Sunday 13 June 2021

புனித பதுவை அந்தோணியார்

    

    நற்செய்தியின் இறைமனிதர்; உலகின் மாபெரும் புனிதர்; திருச்சபையின் மறைவல்லுநர்; காலத்தின் அறிகுறிகளைத் தெரிந்து திருமறையைப் பாதுகாத்த இறைவாக்கினர். நற்செய்தியைச் சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்த இறைதூதர். ஏராளமான அற்புதங்கள் செய்தவர். திருச்சபையின் மாணிக்கமாய்த் திகழ்ந்தவரே புனித அந்தோணியார். போர்ச்சுக்கலில் 1195இல் ஆகஸ்டு 15ஆம் நாள் பிறந்தார். லிஸ்பன் மறைமாவட்ட பாடசாலையில் கல்வி கற்று படிப்பிலும், ஒழுக்கத்திலும், நுண்ணறிவிலும் இறைபற்றிலும், ஞானத்திலும் வளர்ந்தார். திருப்பலியில் பங்கேற்று இறைவனைப் போற்றுவதிலும், திருப்பாடல்கள் பாடுவதிலும், செபிப்பதிலும் ஆர்வம் செலுத்தினாந்தார். பெரும்மகிழ்வுடன் பீடசிறுவனாக பணிபுரிந்தார். 

  ஒருமுறை நற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பாக  அலகை தோன்றி அவரைச் சோதிக்க முயன்றது. கலக்கம் ஏற்பட்டாலும் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக் கல்லில் பக்தியுடன் சிலுவை அடையாளம் வரைந்தார். அந்தச் சிலுவை அடையாளம் சலவைக் கல்லில் அப்படியே பதிந்துவிட்டது. இதைப் பார்த்ததும் அலகை அலறி அடித்துக்கொண்டு ஓடியது. அந்த சலவைக் கல் சிலுவை அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது. இவ்வாறு சிலுவையின் மகத்துவத்தைத் தமது  பன்னிரெண்டாம் வயதில் உணர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி வழியாகக் குருவானவராகப் பணியாற்ற விரும்பினார்.

       தூய அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்து 1219ஆம் ஆண்டு குருவானார். 1220ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்தார். அசிசியாரின் தாழ்ச்சி, ஏழ்மை, ஆன்மதாகம், கீழ்ப்படிதலைப் பின்பற்றினார். இதயத்தில் தாழ்ச்சிக்கு இடமளித்து இறையருள் பெற்று இறைமக்களின் நலன் முன்னிட்டு புதுமைகள் செய்தார். திருச்சபையின் மறைவல்லுநர்; திருமறையைப் பாதுகாத்து நற்செய்தியை சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்து 1231ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment