Monday 27 August 2018

புனித மோனிக்கா

    புனித மோனிக்கா தன் கணவரையும், தன் மாமியார், மகன் அனைவரையும், தன் இடைவிடா செபத்தினாலேயே, மனமாற்றி, திருமுழுக்கு பெறவைத்து, கிறிஸ்துவர்களாக மாற்றினார். இறுதிமூச்சுவரை திருச்சபையின் மக்களாக வாழ வேண்டுமென்று தன் மகன்களுக்கு அறிவுறுத்தினார். சிறு வயதிலேயே பத்திரிசியுஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர் பல குழந்தைகளுக்கு தாயானார். அவர்களில் ஒருவர்தான் புனித அகுஸ்தீன். தன் மகன் மனம் போன போக்கில் வாழ்ந்ததால், அவரை மனந்திருப்ப, எப்போதும் கண்ணீருடன் இறைவேண்டல் செய்தார். தன் கணவரின் இறப்பிற்கு பின் தன் குழந்தைகளுக்காகவும், பல வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார். அகுஸ்தீனின் நல்வாழ்விற்காக ஆயர்களை சந்தித்து, தன் மகனுக்கு, ஆன்மீக காரியங்களில் வளர்ந்து, நல்ல கிறிஸ்துவனாக வாழ உதவும்படி மன்றாடினார். 

       கிறிஸ்தவ அன்னையருக்கும், குடும்பத்தலைவிகளுக்கும், விதவைகளுக்கும் இவர் ஒளி விளக்கு. தாம் சாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் தம் மகன் அகுஸ்தீனிடம் கூறியது: 'மகனே இவ்வுலகில் எனக்கு இப்போது வேறு எதுவும் மகிழ்ச்சி தரமுடியாது. நான் இனிமேலும் ஏன் இவ்வுலகில் உயிருடன் இருக்க வேண்டுமென்றே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச காலம் நான் வாழ விரும்பியது ஒரேயொரு வரத்திற்காகத் தான். நான் இறக்குமுன் உன்னைக் கத்தோலிக்க கிறிஸ்தவனாகப் பார்க்க விரும்பினேன். எனக்கு ஆண்டவர் இவ்வரத்தை அளவுக்கு அதிகமாகய்ப் பொழிந்துவிட்டார். இப்போது நீ அவருக்கே முழுவதும் சொந்தம் என்பதை உணருகிறேன். இவ்வுலக இன்பங்களை நீ விட்டொழித்ததையும் காண்கிறேன்." இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன் இவரின் கணவர் பத்ரிசியுசும், தம் இறப்பிற்கு முன் திருச்சபையின் மகனாக வந்து சேர்ந்தார். 

      வழிதவறிச் சென்ற தம் மகனை எவ்வழியில் மனந்திரும்புவது என்று அறியாது அடிக்கடி இவர் கலங்கினார். அகுஸ்தீனை மணந்துகொள்ளச் சொன்னதால் அவரும் அப்படியே ஒரு பெண்ணை மணமுடித்தார். ஒரு முறை மோனிக்கா ஓர் ஆயரை அணுகி தம் மகனுக்கு வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று கேட்டார். அகுஸ்தீனுக்கு மனந்திரும்பும் பக்குவம் இன்னும் கிடைக்கவில்லை என்பதை ஆயர் உணர்ந்தார். மீண்டும் மீண்டும் மோனிக்கா ஆயரைக் கண்ணீருடன் அணுகினார். ஆயர் பொறுமை இழந்தவர் போல் காணப்பட்டாலும் இறைவாக்கு உரைப்பது போல் 'இவ்வளவு கண்ணீர் சிந்தும் தாயின் மகன் அழிவுறவே முடியாது" என்று கூறினார். இதைக் கேட்டு இன்னும் மிகுதியாக மோனிக்கா இறைவனை மன்றாடினார்.


No comments:

Post a Comment