Friday 2 February 2018

மரியா இறைவனின் தாய்


 
          ஒரு தாயானவள் தனது பிள்ளைகள்மீது வைக்கும் பாசம் இயற்கையானது. தாய் என்றால் அன்பும் ஆதரவும், பண்பும் பாசமும், நேர்மையும் நேசமும், தியாகமும் இரக்கமும், கனிவும் ஈகையும் நிறைவாகப் பெற்றவர்.
இதையே கவிஞர் ஒருவர், “தாயன்பை எடுத்துரைக்க உலக மொழிகளில் போதிய  வார்த்தைகளே இல்லை” என்கிறார். ஆம்! சாதாரண மனிதரை ஈன்ற தாயை வருணிக்கப்  போதிய வார்த்தைகளே இல்லை என்றால், விண்ணையும் மண்ணையும் எக்காலத்தும் ஆள்கின்ற கிறிஸ்து அரசரை ஈன்ற தாயை நாம் எவ்வாறு வருணிக்க முடியும். புனித அகஸ்டின், “ஒரு மனிதரின் உடலுள்ள உறுப்புகளெல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை அவருடைய தகைமைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்கிறார். 

       

      மரியா இறைவனின் தாய் என்பது திருச்சபையின் நம்பிக்கை. மரியா நம் ஒவ்வொருவரின் தாய். இதையே எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” என்று உரைக்கிறார். மரியா ஆண்டவரின் தாய் என்றால், உண்மையிலேயே இறைவனின் தாய். கி.பி 431ஆம் ஆண்டு எபேசில் கூடிய பொதுச்சங்கம், “இம்மானுவேல் உண்மையிலேயே கடவுள்; எனவே பேறுபெற்ற கன்னி மரியா உண்மையிலேயே இறைவனின் தாய்; ஏனெனில் அவர் கடவுளிடமிருந்து பிறந்த வார்த்தையானவரை ஊனுடலில் ஈன்றெடுத்தார்.மரியா உண்மையாகவே இறைவனும் மீட்பருமானவரின் தாய் என ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்பெறுகிறார் என்றும் சங்கம் கூறுகிறது. 


No comments:

Post a Comment