைத் தன்னுடன் சேர்ந்து செபமாலை செபிக்க அழைத்தார்.” சிறிது நேரத்திற்குப் பின் அன்னை மரியா மறைந்தார். இவ்வாறு பல நாட்கள் தோன்றினார்.





            பெர்னதெத் தான் கண்ட காட்சியை வீட்டிற்குச் சென்று தன் தாயிடம் கூறினார். “அம்மா! அந்த அழகான சீமாட்டியைப் பார்த்துக் கொண்டே இருக்க விழைகின்றேன். அவர் யார் என்று தெரியவில்லை” என்றார். தாய்“ இது எல்லாம் அலகையின் தந்திரம். இனி நீ அங்கு செல்லக் கூடாது” என்றார். மீண்டும் விறகு சேகரிக்கச் சென்ற பெர்னதெத், அன்னை மரியாவைத் தரிசித்தார். இந்தச் செய்தியைக் கேட்ட சிலர் நம்பினார்கள். பலர் ஏளனமாகப் பேசினர். அன்னை மரியா, ஒருநாள் முகத்தில் பெரும் துயரத்துடன் காணப்பட்டார். பெர்னதெத், “அம்மா, ஏன் இன்று வருத்தமாக இருக்கின்றீர்கள்”என்று கேட்டார். அன்னை மரியா, “மகளே! உலகில் எண்ணற்ற மக்கள் கடவுளைப் புறக்கணித்து பாவம் செய்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மனம்மாற நீ செபமாலை செபிக்க வேண்டும்” என்றார். மற்றொரு நாள் “தவம்! தவம்! தவம்!” என்று அன்னை கூறினார். அன்னையின் அறிவுரைக்கேற்ப “பாவிகள் மனம்மாற செபமாலை செபிப்பேன். தவ முயற்சிகள் செய்வேன்” என்று உறுதிகொண்டார். இதைக் கேள்விப்பட்ட தலைவர்கள், காவலர்கள் பெர்னதெத்தைக் குகைக்குச் செல்ல தடை விதித்தனர். பங்கு குருவானவர்,“நீ அவர்களிடம் பெயர் என்ன? என்று கேள்”என்றார்.





           1858, ஜøலை 16ஆம் தேதிக்குள் மொத்தம் 18முறை பெர்னதெத்திற்குக் காட்சி தந்தார் மரியா. அன்னை மரியிடம், “நீங்கள் யார்? உங்கள் பெயர் என்னவென்று சொல்வீர்களா?” என்றார். 16வது காட்சியின் போது அன்னை மரியாள்,“நாமே அமல உற்பவம், அதாவது நான் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவள்” என்று கூறி மறைந்தார். அங்கு அற்புதமான நீரூற்றும் உருவாயிற்று. அந்த நீரைப் பருகியோர் நோயிருந்து விடுதலை பெற்றனர். இப்புதுமையான காட்சி பற்றிய தகவல் பரவியதும், எல்லா திசையிலும் இருந்தும் மக்கள் அலையெனத் திரண்டு லூர்துநகர் நோக்கி வர ஆரம்பித்தார்கள். அன்னை மரியாவின்மீது அளவு கடந்தப் பக்தி வளரத் தொடங்கியதால் இது குறித்து ஆராய்வதற்காகத் தார்பஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் ஒரு குழுவை ஏற்படுத்தினார். பலதரப்பட்ட மக்களையும் நான்கு ஆண்டுகள் விசாரித்த அக்குழு தமது அறிக்கையை ஆயரிடம் கொடுத்தது. அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆயர் லாரன்ஸ் 1862ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள்“பெர்னதெத் குகையில் கண்ட அனைத்தும் முற்றிலும் உண்மையே. மேலும் அவள் குகையில் கண்ட பெண்மணி வேறுயாருமல்ல, அது கன்னி மரியே” என்று உறுதிப்படுத்தினார். பல நிகழ்ச்சிகளுக்குப்பின் அங்கு ஆலயம் கட்டப்பட்டது. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான், 1854, டிசம்பர் 8ஆம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர், “மரியா அமல உற்பவி” என்ற கோட்பாட்டை அறிக்கையிட்டார்.