Sunday 4 February 2018

புனித அருளானந்தர்

   
         “இளமை வாய்ந்த குருக்களே! என்னுடன் இந்தியாவிற்கு வாருங்கள் அங்கு எம்பெருமான் இயேசுவின் நற்செய்தியை விதையுங்கள். அறுவடை அதிகமாக இருக்கின்றது. அறுப்பதற்கோ ஆட்கள் இல்லை” 
என்ற பல்தசார் தே கோஸ்தா என்பவரின் வார்த்தையால் இறையழைத்தலை உணர்ந்து இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் இறைபணி செய்தவரே புனித அருளானந்தர். இவர் போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் 1647ஆம் ஆண்டு மார்ச் திங்கள் ஒன்றாம் நாள் பிறந்தார்.


            தாயிடமிருந்து விசுவாச உண்மைகளை கற்றுக்கொண்டு, தூய்மையின் பாதையில் வளர்ந்து வந்தார். போர்ச்சுக்கல் நாட்டை நான்காம் பேதுரு என்ற அரசர் ஆண்டு வந்த தருணத்தில் அறிவிலும், பக்தியிலும், ஒழுக்கத்திலும், இறைஞானத்திலும் சிறந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்த அருளானந்தர் இளவரசனின் தோழனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாறு ஒன்பது வயது முதல் இளவரசன் பெத்ரோலின் நெருங்கியத் தோழனாக அரண்மனையில் வாழ்ந்தார். அரண்மனையில் வாழ்ந்தாலும் ஆடம்பரத்தை வெறுத்தார். இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்ந்து அனைவருக்கும் உதவிகள் பல செய்தார். 
        

             குருவானவராகப் பணிசெய்ய விரும்பினார். தன் தாயிடம் அனுமதியும் ஆசீரும் பெற்று, இறைபணி செய்யக் கடும் தவ முயற்சிகளுடைய இயேசு சபையில் 1662ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17ஆம் நாள் சேர்ந்தார். துறவறப் பயிற்சிகள் பெற்று 1664, டிசம்பர் 25ஆம் நாள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் போன்ற வார்த்தைப்பாடுகள் வழியாகத் தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்தார்.  புனித சவேரியாரைப் போன்று தானும் இந்தியா செல்ல விரும்பினார். “நம்பிக்கை வாழ்வே வீரவாழ்வு; அதிலும் மறைசாட்சியான வாழ்வே சிறப்பு மிக்கது” என்று உணர்ந்து கொண்டு, 1673, மார்ச் 25ஆம் நாள் தான் பிறந்த தாய்நாட்டை விட்டு, இந்திய நாட்டிற்கு வந்தடைந்தார்.

           அருளானந்தர் ஓய்வின்றி இறைவார்த்தையைப் போதித்தார். ஏழை எளிய மக்களுக்கு நன்மைகள் பல செய்தார். நோயுற்றோரை நலம்தரும் இறைவார்த்தையின்வல்லமையால்  குணப்படுத்தினார். குழந்தைகளுக்கு விவிலியக் கதைகள் வழியாக நல்லறிவு புகட்டினார். இறையரசைக் கட்டியெழுப்பிட அயராது உழைத்தார்.  அருளானந்தரின் இறைபணியை விரும்பாத அரசன், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தான்.  கொடூரமான சித்திரவதைகளை செய்து சவுக்கால் அடித்தனர். மாமனிதர் அருளானந்தர் உடலெங்கும் இரத்தக் காயங்கள். இறுதியாக 1698ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் இயற்கை எய்தி விண்ணகம் நுழைந்தார்.

    

No comments:

Post a Comment