Monday 12 November 2018

அன்னை மரியாவின் அருட்கரம்

   
  தந்தை பியோ அன்னை மரியாவின்மீது மிகுந்த அன்பு கொண்டு, அதிக நேரம் அன்னை மரியாளைப் புகழ்ந்து போற்றினார். ஒருமுறை ஒரு எழுத்தாளர் அவரிடம், “உங்கள் வாழ்வில் அன்னை மரியின் பங்கு என்ன?” என்று கேட்டார். அதற்குத் தந்தை பியோ,“என்னில் செயலாற்றும் அதிசய ஆற்றலுக்கும், அருட்கொடைகளுக்கும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் அற்புத ஆற்றலுக்கும், வானதூதர்களோடு நட்புடன் உரையாடுவதற்கும் காரணம், அன்னை மரியாவின் அருட்கரம் என்மீது செயலாற்றுவதே” என்று பதிலளித்தார்.

     1959ஆம் ஆண்டு பாத்திமா அன்னையின் சொரூபம் ரெட்டோன்போ ஆசிரமத்திற்கு கொண்டு வரப்பட்டது. பியோ, அன்னைக்கு தங்கச் செபமாலை ஒன்றை அணிவித்தபோது, நோயின் காரணமாக சோர்ந்து கீழே விழுந்தார். ரொட்டோன்டோ ஆசிரமத்திலிருந்த அன்னையின் திருசொரூபம் ஹெகாப்டர் மூலமாக எடுத்துச் சென்றனர். அப்போது தந்தை பியோ, என் அன்பு அன்னையே நீ இத்தாலிக்கு வரும்போது உம் மகனாகிய நான் நோயுடன் துடிப்பதை நீ அறிவாய். இப்போதும் நான் துன்பப்படுவதை நீ காண்கிறாய். அம்மா! நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் இந்த தருணத்திலாவது உன் மகனை கடைக்கண்நோக்கி பார்க்கமாட்டாயா என்று வேதனையோடு கதறி அழுதார்.  அப்போது அன்னையின் சொரூபத்தோடு ஆசிரமத்திற்கு மேல் பறந்து சென்ற விமானம் மூன்று முறை ஆசிரமத்தை வட்டமடித்தது. அந்நேரம் இறையொளி அவரில் ஊடுருவிச் சென்று உடலிருந்த புற்றுக்கட்டி மறைந்து குணமடைந்தார். 

            அன்னை மரியாவின் அன்பு அளவு கடந்தது. தம் மகனை நமக்காகப் பலியாகத் தருகின்ற அளவுக்கு ஆழமானது. எனவே, “அன்னையின் அன்பு இதயத்தில் உங்கள் செவிகளை வைத்துக்கொள்ளுங்கள். அன்னை மரியாவின் ஆலேசனைக்கு செவிகொடுங்கள்” என்று கூறினார். ஒரு நாளைக்கு 35 முறை 153 மணி  செபமாலை சொல்லுவார். அனைத்து மக்களிடமும், “அன்னை மரியாளை அன்பு செய்யுங்கள். அன்றாடம் செபமாலை செபியுங்கள். உலகத்தின் தீமைகளை வெல்ல அதுதான் சிறந்த ஆயுதம். மேலும் கடவுள் கொடுக்கும் அனைத்து வரங்களுமே அன்னை மரியாவின் வழியாக வருகின்றன” என்று கூறினார். அன்னையின் அன்பில் மெழுகாகக் கரைந்த தந்தை பியோ அன்றாடம் ஆசிரமத்திலுள்ள அன்னை மரியாவின் திருசொரூபம் முன்பாக முழந்தாள்படியிட்டு, கரங்களை விரித்தவாறே செபித்து வந்தார்.

No comments:

Post a Comment