Wednesday 29 August 2018

புனித திருமுழுக்கு யோவான்


   நேர்மையையும், தூய்மையும் கொண்டு வாழ்ந்தவர். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழி மரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தவர். இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான், "மனமாறி திருமுழுக்கு பெறுங்கள்" என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி மறைசாட்சியாக இறந்தவர புனித திருமுழுக்கு யோவான். திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்" என்று இறைவாக்கு உரைத்தார்.

      இயேசுவின் தாய் மரியாவும், யோவானின் தாய் எலிசபெத்தும் உறவினர்கள்ளன என்று குறிப்பிடுவதால், இயேசுவும் யோவானும் சிறுவயதில் சேர்ந்து விளையாடி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பல கிறிஸ்தவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் இயேசு சாதாரண உடையுடனும், யோவான் ஒட்டக முடியாலான ஆடையுடனும் காணப்படுகின்றனர். யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார். திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தவர்களின் நெறிகேடானச் செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார். அவ்வாறே, குறுநில அரசன் ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்ததையும் யோவான் கண்டித்து வந்தார். ஏரோது, ஏரோதியாவின் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதனால் ஏரோதியா யோவான் கொலை செய்ய விரும்பினாள்.

      ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று தன்தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தனர்

No comments:

Post a Comment