Saturday 11 August 2018

புனித கிளாரா



       கிறிஸ்துவுடன் இணைந்து தூயவராக வாழ்ந்தவர். ஏழ்மை, கீழ்ப்படிதல், ஒறுத்தல், தாழ்ச்சி போன்றவற்றை வாழ்வின் அடித்தளமாக கொண்டவர். துறவு வாழ்க்கை வழியாக இறையாட்சி பணி செய்தவர். இறைபக்தியில் சிறந்து விளங்கிய கிளாரா இத்தாலி நாட்டில் அசிசிச நகரில் 1194ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 16ஆம் நாள் பிறந்தார். இறைவன்மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டு வாழ்ந்தார். குடும்பச் செபங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். இவரது பெற்றோர் இளமைப்பருவத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். இத்தருணத்தில் அசிசி நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆலயத்தில் புனித அசிசியார் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி மறையுரை நிகழ்த்தினார். அவரது மறையுரையால் ஈர்க்கப்பட்டு இறைவனுக்கு தனது கன்னிமை அர்ப்பணம்  செய்தார். 
இறைவன்மீது தாகம் கொண்ட கிளாரா துறவு வாழ்க்கை வாழ இரவில் யாருக்கும் தெரியாமல் புனித அசிசியார் துறவு இல்லத்திற்கு சென்றார். அசிசியார், “நீர் கடவுள் தேர்ந்தெடுத்துள்ள ஆன்மா” என்றுகூறி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். கிளாரா உலக இன்பங்களை துறப்பதன் அடையாளமாக அவரது முடி வெட்டப்பட்டது. துறவிக்கான ஆடைப்பெற்றுக்கொண்டார். அவரது தந்தை தேடி வந்து வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்தினார். தான் துறவு வாழ்க்கை  வாழ விரும்புவதாகவும், அதன் அடையாளமாக முடி வெட்டப்பட்டதையும் காட்டினார். இதைப் பார்த்தவுடன் தந்தை வீட்டிற்கு சென்றார். கிளாரா அருகில் இருந்த புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்க்கப்பட்டார்.
ஏழ்மை வழியாக கிறிஸ்துவின் வாழ்வை பிரதிபலித்தார். ஒறுத்தல்கள் வழியாக பாவங்களுக்கு பரிகாரம் செய்தார். இறைவார்த்தை கடைப்படித்து வாழ்வதில் கவனம் செலுத்தினார். அசிசியார் எழுதிய இயேசுவின் சிலுவைத் துன்பம் பற்றிய செபம் வழியாக இயேசுவின் துன்பப்பாடுகளில் பங்குகொண்டார். நற்கருணை ஆண்டவர்மீது பக்தியும் பற்றும் கொண்டார். இரவு நேரங்களில் நற்கருணை ஆராதிப்பில் அளவில்லா ஆனந்தம் அடைந்தார். கிளாரா 28ஆண்டுள் நோயுற்ற நிலையில் வாழ்ந்தார். நோய்யுற்ற நாட்களில் நற்கருணை அவரது உணவாக மாறியது. தனது இன்பத் துன்பங்களை  நற்கருணை ஆண்டவரிடம் அர்ப்பணம் செய்தார். தனக்கென்று வாழாமல் பிறர்கென்று வாழ்ந்து நற்பண்புகளின் மணிமகுடமாக மாறினார். இறைவனின் வாழ்வுதருகின்ற வார்த்தையை வாழ்வாக்கி நற்சான்று பகர்ந்த கிளாரா 1253ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 11ஆம் நாள் இறந்தார்.  

No comments:

Post a Comment