Wednesday 1 August 2018

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி

   
     இறையன்பால் ஈர்க்கப்பட்டு புகழ்மிக்க வழக்குரைஞர் பணியைத் துறந்து, தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணித்து, ஆன்மீ வாழ்க்கையால் தப்பறைகளைத் தகர்த்து, ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும் அறநெறியாளர்களின் பாதுகாவலராக மாறியவரே புனித அல்போன்ஸ் மரிய லிகோரி. இவர் இத்தாலி நாட்டில் நேப்பிள்ஸ் அருகிலுள்ள மரியநெஸ்லா என்னுமிடத்தில் 1696ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27ஆம் நாள் பிறந்தார்.  இறைபக்தியில் வளர்ந்து, இறை நம்பிக்கையில் உறுதியாக இருந்து இறைபக்தி, எளிமை, இரக்கம், தியாகம் போன்ற பண்புகளில் சிறந்து விளங்கினர். தினமும் திருப்பலியில் பங்கேற்பதில் கவனம் செலுத்தினார். தனது 16ஆம் வயதில் சட்டம் படித்துப் புகழ்பெற்ற வழக்குரைஞராக மாறினார். 


       லிகோரி தனது வழக்குரைஞர் பணியைத் திறமையாகச் செய்தார். நடத்திய வழக்குகள் எல்லாமே வெற்றியடைந்தன. லிகோரி தமது 27ஆம் வயதில் புகழ்ச்சியின் உச்சியில் நின்ற தருணத்தில் வழக்கில் முதல் முறையாக தோல்வியுற்றார். இத்தோல்வி அவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்ப்படுத்தியது. இதுவே சரியான நேரம் என்று உணர்ந்து “உலகமே உன்னைத் தெரிந்து கொண்டேன், நீ இனிமேல் என்னைப் பார்க்கமாட்டாய்” என்று கூறினார். கிறிஸ்துவுக்காகப் பணிசெய்ய மாண்புமிக்க, மேன்மையான குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். அன்னை மரியாவிடம் அன்பு செலுத்தினார். பல தடைகளை படிக்கற்களாக மாற்றி 1726, டிசம்பர் 21ஆம் நாள் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

      லிகோரி இறைவார்த்தையை அறிவிப்பவர் அல்ல, வாழ்ந்து காட்டியவர். நேப்பிள்ஸில் உள்ள கல்லூரியில் 1729ஆம் ஆண்டு பணியாற்றினார். இவருடைய மறையுரையால் ஏராளமான மக்கள் மனமாற்றம் அடைந்தனர். 1732ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பது அன்று ‘இரட்சகர் சபையை’  நிறுவி நகரத்திலும், குப்பங்களிலும், குடிசைகளிலும், சாக்கடை ஓரங்களிலும் அல்லலுறும் மக்களுக்கு பணியாற்றினார். 1762ஆம் ஆண்டு புனித ஆகத்தா தெய்கோத்தி மறைமாவட்டத்தின் ஆயராக அருட்பொழிவு பெற்றார். நற்கருணை மீதும், அன்னை மரியாவின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அன்னை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டார். தமது 83வது வயதில் 1787ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் இயற்கை எயóதினார். 

No comments:

Post a Comment