Friday 9 November 2018

அன்னை மரியா

     தொன்போஸ்கோ தனது ஒன்பதாவது வயதில் ஒரு கனவு கண்டார். அவரது வீட்டருகில் இருந்த பெரிய விளையாட்டுத் திடல் அவர் நின்றிருந்தார். அங்கு ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் குழுமியிருந்தனர். சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர்; சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்; மிகப் பலர் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி சபித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு,  அதிர்ச்சியடைந்து கோபத்துடன் பொங்கியெழுந்தார். ஓடிப்போய் அவர்களுடைய கன்னங்களில் மாறி மாறி அறைந்தார்.

                அப்போது உயர்தரமான, நீண்ட ஒளிரும் வெண்ணிற ஆடை அணிந்து இயேசு அங்கே தோன்றினார். தொன்போஸ்கோவிடம், “நீ இந்த மாணவர்களை அதிகாரத்தினாலோ, அடக்கு முறையினாலோ அல்லாமல் அன்பினால் மட்டுமே வென்றெடுக்க வேண்டும். பாவம் அசிங்கமானது; ஆனால் புண்ணியம் அழகானது; தூய்மையானது என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இப்பணியை இப்போதே செவ்வனே செய்ய வேண்டும்” என்றார். தொன்போஸ்கோ குழப்பத்தோடும், பயத்தோடும், “நா ன் சிறு பையன். இந்த இளைஞர்களிடம் சமயத்தைப்பற்றி எப்படிப் பேச முடியும்” என்று கேட்டார். அந்த நேரத்தில்  இளைஞர்களிடம் இருந்த கூச்சலும், குழப்பமும், வசை மொழிகளும் நின்று, இயேசுவை சூழ்ந்து நின்றனர். தொன்போஸ்கோ, “இது என்னால் முடியாது போல் தோன்றுகிறது” என்றார். அதற்கு இயேசு என் தாயை உனக்கு ஆசிரியையாகத் தருவேன்” என்று கூறினார்.

         உடனே அவர் அருகில் மிகவும் ஒளி பொருந்திய, விண்மீன்களை முடியெனச் சூடிய அழகிய தோற்றத்துடன் அன்னை மரியா தோன்றினார். அவரைப் பாசத்தோடும்,  கரிசனையோடும் அரவணைத்தார். அன்னை மரியா, தொன்போஸ்கோவின் கரங்களைப் பிடித்தவாறு, “இதோ! பார்” என்றார். விளையாட்டுத் திடல் இருந்த மாணவர்கள் இப்போது இல்லை. மாறாக, ஆடுகளும், பூனைகளும், கரடிகளும் பல்வேறு கொடூரமான விலங்குகளும் காணப்பட்டன. “இது தான் உன்னுடைய பணித்தளம். இவர்களிடம் நீ செய்யவேண்டும். அதற்காக உன்னையே நீ தயாரித்துக்கொள். உன்னுடைய பணியினால் நீ இப்போது காண்பதைப் போல் இவர்கள் மாறுவார்கள்” என்றார். அப்போது அந்தக் காட்டு விலங்குகள் கனிவுள்ள ஆட்டுமந்தையாக மாறி, இயேசுவையும் அன்னை மரியாவையும் சூழ்ந்து நின்றன.

No comments:

Post a Comment