Monday 23 October 2017

புனித யோவான் பெர்க்மான்ஸ்



     
          “இளைஞராக இருக்கும்போது புனிதராக மாறவில்லை என்றால், நான் ஒரு போதும் புனிதராகிட முடியாது” என்று வாழ்க்கையால் சான்று பகர்ந்தவரே புனித யோவான் பெர்க்மான்ஸ். இவர் பெல்ஜியம் நாட்டில் டயஸ்ட் என்னும் கிராமத்தில் 1599ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் நாள் பிறந்தார். பெர்க்மான்ஸ் அளவற்ற அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர். பெற்றோருக்கும் இறைகட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். 

            பெர்க்மான்ஸ் எல்லா நாட்களும் அதிகாலையில் எழுந்து ஆலயத்திற்குச் சென்று திருப்பலிக்கு உதவி செய்வது வழக்கம். நற்கருணையிலிருந்து இறைஞானம் பெற்று எண்ணற்ற நன்மைகள் செய்தார். தனது நற்பண்புகளால் அனைவரையும் வசீகரித்தார். இவரது நற்செயல்களைப் பார்த்த பங்குத் தந்தை, “பெர்க்மான்ஸ் வழியாக இறைவன் எண்ணற்ற புதுமைகள் செய்வார்” என்று கூறினார். ஒரு குருவானவராக இறைபணி செய்ய ஆவல் கொண்டார். பெர்க்மான்ஸ் அறிவில் சிறந்து விளங்கினார். நண்பர்களிடம் அன்புடன் பழகி, தவறுகளைக் கண்டிப்புடன் திருத்தினார்.

        தனது தந்தையிடம் தான் ஒரு குருவாக மாறவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். “நான் கடவுளின் திருவுளத்தை எப்பொழுதும் நிறைவேற்றுவதில் கவனமாய் இருப்பேன்” என்றார். கடவுளின் திருவுளம் கண்டறிந்து நிறைவேற்றிட இயேசு சபையில் சேர்ந்தார். தனது குறிப்பேட்டில், “நான் ஒரு புனிதராக மாற வேண்டும். புனிதம் என்பது பெரிய காரியங்களைச் செய்வதில் அல்ல. கீழ்ப்படிதலையும், கட்டளையிடுவதையும், அறிவுரை கொடுப்பதையும் நன்றாகச் செய்வதில்தான் இருக்கிறது” என்று எழுதி அவ்வறே வாழ்ந்து வந்தார்.

       நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தை மெய்யாகவே உணர்ந்தார். ஒரு நண்பரோடு உரையாடுவது போல் இயேசுவுடன் உரையாடினார். இயேசுவின் துன்பப் பாடுகளைத் தியானித்தார். இரவில் கடும் குளிரிலும் ஆலயத்தில் சென்று சிலுவைப்பாதை நடத்தினார். பெர்க்மான்ஸ், அன்னை மரியாவிடம் அளவு கடந்த அன்பு கொண்டிருந்தார். பெர்க்மான்ஸ்,“யோவான் பெர்க்மான்ஸ் என்னும் நான் வாழ்நாள் முழுவதும் தூய்மையான வாழ்க்கை வாழ்வேன் என்று நற்கருணை ஆண்டவர் முன்பாக உறுதிமொழி எடுத்தார். அன்னையே உமது அமல உற்பவத்தை நம்புகிறேன்” என்று எழுதி இரத்தத்தால் கையொப்பமிட்டார்.

      “திருச்சிலுவை, செபமாலை, சபை ஒழுங்கு புத்தகம் இவற்றை நெஞ்சோடு அணைத்தார். இவையே என் வாழ்வின் மூன்று பொக்கிசங்கள். இவற்றோடு நான் மகிழ்வுடன் இறப்பேன்” என்றார். “மரியே என்னைக் கைவிடாதேயும்; நான் உம்முடைய மகன்; எனக்கு ஆயிரம் இதயங்கள் இருந்தாலும், அவற்றால் உம்மை நேசிப்பேன்” என்றுகூறி 1621ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் நாள் இயற்கை எய்தி இம்மண்ணகம் விட்டு விண்ணகம் சென்றார். திருத்தந்தை 13ஆம் சிங்காராயர் 1888ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 15ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். புனித யோவான் பெர்க்மான்ஸ் பீடச்சிறுவர்களின் பாதுகாவலர்.  திருநாள் நவம்பர் 26ஆம் நாள்.

No comments:

Post a Comment