Wednesday 14 November 2018

அன்னை மரியா இஞ்ஞாசியார்.

இலயோலா மாளிகையில் இஞ்ஞாசியார் மருத்துவ சிகிட்சைப் பெற்று ஓய்வு எடுத்தார். இரவு முழுவதும் கண்விழித்து தியாகத்துடன் செபித்தார். அப்பொழுது, குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்திய வண்ணமாக அன்னை மரியா இஞ்ஞாசியாருக்கு காட்சி கொடுத்தார். அத்தருணத்தில் அவரது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. தனது கடந்த கால வாழ்வில் தூய்மைக்கு எதிராகச் செய்த பாவங்கள்மீது அளவு கடந்த வெறுப்பு ஏற்பட்டது. தூய்மைக்கு எதிரான பாவச்சோதனைகளை விட்டுவிடத் துணிவும் பெற்றார். 1522ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 25ஆம் நாள் இலயோலா மாளிகையை விட்டு சுமார் 600கி.மீ கால் நடையாகவே நடந்து மொன்செராத்னில் உள்ள அன்னை மரியாவின் ஆலயத்திற்குச் சென்றார். 

         அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தினார். பின் மூன்று நாள் அங்கேயே தங்கினார். கடந்த கால வாழ்வில் தான் செய்த பாவங்களை ஆராய்ந்து ஒப்புரவு செய்தார். “இறைவனுக்கும் திருச்சபைக்கும் நம்பிக்கையின் வீரனாக வாழ்வேன்” என்று உறுதிகொண்டார். அதன் வெளி அடையாளமாக படை வீரருக்குரிய ஆயுதங்களை அன்னை மரியாவின் பாதத்தில் அர்ப்பணித்து இரவு முழுவதும் செபித்தார். தன்னை யாரும் அறியாவண்ணம் தனது ஆடைகளைக் களைந்து ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு, ஏழ்மையின் ஆடையை அணிந்து பயணம் தொடர்ந்தார். பார்ஸிலோனா செல்லும் வழியில் மன்ரேசாக் குகையில் தங்கி தியானம் செய்தார். 

No comments:

Post a Comment