Monday 22 January 2018

புனித வின்சென்ட் பல்லொட்டி


 
        கிறிஸ்துவின் நல்ல படைவீரர்; இறைஞானத்தின் மாமனிதர்; நன்மைகளின் உறைவிடம்; இறையன்பின் தூதர்; திருச்சபையில் சிறந்த மறைபணியாளர்; கடின உழைப்பாளி; தியாகத்தின் செம்மல்; கத்தோலிக்கச் செயல்பாடுகளின் முன்னோடி; மற்றும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். “நாம் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது கிறிஸ்துவுக்கே கொடுக்கிறோம்”என்று கூறியவர். “கிறிஸ்துவின் அன்பு எம்மை ஆட்கொள்கிறது” என்ற விருதுவாக்குடன் அயராது உழைத்தவரே புனித வின்சென்ட் பல்லொட்டி. 

          

           1795ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21ஆம் நாள் பிறந்தார். பெற்றோர், இவரை இறைபக்தியில் வளர்த்தார்கள். தினமும் அதிகாலையில் எழுந்து திருப்பலிக்குச் செல்வார். திருப்பலி முடிந்ததும் அன்னை மரியாவிடம் “பிரியமுள்ள அம்மா! என்னை நல்ல குழந்தையாக மாற்றுங்கள்” என்று செபிப்பது வழக்கம். தனக்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களை சகமாணவர்களோடு பகிர்ந்து கொண்டார். ஓய்வு நேரங்களில் சகமாணவர்களை ஒன்று சேர்த்து செபமாலை செபிப்பர். 

           வின்சென்ட் , தந்தையின் அனுமதியுடன் மறைமாவட்ட குருவாகப் பணிசெய்ய குருமடத்தில் சேர்ந்தார். குருத்துவப் படிப்பை முடித்து 1818ஆம் ஆண்டு மே திங்கள் 16ஆம் நாள் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். தினமும் இறைமக்களின் நலனுக்காக இறைவனிடம் தியாகத்துடன் கரங்களை விரித்தவாறே செபம் செய்தார். திருப்பலியைப் பக்தியோடு நிறைவேற்றினார். ஆன்மீகத்தில் பின்தங்கிக் காணப்பட்ட பங்கு மக்கள், ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியடைய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பான தியான வழிபாடுகள் நடத்தினார்.

     

       “விவிலியம் வாழ்க்கையின் அடித்தளம்” என்றும் அறிவுரை கூறி மக்களை விவிலியம் வாசிக்க ஊக்கப்படுத்தினார். தந்தை எங்கு சென்றாலும் தமது “கரங்களில் திருச்சிலுவையும், செபமாலையும்” எடுத்து சென்றார். தந்தையின் கடினமான உழைப்பாலும், ஓய்வின்றி வழங்கிய ஒப்புரவு அருள்சாதனத்தினாலும் பலரை மனம் மாற்றினார். மறைபரப்புப் பணி வழியாகக் கிறிஸ்துவின் அன்பு, இரக்கம், கனிவு, அமைதி, பொறுமை மற்றும் தூய்மை இவற்றைப் பகிர்ந்து கொடுத்தார். “கிறிஸ்துவை அன்பு செய்கின்றவர்கள் திருச்சபையையும் அன்பு செய்வார்கள்” என்று கூறி 1850ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 22ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு இயற்கை எய்தினார்.     
                                 

No comments:

Post a Comment