Tuesday 14 August 2018

புனித மாக்சிமியான் கோல்பே


      கிறிஸ்துவின் பாதத் தடங்களில் தன் பாதங்களைப் பதித்து, ஆதாயம் எதிர்பாராமல் அயலானை அன்பு செய்து, நிறைவாழ்வைத் தருகின்ற இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு எல்லா இல்லங்களிலும், உள்ளங்களிலும் இறையரசைக் கட்டியெழுப்பிட, தனது சீரியச் சிந்தனை, கடின உடலுழைப்பு, தியாக வாழ்வுவை அர்ப்பணித்து பிறரன்பின் இரத்த சாட்சியாக மாறியவரே புனித மாக்சிமியான் கோல்பே. இவர் போலந்து நாட்டில் 1894ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். இவரது குடும்பத்தில் இறைபக்தி, அன்பு, பாசம் மிகுந்து காணப்பட்டது. இறைவன் கொடையாகத் தந்த குழந்தைகளை இறைபக்தியிலும், கடுமையாக உழைக்கவும், நன்மைகள் பல செய்திடவும் கற்றுக்கொடுத்தனர். தனது வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்து மறைசாட்சியாக மாறிட வாஞ்சை கொண்டார். அதன் பின்னர் கீழ்ப்படிதலுடனும், தாழ்ச்சியுடனும் வாழ்ந்து, இறையன்பையும், நீதியையும், நேர்மையையும் துணிவுடன் பறைசாற்றினார்.


   மாக்ஸ்மில்யன் கோல்பே, தனது 16ஆம் வயதில் பிரான்சிஸ்கன் துறவற சபையில் சேர்ந்து கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற துறவற வார்த்தைப்பாடுகளின் வழியாக இறைவனுக்குத் தன்னையே கையளித்து குருவாக அருள்பொழிவு பெற்றார். அன்னை மரியாவின்மீது கொண்ட பாசத்தால் ‘அமல அன்னையின் சேனை’ என்ற அமைப்பை உருவாக்கினார். ஜப்பான் நாட்டில் நாகசாகி என்ற நகரில், மலையடிவாரப் பகுதியில் அச்சகம் தொடங்கினார். தனது சீரிய சிந்தனையாலும், உடல் உழைப்பாலும் நற்செய்தியை அறிவித்தார். ஹிட்லரின் கொடூரச் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தபோது கைது செய்து சிறையில் அடைத்து தன்புறுத்தினர். தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்று மொழிந்த இயேசுநாதரின் வார்த்தையை வாழ்வாக்கிய மாக்ஸ்மில்யன் கோல்பே 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14 ஆம் நாள் இயற்கை எய்தினார். 

No comments:

Post a Comment